மண்வாசனை கமழ, நவீனத்தைத் தொட்டுக்கொண்டு, சூபி இசையை ஒரு மெல்லிய நூலிழைபோல் தனது மெட்டுக்களில் இழையவிடுபவர் தாஜ்நூர். `வம்சம்’ படத்தில் தொடங்கி ‘ஸ்ட்ராபெரி’ வரை தேர்ந்தெடுத்து இசையமைத்துவரும் இவருக்கு, 2016-ம் ஆண்டுக்கான ‘பெரியார் விருது’ வழங்கிக் கவுரவித்திருக்கிறது திராவிடர் கழகம். இலக்கியம், சமூக சேவை ஆகிய துறைகளுக்கு வழங்கப்பட்டுவரும் இவ்விருது முதல் முறையாக ஒரு திரைப்பட இசையமைப்பாளருக்கும் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…
எந்த அடிப்படையில் உங்களைப் பெரியார் விருதுக்குத் தேர்ந்தெடுத்தார்கள்?
“பிற்போக்கான திரைப்பாடல்கள், படங்கள் இரண்டையுமே விமர்சித்து கண்டிக்கக்கூடிய இயக்கம் திராவிடர் கழகம். எட்டு ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி அவர்களின் துணைவியார் மோகனா அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்ட ஆரம்பித்தார். இந்தப் பணியை நிறுத்தாதீர்கள் என்றார். அது என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. என் சினிமா இசையமைப்பு வேலைகளுக்கு மத்தியில் நானும் இடைவிடாமல் இதை எந்தக் கட்டணமும் பெற்றுக்கொள்ளாமல் இலவசமாகச் செய்துவருகிறேன்” என்றபடி பாடலொன்றை ஒலிக்கவிட்டார் தாஜ்நூர்.
துள்ளாட்டம் போட வைக்கும் சினிமா பாடல்போல ஒலித்தது அந்தப் பாடல். ‘தேசியக்கொடியை ஆண்டுக்கு ஒருமுறை சட்டையில் குத்திக்கொண்டால் மட்டும்போதாது, அதை நெஞ்சில் சுமக்க வேண்டும். அதை நெஞ்சில் சுமந்தால் தீய எண்ணங்கள் உன் நெஞ்சைத் தீண்ட அனுமதிக்காதே… நல்ல நடத்தை படிப்பிலும் உன்னை முதல் மாணவனாக்கும்’ என்பதுபோன்ற கருத்துக்களை ஏந்திய பாடல் வரிகள்…! பாடல் ஒலித்து முடிந்ததும் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் தாஜ்நூர்.
இந்தப் பாடல்தான் இந்த ஆண்டு பள்ளிகளுக்கு இடையில் நடந்த நடனப் போட்டியில் முதல் பரிசை வாங்கிக் கொடுத்திருக்கிறது. சேலம் பள்ளியொன்றில் நடந்த ஆண்டு விழாவுக்குச் சிறப்பு விருந்தின ராகச் சென்ற மோகனா, நான் அந்தப் பள்ளிக்கு வழங்கிய இதேபோன்ற பாடல் ஒன்றுக்கு மாணவர்கள் நடனமாடியதைக் கண்டே என்னை அழைத்துப் பாராட்டிப் பேசினார் .
சேலம் எனது சொந்த ஊர். பள்ளி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டபோது சினிமா பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடுவதைப் பார்த்தேன். அது மனதுக்கு நெருடலாக இருந்தது. அடுத்த ஆண்டே பரீட்சார்த்தமாக நடனப் பாடல் ஒன்றை மெட்டமைத்து பள்ளிக்குக் கொடுத்தேன். அது இன்று தீ மாதிரி பரவியிருக்கிறது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், தமிழகத்தில் பல மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளை நடத்தும் பலரும் இதுபோன்ற பாடல்களைக் கேட்டு என்னிடம் வர ஆரம்பித்தார்கள்.
என் சினிமா வேலைகளுக்கு மத்தியில் சளைக்காமல் நான் இசையமைத்துக் கொடுக்கிறேன். இதற்காகவும் இன்னும் சில இசைப் பணிகளுக்காகவும்தான் எனக்குப் பெரியார் விருதை வழங்கியிருக்கிறார்கள். இன்னும் தீவிரமாகச் செயல்பட எனக்கு இது ஊக்கம் கொடுத்திருக்கிறது.
மாணவர்கள் சினிமா பாடல்களுக்கு ஆடுவதைத் தவறு என்கிறீர்களா?
நிச்சயமாக... சினிமாவில் நான் இசையமைப்பாளராக இருப்பது என் தொழில். அதற்காக கண் முன்னால் நிகழும் இதுபோன்ற முரண்பாடுகளை ஊக்குவிக்க முடியாது. சினிமா பாடல்களை மாணவர்கள் வீட்டில் கேட்கட்டும்.ஆனால் பள்ளிக்கு கல்வி பயில வருகிறார்கள். அங்கே ஒழுக்கம், அறிவு ஆகியவற்றோடு விளையாட்டையும் கலைகளையும் கற்றுக்கொள்ள வருகிறார்கள். பள்ளியில் சூழலையும் மாணவர்களின் சிந்தனையையும் மலிவான பல சினிமா பாடல்கள் மழுங்கடிக்கின்றன.
சினிமா பாடல்கள் ஏன் மாணவர்களை ஈர்க்கின்றன? ஆட்டம்போட வைக்கும் சினிமா பாடல்களில் இருக்கும் கவர்ச்சி என்பது அதிலிருக்கும் துடிப்பான இசைதான். அதை அப்படியே பள்ளிகளில் நடத்தப்படும் போட்டி நடனம், நல்வரவு நடனம், குழுநடனம் ஆகியவற்றுக்கு ஏற்ற பாடல்களாகக் கொடுத்தால் என்ன என்று தோன்றியது. உடனே ஆரம்பித்துவிட்டேன். யாரும் இதைக் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். பல மாவட்ட ஆட்சித் தலைவர்கள் போனில் அழைத்துப் பாராட்டினார்கள். பல முன்னணிப் பாடலாசிரியர்கள் இதில் என்னுடன் கைகோத்து தங்கள் கவிதையை மாணவர்களின் நலனுக்கான வரிகளாக அளித்துவருகிறார்கள். இந்தப் பாடல்கள் பிரதியெடுக்கப்பட்டுப் பல பள்ளிகளுக்குப் பரவிக்கொண்டிருப்பதில் எனக்குக் கிடைத்திருக்கும் மனநிறைவுக்கு விலையே கிடையாது.
ஏற்கெனவே ‘தாய்ப்பால் `தமிழ் பிள்ளை’ போன்ற ஆல்பங்களை உருவாக்கி வந்தீர்களே?
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு இசைவழியே தமிழ்ச் சொற்களைத் திருத்தமான உச்சரிப்பில் பேசச் சொல்லித்தரும் முயற்சிதான் `தாய்ப்பால்’ஆல்பம். அதைப் பல பாகங்களாகக் கவிஞர் அறிவுமதியுடன் இணைந்து செய்து வருகிறேன். ‘தமிழ் பிள்ளை’ ஆல்பம் பல அரேபிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்த் தொழிலாளர்கள் கடைநிலையில் நடத்தப்படும் அவலத்தைச் சித்தரிக்கும் ஆல்பம். அது விரைவில் வெளிவர இருக்கிறது.
கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு நடந்த பவள விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் உங்களைப் பாராட்டியிருக்கிறாரே?
அது கவிக்கோவின் கவிதைகளுக்கு நான் இசையமைத்ததற்காகக் கிடைத்த பாராட்டு. ஏ.ஆர்.ரஹ்மானிடம் பதினைந்து ஆண்டுகள் உதவியாளராகப் பணிபுரிந்திருக்கிறேன். அப்போது கவிக்கோ அபூர்வமாக ரஹ்மான் ஸ்டூடியோவுக்கு வருவார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். கவிக்கோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பல கவிதைகளுக்கு இசையமைப்பதாக இருந்தார் ரஹ்மான்.
அது நடைபெறவில்லை. பிறகு அவரது பவள விழா என்றதும் அதை நாம் செய்யலாமே எனத் தோன்ற, இசையமைத்தேன். அதை ‘மகரந்த மலை’ என்ற தலைப்பில் தனி இசைக் குறுந்தகடாக பவள விழா மேடையில் ரஹ்மானும் ஜிப்ரானும் வெளியிட்டார்கள். அந்த நிகழ்ச்சியில் பேசும்போதுதான் “தாஜ்நூர் என்னை முந்திக்கொண்டார். இருந்தாலும் பாடல்களைக் கேட்ட எனக்கு மகிழ்ச்சிதான்” என்று பாராட்டினார். இதை குருவிடமிருந்து கிடைத்த விருதாக நினைக்கிறேன்.
தற்போது இசையமைத்துவரும் படங்கள்?
தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர், பா.விஜய் இணைந்து நடிக்கும் ‘நையப்புடை’, ‘வெங்காயம்’ படப் புகழ் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘நெடும்பா’, பாடலாசிரியர் சினேகன் ஹீரோவாக நடிக்கும் ‘பொம்மி வீரன்’ உள்ளிட்ட ஐந்து படங்களுக்கு இசையமைத்துவருகிறேன்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago