"மணி சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அவருடைய படங்கள் பார்த்து தான் வளர்ந்தேன். பாரதிராஜா சார், ஷங்கர் சார், பாலா சார், கெளதம் மேனன் சார், ராஜமெளலி சார் இவங்கக் கூட எல்லாம் எனக்கு பணிபுரிய ஆசை இருக்கிறது. கெளதம் மேனன் சார் கூட மட்டும் அமைந்துவிட்டது. மற்றவர்களுடன் அமைந்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். எனது முதல் படமாக 'மிருதன்' தெலுங்கில் டப்பிங் செய்யப்படுகிறது. அதற்குப் பிறகு தெலுங்கு மட்டுமன்றி இந்தியில் கூட நல்ல கதை அமைந்தால் நாயகனாக பண்ணுவேன்" என்று வார்த்தைகளில் அவ்வளவு நிதானமாக பேசினார் ஜெயம் ரவி.
'மிருதன்' படத்தின் கதையைக் கேட்டவுடன் என்ன நினைத்தீர்கள்?
தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே சினிமாவில் புதுமையான களத்தில் வரும் கதைகளுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்று நிரூபித்து கொண்டே இருக்கிறார்கள். இயக்குநர் சக்தி செளந்திரராஜன் கதையை சொன்னவுடன் புதிதாகவும், இதுவரை பண்ணவில்லையே என்ற ஆச்சர்யமும் இருந்தது. பண்ணிப் பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் உள்ளுக்குள் ஒரு பயந்தோடு இயக்குநரிடமே கேட்டுவிட்டேன். அதற்கு "எப்போது புதுமையான களத்தை நம்புவேன். 'நாணயம்', 'நாய்கள் ஜாக்கிரதை' எல்லாமே புதுமையான களத்தில் உருவான படங்கள் தான். இதுவும் ZOMBIE என்ற புதுமையான களம். அதனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று தெரிவித்தார் இயக்குநர். இயக்குநர் மீது எனக்கு நம்பிக்கை அதிகமாக இருந்தது. புதுமையான களத்தில் இறங்கினால் தான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும் என்று இறங்கிவிட்டேன்.
தமிழில் ஒரு ZOMBIE படத்தை குறைந்த நாட்களில் காட்சிப்படுத்திய ரகசியத்தைச் சொல்லுங்கள்..
ஊட்டி குளிரில் காலை 7 மணிக்கு முதல் காட்சியை படமாக்கிவிடுவார் இயக்குநர். சுமார் 22 நாட்கள் ஊட்டியில் படப்பிடிப்பு செய்தோம். அது அப்படியே இரண்டு வேலைகள் தான். காலையில் படப்பிடிப்பு தொடங்கிவிடும் காலை உணவு, மதிய உணவு, மாலை டீ என 3 இடைவேளை இருக்கும். மொத்தமாக 54 நாட்களில் படத்தை முடித்திருக்கிறோம். 54 நாட்களில் 100 நாட்களுக்கான வேலையைப் பார்த்திருக்கிறோம். ஒட்டுமொத்த படக்குழுவின் கடுமையான உழைப்பு இப்படத்துக்கு பின்னால் இருக்கிறது. 54 நாட்கள் படப்பிடிப்பில் 35 நாட்கள் சண்டைப் பயிற்சியாளர் கணேஷ் எங்க கூடவே இருப்பார். அவருடைய பங்களிப்பு இப்படத்துக்கு ரொம்ப முக்கியம். இப்படத்தில் எப்போதுமே ஒரு சேஸிங் இருக்கும், சின்ன காட்சியில் கூட ஒரு ஆக்ஷன் இருக்கும், எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்து என்ன தாக்கும் என்பது கூட தெரியாத மாதிரியான ஒரு பதைபதைப்பு இருக்கும் இப்படி பார்ப்பவர்களுக்கு என்று நிறைய சுவாரசியங்கள் இப்படத்தில் இருக்கிறது.
'தனி ஒருவன்' படத்துக்கு கிடைத்த வெற்றி உங்களது திரையுலக வாழ்க்கையை எந்தளவுக்கு மாற்றியிருக்கிறது?
'ரோமியோ ஜூலியட்' படம் தான் முதலில் மாற்றியது. அதற்கு முன்னால் எனக்கு கொஞ்சம் மந்தமான காலம் தான். எனது முதல் வெற்றி 'ரோமியோ ஜூலியட்' தான். காதல் கலந்த காமெடி படம் வந்து நீண்ட நாள் ஆனதால் அந்தப் படம் வந்து மாற்றியது. 'ரோமியோ ஜூலியட்' ஒரு தென்றல் என்றால், 'தனி ஒருவன்' ஒரு புயல். என் மீது இருந்த மொத்த எதிர்மறையையும் காணாமல் போக வைத்த படம் 'தனி ஒருவன்'. எனக்கு ஒரு புதுமையான வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறது. வெற்றியை தாண்டி ஒரு மரியாதையைக் கொடுத்திருக்கிறது என்று சொல்லலாம். வெற்றியை என்பதை எல்லாம் தாண்டி 'தனி ஒருவன்' ஒரு புரட்சி தான். நிறையப் பேர் படத்தைப் பார்த்துவிட்டு மாறியிருப்பதாக என்னிடமே தெரிவித்தார்கள். என்னுடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கியமான படம் 'தனி ஒருவன்'.
விநியோகஸ்தர்கள் மத்தியில் முன்னேற்றமாகி விட்டீர்கள் என்கிறார்கள். அப்படி இருக்கும் போது தற்போது கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
என் கதைகளை எப்போதுமே சரியாக தான் தேர்வு செய்கிறேன். இப்போதும் அப்படி தான். புதிதாக மாயாஜாலம் எல்லாம் எதுவுமே நடக்கவில்லை. கூடுதல் பொறுப்பு வந்திருக்கிறது, மொத்தமாக என்னை மாற்றி எல்லாம் கதை கேட்பது எல்லாம் பண்ண மாட்டேன். ஏனென்றால் நான் நம்பியது தான் இன்று வெற்றியாகி இருக்கிறது. நல்ல கதைகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு எப்போதுமே இருக்கிறது. இவர்கிட்ட நல்ல கதையோடு போனால் ஒத்துக் கொள்வார் என்று முழுமையாக நம்பி வருகிறார்கள். வெற்றியும் கிடைத்திருப்பதால் என்னிடம் கதைச் சொல்ல வருபவர்களும் முழு நம்பிக்கையுடன் வருகிறார்கள். அந்த நம்பிக்கையை நான் நழுவ விட மாட்டேன். என் திறமை மீதான என் நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது.
கெளதம் மேனன், சுசீந்திரன், ஏ.எல்.விஜய் ஆகியோருடன் படம் பண்ணவிருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. என்ன தான் நடக்கிறது?
இந்த செய்தி எல்லாம் எப்படி தெரிகிறது என்று தெரியவில்லை. 'தனி ஒருவன்' படத்தில் வருவது போல என் உடம்புக்குள் எதுவும் வைத்திருக்கிறார்களா என்று கண்டுபிடிக்க வேண்டும். அது ஆச்சர்யமாக இருக்கிறது. நானாக எதுவும் சொல்வதில்லை. ஆனால் அனைத்துமே உண்மையாகத் தான் இருக்கிறது. கெளதம் சாரும் நானும் என்ன பண்ணப் போகிறோம் என்பதை விரைவில் முடிவு செய்துவிடுவோம். உண்மையில் இதுவரை முடிவாகவில்லை. கெளதம் மேனன் சாருடன் படம் பண்ணப் போவது உண்மை. சுசீந்திரன் சாரும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவருடனும் படம் பண்ணப் போவது உண்மைதான். ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் முடிவாகவில்லை. ஏ.எல்.விஜய் உடன் படம் பண்ணப் போவது உண்மை, இன்னும் அதிகாரப்பூர்வமாக இன்னும் முடிவாகவில்லை. 'ரோமியோ ஜூலியட்' லட்சமண் மற்றும் கெளதம் சார் இருவருடன் படம் பண்ணப் போவது அதிகாரப்பூர்வமாக உறுதியான ஒன்று. இந்த இரண்டு படங்களையும் ஒரே கட்டமாக பண்ணுவது என முடிவு எடுத்திருக்கிறேன்
'தனி ஒருவன்' 2ம் பாகம் எப்போது திட்டமிட்டு இருக்கிறீர்கள்?
அண்ணா வந்து ஒரு வரிக்கதை ஒன்றைக் கூறினார். எனக்கு பொறுத்தமாக இருக்கும், அதே நேரத்தில் படத்தின் களம் மிகவும் பெரியது. 'தனி ஒருவன்' படத்தை விட வேறு ஒரு தளத்துக்கு எங்கள் இருவரையும் உயர்த்தும். அந்த மாதிரியான கதை தான். ரொம்ப முக்கியமான களமாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்வேன். வேறு ஒரு களம் என்பதால் அதற்கு நான் நிறைய உழைக்க வேண்டியதிருக்கிறது. சில விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அவர் பொறுமையாகவும் அதே நேரத்தில் மக்கள் ரசிக்கும் வகையில் பண்ணக் கூடியவர். அந்த வகையில் அவருக்கு பொறுப்புகள் அதிகம். அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அது, எந்த வருடம் என்பது எனக்கு தெரியாது.
திரையுலகில் அறிமுகமான போது ஒர் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். அதை அடைந்து விட்டோம் என நினைக்கிறீர்களா?
கண்டிப்பாக இல்லை. ஒரு படம் முடித்தவுடன் என்னால் மட்டுமல்ல யாராலும் ஒய்வெடுக்க முடியாது. இந்த படம் முடித்துவிட்டோம், வெற்றி கிடைத்துவிட்டது அடுத்த படத்தில் கம்மியாக வேலை செய்வோம் என்று இருக்க முடியாது. வெற்றியடைந்தவுடன் அடுத்த படத்தில் வேலை இரட்டிப்பாகி விடுகிறது. அப்படி தான் எனக்கு பொறுப்பு அதிகமாகி கொண்டே வருகிறது. என்னால் இது போதும் என்று நினைக்க முடியவில்லை. இதற்குத் தானே வந்தோம் கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியவில்லை. UNCERTAIN INDUSTRY தான் சினிமா. எப்போது சறுக்குவோம், எப்போது மேலே ஏறுவோம் என்று சொல்ல முடியாது. அதனால் எப்போதுமே இது தான் நமது முதல் படம் என்று பணியாற்றி விடுவது நல்லது. சினிமாவை விட்டு போகிற வரைக்கும் அந்த மாதிரி தான் இருப்பேன்.
ஒரு வாரத்திற்கு 3 முதல் 5 படங்கள் வெளியாகிறது. இந்த போட்டியை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?
போட்டி இல்லாமல் ஒரு தூண்டுதலுமே இருக்காதே. போட்டி இருந்தால் மட்டுமே முந்த வேண்டும் என தோன்றும். போட்டி இல்லை என்றால் ஒரே மந்தமாகவே இருக்கும். அப்படி இருந்தால் வாழ்க்கை போர் அடித்துவிடும். திரையுலகில் என்னுடைய நண்பர்களுக்குள் போட்டி இருக்கிறது, பொறாமை கிடையாது. அதை நல்ல விதமாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். போட்டி என்பது அவ்வப்போது சூட வைப்பது மாதிரி, ஓடு ஓடு என்று சொல்லிக் கொண்டே ஊக்கப்படுத்துகிற மாதிரி இருக்கும். அதில் எவ்வித தப்புமே இல்லை என்பது என் கருத்து. தமிழ் திரையுலகில் புது நடிகர்கள், இயக்குநர் வர வர தான் திரையுலகம் முன்னேற்றத்திற்கு நிறைய வழிகள் உருவாகும். இல்லை என்றால் ஒரே நிலையில் தான் இருக்கும். புதுமையான நடிகர்கள் வரும் போது வரவேற்க நான் தயாராகவே இருக்கிறேன்.
ஜெயம் கம்பெனியில் எப்போது படம் நடிக்கப் போகிறீர்கள்?
'தில்லாங்லங்கடி' படத்துக்குப் பிறகு நானும் அண்ணாவும் இணைந்தது 'தனி ஒருவன்' படத்தில் தான். அண்ணா 'வேலாயுதம்' என ஒரு வழியில் போனார், நானும் வேறு ஒரு வழியில் போய்விட்டேன், அப்பா ஒரு வழியில் சென்றுவிட்டார். நாங்கள் மூவரும் இணைந்தால் தான் ஜெயம் கம்பெனி. 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படம் பண்ணும் போதே நாங்கள் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணுவது உறுதியாகிவிட்டது. அதனால் அந்நிறுவனத்துக்கே 'தனி ஒருவன்' இணைந்து பண்ணிக் கொடுத்தோம். அடுத்து இணைந்து படம் பண்ணினால் கண்டிப்பாக ஜெயம் கம்பெனிக்கு தான் பண்ணுவோம்.
உங்கள் நிறுவனத்தில் புது இயக்குநர்கள், நடிகர்களை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவுமில்லையா?
கண்டிப்பாக இருக்கிறது. ஜெயம் கம்பெனி முன்பு எம்.எல் மூவி ஆர்ட்ஸ் என்ற பெயரில் இருந்தது. 'ஜெயம்' படத்துக்கு பிறகு தான் ஜெயம் கம்பெனி தொடங்கினோம். தெலுங்கில் எங்கப்பா அறிமுகப்படுத்தாத இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களே இல்லை என்று சொல்வேன். தமிழிலும் நிறையவே பண்ணியிருக்கிறார். நிச்சயமாக அறிமுகப்படுத்தும் திட்டம் இருக்கிறது. எனக்கு ஒரு பெருமை என்னவென்றால் 2015ல் லட்சமண், கல்யாண் என இரண்டு புதிய இயக்குநர்களை வெற்றியுடன் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். எப்போதுமே புது இயக்குநர்களுடன் பணியாற்ற ஆர்வமாக தான் இருக்கிறேன். எனக்கு அது ஒரு முழுமையான திருப்தியை தருகிறது.
'ஆதிபகவன்', 'தனி ஒருவன்', 'பூலோகம்' ஆகிய படங்கள் வெளிவருவதற்கு கால தாமதம் ஆனது. அச்சமயத்தில் இருந்த மன உளைச்சலில் இருந்து எப்படி விடுபட்டீர்கள்?
'ஆதிபகவன்' நேரத்தில் என்ன இன்னும் சினிமா பண்ணிட்டுத் தான் இருக்கீங்களா என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அதெல்லாம் பெரிய வருத்தம் தான். அதை வருத்தமாக எடுத்திருந்தால் அங்கே தங்கி விடுவோம். அதை நான் ஒரு தூண்டுகோலாக எடுத்துக் கொண்டு உங்களுக்கு என்ன ஹிட் தானே வேண்டும் தருகிறேன் என்று வேலை செய்ய ஆரம்பித்தேன்.
எங்கப்பா பார்க்காத வெற்றி கிடையாது, அவருடைய வழிகாட்டுதல் எனக்கு இருக்கிறது. அவருடைய வாழ்க்கையை நான் பார்த்திருக்கிறேன். அவை அனைத்துமே எனக்கு ஒரு பாடம் தான். "நின்ற இடத்தில் இருந்து தாண்டுவதை விட பின்னால் இருந்து ஓடி வந்து தாண்டு. அதிக தூரம் தாண்டலாம்" என்று எங்கப்பா எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். பின்னாடி போவதை முன்னாடி தாண்டுவதற்கான ஒரு வழியாக தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, துவண்டுப் போய் விடக்கூடாது. சினிமாவுக்கு உண்மையாக இருப்பவர்களை, சினிமாவே விடாது என்பது நிதர்சனமான உண்மை. அந்த ஒரு உண்மையை, உழைப்பை நான் சினிமாவுக்கு எப்போது பண்ணிக் கொண்டு இருந்திருக்கிறேன். அந்த நம்பிக்கை தான் என்னை அழகாக காப்பாற்றி கூட்டுக் கொண்டு வந்தது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago