நயன்தாரா நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள ‘நெற்றிக்கண்’ பரவலான விமர்சனப் பாராட்டுக்ளை பெற்றுள்ளது. பெருவாரியான ரசிகர்களையும் திருப்திபடுத்தியுள்ளது. படத்தில் குறைகண்டவர்கள்கூட, இந்தப் படத்தில் பார்வையிழந்த முன்னாள் சிபிஐ அதிகாரி துர்காவாக மையக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாராவின் நடிப்பைக் கொண்டாடுகிறார்கள்.
பெருந்தொற்றால் திரையரங்குகள் மூடிக் கிடக்கும் சூழலில், பல முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்களின் திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிவருகின்றன. ஆனால், சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, பா.இரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ என சில படங்கள் மட்டுமே ரசிகர்களை திருப்திப்படுத்தின. நாயகியை மையமாகக்கொண்ட திரைப்படங்களில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’, கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’, ‘மிஸ்.இந்தியா’, த்ரிஷாவின் ‘பரம்பத விளையாட்டு’ உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தன. அதே நேரம் கடந்த தீபாவளிக்கு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’, தற்போது வெளியாகியிருக்கும் ‘நெற்றிக்கண்’ என நயன்தாரா நடிப்பில் இதுவரை நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ள இரண்டு படங்களுமே ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்துள்ளன. ஆக ஓடிடியிலும் நயன்தாராவின் வெற்றிக்கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது.
மாறிவரும் கதாபாத்திரங்கள்
ஓடிடியில் பெண் மையக் கதைகள் கணிசமான எண்ணிக்கையில் வெளியாகியுள்ளன. காஜல் அகர்வால் நடித்த ‘லைவ் டெலிகாஸ்ட்’, தமன்னா நடித்த ‘நவம்பர் ஸ்டோரி’ ஆகியவற்றையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். தமிழ் சினிமாவில் நாயகியரை முதன்மைக் கதாபாத்திரமாக முன்னிறுத்தும் பெண்மையக் கதைகளைக் கொண்ட படங்களுக்கான சந்தை மதிப்பு புத்துயிர் பெற்றிருப்பதன் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘மாயா’, ‘அறம்’, ‘கோலமாவு கோகிலா’ என பெண் மையக் கதாபாத்திரங்களில் நயன்தாரா நடித்த படங்களின் வெற்றியும் விமர்சகர்களிடம் அவற்றுக்குக் கிடைத்த பாராட்டும் இந்த நிலையை மாற்றியமைத்தன. அந்த வகையில் பெண்மையக் கதைகளுக்கு புத்துயிரூட்டியவர் என்று நயன்தாராவைச் சொல்லலாம். அது மட்டுமல்ல; எழுதப்படும் பெண்மையக் கதாபாத்திரங்களின் தன்மையையும் மாற்றியமைத்திருக்கிறார்.
பெண்மையக் கதைகளில் மட்டுமல்லாமல் ரஜினிகாந்த், அஜித், விஜய் என மாஸ் கதாநாயகர்களின் படங்களில் நடிக்கும்போதும் நயன்தாராவுக்கென்றே வலுவான கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன. குறிப்பாக ‘விஸ்வாசம்’ படத்தில் தன்னுடைய கொள்கைக்காகக் கணவனைப் பிரிந்து வாழும் சுயசார்புமிக்கப் பெண்ணாக நயன்தாராவின் கதாபாத்திரம் அமைந்திருந்தது. பொதுவாக, கருத்து வேறுபாட்டால் கணவனைப் பிரிந்துவாழும் பெண்களை அறிவுரை கூறியோ, அடக்கியோ திருத்தப்படவேண்டியவர்களாகவே தமிழ் சினிமா சித்தரித்து வந்துள்ளது. அதிலிருந்து ஒரு புதிய மாற்றமாக இந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்கலாம்.
ஒரு ஆண் நடிகரால் செய்ய முடிந்த அனைத்தையும் தன்னாலும் செய்ய முடியும் ரசிகர்களும் அவற்றை ஏற்றுக்கொள்வார்கள் என்பதை நயன்தாரா தான் நடிக்கும் படங்களில் படிப்படியாக நிரூபித்துவருகிறார். ‘மாயா’ படத்தில் கணவனை பிரிந்து வாழும் அன்னையாகவும் ‘அறம்’ படத்தில் மக்களுடன் களத்தில் நின்று போராடும் மாவட்ட ஆட்சியராகவும் நடித்த நயன்தாராவுக்கு அவற்றில் பெண்களுக்கு உரித்தான விஷயங்களை மட்டுமே செய்ய முடிந்தது. ‘கோலமாவு கோகிலா’ படத்தில் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் பெண்ணாக, அதனால் விளையும் ஆபத்துகளை தனித்து சமாளிப்பவராக நடித்திருந்தார். இதில் எந்த ஆண் நடிகரும் அவருக்கு துணைபுரிய மாட்டார்கள். இந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் கணவனின் மரணத்துக்குக் காரணமானவர்களைப் பழிவாங்கும் சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார். இதில் துப்பாக்கியின் துணையுடன் வில்லன்களை வீழ்த்தும் கதாபாத்திரம் அமைந்தது. அதே நேரம் அவருடைய தம்பியாக நடித்த அதர்வாவுக்கே உடல்வலிமையை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் அமைந்திருந்தன. எதிரிகளை வீழ்த்துவதில் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் இருந்தது.
நாயகியின் உடல்வலிமை
தற்போது ‘நெற்றிக்கண்’, பெண்களைக் அடித்துத் துன்புறுத்தி பாலியல் அடிமைகளாக வைத்திருக்கும் கொடூர வில்லனான அஜ்மலை, இறுதி மோதலில் நயன்தாரா தீர்த்துக்கட்டுகிறார். காவல்துறை அதிகாரிகளும் மற்ற ஆண் கதாபாத்திரங்களும் அவருக்குத் துணைபுரிகின்றனர். அதேபோல் அஜ்மலிடம் சிக்கிக்கொள்ளும்போது தன்னுடைய உடல்வலிமையால் அவரை அடித்து வீழ்த்தி நயன்தாரா தப்பிப்பது போன்ற காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன. பொதுவாக ஆண் நட்சத்திரங்களுக்கென்றே அமைக்கப்படும் உடல்வலிமையைப் பறைசாற்றும் சண்டைக் காட்சிகள் ஒரு பெண் நட்சத்திரத்துக்கு வைக்கப்படுவதும் அது ரசிகர்களின் வரவேற்பை பெறுவதும் நயன்தாராவுக்கு கூடிவந்திருக்கிறது. அந்த வகையில் பெண்களையும் பெண் கதாபாத்திரங்களையும் பயன்படுத்தும் விதத்தில் ஒரு புதிய மாற்றத்தை நயன்தாராவின் முன்மாதிரி தொடங்கிவைத்துள்ளது. அதேபோல், இந்தப் படத்தில் பெண்களின் பாலியல் ஒழுக்கத்தை முன்னிறுத்தி தனது குற்றத்தை நியாயப்படுத்தி வில்லன் பேசும் வசனங்களுக்கு நயன்தாரா கொடுக்கும் பதிலடி பெண்களின் அந்தரங்கத்தில் தலையிட்டு அவர்களை இழிவுபடுத்தும் ஆண்மையச் சிந்தனை மீதான சவுக்கடி. நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து, அவரை இழிவுபடுத்துபவர்கள் மீதான சாடலாகவும் இந்த வசனம் அமைந்திருந்தது. பொதுவாக பெண்களுக்கு ஆதரவான இதுபோன்ற பதிலடிகளை ஆண்களே கொடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் நயன்தாரா இப்படிப்பட்ட வசனத்தைப் பேசுவது, அதுவும் ரசிகர்களிடம் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்துவதும் இன்னுமொரு வரவேற்கத்தக்க தொடக்கம்.
மறுவருகையில் முதலிடம்
நடிகைகள் மிகச் சில ஆண்டுகளே நாயகிகளாக நடிக்க முடியும் என்கிற தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதியை மாற்றியதில் நயன்தாராவுக்கு முதன்மைப் பங்கு உண்டு. நயன்தாரா அறிமுகமாகி 18 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. இடையில் தனிப்பட்ட காரணங்களால் சில ஆண்டு இடைவெளி எடுத்துக்கொண்டார். முதல் கட்டத்தில் முன்னணி நடிகையரில் ஒருவராக இருந்த நயன்தாரா, மறுவருகையில் இன்னும் பல படி முன்னேறி இன்று சந்தேகத்துக்கிடமின்றி உச்ச நட்சத்திரமாகத் திகழ்கிறார். அவருடைய படங்கள் தொடர்ந்து வெற்றிபெறுகின்றன. ‘ஐரா’, ‘கொலையுதிர் காலம்’ போன்ற தோல்விப் படங்களில்கூட அவருடைய பங்களிப்பு சோடைபோவதில்லை. அனைத்து வயதினரிலும் அவருக்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். தென்னிந்திய சினிமாவில் எத்தனையோ நடிகைகள் வெற்றிவாகை சூடியிருந்தாலும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட முதல் பெண் நயன்தாராதான். திரைப்படங்களில் தன் பெயருக்கு முன்னொட்டாக போடப்படும் லேடி சூப்பர்ஸ்டார் என்னும் அடைமொழிக்கு தன்னை எல்லா வகையிலும் முழுமையான தகுதிபடைத்தவராக ஆக்கிக்கொண்டிருக்கிறார்.
காத்திருக்கும் பாலிவுட்
தெலுங்கு, மலையாளத் திரையுலகங்களிலும் எப்போதும் நயன்தாராவுக்கு முன்னணி நட்சத்திர அந்தஸ்துதான். தமிழில் அதிக கவனம் செலுத்துவதால் அவர் மற்ற மொழி நேரடிப் படங்களில் குறைவாகவே நடிக்கிறார். தற்போது இயக்குநர் அட்லி, ஷாருக்கானை நாயகனாக வைத்து இயக்கப்போகும் இந்திப் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் நயன்தாரா கால்பதிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அங்கும் வெற்றிக்கொடி நாட்டுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருப்பவர் நயன்தாரா.
மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழ்,தெலுங்கு உட்பட மும்மொழிகளில் முன்னணித் தென்னிந்திய நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நயன்தாராவின் வெற்றிப் பயணம் என்பது, தற்போது ஓடிடி வெற்றிகள், ஆண் நட்சத்திரங்களுக்கு இணையான கதாபாத்திரங்களில் நடிப்பது, பாலிவுட் அறிமுகம் என அடுத்தடுத்த பரிணாமங்களை அடைந்துகொண்டிருக்கிறது. இன்னும் பல ஆண்டுகள் தொடரப்போகும் இந்தப் பயணத்தில் மேலும் பல பரிமாணங்கள் இணையும் என்று நம்பலாம்.
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago