புரியாததிலும் இருக்கிறது சினிமா! - மிஷ்கின் நேர்காணல் | பகுதி 2

By கா.இசக்கி முத்து

உங்கள் ப்ரொட்டாகனிஸ்டுகள், முக்கிய கதாபாத்திரங்களுக்கு வருவோம். உங்கள் கதாபாத்திரங்களுக்கு வருவோம். பெரும்பாலும் எதிர்மறையாகப் பார்க்கப்படும் 'பிசாசு' அன்பு செலுத்துவதைக் காட்டுகிறீர்கள். 'அஞ்சாதே' படத்தில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரன் கொல்லப்படும்போதும் சோக கீதம் இசைத்து, அந்தக் கதாபாத்திரத்தின் மரணத்துக்குக் கலங்குகிறீர்கள்...

பெரும்பாலும் கருப்பு மனிதர்கள்தான் நிஜத்தில் வெள்ளை மனம் படைத்தவர்கள். அதேபோல், உயரத்தில் இருக்கு மனிதர்கள் ரொம்ப தாழ்ந்த குணத்தோடு தான் இருக்கிறார்கள். இதுதான் வாழ்க்கையின் இயல்பு. ரியாலிட்டியில் இருக்கும் விஷயங்களை எடுத்துதான் நான் சினிமாவில் கதை சொல்கிறேன். முழுக்க முழுக்க நல்லவன் என்பது கடவுள் மட்டும்தான். அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர் ரொம்ப போரான ஆள்.

டிராமா என்பது நல்லது, கெட்டதை மாற்றி மாற்றி காட்டுவதுதான். நிறைய படங்களில் முதல் ரீலில் இருந்து 13 ரீல் வரைக்கும் நாயகன் நல்லவனாகவே இருக்கிறான். அது எனக்கு போர் அடிக்கிறது. என் சினிமாவுக்கு கதை எழுதும்போது, வாழ்க்கையை புரட்டி புரட்டிப் போட்டு பார்க்கிறேன். 'அஞ்சாதே' பிரசன்னா கதாபாத்திரம் எழுதும்போது என் வாழ்க்கையின் உள்ளே போய் பார்த்துவிட்டு வந்தேன். அந்த மாதிரி மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் புதினம் சேர்த்திருக்கிறேன். முழு பரிமாணமாக பார்க்கும்போது அந்த பாத்திரம் ரொம்ப உயிராக இருக்கிறது. நமக்குள் மறைந்துகிடக்கும் ஒரு சில விஷயங்களை அந்தப் பாத்திரம் நிகழ்த்திக் காட்டுகிறது.

'பிசாசு'வை ஒரு சமூகம் கெட்டது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. எனக்கு போராடித்துவிட்டது. நம்மளும் வழக்கமான கதையைத்தான் எழுதப் போகிறேமா என்று உட்காரும்போது, ஏன் ஒரு பேய் இறைத்தனமை நிறைந்த பேயாக இருக்கக் கூடாது என்று கேள்வி எழுந்தது. அப்போதுதான் என் கதையில் வரும் பெண்ணைப் பார்த்தேன். அவளை கொன்றவன் மீது அவள் காதல் வயப்படுகிறாள். இதை நான் கண்டுபிடித்துக் கொண்டேன். அந்தக் கதை எழுதும்போது அந்த பெண் என்னுள் வந்து அவளுடைய பார்வையில் உலகத்தைப் பார்த்தேன். அவனோ நல்லவனாக இருக்கிறேன். என்னுடைய பாத்திரங்கள் அனைத்துமே நான் எழுத ஆரம்பித்தவுடன் அவர்கள் எனக்கு சொல்லிக் கொடுப்பார்கள். இதை ஒரு சந்தோஷமான பயணமாக நான் பார்க்கிறேன். இலக்கியத்தன்மையே இல்லாத ஒரு பாத்திரத்தை என்னால் எழுதவே முடியாது.

ஒரு படத்தில் நான் ஒரு வருடம் வேலை பார்க்கிறேன் என்றால், அதில் என் ஆன்மாவுக்கு இருக்கிறது என்று தெரிய வேண்டும். ஒரு படம் முடிவடைந்தால் ஒரு பங்களா, கார் வாங்கிவிடலாம் என்றெல்லாம் நான் படங்கள் பண்ணுவதில்லை. படம் என்பது நான் ஆழமாக வாழப்போகிற ஒரு வாழ்க்கை. அதில் நான் உண்மையாக இருக்க வேண்டும்.

இதோ இப்போது 'சவரக்கத்தி'யில் வரும் பிச்சை என்கிற பாத்திரம் முடிவெட்டும்போது பொய் சொல்லிகிட்டே இருப்பான். நாலு சுவருக்குள் பொய் சொல்லிக்கொண்டே இருந்த ஒருவனை ரோட்டுக்கு அழைத்து வருகிறார்கள். பொய் சொல்கிறான், மாட்டிக் கொள்கிறான். அதற்குப் பிறகு அவனுடைய வாழ்க்கை விரட்டப்படுகிறது. எல்லாப் பொய்களும் அவனுடைய வாழ்க்கையில் வெளியேற்றபடுகிறது. இனிமேல் அவனுடைய வாழ்க்கையில் பொய்யே கிடையாது. என்னடா இது என்று பாக்கெட்டில் பார்த்தால் கொஞ்சம் உண்மை இருக்கிறது. அந்த உண்மையை எடுத்துக்கொண்டு க்ளைமாக்ஸ் போறான். அவ்வளவுதான் படம்."

முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி துணைக் கதாபாத்திரங்களுக்கு கூட முக்கியத்துவம் தருவதைப் பார்க்க முடிகிறது. 'பிசாசு'வை குறிப்பிட்டபோதுதான் நினைவுக்கு வருகிறது... அந்த மஞ்சள் புடவை - பெரிய பொட்டு உக்கிரமான பாட்டி என்னதான் சொல்ல வந்தார்?

"ஹா ஹா ஹா... (வெடித்துச் சிரிக்கிறார்) கதைப்படி குற்றவாளியை தேடி போலீஸ் ஸ்டேஷன் வந்திருக்கிறான் நாயகன். அதுவரைக்கும் ரசிகர்களுக்கு இவன்தான் குற்றவாளி என்பது தெரியாது. போலீஸ்காரரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு பாட்டி எழுந்து வந்து முறைத்துப் பார்க்கிறது. தமிழ் சாமி கும்பிடுகிற ஒரு பெரிய பொட்டு வைத்திருக்கிற பாட்டி வந்து உற்றுப் பார்க்கிறது. இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ரசிகர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

உண்மையில், நாயகனை போலீஸ்காரர் திட்டி அனுப்புவது போன்ற காட்சியை எடுக்கத் திட்டமிட்டேன். மறுநாள் படப்பிடிப்பு. முந்தைய நாள் செட்டுக்குப் போய், காவல் நிலையப் பின்னணியில் பல தரப்பட்ட மக்கள் நிறைந்த சூழலை ஏற்பாடு செய்தேன். அப்போது, அந்தக் காட்சியின் பின்புலத்தில் இருக்க வேண்டிய ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை வரச் சொல்லியிருந்தார்கள். அதில்தான் அந்தப் பாட்டியைப் பார்த்தேன். படத்தில் நீங்கள் பார்த்த அதே கெட்டப்பில் இருந்தார். பார்த்தவுடன் பிடித்துவிட்டது.

உடனே பாட்டியிடம் போய் "நாளைக்கு இதே புடவையை கட்டிட்டு வாங்க" என்றேன். அடுத்த நாள் படப்பிடிப்பு தளத்தில் பாட்டியிடம் இப்படி வரணும், இப்படி பார்க்கணும் என்று இரண்டு மணி நேரம் சொல்லிக் கொடுக்கிறேன். அவர் ஒரே டேக்கில் முடித்துவிட்டார்.

எனது உதவி இயக்குநர்கள் உட்பட யாருக்குமே இதை நான் ஏன் செய்கிறேன் என்றே தெரியாது. 'என்ன சார் இது... ஏன் எடுத்தீர்கள்?' என்று கேட்டார்கள். இந்தக் காட்சியே கதையில் இல்லை. பிறகு ஏன் எடுத்தீர்கள் என்று திரும்பத் திரும்ப கேட்டனர். அந்த இடத்தில், அந்தப் பாட்டியைப் பார்க்கும்போது கடவுள் மாதிரி தெரிந்தது. அந்தக் காட்சியை வைக்க நினைத்தேன். வைத்தேன்.

திரைப்படத்தில் அந்தக் காட்சியைப் பார்க்கும்போது ரசிகர்களுடைய மனநிலையில்தான் நானும் பார்த்தேன். ஆம், அந்தப் பாட்டி யார் என்று எனக்கும் தெரியாது. சினிமா என்பது புரிதலில் மட்டுமே இல்லை; புரியாததிலும் சினிமா இருக்கிறது."

உங்கள் கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முன்னணி நட்சத்திரங்களை அணுகும் எண்ணமே இல்லையா?

விஜய், அஜித் முதலானோரைதானே சொல்கிறீர்கள். அவர்களுடன் இணைந்து படம் செய்யக் கூடாது என்பதெல்லாம் இல்லை. 'யூத்' படத்தில் நான் இணை இயக்குநர். அப்போது எங்கு பார்த்தாலும் விஜய் என்னை 'அண்ணா' என்றழைத்து அன்பாக பேசுவார். கடுமையான உழைப்பாளி. ஷோபா அம்மா அழைத்து 'பிசாசு பார்த்தேம்பா. ரொம்ப நல்லாயிருந்தது' என்று 10 நிமிடம் பேசினார்.

அஜித்தின் மேனேஜர்தான் எனக்கும் மேனேஜர். அஜித்தைப் பார்த்து கதை சொல்ல வேண்டும் என்று நான் அவரிடம் ஒருநாள் கூட கேட்டதே இல்லை. எனக்கு என்ன கதை வருகிறதோ அப்படியே போயிட்டு இருக்கேன். அப்படி ஏதாவது கதை அமையும் பட்சத்தில் கண்டிப்பாக பண்ணுவேன்.

ரொம்ப சின்னதாக படங்கள் பண்ணுவதில் நிறைய சுதந்திரம் இருக்கிறது. நிறைய விஷயங்கள் அப்படத்தில் என்னால் பண்ண முடிகிறது. தற்போது என் படங்களின் ரசிகர்கள் என் படத்தை மைக்ரோஸ்கோப் போட்டுதான் பார்க்கிறார்கள். என் படங்களைப் பார்க்கும் ரசிகர்களை கிட்டதட்ட ஒரு சினிமாக்காரனாக ஆக்கிக்கொண்டு வருகிறேன். எங்கள் இருவருக்கும் ஒரு பெரிய உரிமை போராட்டம் இருக்கிறது."

ஒரு படைப்பாளியாக சமகால தமிழ் சினிமா எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்?

"நான் நிறைய தமிழ்ப் படங்கள் பார்ப்பதில்லை. ஏனென்றால், எனக்கு நேரமில்லை. எனக்கு இரண்டரை மணி நேர சினிமா என்பது ஆறு நாட்கள் எடுத்துக் கொள்ளும். 'விசாரணை' பார்த்துவிட்டு 10 நாட்கள் என்னால் எதுவுமே முடியவில்லை. அதைப் பற்றி எழுத ஐந்து நாட்கள் எடுத்துக்கொண்டேன். நான் ரொம்ப தேர்ந்தெடுத்து நல்ல படங்கள் மட்டுமே பார்க்க விரும்புகிறேன். என்னுடைய படங்களுக்கு வருகிற விமர்சனத்தை வைத்தே சமகால தமிழ் சினிமாவைப் பற்றி புரிந்துகொள்ள முடிகிறது. இங்கு ஒரு வருடத்தில் இரண்டு, மூன்று நல்ல படங்கள்தானே வருகின்றன. மற்றவை எல்லாமே 75 ஆண்டுகளாக வந்த படங்களின் அணிவகுப்பு தானே? தமிழ் சினிமாவில் அப்புறம் என்ன பெரிய மாற்றம் வந்துவிட்டது? அதே ட்ராக் காமெடி, 5 பாடல்கள்.

ஆனால், நல்ல படம் என்று சொன்னால் உடனே பார்த்துவிடுவேன். தொழில்நுட்ப ரீதியில் நாம் மிகவும் மெதுவாகவே நகர்ந்துகொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றியிருக்கும் நாடுகள் ரொம்ப வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கதைக்களம் எல்லாம் வேறு வேறு களங்களில் இருக்கிறது. நம்ம ரொம்ப நத்தை வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறோம். ரொம்ப உண்மையான படங்கள் எல்லாம் இருக்கிறது. திடீரென்று வேகமாக சொல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. 'விசாரணை'க்கு நான் வெளியே வந்து பேச அதுதான் காரணம். மக்கள் அனைவரது கையில் செல்போன் இருக்கிறது. அவர்களுக்கு ஷாட் என்றால் என்ன என்று தெரிகிறது.

இளையராஜாவைக் கொண்டாடும், பாடல்கள் மீது அதிக ஈடுபாடு கொண்ட மிஷ்கினுக்கு, இந்திய சினிமாவின் தனித்துவங்களில் ஒன்றாகக் கருதப்படும் பாடல் காட்சிகள் மீதான வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே...

"'தி ரெவனன்ட்'-னு ஒரு படம். உலகம் முழுக்க நல்லாயிருக்கிறது என்று சொல்கிறார்கள். அந்தப் படத்தில் டிகாப்ரியோ கஷ்டப்படும்போது நினைவலையில் ஒரு பெண்ணை வரவழைத்து, ஒரு பாட்டு போட்டிருக்க முடியுமே... ஏன் பண்ணவில்லை? ஏனென்றால், ஒரு பாடல் காட்சியானது படத்தின் கதையோட்டத்தை தடுக்கும். பாடல்கள் வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதைத் தாண்டலாம் என்று சொல்கிறேன். 'ஒநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் தாண்டினேன். இப்போது 'சவரக்கத்தி' படத்திலும் பாடல்கள் இல்லை.

(சற்றே நையாண்டி தொனிக்கு மாறுகிறார்) தனிப்பட்ட முறையில் எனக்குப் பாடல்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஐந்து பாடல்களோடு ஒரு படம் பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கே குத்துப்பாட்டு ஆட வேண்டும்; படமாக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது."

ஒரு படத்தைப் பற்றி படைப்பாளியே காட்சிகள் வாரியாக ரசிகர்களிடம் விவரிக்கும் போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்? அது ரசிகர்களின் பலதரப்பட்ட ரசனைப் பார்வைக்குத் தடையாக இருந்துவிடும் அல்லவா?

"ஒரு படம் பலவிதமான எண்ண ஒட்டங்களையும், புரிதல்களையும் உண்டாக்கும். ஒரு நல்ல படைப்புக்கு அது எப்போதுமே நடக்கும். இன்றைக்கு இருக்கும் சமூக வலைத்தள வளர்ச்சியில் ஒரு படைப்பாளி பேச வேண்டும் என்று ஆசைப்படுகிறான். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் குடும்பத்தை காப்பாற்றும்போது கண் தெரியாதவரிடம் ஒரு துப்பாக்கியை கையில் கொடுத்துவிடுவேன். தப்பிக்கிற வரைக்கு சுட்டுக்கிட்டே இருங்க என்பேன். அவர் மேலே நோக்கி சுடுவார். நான் என்ன நினைத்தேன் என்றால், கண் தெரியாமல் வேறு யார் மீதும் சுட்டுற கூடாதே என்று நினைத்து அந்தக் காட்சியை வைத்தேன். சில ரசிகர்களோ அவர் கடவுளை சுடுவது போல நினைத்துக் கொண்டார்கள். 'கடவுளை நோக்கி சுட்ட காட்சி சூப்பர்' என்றார்கள். அவர்களிடம், 'அப்படி நினைத்து நான் அந்தக் காட்சியை வைக்கவில்லை. ஆனால், நீங்கள் நினைத்த உண்மையும் அதில் இருக்கிறது. நீங்கள் பார்த்த பார்வையும் சரி என்று சொல்லவைக்கிறது' என்றேன்.

ஒரு படத்திற்கு நூறு பார்வைகள் கிடைக்கின்றன. நான் பார்க்காத ஒரு பார்வையை பார்வையாளன் பார்த்திருக்கிறான். ரசிகர்களுடன் நேரடியாகவோ, சமூக ஊடகங்கள் மூலமாகவே படைப்பாளிகள் பேசுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான சூழல் இப்போது அதிகமாக இருக்கிறது. அது எந்த எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தி விடாது.

சினிமாவைப் பொறுத்தவரையில் ரசிகர்களின் பல்வேறு புரிதல்கள் எல்லாம் தப்பே கிடையாது. ரசிகர்கள் தன் கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இன்றைக்கு அனைவருமே அவர்களுடைய கருத்தைத் தெரிவிக்கிறார்கள். ஒரு காலத்தில் படத்தின் விமர்சனத்தை பத்திரிகையாளர்கள் மட்டுமே எழுதினார்கள், ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழகமே எழுதுகிறது. இது தவிர்க்க முடியாத ஒன்று."

ஓஹ்... சமூக வலைதளங்களை தீவிரமாக கவனிக்கிறீர்களா? ஆனால், ஃபேஸ்புக் - ட்விட்டரில் நீங்கள் ஆக்டிவ் ஆக இருப்பது போல் தெரியவில்லையே...

"அது என் தனிப்பட்ட நேரத்தை நிறைய எடுத்துக்கொள்கிறது. நான் ஃபேஸ்புக்கில் இருக்கிறேன் என்றால், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று நினைப்பேன். அதுமட்டுமன்றி நான் ஓர் இயக்குநர் என்ற முக்கிய பொறுப்பில் இருக்கிறேன். எனக்கு நிறைய படிக்கணும், நிறைய தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால், கருத்து சொல்வதிலேயே பாதி நேரம் போய்விடும் என்று பயமாக இருக்கிறது. 40 வருடங்கள் படிக்கும் அளவுக்கு புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கிறேன். ஒரு நாளைக்கு 5 மணி நேரம் படிக்கவில்லை என்றால் எனக்கு பைத்தியம் பிடித்துவிடும்.

எனக்குத் தெரியாதவர்களிடம் போய் பேசிக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை. நடிகர்கள், ரசிகர்களிடம் பேச வேண்டும். அதற்கான தேவையும் சூழலும் இருக்கிறது. எனக்கு அப்படி இல்லை. நான் வருடத்திற்கு ஒரு முறை ட்விட்டர் பக்கம் வருகிறேன். என் பெயரில் ட்விட்டர், ஃபேஸ்புக் எல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறது.

செல்போன் உபயோகிக்காமல் இரண்டு வருடங்கள் எல்லாம் இருந்துவிட்டேன். திரும்பவும் செல்போன் இல்லாமல் இருக்கலாமா என்று யோசித்து வருகிறேன். கவிதைகள் நிறைய படிக்கிறேன். ஒரு கவிதை படித்தால் 3 நாட்கள் யோசிக்க வைக்கிறது. ஒரு சினிமாவுக்கு ஒரு காட்சி எழுதுவது என்பது எனக்கு நான்கு நாள் வேலை. அப்போது எனக்கு வேறு எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது. சமூக வலைத்தளங்கள் எனது சிந்தனையை மாற்றிவிடுமோ என்ற பயம் இருக்கிறது. நிறைய பயணிக்கிறேன், படிக்கிறேன்.

அதேவேளையில், நான் சமூக வலைத்தளத்தில் இல்லாவிட்டாலும் என் உதவி இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னைப் பற்றி வருவதை எல்லாம் சொல்கிறார்கள். அது போதும்."

அண்மையில் நீங்கள் மேற்கொண்ட ஜப்பான் பயணத்தில், மிக முக்கிய நிகழ்வாக, அகிரா குரோசவாவின் கல்லறையில் சின மணி நேரங்கள் செலவிட்டீர்கள். அது தொடர்பான படங்களும் தகவல்களும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டன. ஒரு பக்கம், அதை நெகிழ்ச்சியோடு பார்ப்பதும், இன்னொரு பக்கம் கலாய்ப்பது ஒரு சேர நிகழ்ந்தது. அதை எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?

"'காந்தி ஒரு விவசாயி போல் உடையணிந்து கொண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார் 'என்று சொல்லலாம். அல்லது, 'காந்தி கோவணம் கட்டி இருக்கிறார்' என்று்கூட சிலர் கேலி செய்யலாம்.

நீங்கள் கேட்கும் விஷயத்தை நான் இப்படித்தான் பார்க்கிறேன். என்னை கேலி செய்தவர்கள், குரோசவா பற்றி இணையத்தில் படித்துவிட்டுத்தான் கேலி பண்ணுகிறார்கள். அந்தப் புகைப்படத்தை வைத்து என்னை கிண்டல் பண்ணட்டும், ஆனால் குரோசவா கல்லறை என்ற புனிதமான இடத்தை அவர்களுக்கு நான் எப்படியோ காட்டிவிட்டேன். தமிழ்நாட்டில் இன்று குரோசவா என்ற மிகப் பெரிய ஆளுமை ஜப்பானில் இருந்திருக்கிறார் என்று நிறைய பேருக்கு தெரிந்துவிட்டது. எனக்கு அது போதும்.

குரோசவா கல்லறையில் இருந்து ஐந்து பேருக்கு போன் செய்தேன். வெற்றிமாறன், ராம், எஸ்.வி.ஆர், செழியன், ராகுலன் மற்றும் ஷாஜி. இவங்க எல்லாருமே அழுதார்கள். மணிரத்னம் சாருக்கு அங்கிருந்து நான் ஒரு மெசேஜ் அனுப்பினேன். அதற்கு, 'உடனே வா, நான் உனக்கு பெரிய பார்ட்டி வைக்கிறேன்' என்றார். என் நண்பர் ராகுலன், "குரோசவா கல்லறையில் இருந்து எனக்கு போன் பண்ணினாயே... என் வாழ்க்கையில் இதுபோதும் மிஷ்கின்" என்று ஏங்கி ஏங்கி அழுதான்.

ஒரு விஷயத்தை நாம் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம். சிலர் கிண்டல் செய்வது மூலமாகத்தான் பார்க்கிறேன் என்கிறார்கள் என்றால் அப்படியும் பார்க்கட்டுமே. அவர்களுக்கு அப்படித்தான் பார்க்க தெரிகிறது என்றால் நாம் என்ன பண்ண முடியும்? கேலி, கிண்டல் எல்லாம் நான் எப்போதோ தாண்டி வந்துவிட்டேன். அவர்களுக்கு தெரியாமலேயே நான் குரோசவா கல்லறையைக் காட்டியதால் எனக்கு ரொம்ப சந்தோஷம். முட்களும் பூக்களும் நிறைந்தது தான் வாழ்க்கை. ஒரே மாதிரியாகவே வாழ்க்கை இருந்தால் போரடிக்கும்."

அதேநேரத்தில், உங்களைக் கலாய்த்து வெளியான ஒரு படத்தின் புரோமோஷன் வீடியோவைப் பார்த்து, உங்கள் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொந்தளித்ததையும் பார்க்க முடிந்தது...

"ம்... அதுபற்றி நிறைய பேர் என்னிடம் சொன்னார்கள். என்னைக் கேலி பண்ணி ஒரு படம் ஓடினால்... அது சந்தோஷம்தான். அப்படியாவது அந்தப் படம் ஒடட்டும். எனக்கு எல்லா படங்களும் நல்லா ஒடவேண்டும். என்னைக் கேலி பண்ணி ஒரு படம் நல்ல ஓடியது என்றால், முதல் ஆளாக நான்தான் ரொம்ப சந்தோஷப்படுவேன். என்னைக் கேலி பண்ணுவதற்கு உரிமை இருக்கிறது. நான் என்ன அரசியல்வாதியா, சாதாரண சினிமாக்காரன்தானே. வரும் காலத்தில் இயக்குநர்கள் என்னை மாதிரி கருப்பு கண்ணாடிப் போட்டுக் கொண்டு கிண்டல் பண்ணலாம்... தப்பே கிடையாது. என்னைப் பற்றி என்னவெல்லாம் தெரியுதோ, அதை வைத்து கேலி பண்ணலாம். அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறேன்"

உங்கள் படைப்புகளில் அரசியல் பார்வையை நேரடியாக பார்க்க முடிவதில்லையே...

"ரொம்ப உண்மையாக ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். எல்லா மனிதர்களுக்கும் ஓர் அரசியல் பார்வை இருக்கிறது. எல்லாருமே வாக்களிக்கிறார்கள், அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

'பிசாசு' கெட்டது என்று சொல்லாதீர்கள் என்றேன். அது ஓர் அரசியல் பார்வைதான். உங்களுக்கு தெரியாததை எப்படி நீங்கள் எப்படி கெட்டது என்று சொல்லலாம் என்றேன். ஓர் அன்பான குடும்பத்தை இந்தச் சமூகம் எப்படி பழிவாங்குகிறது என்பதும் ஒரு அரசியல் கருத்துதான். 'நந்தலாலா' படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனை இந்தச் சமூகம் எப்படி நடத்துகிறது என்பதைக் காட்டியதும் ஓர் அரசியல் பார்வைதான். 'சித்திரம் பேசுதடி' படத்தில், தன்னுடைய அப்பா, பாலியல் தொழிலாளி வீட்டுக்கு போனால், அதை மகள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று சொன்னதும் ஓர் அரசியல் பார்வை. ஒரு போலீஸ்காரர் எப்படி இருக்க வேண்டும் என்று 'அஞ்சாதே'வில் சொன்னேன். அதுவும் ஓர் அரசியல் பார்வை.

என் கதைகள் மூலமாக நான் அரசியலைப் பார்க்கிறேன். எனக்கு அது போதும். எனக்கு இந்தச் சமூகம் அளித்துள்ள இடத்தை வைத்துக்கொண்டு சமகால அரசியலைப் பற்றியும், ஆளும்கட்சி - எதிர்க்கட்சியைப் பற்றி கருத்துகளைச் சொல்வது ரொம்ப தவறானதாக பார்க்கிறேன். நான் ஒரு சினிமாக்காரன். சினிமாக்காரர்கள் அரசியல் கருத்து சொல்வதை நான் பரிதாபமாக பார்க்கிறேன். மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. அதற்கு இடையே கருத்து சொல்லவே கூடாது என்று நினைக்கிறேன். நான் அதை பண்ணவே மாட்டேன். எனக்கு அது தேவையில்லாத வேலை. அனைவருமே அவர்களுடைய இடத்தில் அவர்களுடைய வேலையை சரியாகச் செய்தாலே இந்த உலகம் நல்லாயிருக்கும். இதுவும் ஓர் அரசியல் கருத்து. இந்தச் சமூகத்தில் நான் ஒரு சினிமாக்காரன். என்னுடைய பணி, கதை சொல்வது. அதுதான் முக்கியம்."

சரி, 'சவரக்கத்தி' இப்போது எந்த நிலையில் இருக்கிறது?

"எனது தம்பியும், உதவி இயக்குநருமான ஆதித்யா இயக்கும் படம் இது. திடீரென்று ஒரு நாள் ஒரு காமெடி கதை எழுதித் தருகிறீர்களா என்று கேட்டான். அங்குதான் எனக்கு வினையே ஆரம்பித்தது. எனது படங்கள் எல்லாமே ரொம்ப சீரியஸாகவே இருக்கும். வாழ்க்கையை வேற மாதிரி மனிதன் ஒருவன் பார்க்கிறான். எப்பவுமே பொய் பேசுகிற ஒரு மனிதன், பொய்யே சொல்லாத ஒரு கெட்டவன். இவர்கள் இருவருக்கும் 12 மணி நேரத்தில் நடப்பதுதான் கதை. காலை 6 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு முடிந்துவிடும்.

கதையை எழுதிக் கொடுத்துவிட்டு ராமை ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வை என்றேன். உடனே நீங்களும் நடிக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு ஒப்புக்கொண்டேன். இதுவரை 75% படப்பிடிப்பை முடிந்துவிட்டது. இருக்கிற பணத்தை எல்லாம் போட்டு படம் எடுத்தாகிவிட்டது. தற்போது பணமில்லை என்பதால் நிற்கிறது. பணம் வந்தவுடன் மீதியுள்ள படப்பிடிப்பை முடித்துவிடுவோம்."

உங்களது சினிமா மொழியை வடிக்கும் உத்திகள் குறித்து...

"நான் கதை எழுதும் போது என்னை யாராவது பார்த்தால், நான் ஒரு பைத்தியம் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். நான் சிரித்துக்கொண்டோ அல்லது அழுதுகொண்டே தான் எழுதுவேன். ஐ ஆல்வேஸ் வான்ட் டட் டூ ரைட் எமோஷனலி. 'பிசாசு' படத்தில் அந்த அப்பா தனது மகளை இறுதியில் பார்க்கும் காட்சியை அழுதுகொண்டேதான் எழுதினேன். வெள்ளைப் பேப்பர் முழுவதும் கண்ணீராகத்தான் இருந்தது. உணர்ச்சிகரமான மனிதர் என்பார்கள். உணர்ச்சிகள் நிறைந்ததுதான் வாழ்க்கையே. எனது தலைமுறைகள் பல நல்லது பண்ணியிருக்கிறார்கள். அதனால்தான் நான் சினிமாவில் இருக்கிறேன். இப்படித்தான் படம் பண்ண வேண்டும் என்று நான் தீர்க்கமாக இருக்கிறேன்.

இன்னும் 100 ஆண்டுகள் பழமையான நாவல்களை படிக்க ஆசையாக இருக்கிறது. படித்துக் கொண்டிருக்கிறேன். அழகியல் ரீதியாக நாம் படம் பண்ண இலக்கியம் அவசியம் என்று நினைக்கிறேன்.

ஜப்பான் பயணத்தில் விழா ஒன்றில் பேசும்போது, 'எனது மிகச் சிறந்த படங்கள்தான் மிகச் சிறந்த தோல்வி படங்கள்' என்றேன். ஒரு நல்ல படம் தோல்வி ஆகலாம், தப்பு கிடையாது. சாப்பிடுவதற்கு கொஞ்சம் காசு வேண்டும், அவ்வளவுதான். வேறு எதுவும் வாழ்க்கையில் தேவையில்லை.

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் 5 நிமிடக் காட்சி. 12 பக்கங்களுக்கு வசனம் பேச வேண்டும். நான்தான் எழுதினேன். எனக்கு மனப்பாடம் செய்யும் திறமையே கிடையாது. அதனால் நான் மனப்பாடமே பண்ணவில்லை. உதவி இயக்குநர் என்னிடம் வந்தபோது "50 எம்.எம் ஷாட் வைத்துவிடுங்கள். என்ன பேசுவேன் என்று தெரியாது. கேமராவை வைத்துவிட்டு எல்லாரும் சென்றுவிடுங்கள்" என்றேன். அவர்களும் போய்விட்டார்கள். அம்மா, அப்பா, பெண் எல்லாரும் உட்கார்ந்திருக்கும் போது, மரத்தில் இருந்து நடந்து வந்து உட்கார்ந்து 'ஒரு ஊர்ல...' என்று பேச ஆரம்பித்தேன். அடுத்து என்ன என்று எனக்கு தெரியாது. அப்படியே தொடர்ந்து பேசி முழுமையாக முடித்து அந்தப் பையனைப் பார்க்கும்போது நிஜமாக அழுதுக் கொண்டிருந்தேன். அந்தப் பையனும் அழுது முடித்து, காட்சிகள் முடிந்தும் 2 நிமிடம் அழுதுகொண்டே இருந்தேன். அப்படியே எழுந்தேன், அனைவரும் வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அப்படியே மயங்கி கிழே விழுந்துவிட்டேன். நான் எப்படி நடித்தேன், என்ன பேசினேன், என்ன நடந்தது என்று எதுவுமே தெரியாது. அது ஒரு அமானுஷ்யமான செயல்முறை.

சினிமாவில் நான் படிக்காததே கிடையாது. ரொம்ப உண்மையாக படித்திருக்கிறேன். நிறைய பேர் சினிமாவை கையில் பிடித்திருக்கும் கயிறு போல் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமா இப்படித்தான் என்று யாராலும் சொல்ல முடியாது. சினிமா என்பது பெரிய உலகம். காற்றைப் போன்றது சினிமா. ஒரு பலூனில் காற்றை பிடித்துவிட்டு, நான் காற்றை பிடித்துவிட்டேன் என்று சொல்ல முடியுமா?"

உங்களது குடும்ப வாழ்க்கை எந்த அளவு சினிமா வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கிறது?

"என் குடும்ப வாழ்க்கையே ரொம்ப போரானது. தற்போது என்னுடைய வாழ்க்கையில் யாருமே இல்லாமல் தனியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நானும் என் மனைவியும் பிரிந்துவிட்டோம். என் மகள், மனைவியுடன் இருக்கிறார். வாரத்துக்கு ஒரு முறை என்னை வந்து பார்ப்பார். இதுதான் எனது 12 ஆண்டுகால வாழ்க்கை. நான் எனது உதவி இயக்குநர்களுடன் இருக்கிறேன்.

டீக்கடைகளில் எப்போதுமே சுடுதண்ணீர் கொதித்துக் கொண்டே இருக்கும். அதேபோல எனது தனிப்பட்ட வாழ்க்கையின் துயர்களும். அதுதான் என்னை நல்ல சினிமாவை எடுக்க வைக்கிறது என்று நம்புகிறேன். எனது குடும்ப வாழ்க்கைதான் சினிமாவில் என்னை ரொம்ப சின்சியராக இருக்க வைக்கிறது. ஒருவேளை எனது குடும்ப வாழ்க்கை நல்லபடியாக இருந்திருந்தால் பணம் சம்பாதிக்கிற படங்கள் மட்டும்தான் பண்ணியிருப்பேன். எனது குடும்ப வாழ்க்கை, பிரச்சினையில் இருப்பதால்தான் நல்ல சினிமா எடுக்க முடிகிறது. ஒரு கலைஞனுக்கு சோகம் இருக்க வேண்டும். சினிமாதான் என் வாழ்க்கை, மூச்சு, சந்தோஷம் எல்லாமே!"

இந்த நேர்காணலின் முதல் பகுதி:>என்னைக் கடவுள்போல் நினைத்துக்கொண்டேன்: மிஷ்கின் நேர்காணல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்