சினிமா எடுத்துப் பார் 46: எந்த நாடும் சிங்கப்பூர் தான்

By எஸ்.பி.முத்துராமன்

‘ப்ரியா’ படப்பிடிப்பின்போது ஒரு சீனக்காரரான மினி லாரி ஓட்டு நரிடம் ‘‘மலை உச்சியில் இருந்து விமானம் புறப்படுவதைப் படம் பிடிக்க வேண்டும்; அதைப் போன்ற இடத்தை உங்களால் காட்ட முடியுமா?’’ என்று கேட் டோம். தன்னுடைய மினி லாரியில் என் னையும் ஒளிப்பதிவாளர் பாபுவையும் ஏற்றிக்கொண்டு அந்த ஓட்டுநர் புறப்பட்டார்.

அந்த மினி லாரியை மலை மேல் அவர் இஷ்டத்துக்கு ஓட்டிக்கொண்டு போய்க் கொண்டே இருந்தார் அந்த சீனக்காரர். நாங்கள் சொன்னதை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்கிற எண்ணம் ஒருகட்டத்தில் எங் களுக்கு உண்டானது. இன்னும் ஒரு சுற்று மலை மேல் ஏறியது மினி லாரி. அந்தச் சீனக்காரர் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு ‘‘இங்கே வாங்க… வாங்க…’’ என்று கையை அசைத்தார்.

அவர் அழைத்துச் சென்று காட்டிய மலை உச்சியில் இருந்து கீழே ஏர்போர்ட் தெளிவாகத் தெரிந்தது. அங்கே ஒரு விமானம் டேக் ஆஃப் ஆவதற்குத் தயாராக இருந்தது. ஒரு இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இருக்க வேண்டிய பார்வை கோணம் மினி லாரி ஓட்டுநருக்கு இருக்கிறதே என்று நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் ஆச்சர்யப்பட்டோம். பாபு உற்சாகத்தோடு விமானம் ‘டேக் ஆஃப்’ ஆவதை படமாக்கினார்.

நாங்கள் நினைத்த காட்சியைப் படமாக்கி முடித்தோம். அந்த சமயத்தில் எங்களுக்கு கடும் பசி. காலையில் சோப்ரா மாஸ்டர் தயாரித்துக் கொடுத்த பிரெட் மட்டும்தான் சாப்பிட்டிருந்தோம். நானாவது பசியைத் தாங்கிக் கொள் வேன். பாபு சாருக்கு மயக்கமே வந்து விட்டது. அதைக் கவனித்தார் சீன ஓட்டுநர். மினி லாரியை நோக்கி ஓடிய அவர், கையில் ஒரு பீங்கான் பாத்திரத்தோடு திரும்பி வந்தார்.

அதில் இருந்த நூடுல்ஸை எங் களிடம் கொடுத்து ‘‘சாப்பிடுங்க… சாப் பிடுங்க…’’ என்று கையால் பேசினார். பாபு சார் சுத்த சைவர். சீனக்காரர் கொண்டுவந்தது அசைவ நூடுல்ஸாகத் தான் இருக்கும் என்று பாபு சார் நினைத் தார். அதையும் புரிந்து கொண்ட சீனக் காரர் ‘‘இது வெஜ்… வெஜ்’’ என்று காய்கறிகளை எடுத்துக் காட்டினார்.

சீனக்கார ஓட்டுநரையும் எங்களு டன் சேர்ந்து சாப்பிடச் சொன்னோம். பீங்கான் பாத்திரத்தில் இருந்த நூடுல்ஸை மூன்று பேரும் கையால் எடுத்துச் சாப்பிட்டபோது இனம்புரியா மல் மூவரின் கண்களும் கலங்கியிருந் தன. ஜாதி, மதம், இனம், நாடு என்கிறோம். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சண்டை என்கிறோம். எதுவும் கிடைக்காத மலை உச்சியில் அந்த கொடும் பசி நேரத்தில் அங்கே நாங்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட்டபோது அப்படி எது வுமே தெரியவில்லை. ‘ஒரே உலகம்… ஒரே மனித இனம்’ என்ற மனிதநேய ஒருமைப்பாடே எங்களுக்குத் தெரிந்தது.

இந்த விதை நம் எல்லோர் மனதிலும் விழ வேண்டும். வெளிநாட்டுக்குச் சென்று படம் மட்டுமே எடுத்து வரவில்லை. இப்படி நல்ல கலாச்சார விஷயங்களையும் கற்று வந்தோம். பழைய நினைவுகள் மனதில் வட்டமிடும்போது எல்லாம் தீவிரவாதம் இல்லாத ஒருமைப்பாடான உலகத்தை என்றைக்கு நாம் உருவாக்கப் போகிறோம் என்கிற கவலை மனசுக்குள் மண்டுகிறது.

தேங்காய் சீனிவாசன் ஒரு குழுவை படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு அழைத்து வந்திருப்பதைப் போல ‘ப்ரியா’ படக் காட்சிகளை எடுத்தோம். அவர் அழைத்து வந்தவர்கள் ஏதாவது தவறு செய்தால், ‘‘உங்க பாஸ்போர்ட் என் கையில’’ என்று அடிக்கடி விரட்டுவார். இதை கன்டினியூடி வசனமாக படம் முழுக்க வைத்திருந்தோம். நிஜத்தில் எங்கள் யூனிட்டில் யாராவது தப்பு பண்ணினாலும், ‘‘உன் பாஸ்போர்ட் என் கையில’’ என்று மிரட்டுகிற அளவுக்கு அந்த டயலாக் ரீச் ஆனது. படம் ரிலீஸானப் பிறகு மக்களும் அந்த டயலாக்கை சொல்ல ஆரம்பித்தார்கள்.

சிங்கப்பூர் சுதந்திர தின விழாவில் ஸ்ரீதேவியைக் கடத்திச் செல்வது போன்ற காட்சியைப் பற்றி முன்பே கூறியிருந் தேன். அப்படி கடத்தப்பட்ட ஸ்ரீதேவி அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் கட்டிப் போடப்பட்டிருப்பார். ரஜினி அவரைத் தேடி பல இடங்களிலும் அலைந்துவிட்டு ஸ்ரீதேவி இருக்கும் இடத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிடுவார். ஆனால், அடுக்கடுக் காக இருக்கும் அடுக்குமாடிக் கட்டிடங் களின் நெருக்கத்தில் ஸ்ரீதேவி இருக்கும் இடத்தை துல்லியமாக அவரால் கண்டு பிடிக்க முடியாது. அப்போதுதான் ரஜினி ‘‘ஓ… ப்ரியா… ப்ரியா’’ என்ற பாடலைப் பாடி ஸ்ரீதேவியைக் கண்டுபிடிப்பார். ரஜினி, ஸ்ரீதேவியைத் தேடும் காட்சியை இசைஞானி இளையராஜா இசையிலேயே பரபரப்பாக கொண்டு வந்திருப்பார். அதுதான் ராஜா!

ஆகமொத்தம் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் மூன்று நாடுகளிலும் தேடித் தேடி வசீகரமான இடங்களை, பூங்காக் களை கண்டறிந்து அங்கெல்லாம் படம் பிடித்து வந்தோம். நாங்கள் படம்பிடித்து வந்ததை எடிட்டர் விட்டல் மிக அழகாக எடிட் செய்து கோர்வையாக்கினார். அன்னப் பறவை எப்படி தண்ணீரை நீக்கிவிட்டுப் பாலை மட்டும் அருந்துமோ அதைப் போல, ஒரு சிற்பி பாறையின் வேண்டாதப் பகுதிகளை நீக்கி சிலையைச் செதுக்குவதைப் போல… அழகான காட்சிகளை எல்லாம் தொகுத்து சிறப் பான படமாக கொடுத்தார் விட்டல் சார்.

இவ்வளவு நன்றாக வந்திருக்கும் படத்தை ஏவி.மெய்யப்ப செட்டியார் அவர்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவரிடம் சென்று என் விருப்பதைத் தெரிவித்தேன். ‘‘ஓ… தாராளமா பார்க்கிறேனே...’’ என்று கூறி படம் பார்த்தார். ‘‘மூன்று நாடுகள், ஆடல் பாடல், கருத்து, கதை, அழகான இடங்கள் என்று சிறப்பாக படமாக்கியிருக்கிறீர்கள். எத்தனை நாட்கள் படம் பிடித்தீர்கள் முத்துராமன்?’’ என்று கேட் டார். நான் ‘‘26 நாட்களில் படமாக்கினோம்’’ என்றேன்.

‘‘அந்த நாட்டில் உள்ள இடங்களைச் சுற்றிப் பார்க்கவே எனக்கு அத்தனை நாட் கள் ஆகுமே. இவ்வளவு குறுகிய நாட்களில் படமாக்கியதே சாதனைதான்!’’ என்று எங்கள் குழுவை மனந்திறந்து அவர் பாராட்டினார். படத்தின் 100-வது நாள் விழாவில் அவரே தலைமை வகித்து எங்களுக்கு விருதுகளைக் கொடுத்தார். ஏவி.எம் பல்கலைக்கழகத்தில் பயின்ற எனக்கு அவரது பாராட்டையும், விருதை யும் ஒரு துணைவேந்தர் கொடுத்த பட்டமாகவே கருதுகிறேன்.

அந்த நாடுகளில் எங்களுக்கு உதவியாக பாஸ்கர், தேவி மணியன், பாலா, யாஷின், ஹாங்காங் அண்ணாமலை, அபிராமி ஆகியோர் இருந்தனர். அவர் கள் செய்த உதவிகளை மறக்கவே முடி யாது. இன்றைக்கும் அவர்கள் என்னோடு நட்புடன் இருக்கிறார்கள்.

கடந்த மாதம் சிங்கப்பூருக்குச் சென்ற போது ‘2030-ல் சிங்கப்பூர்’ என்கிற ஒரு கண்காட்சி நடந்துகொண்டிருந்தது. அதற்காக அவர்கள் திட்டமிட்ட செயல் பாடுகளின் மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. 2030-ம் ஆண்டு சிங்கப்பூரை இப்போதே பார்ப்பதுபோல் அந்தக் கண்காட்சி மிளிர்ந்தது. திட்டமிட்ட திட்டத்தை அப்படியே நடைமுறைப் படுத்துவதால்தான் இவை எல்லாம் அங்கே சாத்தியப்படுகிறது. திட்டமிட்ட படி செயல்பட்டால் எந்த நாட்டையும் சிங்கப்பூராக்க முடியும். நம் நாட்டையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

அந்த அரசு நாட்டையும், மக்களையும் நினைக்கிறது. நாம் ‘நாட்டையும், மக் களையும்’ நினைப்பதைவிட தன்னைப் பற்றியும், தன் வளர்ச்சியைப் பற்றியும் மட்டுமே நினைத்தால் எப்படி நாடும், மக்களும் முன்னேற முடியும்? இதோ தேர்தல் வரப் போகிறது. நான் மக்க ளிடம் கேட்டுக்கொள்ளும் விஷயம்: நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றி யும் நினைப்பவர்களை, செயல்படுவர் களைத் தேர்ந்தெடுங்கள்.

‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்’

என்கிற குறளின்படி ஓட்டுப் போடுங்கள் என் பதைத்தான்.

அடுத்த வாரம் என்ன எழுதப் போகி றேன் என்கிறீர்களா? நான் இன்னும் சிங்கப் பூர் மனநிலையில் இருந்து வெளியே வரவே இல்லையே. எனக்கு இன்னும் ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். இந்தியச் சூழலுக்கு வந்துவிடுகிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்...

படம், உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்