பாசமலர் 60 ஆண்டுகள்: என்றும் வாடாத மலர்!

By ஆர்.சி.ஜெயந்தன்

காவியத்தன்மை பெற்றுவிட்ட எல்லாத் திரைப்படங்களையும் இன்று மறுஆக்கம் செய்துவிட முடியாது. குறிப்பாக, 60 ஆண்டுகளுக்கு முன் (1961) வெளியான ‘பாசமலர்’ படத்தை மறுஆக்கம் செய்யும் துணிவு யாருக்கும் இருந்ததில்லை. அதேநேரம், அந்தப் படம் உருவாக்கிய அலையும் அதன் அதிர்வுகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘பாசமல’ருக்கு இணையாக ஒரு படத்தை உருவாக்கிவிட முடியாதா என்கிற முயற்சியில் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’ தொடங்கி, பாண்டிராஜ் இயக்கிய ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ வரை, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு படம் வெளிவந்தபடியேதான் இருக்கிறது.

இன்றைய நவீன யுகத்திலும் ‘வாராயென் தோழி... வாராயோ..’ பாடல், மணவிழா நிகழ்வுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. பாலசந்தர் தொடங்கி, இன்றைய கார்த்திக் சுப்பராஜ் வரை, மனதுக்கு நெருக்கமான படப் பட்டியலில் ‘பாசமல’ருக்கு இடம் தராத இயக்குநர்களே இல்லை. அப்படிப்பட்ட அந்தப் படம் வெளியாகி அரை நூற்றாண்டு உருண்டோடியிருந்த நிலையில், கடந்த 2013-ல் டிஜிட்டல் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு 70 திரையரங்குகளில் வெளியாகி ஒருமாத காலம் ஓடியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் பார்த்து அழுத ஆயிரக்கணக்கான கண்கள், திரையரங்குகளைத் தேடிவந்து ‘பாசமல’ரைப் பார்த்து மீண்டும் கண்ணீர் உகுத்தது, இன்றைய தலைமுறைக்கு அதிசயச் செய்தியானது.

அண்ணன் - தங்கையின் பாசத்துக்கும், எதன்பொருட்டும் அறுபடாத அதன் தொடர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டில் தரப்பட்டிருக்கும் இடம் எத்தனை உன்னதமானது என்பதை பேசாத கலை வடிவங்களே இல்லை. என்றாலும் திரையில் அது ‘பாசமல’ராக மலர்ந்தபோது, உச்சிமுகந்து கொண்டாடினார்கள் தமிழர்கள். ‘பாசமலர்’ படைத்த சாதனைகளால், என்றைக்கும் வாடாத மலராக மணம்பரப்பிக்கொண்டிருக்கும் அந்த படைப்பின் பின்னால், தங்களுடைய ஆகச் சிறந்த பங்களிப்பைத் தந்த ஆளுமைகள் நம்முடைய நினைவுகளில் நீங்காமல் இருக்கிறார்கள்.

‘பராசக்தி’யில் தொடங்கிய நட்பு

‘பாசமல’ரின் படைப்புப் பிதாமகர்களின் முதன்மையானவர் அந்தப் படத்தின் இயக்குநர் பீம்சிங். திராவிட இயக்கத்தின் வெற்றிகரமான கலகக் குரலாக ஒலித்த ‘பராசக்தி’ படத்திலிருந்தே பீம்சிங்கின் பங்களிப்பு தொடங்கிவிட்டது. பள்ளியிறுதி வகுப்பை முடித்த கையோடு, ‘ஆந்திர பிரபா’ பத்திரிகையில் உதவியாசிரியராக வேலைக்குச் சேர்ந்தார் இளைஞர் பீம்சிங். அவரை, தென்னகத் திரைப்படங்களின் கனவுத் தொழிற்சாலையான கோடம்பாக்கம் சுண்டியிழுத்தது. சென்னை வந்து, இயக்குநர் இணையான கிருஷ்ணன் - பஞ்சுவிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார்.

அவர்களிடம் இயக்கம், படத்தொகுப்பு இரண்டையும் கற்றுக்கொண்டு தேர்ச்சிபெற்றார். தன்னுடைய 27-வது வயதில், நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்த ‘அம்மையப்பன்’ (1954) படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். கலைஞர், மு.கருணாநிதி கதை, வசனம் எழுதி. எஸ்.எஸ்.ராஜேந்திரனும் எஸ்.வரலட்சுமியும் நடித்திருந்த படம். போட்ட முதலை எடுப்பதற்குள் போதும்போதும் என்று ஆகிவிட்டது தயாரிப்பாளருக்கு. இந்த சமயத்தில், ‘பாராசக்தி’ படத்திலிருந்தே தன்னுடைய நண்பனாகிவிட்ட நடிகர் திலகத்தையும் பத்மினியையும் வைத்து இரண்டாவதாக ‘ராஜா ராணி’ (1956) என்கிற படத்தை இயக்கினார். அதுவும் தோல்வி.

மேலும் இரண்டு நட்சத்திரங்கள்

இரண்டு தோல்விகளின் காரணமாக, பீம்சிங்குக்கு யாரும் படம் கொடுக்கவில்லை. அதனால் என்ன? சொந்தப் படம் எடுத்து தன்னுடைய கனவுகளைத் துரத்திப் பிடிப்பதென்று முடிவு செய்தபோது அவருக்குத் தோள்கொடுத்தார் ‘பீம்பாய்’ என பீம்சிங்கை அழைக்கும் நண்பர் சிவாஜி. அந்தப் படம்தான் ‘பதி பக்தி’ (1956). சினிமா மீது பக்தி கொண்டிருந்த ‘பீம்சிங்’கை ‘பதி பக்தி’ கைவிடவில்லை. பரபரப்பான வெற்றியைப் பெற்ற அந்தப் படத்தில், சிவாஜியுடன் கைகோத்த இரண்டு உறவுகள் ஜெமினி கணேசனும் சாவித்திரியும். அப்போது ஜெமினியும் சாவித்தியும் காதல் வானில் சிறகடித்துக்கொண்டிருந்தனர்.

ஜெமினி ஸ்டுடியோவுக்கு வாய்ப்புத் தேடி சென்ற காலத்திலிருந்து ஜெமினி கணேசன் - சிவாஜி கணேசன் இடையே நட்பு மலர்ந்துவிட்டது. அவரை ‘மாப்பிள்ளை’ என்று அழைத்து நட்பைத் தாண்டிய உறவு பாராட்டிய சிவாஜி, தன் மாப்பிள்ளையைக் காதலித்த சாவித்திரி மீது ‘தங்கச்சி’ என்று பாசத்தைப் பொழிந்தார். ஜெமினியும் சிவாஜியும் முதன்முதலில் இணைந்து நடித்த ‘பெண்ணின் பெருமை’ படத்தில் ஒரு சம்பவம்., சிவாஜியின் கன்னத்தில் ஜெமினி ஓங்கி அறைவதுபோல் ஒரு காட்சி. ஜெமினி மிகவும் தயங்கிக்கொண்டிருந்தார். அவரது தயக்கத்தைக் கண்ட சிவாஜி, “மாப்ளே.. அடிக்கிற மாதிரி நடிக்காதே…

நிஜமாவே என்னோட கண்ணத்துல அறைஞ்சிடு.. இல்லேன்னா எசகுபிசகா வேற இடத்துல பட்டுடக் கூடாது.. என்ன புரியுதா?” என்றார். ஆனால். ஜெமினிக்கு மனம் வரவில்லை. சிவாஜி சொன்னதைப் பொருட்படுத்தாமல் அவரது கன்னத்தில் அறைவதுபோல ஜெமினி கைகளை வேகமாக வீசினார். ஜெமினியின் கைவிரல் நகம் சிவாஜியின் உதடுகளில் பட்டு ரத்தம் கொட்டியது. “என்ன மாப்ளே.. இப்படி பண்ணிட்டே… உண்மையிலேயே அடிச்சிருந்தா வலியோட போயிருக்குமே..?” என்றார். துடித்து அழுதுவிட்ட ஜெமினியை அப்படியே அணைத்துக்கொண்டார் சிவாஜி.

அந்த உறவின் உரிமையில்தான், ‘வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்துகொண்டிருந்தபோது, அதில் வெள்ளையத்தேவன் வேடத்தில் நடிக்கவிருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் விலகிவிட்டார். அப்போது ஜெமினியை அழைத்து அந்த வேடத்தை நடித்துக்கொடுக்கும்படி சொன்னார் சிவாஜி. நடிகர்களுக்குள் பிரச்சினை வந்துவிடும் என்று ஜெமினி தயங்கியபோது, ஜெய்ப்பூரிலிருந்து சாவித்திரிக்கு ட்ரங்கால் பறந்தது. “தங்கச்சி… மாப்ள தயங்குறான்மா.. அவன் நடிச்சா அற்புதமா இருக்கும்.. புத்தி சொல்லி அனுப்பி வை.. இதுக்கப்புறம் நான் போன் பண்ண மாட்டேன்” என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அண்ணனோ, தம்பியோ இல்லாமல், உடன்பிறந்த அக்காவுடன் வளர்ந்த சாவித்திரி, சிவாஜியை அண்ணனாகவே ஏற்றுக்கொண்டவர். ஜெமினியை ஜெய்ப்பூர் படப்பிடிப்புக்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்த்தார்.

‘ப’ வரிசை வெற்றிகளில் வைரம்

இப்படித் தொடங்கிய இந்த மூன்று நட்சத்திரங்களின் திரைவானில் பீம்சிங் துருவ நட்சத்திரமாக ஒளிவீசிக்கொண்டிருந்தார். ‘பதி பக்தி’ படத்தைத் தொடந்து, ‘பாவ மன்னிப்பு’, ‘பாசமலர்’, ‘பந்த பாசம்’, ‘பார்த்தால் பசி தீரும்’ என ‘ப’ வரிசைப் படங்களை தொடர் வெற்றிகளாகக் கொடுத்தார். அந்த வெற்றிப் படங்களின் மகுடத்தில் வைரம்போல் ஜொலித்த ‘பாசமலர்’ வெள்ளிவிழா படமானது. ‘பாசமலர்’ பார்க்க, கிராமத்து மக்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு பல மைல் தூரம் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வந்துபோனார்கள். மக்கள் மனங்களை ‘பாசமலர்’ மேலும் புடம் போட்டது.

‘பாசமலர்’ படத்துக்கான டைட்டிலில் முதலில் ‘கதை - கே.பி. கொட்டாரக்கரா’ என்று போட வைத்தார் இயக்குநர் பீம்சிங். அதன் பின்னர் பாடலாசிரியர், அடுத்து வசனகர்த்தா என கதாசிரியர்கள், எழுத்தாளர்களுக்கு டைட்டிலில் முன்னுரிமை கொடுத்து அவர்களைப் பெரிதும் மதித்தார் பீம்சிங். ‘பாசமல’ரின் சாதனைகளை பட்டியலுக்குள் அடக்க முடியாதுதான். அந்தப் படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு, அதற்கு வசனம் எழுதிய ஆரூர்தாஸுக்கு உண்டு. இளமையும் எளிமையும் இலக்கிய நயமும் மிகுந்த ‘பாசமல’ரின் வசனத்துக்குக் கிடைத்த வரவேற்பால், தனிபெரும் கதை, வசனகர்த்தாவாக உருவெடுத்தார் 24 வயதே நிரம்பியிருந்த ஆரூர்தாஸ்.

தேவர் பிலிம்ஸ் படங்களுக்கு வசனம் எழுதிக்கொண்டிருந்த இவரை, ‘பாசமல’ருக்கு வசனம் எழுதும் வாய்ப்பினை சிவாஜியிடம் பெற்றுக் கொடுத்தவர்கள் ஜெமினியும் சாவித்திரியும். அதேபோல், ‘பதி பக்தி’க்குப் பிறகு பீம்சிங்கின் இயக்கத்தில் அடுத்த வெற்றியாக அமைந்த ‘பாகப் பிரிவினை’ படத்துக்குப் பாடல்கள் எழுதி வெளிச்சம் பெற்றிருந்த கண்ணதாசனையும் இசையமைத்த விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையையும் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படைப்பாளிகள் ஆக்கியது ‘பாசமலர்’.

‘பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போனபோது ‘பிறந்தால் இப்படியொரு அண்ணனுக்குத் தங்கையாகப் பிறக்க வேண்டும்’ என்று பேசிக்கொண்டே போனார்கள். அவர் தன்னுடைய நடிப்புத் திறனால் பெண்களை இப்படி நினைக்க வைத்ததில் எனக்கு வியப்பில்லை. ஆனால், அந்தப் படத்தில் அவருக்குத் தங்கையாக நடித்த எனக்கே அந்த எண்ணம் உருவானது என்றால் அவரது ஆற்றலை என்னவென்று சொல்வது! அவரது தங்கையாக நான் பிறக்காவிட்டாலும், அவரது தங்கையாக நடிக்கும் வாய்ப்பாவது எனக்குக் கிடைத்ததே எனப் பெருமை கொள்கிறேன்” என்று பேட்டியளித்திருக்கிறார் நடிகையர் திலகம். ‘பாசமலர்’ படத்தின் கதையைக் கேட்டு எவ்வளவு உருகியிருந்தால், அந்தப் படத்தில் சில காட்சிகளைத் தன்னுடைய வீடான ‘அன்னை இல்ல’த்தில் படம்பிடிக்க அனுமதித்திருப்பார் நடிகர் திலகம்!

தொடர்புக்கு:

jesudoss.c@thehindu tamil.co.in

படங்கங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்