சினிமா எடுத்துப் பார் 47: ‘ஆறிலிருந்து அறுபது வரை’ உருவான விதம்

By எஸ்.பி.முத்துராமன்

சிங்கப்பூர், மலேசியாவில் 15 நாட்கள் ‘ப்ரியா’ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்குத் திரும்பி னோம். இங்கே வந்ததும் அந்த நாடு களைப் போல நம் நாடு இல்லையே என்ற ஏக்கம் தொடர்ந்தது. அந்த ஏக்கத்தோடு நான் இயக்கிய சோகமான படத்தைப் பற்றிச் சொல்கிறேன். அது பஞ்சு அருணாசலம் எழுதி, தயாரித்த ‘ஆறிலிருந்து அறுபது வரை’.

ஒரு குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தால் என்னென்னப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என் பதை அடிப்படையாக வைத்து பஞ்சு அருணாச்சலம் ஒரு கதையை உருவாக்கி யிருந்தார். அந்தப் படத்தில் ரஜினியை ஹீரோவாக நடிக்க வைப்போம் என்றார்.

‘‘கமர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடிக்கும் ரஜினிக்கு, இந்த ‘அழுகாச்சி’ கதை சரிபட்டு வருமா?’’ என்று பலரும் கேட்டனர். ‘‘சரியா வரும்’’ என்று கூறிய பஞ்சு, அந்தக் கதையை ரஜினியிடம் சொன்னார். ‘‘நல்ல எமோஷனல் சப் ஜெக்ட். வித்தியாசமா இருக்கு. கண் டிப்பா செய்வோம்’’ என்றார் ரஜினி.

‘ஆறிலிருந்து அறுபது வரை’ படப் பிடிப்பு தொடங்கியது. ரஜினி குடும்பத் தின் மூத்த மகனாக நடித்தார். எல்.ஐ.சி. நரசிம்மன், சக்ரவர்த்தி இருவரும் தம்பி களாக நடித்தனர். மனைவியாக ‘படாபட்’ ஜெயலட்சுமி. தங்கையாக ஜெயா மற்றும் கல்பனா, பத்மஸ்ரீ. ரஜினியின் காதலி யாக சங்கீதா. அப்போது ‘எம்.ஜி.ஆர்’ சங்கீதா, ‘சிவாஜி’சங்கீதா என்று இரண்டு சங்கீதாக்கள் இருந்தனர். இந்தப் படத்தில் நடித்தவர் ‘எம்.ஜி.ஆர்’ சங்கீதா.

‘‘தம்பி, தங்கைக்கு இவ்வளவு செய்த பிறகும் அவர்கள் எதிர்த்துப் பேசுறாங்களே. இப்படியெல்லாம் ரியல் வாழ்க்கையில் நடக்குமா?’’ என்று ரஜினிக்கு சின்ன நெருடல். எப்போதும் கதை, வசனம், காட்சி அனைத்தையும் தெளிவாக உள்வாங்கிக்கொண்டு நடிக் கும் ரஜினி ‘இதில் என்னமோ லாஜிக் இடிக்குதே’ என்று என்னோடு விவாதித் தார். இதைப் பார்த்த ‘படாபட்’ ஜெய லட்சுமி, ‘‘முதலில் நீங்க ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்தபிறகு என்னை நடிக்க கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டு வெளியே போய் உட்கார்ந்துவிட்டார். அந்த அளவுக்கு எங்கள் விவாதம் இருந் தது. ஆம், ஆரோக்கியமான விவாதம்!

பஞ்சு அருணாச்சலம் அவர்களை படப்பிடிப்புக்கு வரச் சொல்லி, ரஜினியின் சந்தேகத்தை அவரிடம் கூறினேன். ரஜினியிடம் பஞ்சு ‘‘முதலில் 5 ஆயிரம் அடிகள் ஷூட் செய்வோம். அதை எடிட் செய்து போட்டுப் பார்ப்போம். உங்களுக் குப் பிடிக்கலைன்னா, வேற சப்ஜெக்ட்டுக் குப் போய்டுவோம்’’ என்றார். அதை கேட்ட ரஜினி, ‘‘ஓ.கே. சார்… நீங்க சொன் னதுபோலவே போட்டுப் பார்த்துட்டு முடிவெடுப்போம்’’ என்றார். அதே போலவே ரஜினிக்கு போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்த்த ரஜினி, ‘‘அருமையா வந்திருக்கு. எனக்கும் நல்ல பேர் கிடைக்கும்’’ என்றார். தொடர்ந்தது படப்பிடிப்பு.

ஒரு காட்சியில் ரஜினியின் குழந்தை பசியில் அழும். பால் பவுடர் காலி. டப்பா வில் கடைசியாக ஒட்டியிருக்கும் பால் பவுடரில் தண்ணீரைக் கலக்கி குழந்தைக்கு ஊட்டுவார், ‘படாபட்’ ஜெயலட்சுமி. அந்தச் சுவை பிடிக்காமல் குழந்தை அதை குடிக்காது. அந்தக் குழந்தையின் அழுகையைப் பார்த்து தியேட்டரே அழுதது. இப்படி பல காட்சிகள் ரசிகர்கள் மனதில் இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்தியது.

படத்தில் ரஜினிக்கு நண்பராக சோ நடித்திருந்தார். இப்படம் ரஜினி, சோ நட்பை பலப்படுத்திவிட்டது. சோ சட்ட வல்லுநர், பிசினஸ் மேனேஜ்மெண்ட் ஆலோசகர், பத்திரிகையாளர், அரசியல் வாதி, கதாசிரியர், நடிகர், இயக்குநர் என்று பல துறை வித்தகர். அதிக படங்களில் நடிக்க சோ ஒப்புக்கொள்ள மாட்டார். நான் இயக்கும் படங்கள் என்றால் மறுப்பு கூறாமல் நடிக்க வரு வார். காரணம், அவரது வேலையைப் புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல படப்பிடிப்பை நடத்தி அவரை அனுப்பி விடுவேன். ‘‘துக்ளக் பத்திரிகையின் பக்கங்களை முடிக்கும் நாள்ல என்னை சீக்கிரம் அனுப்பிடணும்’’ என்பார். அதே போல அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை சீக்கிரம் எடுத்து முடித்து அவரை அனுப்பி வைப்போம்.

சோ என் மேல் தனிப் பிரியமும், மரியாதையும் வைத்திருப்பவர். பல விழா மேடைகளிலும், தொலைக் காட்சிகளிலும் அதை கூறியிருக்கிறார். சுப.வீரபாண்டியன் என் தம்பி என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். சோ அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்பவர்களில் என் தம்பியும் ஒருவர். இன்று வரைக்கும் ‘சுப.வீரபாண்டியன் இப்படி பேசுகிறாரே’ என்று ஒரு வார்த்தைக் கூட சோ என்னிடம் கேட் டதே இல்லை. உடல்நிலை சரியில்லாத அவரைச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. அவர் மீண்டும் நலம்பெற்று இயல்பான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று இந்த நேரத் தில் நாம் எல்லோரும் வேண்டிக் கொள்வோம். அவர் இல்லாத தேர்தல்களம் களை கட்டுமா?

‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்தில் ‘படாபட்’ ஜெயலட்சுமியை ரஜினி திருமணம் செய்துகொள்வதற்கு முன், சங்கீதாவை காதலிப்பார். அந்தச் சூழலில் ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ, காவியமோ’ என்ற பாடல் இடம்பெற்றிருக்கும். இசைஞானி இளையராஜாவின் வெற்றிப் பாடல் களில் இதுவும் ஒன்று. நாங்கள் எடுத் ததோ பட்ஜெட் படம். நானும், ஒளிப்பதி வாளர் பாபுவும் பேசிக்கொண்டு, சின்ன இடத்துக்குள் பிரம்மாண்டமாகத் தெரியும் ஒரு செட் அமைத்து லைட்டிங், பில்டர் எல்லாம் வைத்து அந்தப் பாடலை பிரம்மாண்டமாகக் காட்சியாக்கினோம். அந்த சோகப் படத்துக்கு மிகப் பெரிய ரிலீஃப் ஆக அந்தப் பாடல் அமைந்தது.

அந்தப் படத்தில், தன் வாழ்வில் அனுபவித்த விஷயங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் எழுத ஆரம்பிப்பார் ரஜினி. நண்பர் சோ கொடுத்த உற்சாகத்தில் பெரிய எழுத்தாளராவார். வறுமைநிலை மாறி உயர்ந்த இடத்தை அடைவார். அந்த நேரத்தில் பிரிந்துபோன தம்பிகள், தங்கை மீண்டும் வருவார்கள். ஒரு ஈஸி சேரில் ஆடியபடி அவர்களைப் பார்ப்பார். ‘வசதி, வாய்ப்பு என்று வாழ்க்கை வந்த பிறகுதானே திரும்பி வருகிறீர்கள்’ என்பதைப் போல் பார்வையும், கேலிச் சிரிப்பும் இருக்கும். வசனமே கிடையாது. அப்படி ஒரு முகபாவம். அடுத்த நிமிடம் கைத்தடி கீழே விழும். ஈஸி சேர் அசைவது நிற்கும். உயிரும் பிரியும். அதுதான், ‘ஆறிலிருந்து அறுபது வரை’. அந்தப் படத்தின் நடிப்புக்காக ரஜினிக்கும், இயக்கத்துக்காக எனக்கும் முதல்வர் எம்.ஜி.ஆர் விருது கொடுத்தார்.

இப்படத்தின் எல்லா புகழும் பஞ்சு அருணாச்சலத்துக்கே சேரும். பஞ்சு அவர்கள் ‘அன்னக்கிளி’ மூலம் இளையராஜாவை இசையமைப்பாள ராக அறிமுகப்படுத்தினார். இன் றைக்கு இசைஞானி இளையராஜா 1,000 படங்களுக்கு இசையமைத்து விட்டார். வாழ்த்துவோம். இந்த ஊக்கத் தின் மூலம் இன்னும் 1,000 படங்களுக்கு இளையராஜா இசையமைக்கட்டும்.

ரஜினிக்காக இளையராஜா உருவாக்கினார் ஒரு ‘ரஜினி கீதம்’. எந்தப் படத்தில்… என்ன பாடல் அது? அடுத்த வாரம் சொல்கிறேனே…

- இன்னும் சொல்வேன்… படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்