சினிமா எடுத்துப் பார் 51: ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்!

By எஸ்.பி.முத்துராமன்

‘முரட்டுக்காளை’ படத்தில் முக்கிய மான களம் மஞ்சு விரட்டு. அந்தப் போட்டியில் கலந்துகொண்டு ரஜினி வெற்றி பெற்றால்தான் ஊரில் நிஜமான முரட்டுக்காளை என்ற பெயர் அவருக்குக் கிடைக்கும். மஞ்சுவிரட்டுக் களத்தில் இறங்கிய ரஜினி முரட்டுக் காளையோடு போராடினார். அவரை காளை குத்திவிடுமோ என்கிற பயம் எங் களுக்கு.

ஆனால், ரஜினியோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் களத்தில் இறங்கி காளையோடு மல்லுக் கட்டினார். அந்தச் சண்டைக் காட்சியில் சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் கூடவே பாதுகாப்பாக இருந்து படப் பிடிப்பைப் பரபரப்பாக்கினார். நாங்கள் நினைத்தது போல் காளையோடு ரஜினி மோதும் சண்டைக் காட்சி த்ரில்லாகவே அமைந்தது.

ரஜினி களத்தில் காளையோடு மோதும் குளோஸ்அப் காட்சிகளை, சென்னையில் உள்ள ஏவி.எம் பள்ளி விளையாட்டு மைதானத்தில் எடுத்தோம். ஒரிஜினல் மஞ்சுவிரட்டுக் களத்தில் எப்படி படமாக்கினோமோ, அதே போல அங்கும் காளைகளை வைத்து காட்சியை எடுத்தோம். இரண்டு இடங்களையும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு எடிட்டர் விட்டல் மேட்ச் செய்து கொடுத் தார். மஞ்சுவிரட்டில் காளையோடு மோதி ஜெயிக்கும் ரஜினி, அந்தக் காளையின் கொம்பில் கட்டப்பட்டத் துணியை அவிழ்த்து, தலைப் பாகையாகக் கட்டிக் கொள்வார். அதைப் பார்க்கும் ஊர் மக்கள் ரஜினியைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

அப்போதுதான் ‘பொது வாக எம்மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’ என்கிற பாட்டு ஒலிக்கும். இளையராஜா இயல்பாகவே கிராமியப் பாடல்களை சிறப்பாக அமைப்பார். அவர் கிராமத்தில் பிறந்தவர் என்பதால் இந்தப் பாட்டை இன்னும் ஒருபடி மேலே போய், பெண்கள் குலவை இடுவதை எல்லாம் சேர்த்து அதை வெற்றிப் பாடலாக்கினார். அந்தப் பாட்டை பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதினார். இப்போது ரஜினி அவர்கள் ரியல் வாழ்க்கையில் எப்படி வாழ்கிறாரோ, அதெல்லாம் அப்போதே வார்த்தைகளில் கொண்டுவந்திருந்தார் பஞ்சு. ரஜினி ரசிகர்களால் அந்தப் பாடல் இன்றும் கொண்டாடப்படுகிறது. அவர்களுடைய விழாக்களில் எல்லாம் இந்தப் பாட்டு ‘ரஜினி கீதமாக’ ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தென்காசி அருகே ஓடும் ரயிலில் ஒரு சண்டைக் காட்சியை எடுக்கும் வேலையில் இறங்கினோம். விசாரித்த போது அந்த ரயில்வே டிராக்கில் காலை யில் ஒரு ரயில் போகும், மாலையில் ஒரு ரயில் திரும்பும் என்று கேள்விப்பட்டோம். இடைப்பட்ட நேரத்தில் ரயில் ஒன்றை வாடகைக்கு எடுத்து ஷூட் பண்ணலாம் எனத் திட்டமிடப்பட்டது. பொதுவாக சண்டை காட்சிக்கு என்று ஒரு பட்ஜெட் ஒதுக்கிக்கொள்வது வழக்கம். ஷூட்டிங் நடத்தும் இடத்தை பார்த்தபோது, கண்டிப்பாக பட்ஜெட்டில் மூணு, நான்கு லட்சம் அதிகம் செலவாகும் என்று தெரிந்தது.

சென்னைக்கு வந்து ஏவி.எம். சரவணன் சாரிடம், ‘‘அந்தக் காட்சியைப் படமாக்கணும்னா மூன்று நாட்கள் ரயிலை வாடகைக்கு எடுக்கணும். ஃபிலிம்மை நம்ம கண்ட்ரோல்ல வைத்து ஷூட் செய்ய முடியாது. அங்கே சென்று பார்த்ததில் கண்டிப்பா ஆறு முதல் ஏழு லட்சம் வரைக்கும் செலவாகும். உங்க பட்ஜெட்டுக்கு அது தாங்குமா? நீங்கதான் யோசித்து சொல்லணும்’’ என்றேன். அதற்கு சரவணன் சார், ‘‘மூன்று லட்சம் கூடுதலா செலவானா மேனேஜ் பண்ணிக்கலாம் முத்துராமன். ஆனா, எடுக்கப்போற ரயில் ஃபைட் மாதிரி தமிழ் படங்கள்ல இதுவரைக்கும் வரலைன்னு சொல்ற அளவுக்கு உங் களால எடுக்க முடியும்னா, பரவா யில்லை’’ என்றார்.

அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு படப் பிடிப்புக்கு அனுமதி பெற்று கிளம்பி னோம். ஓடும் ரயிலிலேயே பல காட்சிகள் எடுக்கப்பட்டன. பாலத்துக்கு மேல் ரயில் போகும்போது ஃபைட் சீன்களை எடுக்கும்போது, கொஞ்சம் மிஸ் ஆனாலும் பாலத்தில் இருந்து கீழே விழ வேண்டியதுதான். அதனாலேயே பல காட்சிகளை டூப் போட்டு எடுக்கலாம் என்று ஜூடோ ரத்தினம் திட்டமிட்டி ருந்தார்.

‘‘டூப் போட்டு எடுத்தா, லாங் ஷாட் வெச்சிடுவீங்க. சீன்ல ஒரு ஈர்ப்பு இருக்காது. நானே ஃபைட் பண்றேன்’’ என்று சொல்லி, டூப்புக்கு ஒப்புக் கொள்ளவில்லை ரஜினி. ‘‘ரிஸ்க் ஆகிடும்… சார்’’ என மறுத்தோம். ‘‘எனக்கு ரிஸ்க் ஆகிடும்னு சொல்றீங்களே. எனக்கு டூப் போட்டு நடிக்கிறவரும் உயிருள்ள மனுஷன்தானே. அவருக்கு மட்டும் ரிஸ்க் இல்லையா?’’ என்று ரஜினி எங் களோடு விவாதம் செய்து, கடைசியில் அவரே அந்த ரயில் சண்டை காட்சிகளில் ஒரிஜினலாக நடித்தார். அந்த சண்டைக் காட்சி பெரிய அளவில் பெயர் வாங்கி யது. ஆங்கிலப் படங்களுக்கு இணை யாக பேசப்பட்டது அந்தக் காட்சி. ‘முரட்டுக்காளை’ படத்தோட ரயில் சண்டை மாதிரி இருக்கணும்’னு அடுத் தடுத்து பல இயக்குநர்கள் உதாரணம் சொல்ல ஆரம்பிச்சாங்க. தங்களோட படங்களுக்கு அதே லொக்கேஷனில் படப்பிடிப்பும் நடத்தினாங்க.

ஒளிப்பதிவாளர் பாபுவும், அவரது உதவியாளர்களும் ஒளிப்பதிவாளர் சோமுவும் தங்கள் உயிரைக் கொடுத்து அந்தக் காட்சிகளை எடுத்தார்கள். சோமு, கேமராவை எந்த இடத்திலும் ‘வாக்குவம் பேஸ்’ துணைக்கொண்டு பொருத்திவிடுவார். பல்லி போல் ஒட்டிக்கொள்ளும் வாக்குவம் பேஸில், கேமராவை வைத்து ரயில் இன்ஜின் முன், கேரேஜ் பக்கத்தில், ஏன், ரயிலுக்கு அடியிலும் பொருத்தினார். எல்லா ஷாட்டுகளும் த்ரில்லாக அமைந்தன. அந்தக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பு பெற்றன. எங்கள் குழுவின் திட்டமிடலும் ரொம்ப உபயோகமாக இருந்தது. குறிப்பாக ஜூடோ ரத்தினம், அவரு டைய உதவியாளர் விக்ரம் தர்மா, சூப்பர் சுப்பராயன், முஸ்தபா, விக்கி, ராமு, பட்டுசாமி, ரவி போன்றவர்கள் எல்லாம் காரணம். அன்றைக்கு ஜூடோ ரத்தினத்திடம் உதவியாளர்களாக இருந்த அவர்கள் எல்லாம் இன்றைக்கு சண்டை இயக்குநர்கள். இந்தப் பாராட்டு முழுதும் ஜூடோ ரத்தினத்தையே போய்ச் சேரும்.

படத்தில் ஜெய்சங்கரின் தங்கை சுமலதாவுக்கு, ஹீரோ ரஜினியின் மீது காதல். ரஜினியைத் தன் பக்கம் இழுக்க அவரையே சுற்றிச் சுற்றி வருவார். அப்போது சுமலதா, ‘மாமன் மச்சான் ஹே… நீ தானோ… ஆசை வச்சா ஏன் ஆகாதோ’ என்று பாடிக் கொண்டு வருவார். இந்தப் பாட்டைக் கேட்டு ரஜினி, சுமலதாவிடம் இருந்து தப்பிக்க காடு, மலையெல்லாம் ஓடுவார். தங்கையின் காதல் விஷயம் ஜெய்சங்கருக்குத் தெரிந்ததும் ஒரு காட்சி வைக்க திட்டமிட்டோம்.

- இன்னும் படம் பார்ப்போம்…

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்