புரட்சித் தலைவர் என்கிற பட்டத்தை மக்கள் கொடுப்பதற்கு முன், எம்.ஜி.ஆருக்கு‘புரட்சி நடிகர்’ என்கிற பட்டத்தைக் கொடுத்தவர் கலைஞர் மு.கருணாநிதி. ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.’ என 1961-ல் வெளிவந்த ‘திருடாதே’ படத்தின் டைட்டிலில் ஒளிரச் செய்தவர் கண்ணதாசனின் அண்ணனும் தமிழ் சினிமாவில் வரலாறு படைத்தவருமான ஏ.எல்.சீனிவாசன். ‘நாடோடி மன்னன்’ படம், எம்.ஜி.ஆரை வசூல் சக்கரவர்த்தி ஆக்கி, ‘தமிழ் திரையுலகின் மன்னாதி மன்னன்’ என்று கூற வைத்தது. அதுபோல் ‘திருடாதே’ படமும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. சரோஜாதேவி எனும் கதாநாயகியை ‘நாடோடி மன்ன’னுக்குக் கொடுத்தது ‘திருடாதே’ திரைப்படம்தான்!
அந்தப் படத்துக்கு விதையூன்றி வளர்த்தவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். பின்னாளில் அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றத்தின் தலைவராக விளங்கியவர். நடிகர் திலகம் ‘கப்பலோட்டிய தமிழனா’கவும் ‘வீரபாண்டிய கட்டப்பொம்மனா’கவும் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி, அதில் வெற்றியும் கண்ட, கதாசிரியர், படத் தயாரிப்பாளர். மூதறிஞர் ராஜாஜியின் மாணவர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி, இதழாளர் கல்கி ஆகியோரின் ஆருயிர் நண்பர், ‘பதிப்பகச் செம்மல்’ எனப் பெயர்பெற்ற அந்தப் பன்முக வித்தகர் ‘தமிழ்ப் பண்ணை’ சின்ன அண்ணாமலை.
எம்.ஜி.ஆரைக் கவர்ந்த ஓவியம்!
60-களில் அண்ணாவின் தம்பிகளில் ஒருவராக மாறிவிட்டிருந்த எம்.ஜி.ஆர்., ப.நீலகண்டன் இயக்கத்தில் அப்போது உருவாகி வந்த ‘சக்ரவர்த்தித் திருமகள்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அதில் எம்.ஜி.ஆர். ஏற்று நடித்திருந்த இளவரசர் வேடத்தின் பெயர் ‘உதயசூரியன்’! அந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகத்தில் பணிபுரிந்த சின்ன அண்ணாமலைக்கு எம்.ஜி.ஆருடன் நட்பு வளர்ந்தது. அவரை வைத்து ஒரு சமூகப் படம் எடுக்க வேண்டும் என்கிற தன் விருப்பத்தை இயக்குநர் வழியாக எம்.ஜி.ஆரின் காதில் போட்டுவிட்டார் சின்ன அண்ணாமலை.
படப்பிடிப்பு இடைவேளையில் ஒருநாள் ‘சமூகக் கதைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்ட இந்தக் காலத்தில், இன்னும் நீங்கள் வாள் வீசிச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்களே?’ என்று எம்.ஜி.ஆரிடம் பேச்சைத் தொடங்கினார் சின்ன அண்ணாமலை. “இதை நீங்களே கேட்கிறீர்களா? அல்லது வேறு யாரும்...?” என்று இழுத்தார் எம்.ஜி.ஆர். ‘ மறைந்த என் நண்பரான கல்கியும் நானும் உங்களைக் குறித்து உரையாடும்போது.. ‘நீங்கள் வாளைத் தூக்கியெறிந்துவிட்டு.. சமூகத்தின் பக்கம் திரும்ப வேண்டும்’ என அவர் என்னிடம் கூறியிருக்கிறார். நீங்கள் அதிக சமூகப் படங்களில் நடிக்கவேண்டும் என்பது எனது ஆசையும் கூடத்தான்’ என்றார். கல்கியின் கடுமையான சினிமா விமர்சனங்களைப் பற்றி நன்கு அறிந்தவர் என்றாலும் அவர் மீது மரியாதை கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., “கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால், நல்ல சமூகக் கதை கிடைக்க வேண்டும். அதற்கு முன்பு,‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்க அதன் உரிமையைப் பெறவேண்டும். அவருடைய குடும்பத்தாருடன் அது பற்றி பேசுங்கள்” என்றார். சின்ன அண்ணாமலையோ, ‘பார்த்தீர்களா.. இப்போதுதானே சொன்னேன்.. அதற்குள் ‘பொன்னியின் செல்வன்’ என்கிறீர்களே..?’ என்றார்.
ஆனால், எம்.ஜி.ஆர்.,“ சமூகப் படங்களில் வாள் சண்டைக்கு ஏது வழி? சண்டை இருக்குமென நம்பிவரும் ரசிகர்களை நாம் ஏமாற்றலாமா? சமூகப் படம் என்றால் என்னுடைய பாகவதர் கிராப்போடு நடிப்பது நன்றாக இருக்காது.” என்றார். இது ஆகிற கதையில்லை என்று நினைத்த சின்ன அண்ணமலை, தான் கொண்டுபோயிருந்த பையிலிருந்து ஓவியம் ஒன்றை வெளியே எடுத்தார். அதை எம்.ஜி.ஆர் வாங்கிப் பார்த்தார். அதில் எம்.ஜி.ஆர். மாடர்ன் கிராஃப் வெட்டியிருப்பது போலவும், கோட் சூட் அணிந்திருப்பதுபோலவும் ஓவியர் வரைந்திருந்தார்.. ‘ஒருமுறை மாடர்ன் கிராஃப் வெட்டிப்பாருங்கள்.. அவ்வளவு நவீன அழகனாக இருப்பீர்கள்...இது சத்தியம்!’ என்றார் சின்ன அண்ணாமலை. எம்.ஜி.ஆர். வியந்துபோய் “ ஒரு முடிவோடுதான் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது.. ஆனால்.. கதை?” என்று கிடுக்கிப்பிடி போட்டார். ‘அதைப் பற்றிய கவலையே வேண்டாம்.‘தேவ் ஆனந்த் நடித்த ‘பாக்கெட் மார்’ இந்திப் படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறேன். திரைக்கதையும் தயார்! அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்’ என்றார். அன்று மாலையே படப்பிடிப்பு முடிந்ததும் அந்தப் படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆருக்குப் பிடித்துப்போய்விட்டது.
நிபந்தனையும் கண்டுபிடிப்பும்
ஆனால், படத்தில் நடிக்க ஒரு நிபந்தனை விதித்தார் எம்.ஜி.ஆர். “தற்சமயம் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரைதான் என்னிடம் கால்ஷீட் இருக்கிறது. நம் வசதிபோல் படப்பிடிப்பை வைத்துக்கொள்ள ஒரு புதுமுகக் கதாநாயகி தேவை. இருந்தால் ‘மூவி டெஸ்ட்’ செய்து காட்டுங்கள்” என்றார். சற்றும் சளைக்காத சின்ன அண்ணாமலை, அடுத்த சில தினங்களில் எம்.ஜி.ஆருக்கு ‘மூவி டெஸ்ட்’ போட்டுக்காட்ட, அதில் விதவிதமான பாவங்களில் நடித்திருந்த சின்னப் பெண்ணைப் பார்த்து எம்.ஜி.ஆரின் முகத்தில் பிரகாசம் கூடிவிட்டது. “யார் இந்தப் பெண்.. இவ்வளவு சுட்டியா?” என ஆவலாகக் கேட்டார். “பெயர் சரோஜாதேவி. கன்னடப்பெண். அங்கே இரண்டு படங்களில் நடித்திருக்கிறாள். தேசாபிமான இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் மகள், பத்மா சுப்ரமணியம்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் கதை எழுதியிருக்கும் ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடனமாட இந்தப் பெண்ணுக்கு வாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்கிறேன். அந்தப் பாடலை நீலகண்டன்தான் படமாக்கினார். அவர்தான் ‘இந்தப் பெண்ணை மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். அதன்பின் உங்களால் இவரைப் பிடிக்க முடியாது. அவ்வளவு பெரிய உயரத்துக்குப் போய்விடுவார்’ என்று கண்டுபிடித்துச் சொன்னார். அப்படியே செய்துவிட்டேன் என்றார். “ அப்படியானல்..அதில் ஒரு படத்துக்கான கால்ஷீட்டை எனக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று உரிமையுடன் கேட்டு வாங்கிக்கொண்டார் எம்.ஜி.ஆர். அந்தப் படம்தான் ‘நாடோடி மன்னன்’.
ஒரு விபத்தும் விலகலும்
தன்னுடைய நண்பரான வி. அருணா சலத்துடன் கூட்டணி அமைத்து ‘சாவித்திரி பிக்சர்ஸ்’ என்கிற பட நிறுவனத்தைத் தொடங்கி படப்பிடிப்பை நடத்தி வந்தார் சின்ன அண்ணாமலை. எம்.ஜி.ஆர். முதன் முதலாக நவீன கிராப் வெட்டி, பேண்ட், சட்டை அணிந்து, ஸ்டைலான ‘ஃபெடோரா’ தொப்பி அணிந்து நடித்துவந்தார். படமும் வேகமாக வளர்ந்துகொண்டு வந்தது. ஆனால், திரைப்படத்தை விஞ்சும் திருப்பங்களை சொந்த வாழ்க்கையில் பார்த்துப் பழக்கப்பட்ட சின்ன அண்ணாமலையின் வாழ்க்கையில் விதி விளையாடியது. திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும் தனது நாடகக் குழுவைக் கொண்டு அவ்வப்போது நாடகங்களிலும் நடித்துவந்தார் எம்.ஜி.ஆர். சீர்காழியில் ‘இன்பக் கனவு’ என்கிற நாடகத்தை அவர் நடத்திக்கொண்டிருந்தபோது ஒரு விபத்து. அந்த நாடகத்தின் சண்டைக்காட்சியில் ‘குண்டு' மணியை தலைக்குமேல் தூக்கப்போய், சறுக்கி விழுந்த எம்.ஜி.ஆருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அப்போது எம்.ஜி.ஆர். நடித்துவந்த எல்லா படங்களின் படப்பிடிப்பும் அப்படியே நின்றுபோயின.அப்போது, எம்.ஜி.ஆரின் அறிவுரையை ஏற்று ‘திருடாதே’ படத்தின் நெகட்டிவ் உரிமையை கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசனுக்கு கொடுத்து, வட்டிச் சுமையிலிருந்து தப்பித்துக்கொண்டார் சின்ன அண்ணாமலை.
எம்.ஜி.ஆர். குணமானதும் படப்பிடிப்பு முடிந்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது ‘திருடாதே’. திரைக்கதை வசனத்தை - கண்ணதாசனும் வசனம் மற்றும் நகைச்சுவைப் பகுதியை மா.லட்சுமணனும் எழுதியிருந்தார்கள். ‘திருடாதே’ என்கிற தலைப்பைச் சொன்னதற்காக எம்.ஜி.ஆரிடம் 500 ரூபாய் பரிசு பெற்றார் மா.லட்சுமணன். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைத்த ‘திருடாதே’ படத்தில் மொத்தம் 7 பாடலாசிரியர்களைப் பயன்படுத்தியிருந்தார்கள். அவர்களில், ‘திருடாதே.. பாப்பா.. திருடாதே..’ என்கிற புகழ்பெற்ற பாடலை எழுதிய பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்தான் அப்போது தமிழ்த் திரையுலகில் பாட்டுக் கோட்டை!
அதில் அறிமுகமான சரோஜாதேவி, ‘திருடாதே’ படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா நடைபெற்ற தினத்தன்று, நூறு தேங்காய், நூறு மாம்பழம், நூறு வாழைப்பழம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, சின்ன அண்ணாமலையை அவரது வீடு தேடிச் சென்று பார்த்து ஆசி வாங்கிக்கொண்டார். ‘சதி லீலாவதி’யில் தொடங்கிய திரைப் பயணத்தில், 25 ஆண்டுகள் கழித்து எம்.ஜி.ஆர்.நடித்திருந்த ‘திருடாதே’ படத்தில் திருடன் வேடத்தில் நடித்திருந்த எம்.ஜி.ஆர்., மக்களின் இதயங்களை இந்தப் படத்தின் மூலம் இன்னும் நெருக்கமாகத் திருடிக்கொண்டார்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago