தமிழின் முன்னணிக் கதாநாயகர்கள் காக்கிச் சட்டையை அணிந்துகொண்டு, கையில் லத்தியைச் சுழற்றிக்கொண்டு கம்பீரமான வசனம் பேசி நடிக்காமல் இருந்ததில்லை. கதாநாயக நடிகர் ஒருவர் தமிழ்த் திரைப்படத் துறையில் வலுவாகக் காலூன்றிவிட்டார் என்றால் அடுத்த படத்தில் அவர் ஒரு காவல் துறை அதிகாரியாக நடிப்பார் என உறுதியாகச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்குத் தமிழ்த் திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களுக்கு மவுசு உண்டு.
தங்கப்பதக்கம், மூன்று முகம், காக்கிச் சட்டை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, அக்னி நட்சத்திரம், சத்ரியன், சாமி, காக்க காக்க, என்னை அறிந்தால், ஜில்லா, சேதுபதி என அநேகப் படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் படங்களில் எல்லாமே கதாநாயகர்கள் நேர்மையான, துணிச்சலான போலீஸ் கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்கள். இவற்றில் பெரும்பாலானவை வெறும் பழிவாங்கும் படங்கள்தான்.
ஊரில் அநீதி இழைக்கும் பெரிய மனிதர் ஒருவர் இருப்பார். அவர் இழைக்கும் அநீதிக்கு எதிராக போலீஸ் கதாபாத்திரம் பொங்கி எழும். இவர்களுக்கிடையே எழும் மோதலையே படத்தின் திரைக்கதை சுவாரசியமான காட்சிகளாகப் படைக்கும். இறுதியில் வில்லன் அழிக்கப்படுவார். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும்’ என்னும் ரீதியிலேயே இந்தப் படங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
திரைக்காட்சிகள்
காவல் துறையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த பெரும்பாலான படங்களில் கதாநாயகர்கள் வீரம் மிகுந்தவர்களாக மட்டுமே சித்தரிக்கப்படுகிறார்கள். ‘காக்க காக்க’ படத்தில் அன்புச்செல்வன் கதாபாத்திரம் அயோக்கியர்களை மிகவும் எளிதாக ஒரு தோட்டாவைப் பயன்படுத்தி அழிப்பதை நியாயப்படுத்துவது போல் வசனம் பேசும். இந்தக் காட்சிக்குத் திரையரங்குகளில் பெரிய வரவேற்பும் கிடைத்தது.
அநீதிகளில் ஈடுபடுபவர்களை அழித்தொழிப்பது பிழையல்ல என்ற புரிதல் காரணமாகவே இத்தகைய காட்சிகள் கைதட்டலைப் பெறுகின்றன. ‘நான் போலீஸ் இல்ல பொறுக்கி’ என்ற ‘சாமி’ பட வசனத்தின்போது திரையரங்குகளில் கிடைத்த பலத்த கரவொலி நமது அறியாமையை வெளிப்படுத்துவதாக அமைந்தது. சமீபத்தில் வெளியான ‘சேதுபதி’ படத்தில்கூடக் கதாநாயகன் குற்றம் தொடர்பான விசாரணையின்போது பொம்மையைச் சுடுவது போல் நான்கைந்து பேரைச் சுட்டுத்தள்ளுவார். அந்த நான்கைந்து பேர் குற்றச் செயலில் நேரடியாக ஈடுபட்டவர்கள் என்பதால் அதில் எந்தப் பிழையும் இல்லை என்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
பெருங்குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்குக்கூட மரண தண்டனை வழங்குவது நாகரிக சமூகத்துக்கு அழகல்ல என்ற வலுவான குரல்கள் சமூகத்தில் எழுந்துவரும் வேளையில் இதைப் போன்ற காட்சிகள் சிறுபிள்ளைத்தனமானவை.
நீதிதேவர்கள்
குற்றச்செயல் ஒன்றில் ஈடுபடுபவரை நீதிமன்றத்தின் முன்னால் கொண்டுவந்து நிறுத்துவது மட்டுமே காவல் துறையினரின் பணி. குற்றம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படுவதைப் பொறுத்தே தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், நமது போலீஸ் கதாபாத்திரங்கள் தாங்களே நீதிதேவர்களாக அவதாரம் எடுத்துவிடும்.
அடித் தொண்டை நெரிய வசனம் பேசி ஒரு ரவுடியைப் போல வன்முறையில் ஈடுபடுவார்கள். ஆனால், அவர்கள் காக்கி உடையில் இவற்றைச் செய்வதால் எல்லாமே நியாயமாகிவிடும். இவை வெறும் பொழுதுபோக்குப் படங்கள்தானே என ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் மாற்றுப்படங்களைவிட இத்தகைய பொழுதுபோக்குப் படங்கள் சமூகத்தில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை.
தமிழ்த் திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரங்கள் பேசும் வீரமிகு வசனங்கள் காவல் துறையினரை முறுக்கேற்றிவிடும் வகையிலேயே அமைந்துவிடுகின்றன. சமூகத்தின் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்களைக் கட்டுப்படுத்துவது காவல் துறையினரின் பணி என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால், அமைதியைக் கட்டிக் காக்க காவல் துறையினர் வன்முறையிலும் அழித்தொழிப்பிலும் ஈடுபடுவது பெரிய பிழையல்ல என்ற ரீதியிலேயே இத்தகைய படங்களின் திரைக்கதைகள் அமைவது ஆபத்தானது. இது சமூகத்துக்குப் பெரிய அச்சுறுத்தலாகவே அமைகிறது. ஏற்கெனவே மனித உரிமைகள் குறித்து சிறிதும் அக்கறையற்ற வகையில் செயல்படும் பெரும்பாலான காவல் துறையினருக்கு இத்தகைய படங்கள் தவறான வழிகளையே காட்டுகின்றன.
குறைந்தபட்ச நாகரிகம்கூட இல்லாமல் செயல்படக்கூடியவர்கள் நமது காவல் துறை அதிகாரிகள் என்ற விமர்சனம் வெகு காலமாக இருந்துவருகிறது. காவல் நிலைய சித்திரவதைகளும், போலி மோதல் சாவுகளும் நமது காவல் துறையின் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நியாயமான காரணங்களுக்காகச் சாதாரண முதல் தகவல் அறிக்கையைக்கூடச் சாமானியர்களால் ஒரு காவல் நிலையத்தில் பெற்றுவிட முடியாது. ஆனால், நமது திரையின் போலீஸார்கள் நவீன தருமர்கள் போல வடிவமைக்கப்படுகிறார்கள். குற்றம் கண்டால் போதும் நெற்றிக்கண்ணைத் திறந்துவிடுவார்கள். யதார்த்தம் என்பது வேறு, திரையின் மூலம் கட்டமைக்கப்படும் சூழல் என்பது வேறு.
இந்த இரண்டுக்கும் இடையே மலையளவு இடைவெளி உண்டு. தங்களுக்கு யதார்த்தத்தில் கிடைக்க வேண்டிய நீதி திரையில் கிடைப்பதைக் கொண்டாடி மகிழ்கிறார்கள் சாமானியர்கள். இது ஒரு வகையான போதை. அறியாமையில் உழன்று திரிபவர்களைப் போதையில் ஆழ்த்தும் வேலையை நமது போலீஸ் படங்கள் செவ்வனே செய்கின்றன.
யதார்த்தத்தில் காவல் துறையினரின் பிரச்சினை என்ன, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எவை, சமூகத்துக்கும் அவர்களுக்கும் உள்ள உறவுகளில் எவை நேர் செய்யப்பட வேண்டும் என்பவையே விவாதத்துக்குள்ளாக வேண்டும். அதை விடுத்துக் காவல் துறையினரின் பெருமைகளை விதந்தோதும் விதமாகப் படமெடுத்துத் தள்ளுவது ஆரோக்கியமானதல்ல. சாதிப் பெருமை குறித்துப் படமெடுப்பது சமூகத்துக்கு எவ்வளவு அச்சுறுத்தலாக அமையுமோ, அவ்வளவு அச்சுறுத்தலாகத்தான் இந்தக் காவல் துறைப் பெருமைப் படங்களும் அமையும் என்பதை மறந்துவிடலாகாது.
சமீபத்தில் வெளியான கிருமி, விசாரணை போன்றவை காவல்துறையினரின் மற்றொரு முகத்தையும் வெளிக்காட்டியுள்ளன. இவை வெறும் தொடக்கப் புள்ளிகளே. காவல் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் என்ன, காவலர்கள் உண்மையிலேயே நம் நண்பராக இருக்க வேண்டியதன் அவசியம் என்ன என்பனவற்றை விவாதிக்கும் படங்களை நமது திரையுலகம் உருவாக்க வேண்டிய தருணம் இது. தொடை தட்டி, புஜ பலம் காட்டி முறுக்கேறிய மீசையைத் தடவிவிட்டுக்கொண்டே போலீஸ் கதாபாத்திரங்கள் சினிமா தோன்றிய நூறாண்டுகளுக்குப் பின்னரும் திரியத்தான் வேண்டுமா?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
37 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago