தமிழில் வெளிவந்திருக்கும் ஒரு முழுமையான திரைப்படம் விசாரணை. தமிழில் ஒரு உலக சினிமா என நாம் பெருமிதம் கொள்ளும் வகையில் உருவாகியிருக்கும் படைப்பு இது. உலக சினிமா என்ற பதப் பிரயோகம் ஏனெனில், காண் கலைகள் உலகப் பொதுமொழி கொண்டவை. அந்த மொழியை மேம்படக் கையாள்வதிலும் அதில் தனதான அடையாளங்களைப் பதிப்பதிலும்தான் ஒரு படைப்பாளியின் மேதைமை தங்கியிருக்கிறது.
அது ஒரு குறிப்பிட்ட பிராந்திய மொழியில் உருவாவதென்பது, அதன் படைப்புலக வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அந்த வாழ்க்கை பிரத்தியேகக் களங்களும் தளங்களும், உறவுகளும் உணர்வுகளும் கொண்டது. ஒரு குறிப்பிட்ட கால சமூக யதார்த்தத்தின் பின்புலத்தில் அமைந்தது. இவ்வகையில் நம் கால சமூக யதார்த்தத்தை விடவும் உக்கிரமான படைப்பு யதார்த்தத்தோடு உருவாகியிருக்கும் திரைப்படம் விசாரணை.
மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலைத் தழுவி அதிலிருந்து விரிவும் ஆழமும் பெற்றதாக வெற்றி மாறன் உருவாக்கியிருக்கும் படைப்பு ‘விசாரணை’. பிழைப்புக்காக குண்டூர் வரும் நான்கு தமிழ் இளைஞர்கள், மிகக் கொடூரமான காவல் நிலையச் சித்திரவதைகளுக்கு ஆளாகிறார்கள். செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்து, உண்ணாவிரதமிருந்து போராடுகிறார்கள்.
காவல் துறையின் பிரித்தாளும் சூழ்ச்சியாலும் தாள முடியாத சித்திரவதையிலிருந்து மீள்வதற்கான ஒரே மார்க்கமாகவும் மற்ற மூவரும் ஒப்புக்கொண்டுவிட, பாண்டி என்பவன் மட்டும் திடமாகக் குற்றத்தை மறுக்கிறான். கடைசியில் அவனும் தன்னுடைய கடை முதலாளியின் கெஞ்சுதலுக்கு இணங்கி குற்றத்தை ஒப்புக்கொள்ள முன்வருகிறான். கடை முதலாளியையும் அந்த வழக்கில் விசாரிக்கப் போவதாக போலீஸ் மிரட்டியதால் அவர் அவனிடம் கெஞ்சும்படி ஆகிறது.
கடை முதலாளிக்கும் பாண்டிக்குமிடையேயான உறவும் பாசமும் தொடர்ந்து வெளிப்பட்டபடி இருக்கிறது. பாண்டி முதலாளி குடும்பத்தோடு நல்லிணக்கம் கொண்டிருப்பது, படத்தின் முதல் காட்சியிலேயே வெளிப்பட்டுவிடுகிறது. அவன் முதலாளி வீட்டுக்குக் கடைச்சாவி வாங்க வரும்போது, அவர், ‘பண்டிகைக் காலமும் அதுவுமா கடையை லேட்டா திறந்தா எப்படிடா?’ என்று திட்டுகிறார்.
அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு பெண்மணியின் குரல் (முதலாளியின் மனைவி), ‘ஏங்க அவனைக் காலங்காத்தாலே திட்டறீங்க’ எனத் தெலுங்கில் சொல்கிறது. அந்தப் பெண்மணியின் முகம்கூடக் காட்டப்படவில்லை. ஆனால் அவருடைய இந்த ஒரு வரி வசனம், அந்தக் குடும்பம் அவன் மீது கொண்டிருக்கும் கரிசனத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்திவிடுகிறது. இதுவே பின்வரும் காட்சிகளுக்கு வலுவூட்டுகிறது.
இது ஒரு உதாரணம்தான். இப்படியாக, காட்சிகளினூடே இழையோடும் அநேக நுட்பமான பின்னல்களை இத்திரைப்படம் கொண்டிருக்கிறது.
மேலெழும் கதைப் பின்னல்
முதல் பாதியில் குண்டூர் காவல்நிலையச் சித்திரவதைக் காட்சிகளின் தொடர் வரிசையிலிருந்து ஒரு கதை மேலெழ முயற்சிக்கிறது. அதே சமயம் பின்பாதிக்கான கண்ணிகளோடும் இது புனைவு பெற்றிருக்கிறது. பின்பாதியில் சென்னையிலுள்ள ஒரு காவல் நிலையத்தைக் களமாகக் கொள்கிறது. இங்கு நடைபெறுவதோ, அரசியல் மற்றும் அதிகார வர்க்கங்களின் மாபெரும் விளையாட்டு. ஏழெட்டுக் காட்சிகளாக மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கும் பின்பாதி, அடுக்கடுக்காக நிகழும் சம்பவங்களின் மாற்றங்களுக்கேற்ப, படம் அதிவேகத்தில் விரைகிறது.
கிட்டத்தட்ட ஒரு நாளில் எல்லாம் நடந்து முடிந்துவிடுகிறது. மொழி தெரியாத ஊரில், செய்யாத குற்றத்துக்காகச் சித்திரவதைக்கு ஆளான இளைஞர்கள், சென்னையிலுள்ள காவல் நிலையத்துக்கு வந்துசேரும் போது, ‘ஸ்டேசன்ல இருந்தாலும் நம்ம ஊரு ஸ்டேசன்ல இருக்கணும்டா’ என்று மலர்ச்சி கொள்கிறார்கள். ஆனால் ஏதுமறியாத அந்த இளைஞர்கள் இரண்டாம் பகுதி நாடகத்தில் அகப்பட்டுக்கொண்டு உயிரை இழக்கிறார்கள். ஒவ்வொரு மரணமும் சாம்பல் நிறக் காட்சியாக உறைந்து நம்மையும் உறையச் செய்கிறது.
ஒரு உண்மைச் சம்பவத்திலிருந்தும் சில நடப்புகளிலிருந்தும் புனைவு பெற்றிருக்கும் இத்திரைக்கதை, இறுதியில் பயணத்தின் பாதியில் ஊர் சென்றதால் எஞ்சியிருக்கும் குமார் பற்றிய இன்றைய வாழ்க்கைக் குறிப்போடு முடிகிறது. ஓர் உண்மைக் கதை என்பதான உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் அலாதியான நுட்பத்தோடு இது அமைந்திருக்கிறது.
குற்றங்களின் உலகம்
குற்றங்களின் உலகமே வெற்றி மாறனின் படைப்புலகம். உலக இலக்கியத்தில் நான் போற்றும் ஃபியோதர் தாஸ்தாயேவ்ஸ்கி, ஃப்ரன்ஸ் காஃப்கா இருவரின் உலகமும் இதுதான். படத்தின் தலைப்பு காஃப்காவின் நாவல் தலைப்பைக் கொண்டிருப்பதும் கவனத்துக்குரியது. இருபதாம் நூற்றாண்டு மனிதனின் கவலைகளும் கவனங்களும் அது குறித்த விசாரணையும்தான் காஃப்காவின் படைப்புகள். அதுவே வெற்றி மாறனின் படைப்புலகமாகவும் திகழ்கிறது. நிராதரவானவர்கள் குற்றப் பழிக்கு ஆளாவதும் தண்டனை பெறுவதுமாக வெற்றி மாறனின் படைப்புலகம் இருக்கிறது.
மனித மனங்களில் உயிர்கொண்டிருக்கும் வஞ்சனையும் சூழ்ச்சியும் வெளிப்படும் களங்களாக இவரது திரைப்படங்கள் அமைகின்றன. சுயநல நோக்கங்களுக்காக உறவுகளில் வெளிப்படும் வஞ்சனைகளும் அதை நிறைவேற்ற மேற்கொள்ளும் சூழ்ச்சிகளும் மனிதார்த்த நாடகங்களாக இவரிடம் உருப்பெருகின்றன. ‘பொல்லாதவன்’ படத்தில் அண்ணனைத் தீர்த்துக்கட்டும் தம்பி; ‘ஆடுகள’த்தில் தன்னை மிஞ்சிய சிஷ்யனுக்கு எதிராக குரு செய்யும் சதி; ‘விசாரணை’யில் தனக்கு எதிராகத் திரும்பும் கீழதிகாரியைத் தீர்த்துக்கட்டும் உயரதிகாரி என வெவ்வேறு தளங்களில் மனித மன இருட்பிரதேசங்களினூடாக ஒரு பயணம் வெற்றி மாறனிடம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
மனித உரிமைகளைக் காக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் கொண்டிருக்கும் காவல் துறையே அதனைத் தன் காலடியில் தேய்த்து நசுக்கும் கீழ்மையையும் அவலத்தையும் மிகத் தீவிரமான படைப்பாக்கமாக இத்திரைப்படம் முன்வைக்கிறது.
கலை நுட்பங்கள்
ஒரு படைப்பு, கருத்துகளையும் செய்திகளையும் கொண்டிருக்கலாம். ஆனால் ஆற்றல் மிக்க கலையாக உருமாற்றுவது அது உருவாகும் சாதனத்தின் மீது அதன் படைப்பாளி கொண்டிருக்கும் ஞானபூர்வமான சக்திதான். அதன் கலை வெளியீட்டு நுட்பங்கள்தான். திரைப்பட மொழியில் சில சாத்தியங்களை வெற்றி மாறன் கண்டடைந்திருக்கிறார். திரைக்கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, நடிப்பு, இயல்பான கச்சிதமான வசனம் எனப் பல அம்சங்களும் ஆற்றலோடும் ஒன்றுக்கொன்று அனுசரணையாகவும் உருவாகியுள்ளன. முதல் பாதியின் திரைக்கதை அம்சங்கள் இரண்டாம் பாதியில் அப்படியே தொடர்வது குண்டூர் காவல் நிலையம்தான் சென்னையிலும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு வெகு சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய விதத்தில் மாயம் நிகழ்த்தியிருக்கிறது. பல காட்சித் தொகுப்புகள், அதிர்வூட்டும் ஓவிய பிம்பங்களாக உறைந்திருக்கின்றன; சலனம் கொள்கின்றன.
சமுத்திரக்கனி, கிஷோர், தினேஷ், ராமதாஸ், முருகதாஸ் ஆகியோர் பிரமிப்பில் ஆழ்த்துகிறார்கள். படத்தொகுப்பு மிகவும் கச்சிதமாகவும் துல்லியமாகவும் உள்ளது படத்தின் மீது கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் சற்றே பலவீனமான அம்சமாக இருப்பது பின்னணி இசைதான். அதே சமயம் ஒலிக்கலவையும் சிறப்பு சப்தங்களும் மிக நேர்த்தியாக அமைந்திருக்கின்றன.
படைப்புலகம் உருவாக்க விழையும் ஆழமான அதிர்வுகளுக்கு வலுவூட்டுவதாக இல்லாமல், பல இடங்களில் மேலோட்டமான பரபரப்புக்கு ஆளாக்குவதாக இசை அமைந்துவிட்டிருக்கிறது. பின்னணி இசையின்றி மௌனம் உறைந்திருக்கும் சில காட்சிகளில் மௌனம் விளைவிக்கும் அதிர்வு வெகு ஆழமானது. அகத்தில் கொந்தளிப்போடும் புறத்தில் நிதானமாகவும் சமுத்திரக்கனி மாடிப்படி ஏறிச்செல்லும் காட்சி ஒரு உதாரணம். இந்த அதிர்வுக்கு இணையானதாகப் பின்னணி இசை இருந்திருக்க வேண்டும்.
ஆற்றல் மிக்க கலை வெளிப்பாட்டினால்தான் இத்திரைப்படம் பார்வையாளனிடம் கடுமையான தாக்கங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அதிர்வுக்குள்ளாக்குகிறது. உலுக்கியெடுக்கிறது. அது நம்முள் ஏற்படுத்தும் விளைவுகள் நமது இதுவரையிலான அனுபவங்களையும் சுரணையையும் சீண்டுகின்றன. ஒரு சிறந்த புத்தகத்தின் வாசிப்பு தொடர்பாக காஃப்கா சொல்வதுபோல, இத்திரைப்படத்தை மனதாலோ மூளையாலோ நாம் பார்ப்பதில்லை. மாறாக, முதுகுத்தண்டால் பார்க்கிறோம். இவ்வகையில் திரையுலகில் அரங்கேறியிருக்கும் ஒரு அபூர்வ நிகழ்வு விசாரணை.
- தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago