தொடக்க காலத் தமிழ் சினிமாவில் 1936-யை ஒரு மைல்கல் ஆண்டு எனலாம். அந்த ஆண்டில்தான், தமிழ் தெரியாத அமெரிக்கரான எல்லிஸ் ஆர்.டங்கன், ‘சீமந்தனி’, ‘சதி லீலாவதி’, ‘இரு சகோதரர்கள்’ என மூன்று தமிழ்ப் படங்களை இயக்கி தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். இவற்றில் ‘சதி லீலாவதி’ படத்துக்கான கதையை எழுதியவர், பிற்காலத்தில் ஜெமினி எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பிய எஸ்.எஸ்.வாசன். அதேபோல், ‘சதி லீலாவதி’யில் இன்ஸ்பெக்டர் ரங்கய்யாவாக சிறிய வேடத்தில் அறிமுகமான எம்.ஜி.ஆர்., பின்னர் உச்ச நட்சத்திரம் ஆனார்! அவ்வளவுதானா இந்த ஆண்டுக்கானச் சிறப்பு?
பெண்களும் இந்த ஆண்டில் சாதனைப் படைத்திருக்கிறார்கள். முதல் தமிழ் பேசும்படம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ‘காளிதாஸ்’ (1931) படத்தின் கதாநாயகி, ‘சினிமா ராணி’ என்று பெயர் பெற்றவரான டி.பி.ராஜலட்சுமி. அவர், ‘ ராஜம் டாக்கீஸ்’ என்கிற பெயரில் சொந்தப் பட நிறுவனத்தைத் தொடங்கி, ‘மிஸ் கமலா’ (1936) என்கிற படத்தை தயாரித்து, இயக்கியதுடன் அதற்குக் கதை, வசனமும் எழுதி, முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் போன்ற பெருமைகளை அள்ளிக்கொண்டார்.
இதே ஆண்டில் இன்னொரு அற்புதமும் நிகழ்ந்தது! ‘தமிழ் சினிமாவின் முதல் வெள்ளி விழா’ படம் என்கிற பெருமைப் பெற்ற ‘பட்டினத்தார்’(1936) திரைப்படம் வெளியானது. சென்னை கிண்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ‘வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோ’வின் தயாரிப்பில் உருவான படம். ‘இசைமுரசு’ எம்.எம்.தண்டபாணி தேசிகர் என்கிற கச்சேரிப் பாடகரை, வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவின் அதிபர் எம்.டி.ராஜன் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.
தஞ்சையில் பிறந்து... மதுரையில் சிறந்து...
அக்காலகட்டத்தில், கர்னாடக இசைக் கச்சேரி மேடைகளில் தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், புரந்தரதாசர் போன்ற இசை மேதைகள் உருவாக்கிய தெலுங்கு, சமஸ்கிருத கீர்த்தனைகள்தான் பாடகர்களால் அதிகமும் பாடப்பட்டு வந்தன. கர்னாடக இசைக் கச்சேரிகளின் நிறைவில் ‘துக்கடாக்கள்’ என்கிற பெயரில் ஓரிரு தமிழிசைப் பாடல்கள் பாடப்பட்டன.
ஆனால் தமிழிசை இயக்கம் எழுச்சிபெறத் தொடங்கிய நாற்பதுகளின் தொடக்கத்தில் நிலைமை மாறியது. மகாகவி பாரதியார், கோபாலகிருஷ்ண பாரதியார், அருணாசல கவிராயர், முத்துத்தாண்டவர், பாபநாசம் சிவன் உள்ளிட்ட பலரது தமிழிசைப் பாடல்களை தன்னுடைய மேடைகளில் அதிகமாகப் பாடத் தொடங்கினார் எம்.எம்.தண்டபாணி தேசிகர் என்கிற இளம் பாடகர். கேட்டதுமே மயக்கும் கனீரென்ற வெண்கலக் குரல், அதில் சிறிதும் சுருதி குறையாமல் குழைந்தோடும் தெய்விகம், அட்சரம் பிசகாமால் தமிழ்ச் சொற்களின் உணர்ச்சியை லயித்து வெளிப்படுத்தும் உச்சரிப்பு ஆகிய மூன்று திறன்களை வரப்பிரசாதமாகப் பெற்றிருந்த தேசிகருக்கு வெகு விரைவாகப் புகழ்வந்து சேர்ந்தது.
மதுரை முத்தையா தண்டபாணி தேசிகர் என்பது இயற்பெயர். ஆனால், இவர் பிறந்ததோ தஞ்சாவூரின் நன்னிலம் அருகிலுள்ள திருச்செங்காட்டாங்குடி என்கிற சைவத் திருத்தல கிராமம். அங்கே, 1908-ம் ஆண்டும் ஆகஸ்ட் 27-ல்ஓர் ஓதுவார் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையான முத்தையா தேசிகர், ஆலயங்களில் தேவாரம் பாடும் தெய்விக இசைப் பணியை பரம்பரையாக செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். கோயிலில் தன்னுடைய தந்தையார் தேவாரம், திருவாசகம் இசைப்பதைக் கேட்டு, அவரை முதல் குருவாக வரித்துகொண்டு பால்யம் முதலே பக்தி இலக்கியப் பாடல்களில் இசைப் பயிற்சி பெற்றார். சட்டையப்ப நாயனக்காரர், தன்னுடைய சித்தப்பா மாணிக்க தேசிகர், வயலின் வித்வான் கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை என பல குருமார்களிடம் தமிழிசை, கர்னாடக இசையின் நுட்பங்களை திறம்படக் கற்ற தண்டபாணி தேசிகருக்கு 14 வயதில் திருமருகல் கோயிலில் அரங்கேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு குழுமியிருந்த இசைப் பெரியோர்களிடம் பாராட்டுகளையும் ஐந்து ரூபாய் பரிசினையும் பெற்றார். சிறு வயது முதல் கச்சேரிகள் செய்யத் தொடங்கிய தண்டபாணி தேசிகரை அவருடைய 18-வது வயதில் இசையாசிரியர் பணி தேடி வந்தது. மதுரை ஒக்கூர் லட்சுமணன் செட்டியார் தேவாரப் பாடசாலைக்கு ஆசிரியராக 18 வயதில் அமர்த்தப்பட்டார். அந்தப் பணியில் பத்து ஆண்டுகள் உருண்டோடியிருந்த நிலையில், அப்போதே தமிழிசைக்கும் கர்னாட இசைக்குமான வேர்கள் வெவ்வேறல்ல என்பதை தமிழ்ப் பண்களையும் பாடல்களையும் தேடித் தேடி உணர்ந்து பாடி துய்த்துக்கொண்டிருந்தார். மதுரையில் அவர் வாழ்ந்த காலத்தில், வடக்குச் சித்திர வீதியில் நடைபெறும் அம்மை மீனாட்சியின் உற்சவத்தில், அம்பாள் குறித்து இவர் இயற்றிப் பாடிய 9 பாடல்கள் அப்போதே புகழ்பெற்றுவிட்டன. இவற்றை மட்டுமல்ல, தேசிகரின் கச்சேரிகளையும் இசைத் தட்டுகளையும் சாதாரண மக்களும் ரசிப்பதைக் கண்ட வேல் பிக்சர்ஸ் நிறுவனம், அவரை ‘பட்டினத்தார்’ படத்தில் பாடி நடிக்க அழைத்தது.
52 பாடல்கள்.. 25 வாரம்!
1935-ல் ஒரு பட்டினத்தார் படம் வெளிவந்தது. சுந்தரமூர்த்தி ஒதுவார் பாடி நடித்திருந்த அந்தப் படம் மக்களைக் கவரவில்லை. ஆனால் எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த ‘பட்டினத்தார்’ (1936) தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக 25 வாரங்கள் தொடர்ந்து ஓடி சரித்திர சாதனை படைத்தது. பிரம்மாண்டமாகத் தயாராகியிருந்த இந்தப் படத்தில் மொத்தம் 52 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான பாடல்களை தேசிகரே பாடியிருந்தார். அறிமுகப் படமே அதிரடி வெற்றியாக அமைந்ததில் வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோ மீண்டும் தண்டபாணி தேசிகரை வைத்து ‘வல்லாள மகாராஜா’(1937) என்கிற படத்தை எடுத்தனர். அந்தப் படம் எடுபடவில்லை. ஆனால், இந்தப் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த எம்.எஸ்.தேவசேனாவை மணந்துகொண்டார் தேசிகர்.
தண்டபாணி தேசிகரின் தோற்றமும் குரலும், ஆழ்வார்கள், தெய்விக அருளாளர்கள் வேடங்களுக்கே அவர் பொருத்தமாக இருப்பார் என்கிற முடிவுக்கு வந்த பட முதலாளிகள் அவரை அடுத்தடுத்து ‘டைப் காஸ்ட்’ செய்தார்கள். அதன் விளைவாக, ‘தாயுமானவர்’ (1938), ‘மாணிக்கவாசகர்’ (1939), ‘நந்தனார்’ (1942), ‘ திருமழிசை ஆழ்வார்’ (1948) ஆகிய படங்களில் கதாநாயகனாக பாடி நடித்தார். இவற்றில் ஜெமினி தயாரித்த ‘நந்தனார்’ தமிழ் சினிமாவின் சரித்திர சாதனை படமாக மாறிப்போனது.
பிரபல பத்திரிகையாளர் முருகதாசா இயக்கத்தில், அக்காலத்தின் ஒளிப்பதிவு மேதைகளில் ஒருவராக விளங்கிய ராம்நாத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பில் உருவான ‘நந்தனார்’ படத்தின் அகண்ட காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தன. சேகரின் கலை இயக்கம் வியக்க வைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக தேசிகரின் கனீர் குரலில் ‘ஜகஜனனீ..’, ‘என் அப்பன் அல்லவா…’, ‘தில்லை என்றொரு தலமொன்று இருக்குதாம்’, ‘வழிமறித்து நிற்குதே’, ‘காண வேண்டாமா..’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை சொக்கியிழுத்தன. கதாநாயகி இல்லாத இந்தப் படத்தில் நந்தனாராகவே வாழ்ந்து காட்டினார் தேசிகர். பாடல்களுக்காக ரசிகர்கள் திரும்பத் திரும்ப திரையரங்கு வருவதைக் கண்ட வாசன், ‘ஜெமினியின் இசைக் காவியம்’ என்று விளம்பரம் செய்தார். இசைக்காகவும் ரசிகர்களை ஈர்த்த எம்.கே.தியாராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் படங்களுக்குச் சற்றும் குறைவில்லாத வெற்றியைக் குவித்தது ‘நந்தனார்.’
தமிழிசையே வாழ்வாக…
‘நந்தனா’ருக்குப் பின்னர் சில படங்களில் தேசிகரின் குரல் ஒலித்தது. இன்றைக்கும் மேடைகளில் பாடப்படும், விரும்பிக் கேட்கப்படும் பாடல், அறிஞர் அண்ணாவின் திரைக்கதையில் ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஓர் இரவு’ (1951) திரைப்படத்தில் இடம்பெற்ற ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்கிற பாரதிதாசன் எழுதிய பாடல். இந்தப் பாடலுக்கு தேஷ் ராகத்தில் மெட்டமைத்து மேடைகளில் பாடிப் புகழ்பெறச் செய்தவர் இசைமுரசு எம்.எம். தண்டபாணி தேசிகர்தான். திரையுலகம் தன்னைத் தள்ளியது பற்றிய அக்கறையின்றி முழு நேரத் தமிழிசைப் பணியில் ஈடுபாட்டார். தமிழிசையைப் பாடுவதிலும் அதைப் பயிற்றுவிப்பதிலும் தமிழிசையை திரையிசைப் பரப்பில் பரப்புவதிலும் ஒரு போராளி போலவே செயல்பட்டார் தேசிகர். தமிழிசைக் குறித்த ஆராய்ச்சியிலும் தன்னுடைய மறைவு வரை தன்னைக் கரைத்துகொண்டார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழிசைக் கல்லூரியின் முதல்வராக பல காலம் பணியாற்றி, பல சிறந்த மாணவர்களை உருவாக்கினார். அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளும், எழுதிய கட்டுரைகளும் ‘தமிழ் இசைக் கட்டுரைகள்' என்கிற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப் பட்டிருக்கின்றன.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago