செம்மலர் அன்னம் என்கிற பெயர் மட்டுமல்ல; இவருடைய யதார்த்தமான நடிப்பையும் ஆச்சர்யமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.
இந்தப் பத்திக்காக அவருடன் பேசிய தருணத்தில் கனடா நாட்டின் டொரண்டோ நகரில் நடந்து முடிந்துள்ள தமிழ்த் திரைப்பட விழாவில் 'செந்நாய்' படத்துக்காக ‘வளரிளம் திரைக் கலைஞர்’ விருதைப் பெற்றிருந்தார்.
‘‘காலம் மிகவும் விசித்திரமானது. யாரை எப்போ ஏத்திவைச்சு எப்படி அழகு பார்க்கும்ணு யாருக்கும் தெரியாது. அப்படித்தான் உதவி இயக்குநரா சேரத் துடிச்ச என்னைத் துணை நடிகையாக்கி என்னையே எனக்கு அடையாளப்படுத்துச்சு. இப்போ உதவி இயக்குநர், இயக்குநர்னு அடுத்தடுத்தப் படிநிலைகளுக்கு உயர்த்தி இருக்கு’’ என ஆற்றல் மிகுந்த சொற்களுடன் பேசத் தொடங்கினார் செம்மலர் அன்னம். திரைப்படம், குறும்படம், டாக்கு டிராமா, சுயாதீனப் படங்கள், விளம்பரப் படங்கள், நாடகம் என எல்லா வடிவங்களுக்கும் தன்னை ஒப்புக்கொடுப்பவர்.
‘‘உண்மையச் சொல்லணும்னா நான் உதவி இயக்குநர் ஆகணும் என்றுதான் சென்னைக்கே வந்தேன். ஆனால், நடிகை ஆனது நானே எதிர்பார்க்காத திருப்பம்’’ என்று தன் பிளாஷ்பேக் பகிர்ந்தார்.
‘‘கோவை பி.எ.ஸ்ஜி கல்லூரியில் விஸ்காம் படிச்சேன். விமான நிலையத்துக்குப் பக்கத்துலயே எங்க வீடு. அடிக்கடி படப்பிடிப்பு நடைபெறுவதால் எங்கத் தெருவாசிகள்ல பலர், நடிகர்களைப் பார்க்க ஆர்வமா போவாங்க. அப்படித்தான் ‘ஆளவந்தான்’ படப்பிடிப்பு நடந்தப்போ.. கமல் சாரைப் பார்க்க எல்லாரும் ஆர்வமா போனாங்க. நான் மட்டும் போகலை. டைரக்டர் ஆகி நேருக்கு நேரா கமல் சாரைப் பார்க்கப் போறோம். இப்போ போய் கூட்டத்துல ஒருத்தரா பார்க்குறதான்னு தவிர்த்துட்டேன். இப்போ என் தன்னம்பிக்கையைப் பற்றி நல்லா புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்குறேன்.
பிறகு கல்லூரி பாடத்திட்டத்துக்காக வரிசையா பல குறும்படங்கள் பண்ணேன். அப்போதான் வஸந்த் சார் எங்க கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினரா வந்தார். என்னுடைய ‘மலர்மதி’ என்கிற குறும்படத்தைப் பார்த்துட்டு, ‘இது விருதுக்குத் தகுதியான குறும்படம்’ என்று பாராட்டினார். ‘மலர்மதி’க்கு மாநில அளவில் சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநர், சிறந்த இசைன்னு மொத்தம் மூன்று விருதுகள் கிடைச்சது. இந்த மகிழ்ச்சியை வஸந்த் சாரிடம் பகிர்ந்துகிட்டேன்.
‘என் படத்துல உதவி இயக்குநரா வேலை பார்க்குறீங்களா?’ன்னு கேட்டார். சாக்லேட் தின்ன கசக்குமா என்ன? உடனே ஓகே சொல்லிட்டு சென்னைக்கு வந்து அவருடன் பணியாற்றினேன். பிறகு, மாற்று சினிமா இயக்குநர், நவீன நாடகக் கலைஞர் அருண்மொழி சிவப்பிரகாசத்தின் அறிமுகம் கிடைச்சது. அந்தப் பன்முகத் திறமையாளரிடம் 5 வருடம் நடிப்புக் கலையைக் கத்துகிட்டேன். அருண்மொழி தன்னுடைய முகநூல் பக்கத்தில் என்னுடைய புகைப்படங்களைப் பதிவிட்டு என்னைத் திரையுலகின் பார்வைக்குக் கொண்டு சென்றார். அதன்பிறகு வரிசையாக வெள்ளித்திரை வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இன்னொரு பக்கம் குறும்பட வாய்ப்புகளுக்கும் குறைவில்லை” என பளீர் சிரிப்புடன் முகம் மலர்கிறார் செம்மலர் அன்னம்.
‘அம்மணி’,‘மகளிர் மட்டும்’,‘பொன்மகள் வந்தாள்’,‘சில்லுக் கருப்பட்டி’ என வரிசையாக நடித்துத் தள்ளியவர், தற்போது, அஜித்தின் ‘வலிமை’, ‘கட்டில்’, ‘கள்வன்’, ‘பேச்சிலர்’, ‘ஆயிரம் பொற்காசுகள்’ என அன்னம் நடித்த பத்துக்கும் மேற்பட்ட படங்கள் அடுத்தடுத்து வெளிவரக் காத்திருக்கின்றன.
‘‘நடிப்பா, இயக்கமா? இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கிறதுங்கிற கேள்வி எனக்குள்ள பெருசா எழலை. கலைன்னு வந்துட்டா எல்லாமே முக்கியமான கூறுகள்தான். படங்கள்ல நடிச்சாலும் உதவி இயக்குநருக்கான வேலைகளைத் தொடர்ந்து செய்தேன். அப்படிப் பல இயக்குநர்களிடம் இயல்பாகப் பேச முடிஞ்சதால புத்தகங்கள், திரைக்கதை, மேக்கிங், அழகியல், தொழில்நுட்ப அம்சங்கள்னு நிறையக் கத்துக்க முடிஞ்சது.
இடையில பா.இரஞ்சித் சார் ‘மெட்ராஸ்’ படம் முடிச்ச பிறகு பெண் உதவி இயக்குநர் தேடிக்கிட்டு இருந்ததா எனக்குத் தகவல் கிடைச்சது. நான் முயற்சி எடுத்து சேர்றதுக்குள்ளே இன்னொருத்தர் சேர்ந்துட்டாங்க. அதுல எனக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். எப்படியாவது உதவி இயக்குநர் ஆகணும்னு தீவிரமா முயற்சி எடுத்தேன். அது மலையாள இயக்குநர் மூலமா நடந்தது’’ என்ற அன்னத்தின் பேச்சில் இலக்கை அடைந்துவிட்ட திருப்தி தெரிந்தது.
51 மணி நேரம், 2 நிமிடத்தில் ‘விஸ்வகுரு’ படம் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த மலையாள இயக்குநர் விஜீஷ் மணி ‘ம்’ என்ற படத்தை குறும்பா மொழியில் இயக்கியுள்ளார். அதில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார் செம்மலர் அன்னம்.
‘‘தேன் எடுக்கும் குறும்பர் பழங்குடி மக்களின் கதையே ‘ம்’. விஜீஷ் மணி சார், ‘உதவி இயக்குநரா வேலை செய்றீங்களா? ஒரு குழந்தைக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கணும், டப்பிங், காஸ்டியூம் கவனிச்சுக்கணும்’னு சொன்னதும் சவாலைச் சந்திக்க சம்மதிச்சேன். பி.லெனின் சார்தான் எடிட்டிங். அவரோட உதவியாளர் மாருதி இணை இயக்குநர். அனுபவம்மிக்க ஆளுமைகளோட வேலை பழகியதில் நுட்பங்களைக் கத்துக்கிட்டேன்’’ என்றார் குதூகுலத்துடன்.
‘முதல் மழை’ குறும்படம் இயக்கி வெளியிட்டதில் அன்னத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த ஆர்வத்துக்கு அணை போடாமல் அடுத்தகட்ட வேலைகளில் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளார்.
‘‘என்னை வளர்த்துக்கிட்டு, எனக்கான தனித்துவப் பாணியை அடையாளம் கண்டுகொண்ட பிறகே படம் இயக்கணும்னு நினைச்சேன். இப்போ அந்த இடத்தை அடைஞ்சிட்டேன். ரெண்டு படங்கள் பண்ண திட்டமிட்டிருக்கேன். ஒன்னு சுயாதீனப் படம். நானே தயாரிச்சு, இயக்குகிறேன். அடுத்து ஒன்றரை மணி நேரத் திரைப்படம்.
“சினிமாவில் எல்லாம் சாத்தியம்தான். ஆனால், துணை நடிகையாக இருந்து இயக்குநர் ஆவதெல்லாம் அபூர்வம். அந்த அபூர்வ மலரா நான் இருப்பதில் மகிழ்ச்சி’’ என்கிற அன்னத்தின் முகத்தில் படர்ந்த பெருமிதம், தமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கைகளில் ஒருவராக உயர்ந்துவிடுவார் என்பதைச் சொன்னது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago