C/O கோடம்பாக்கம்: ரஜினி சொன்னது எனக்கு நடந்தது!

By க.நாகப்பன்

‘‘ஓர் உதவி இயக்குநர் எப்படி எல்லாம் கஷ்டப்படக் கூடாது, அவமானப்படக் கூடாது, இலக்கை விட்டுட்டு வேற வேற வேலைகளைச் செய்யக்கூடாதுங்கிறதுக்கு நானே உதாரணம். கிட்டத்தட்ட எல்லா உதவி இயக்குநர்களின் பின்னணியும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், நான் வேற மாதிரி’’...

திரைப்படத்துக்கே உரிய சஸ்பென்ஸுடன் தொடங்குகிறார் அருண். ஆர்.செல்வராஜின் ‘பச்சைக்குடை’, தாமிராவுடன் ஆரம்பக்கட்டப் பயணம், வடிவேலின் ‘கள்ளப்படம்’, பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’,‘சார்பட்டா பரம்பரை’யில் முதற்கட்டப் படப்பிடிப்பு வரை என 12 ஆண்டுகளில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுள்ளார்.

சினிமாவுக்கு அருண் வந்த கதை மிகவும் நீண்டது. நிறைய ஏற்ற இறக்கங்களைக் கொண்டது. பல யு-டர்ன்கள் அடித்து வந்ததன் பின்புலத்தை அவரே சொல்கிறார்.

‘‘பொறந்ததுல இருந்தே நான் அதிகம் இருந்த இடம் தியேட்டர்கள்தான். என் அம்மாவுக்கு சினிமான்னா அவ்ளோ பிடிக்கும். அவங்களோட நானும் படம் பார்க்கப் போவேன். கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்குற வரைக்கும் எந்தக் குறிக்கோளும் இல்லாம அப்படியே வளர்ந்துட்டேன். திடீர்னு ஒருநாள் அடுத்து என்ன செய்யப்போறோம்ங்கிற கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை. அப்போதான், நான் அதிக நேரம் செலவழிச்ச சினிமாதான் என் எதிர்காலம்ங்கிற ஞானம் வந்துச்சு. தெரியுதோ, இல்லையோ சினிமாவுக்குப் போய்டுவோம்னு அடுத்த ஒரு வருஷத்துல சென்னை வந்துட்டேன்.

சென்னையில யாரையும் தெரியாது. முதல்ல பழகணும், சென்னை புரியணும்னு ஒரு வருஷம் மார்க்கெட்டிங் வேலை, மெடிக்கல் ரெப்னு பல வேலைகள் பார்த்துட்டேன். எதுலயும் மனசு நிக்கல, நிலைக்கலை. வந்த வேலையைப் பார்ப்போம்னு முடிவு பண்ணும்போது சென்னையின் இயல்பையும், மனிதர்களையும் புரிஞ்சுகிட்டேன்.

அப்புறம் சினிமா பக்கம் திரும்பினேன். தினமும் ஏவிஎம் ஸ்டுடியோவுக்குப் போய்டுவேன். அப்படி ஒரு நாள் ‘அயன்’ பேட்ச் வொர்க் நடந்தது. துணை இயக்குநர்கிட்ட உதவி இயக்குநர் ஆகணும்ங்கிற என் ஆர்வத்தைச் சொன்னேன். ஷூட்டிங் ஸ்பாட்ல வந்து வாய்ப்பு கேட்கக்கூடாது தம்பி. ஃபிலிம் டைரக்டரி நிறைய இருக்கு. அதுல சினிமா இயக்குநர்களின் அலுவலக முகவரி இருக்கும். அதைப் பார்த்துட்டு ஆபிஸ்ல போய்தான் முயற்சி பண்ணனும்னு அறிவுரை சொன்னார். அந்த அளவுக்கு அப்பாவியா நான் இருந்தேன்’’என்றார் அருண்.

உதவி இயக்குநர் ஆகாமல் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக வேண்டிய சூழல் நேரிட்டதையும் அருண் பகிர்ந்தார்.

‘‘பல இடங்கள்ல உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டுப் போகும்போது என்னை ஜூனியர் ஆர்டிஸ்ட்டா நடிக்கச் சொல்லிட்டாங்க. சரி, அப்படியாவது வாய்ப்பு கிடைக்குதா பார்ப்போம்னு ஏத்துக்கிட்டேன். ‘எந்திரன்’ல ரோபோவை அழிக்கும்போது ராணுவ கமாண்டோ படை வரும்ல, அதுல ஜூனியர் ஆர்டிஸ்ட்டா நடிச்சேன். ஷங்கர் சார் படம், எனக்குப் பிடிச்ச ரஜினி சாரோட ஷூட்டிங்கிறதால விரும்பியே கூட்டத்துல ஒருத்தன் ஆனேன்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துல கார்த்தியோட அறிமுகக் காட்சியில துறைமுகத்துல கும்பலோட கும்பலா வந்தேன். அப்புறம் ரிலீஸ் ஆகாத பல படங்கள்ல நடிச்சேன். இடையில ஆபிஸ் பாயா இருந்தேன். ஷூட்டிங் போகாம டிஸ்கஷன் மட்டுமே நடந்த படங்கள்ல வேலை செய்தேன். இப்படி சகட்டு மேனிக்கு வேற வேற வேலைகள் பார்த்ததுல உதவி இயக்குநர் ஆகுறதுல தொய்வு வந்துச்சு என்றார்’’ அருண்.

உதவி இயக்குநர் என்கிற இலக்கை நோக்கி நகர்த்திய சம்பவத்தையும், தீவிர வாசகனாக மாறிய புள்ளியையும் சொன்னார்.

‘‘அடிபட்டு, மிதிபட்டு, உதவி இயக்குநர் ஆகுறதுக்கே ஏழு கடல் ஏழு மலை தாண்டி வந்த மாதிரி இருந்தது. பாரதிராஜா சார்கிட்ட உதவி இயக்குநராகச் சேரணும்னு போனப்போதான் அவரோட துணை இயக்குநர் வேல்முருகன் சாரைச் சந்திச்சேன். அப்போ எனக்குத் தெரியாது, அவர்தான் என்னை மொத்தமா மாத்தப் போறார்னு.

அவரைப் பார்த்துப் பேசும்போதுதான், தகுதியை வளர்த்துக்கணும், இலக்கிய வாசிப்பு அவசியம்னு சொன்னார். நானும் வெகுஜனப் பத்திரிகளைகளையும், சுஜாதாவையும் மட்டுமே படிச்சவன். ஜெயமோகன் பட்டியல் போட்டு வெளியிட்ட மிகச்சிறந்த 100 தமிழ் நாவல்களின் லிஸ்ட்டைக் கொடுத்து ஆறு மாசம் பொறுத்து படிச்சிட்டு வான்னு சொன்னதும் முழிச்சேன்.

‘பிள்ளையார் கோயில் முதல் தெரு’பட இயக்குநர்கிட்ட கேட்ட வாய்ப்பும் கடைசி நேரத்துல கை நழுவிப் போச்சு. விரக்தியில ஊருக்கே போய்ட்டேன். டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுன்னு வீட்ல அட்வைஸ் மழை. ஏற்கெனவே மன உளைச்சல், கவலையில இருந்த எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. வேல்முருகன் சார் கொடுத்த நாவல்களின் லிஸ்ட்தான் ‘என்னைப் பார் யோகம் வரும்’னு சமிக்ஞை கொடுத்துச்சு. முதல் முறையா நூலகத்துக்குப் போறேன்னு சொன்னதும் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்த மாதிரி அதிர்ச்சி. ‘நிஜமாவா சொல்றே’ன்னு ‘கற்றது தமிழ்’அஞ்சலி மாதிரி கேட்டுக்கிட்டே இருந்தார். அப்படி ஒருவழியா நான் நூலகத்துல எடுத்த முதல் நூல் பிரதாப முதலியார் சரித்திரம். தமிழின் முதல் நாவல். எனக்கும் முதல் முறை தீவிர வாசிப்புங்கிறதால சென்டிமென்ட்டா டச் ஆகிடுச்சு. 2 நாள்ல படிச்சு முடிச்சேன். அப்புறம் வாசிப்பு என்னை அதுக்குள்ள இழுத்துட்டுப் போய்டுச்சு.

வாழ்க்கையில எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட பிறகு புதுசா ஒரு நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சினா எப்படி இருக்கும்? ஆறு மாசத்துல எல்லா நாவல்களையும் படிச்சு முடிச்சதும் வேல்முருகன் சாரைப் பார்த்தேன். அவர் நம்பவே இல்லை. 4 நோட்டுகள்ல குறிப்பு எழுதினதைக் காட்டினதும் கதாசிரியர் ஆர்.செல்வராஜிடம் உதவியாளராகச் சேர்த்துவிட்டார்.

கதைக்கரு, திரைக்கதை, காட்சி அமைப்பு, வசனம், காட்சிகளை வரிசைப்படுத்துதல், காட்சித் தொடக்கம்னு எல்லாத்தையும் அந்த மேதைகிட்ட கத்துக்கிட்டேன். ஒரு வருஷத்துக்குப் பிறகு தாமிரா சார்கிட்ட சேர்ந்தேன். ‘அமுதா ஒரு ஆச்சர்யக்குறி’ சீரியலுக்கு வசனம் எழுதினார். கே.பி.சார் சீரியல் என்பதால் தாமிரா சாருடன் இணைந்து வசனம் எழுதினேன். அப்புறம் ‘கள்ளப்படம்’வடிவேல் சார்கிட்ட வேலை செய்தேன். அப்புறம் பா.இரஞ்சித் சார். இந்த ஐவரும்தான் என் அறிவுக்கண்ணைத் திறந்த ஆசான்கள்’’ என்றார்.

உதவி இயக்குநர் என்றாலே அலட்சியமாகப் பார்ப்பதையும், அவமானப்படுத்துவதை நிறையப் பேர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஆனால், அதையே வைராக்கியமாகக் கொண்டு வலிமையானதால்தான் நண்பர்களுடன் சேர்ந்து வாசகசாலை எனும் அமைப்பைத் தொடங்கியதாகக் கூறுகிறார் அருண்.

‘‘ஒரு பெரிய இயக்குநர்கிட்ட வாய்ப்பு கேட்டேன். அவர் ரொம்ப வசதியா, பார்க்கவே பெரிய செட்டப்போட இருந்தார். இப்பவும் அவர் எனக்குப் பிடிச்ச டைரக்டர்தான். நான் தமிழ்ல என் சுயவிவரக் குறிப்பைக் கொடுத்தேன். அவர் வாங்கிட்டு, தினுசா என்னைப் பார்த்தார். பேசுனதும், ‘தமிழ்லயே பேசுறீங்க’ன்னு எரிச்சலா கேட்டார். ‘தமிழ்ல பேசுறது என் இயல்பு சார்’னு சொன்னேன். ‘போர் அடிக்குறீங்க’ன்னு சொன்னார்.

‘சினிமாங்கிறது காட்சி மொழி, வேற மாதிரி யோசிக்கணும், நீங்க பிரச்சாரம் பண்ணுவீங்க போல இருக்கு’ன்னு முன் அனுமானத்தோட பேசினார். ‘நீங்க பேசுறதுதான் சார் செயற்கையா இருக்கு’ன்னு குட் பை சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா, ரொம்ப அவமானகரமா உணர்ந்தேன். அப்போதான் பார்த்திபன், பாஸ்கர் ராஜா, கார்த்திகேயன், கிருபான்னு என் நண்பர்கள் என் வலிகளை, கவலைகளை மறக்க வெச்சாங்க. அவங்க கொடுத்த ஊக்கம், உற்சாகத்துல பல நண்பர்களுடன் இணைந்து வாசகசாலையை ஆரம்பிச்சோம்’’என்கிறார் அருண்.

ஒரே பாட்டு, ஓஹோ வாழ்க்கைன்னு ரஜினி படத்தில் நடக்கும் சுவாரஸ்யம் தனக்கும் நடந்ததை அருண் அச்சரம் பிசகாமல் சொன்னார்.

‘‘எப்படியாவது ஒரு பெரிய படத்துல வேலை செய்யணும்ங்கிற எண்ணம் மட்டும் இருந்தது. இயக்குநர் பா.இரஞ்சித் சார் நட்பு கிடைச்சதும் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ல வாய்ப்பு கேட்டேன். ‘காலாவுல’தான் அது அமைஞ்சது. ஒரே பாட்ல எல்லாம் மாறும்னு சொல்லுவாங்க இல்ல, அது எனக்கு அப்போ நடந்தது. மாத சம்பளம், பேசிச் சிரிக்க சினிமா நண்பர்கள், நல்ல உறவுகள்னு வேற ஒரு செட்டப்புக்குப் போனேன். எனக்குப் பிடிச்ச ரஜினி சார் பக்கத்துல இருந்தும் ஒரு வார்த்தை கூட பேசலை. தொழில் தான் முக்கியம், கொடுத்த வேலைய சொதப்பக்கூடாது, கவனம் சிதறக்கூடாதுன்னு உண்மையா உழைச்சேன். டப்பிங் முடியும்போது ரஜினி சார்கிட்ட இரஞ்சித் சார் அறிமுகப்படுத்தினார். நான் உங்க தீவிர ரசிகன் சார்னு போட்டோ எடுத்துக்கிடேன்.

வாழ்க்கை ஒரு சினிமா மாதிரி. முதல் பாதி சரியில்லைன்னா அடுத்த பாதி சரியா அமையும்ணு ரஜினி சார் சொல்வார். அப்படிதான் எனக்கு நடந்தது. ‘எந்திரன்’ படத்துல ஜூனியர் ஆர்டிஸ்ட்டா நடிச்சு ஒரு ஓரமா நின்னு ரஜினி சாரை ரசிச்சுப் பார்த்தேன். அதுவே ‘காலா’ படத்துல அவர் நடிப்பை பக்கத்துல இருந்து அணு அணுவா ரசிச்சேன். இது போதும் எனக்கு’’என்று நெகிழ்ந்தார்.

உதவி இயக்குநர்கள் மீது அக்கறை காட்டுவது ஒருசில இயக்குநர்கள்தான் என்பதையும் அருண் பதிவு செய்ய மறக்கவில்லை.

‘‘ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்ல ஓடி ஆடி வேலை செய்யும்போது காலை சரியா தரையில வைக்காததால அடி பட்டு கால் பெரிசா வீங்கிடுச்சு. அப்புறம் கொஞ்ச நாள்ல உடல் வெப்பம், வியர்வை காரணமா நெஞ்சுல கட்டி வந்து அது உடைஞ்சு ரத்தம் வர ஆரம்பிச்சிடுச்சு. சட்டையைத் தாண்டி அந்த ரத்தக் கறை தெரியவந்தது. ‘சொன்னா கூட லீவ் எடுத்துக்க மாட்றே, சீன் போடறியாடா’ன்னு இரஞ்சித் சார் கடுமையா பேசிட்டார். எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. கண்ணு கலங்கிடுச்சு. அதை யாருக்கும் தெரியாம மேனேஜ் பண்ணிக்கணும்னு செட்டை விட்டு வெளிய வந்தேன். உடனே மேனேஜர் ஓடிவந்தார். டைரக்டர் கொடுக்கச் சொன்னதா 5000 ரூபாய் பணத்தைக் கையில் திணிச்சார். கார் டிரைவர் கிட்ட, டைரக்டர் சொன்னதா, ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய் டாக்டரைப் பார்த்த பிறகு வீட்ல விடச் சொல்லிட்டார். ரஜினி சார் நடிக்கிற அந்த பிஸியான நேரத்துலயும் நான் காயப்பட்டுடக்கூடாதுன்னு இரஞ்சித் சார் அக்கறை எடுத்துக்கிட்டார். அந்த அன்பையும், அனுசரணையையும் வார்த்தைகள்ல சொல்ல முடியாது.

‘சார்பட்டா பரம்பரை’யில் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிஞ்சதும் நான் தனியாப் படம் பண்ண முடியும்ங்கிற நம்பிக்கை வந்தது. இரஞ்சித் சார்கிட்ட சொன்னேன். வாழ்த்தி வழியனுப்பி வெச்சார். இதோ கரோனா இரண்டாம் அலையால் லாக்டவுன் வந்துடுச்சு. முடிஞ்சதும், சில பொருளாதாரச் சிக்கல்களைச் சரிபண்ணிட்டு படம் பண்ணப் போறேன். அதுக்காகத் தயாராகிட்டு இருக்கேன்’’என்று முடித்தார் அருண்.

****

‘தங்கமீன்கள்’படப்பிடிப்பு வயநாட்டு மலை உச்சியில் நடந்தது. அங்கிருந்து இறங்கி வர மூன்று மணி நேரம் ஆகும். பேட்டரி சார்ஜ் இல்லை, பெட்ரோல் இல்லை, நாளைக்கு ஷூட் பண்ண முடியாதுங்கிற இக்கட்டான சூழல். உச்சகட்ட பிரஷர்ல இருந்தபோது, ‘நாளைக்கு ஷூட்டிங் நடந்தே ஆகணும் செல்வம்’னு ராம் சார் என்கிட்ட மட்டும் சொல்லிட்டாரு. இவன் செஞ்சிடுவான்னு நம்பி என்கிட்ட சார் சொன்ன அந்த நாள்தான் என் வாழ்வில் முக்கியமான நாள்.

நானும், என் நண்பன் ராமுவும் நள்ளிரவுல கிட்டத்தட்ட 10 கிலோவுக்கு மேல இருக்குற கேமரா பேட்டரியைத் தலையில தூக்கிக்கிட்டு காட்டுக்குள்ள மூன்று கி.மீ. நடந்து போய் சார்ஜ் போட்டு மறுநாள் ஷூட்டிங் நடத்திட்டோம். இதைப் பெரிய சாதனையா சொல்லலை. டைரக்டர் கொடுத்த பொறுப்பை எடுத்துக்கிட்டு உழைப்பைப் போட்ட பிறகு எல்லா நாளும் வேற மாதிரி அமைஞ்சது. என் கூட அப்படி வந்த ராமுதான் ‘பரியேறும் பெருமாள்’ஆர்ட் டைரக்டர்.

உதவி இயக்குநருக்குத் தகுதி எல்லாம் தேவையில்லை. நல்ல மனிதரா, கத்துக்கிற மனநிலையுடன் இருக்கணும். கலை வடிவம் குறித்துத் தெரியாம இருந்தாலும், அதுகுறித்த அசுரத்தனமான நம்பிக்கை வேணும். படிப்பு, டெக்னிக்கல் எல்லாம் ஒரு தகுதியே கிடையாது. நான் தகுதின்னு நம்புறது உதவி இயக்குநர்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கு, கலை வடிவத்தை எவ்வளவு நேசிக்கிறாங்க, எவ்வளவு காலம் பொறுத்திருந்து கத்துக்குறாங்க என்பதுதான். உடனே டைரக்டர் ஆகணும், புகழ் வெளிச்சம் பெருசா படணும்ங்கிற மனநிலை இல்லாதவங்களே நிறைய கத்துக்க முடியும்.

- மாரி செல்வராஜ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

மேலும்