உங்களிடம் ஒரு கதை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதற்கேற்ற தயாரிப்பாளர்களிடம் பேசுகிறீர்கள். அப்போது அவர்கள் கேட்கும் கேள்வி என்னவென்றால், ‘இது எந்த சென்டர் படம்?’ என்பதே. ரசனை அடிப்படையில்தான் இந்தப் பிரிவு செய்யப்படுகிறது என்பதே பொதுவான கருத்து. A என்றால் பல மொழிப் படங்கள் பார்த்து, திரைப்படம் என்றால் ஒரு குறிப்பிட்ட நல்ல புரிதலோடு திரையரங்கு வரும் மக்கள். B என்றால், பெரும்பாலும் தமிழ்ப் படங்கள் பார்த்து, ஓரளவு புரிதலோடு வரும் மக்கள். C என்றால் மசாலா ரசிகர்கள் என்பதே அந்தப் பிரிவு.
மகாநதி, அன்பே சிவம் போன்ற உணர்வுபூர்வமான கதைகள், ஏ சென்டர் படம் என்று முத்திரை குத்தப்பட்டுவிடுகின்றன. இதனால் அதற்கான தயாரிப்பாளர்கள் இந்தக் காலகட்டத்தில் கிடைப்பது கடினம் என்று ஆகிறது. மணி ரத்னம் படங்கள், கௌதம் மேனன் படங்கள், ராதாமோகன் படங்கள், மிஷ்கின் படங்கள், வஸந்த்தின் படங்கள் வந்ததுமே இவை ஏ சென்டர் ஆடியன்ஸைத்தான் கவரப்போகின்றன என்ற பொதுவான எண்ணம் எழுந்துவிடுகிறது.
அப்படிப்பட்ட இயக்குநர்களின் கதை போலப் புதிய இயக்குநர்கள் ஏதேனும் கதை தயார் செய்தால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினமாகிவிடுகிறது (இதற்கு விதிவிலக்குகளும் உண்டு). பி சென்டர் படங்கள் விஷ்ணுவர்த்தன், செல்வராகவன், கார்த்திக் சுப்பராஜ், சேரன், சுசிந்திரன், பாலாஜி மோகன் போன்ற இயக்குநர்களின் படங்கள் ஓரளவு பரவலான ஆடியன்ஸைக் கவரும் என்ற நம்பிக்கை உள்ளது. லாரன்ஸ், சுந்தர் சி, ஹரி, வேல்ராஜ், பேரரசு போன்ற இயக்குநர்களின் படங்கள் மிகப் பரவலான ஆடியன்ஸைச் சென்று சேரும் என்பது சி சென்டர் படங்கள் பற்றிய நம்பிக்கை. காரணம் இவர்களின் படங்களில் மசாலா தூக்கலாக இருக்கும்.
மசாலாவுக்கு வந்த மவுசு
இப்படிப்பட்ட தரம் பிரித்தலால் பல சிக்கல்கள் நேர்கின்றன. பலரையும் கவரும் படங்கள் என்று சி சென்டர் படங்களுக்கு இருக்கும் பெயரால், அப்படிப்பட்ட கதைகளையே பல தயாரிப்பாளர்களும் விரும்புகின்றனர். பலர் பார்த்தால் போட்ட பணம் எளிதில் வசூலாகும் என்பது அவர்களின் நம்பிக்கை. எனவே, உருவாக்கத்தில் ஆங்கிலப் படங்களை ஒத்திருக்கும் வகையிலான கதைகள் (த்ரில்லர்கள், சீரியல் கொலைகாரர்களை வைத்து எழுதப்படும் கதைகள், துப்பறியும் கதைகள், சரித்திர சம்பவங்களை ஆதாரமாக வைத்து எழுதப்படும் கதைகள் முதலியன) பல தயாரிப்பாளர்களால் கைகழுவப்படுகின்றன. அப்படி பாதிக்கப்பட்ட இயக்குநர்கள், முற்றிலும் மசாலாவாக இருக்கும் படங்களையே எழுதத் தூண்டப்படுகின்றனர்.
இதனால்தான் உலக அரங்கில் வெளியாகும் பல நல்ல திரைப்படங்களைப் போன்ற படங்கள் தமிழில் வெளிவருவதில்லை. வெளிவரும் படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஹீரோவை வழிபடும் படங்களாகவும், மசாலாக்களாகவுமே இருப்பதற்கு இதுவே காரணம். ஏதாவது நல்ல படம் வந்தாலும், ‘இது அவார்டு சினிமா’ என்று சொல்லப்பட்டு, திரைவிழாக்களுக்கே அவை முதலில் அனுப்பப்பட்டுவிடுகின்றன.
எல்லோரும் விரும்பும் படங்கள்
இவைகளில், ஏ,பி, சி ஆகிய மூன்று சென்டர்களிலும் உள்ள பல விஷயங்கள் இந்த மூன்று வகையைச் சேர்ந்த ஆடியன்ஸாலுமே விரும்பப்படுகின்றன என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, சேரனின் ‘ஆட்டோகிராஃப்’, தங்கர் பச்சானின் ‘அழகி’ முதலிய படங்கள் எல்லோராலும் விரும்பப்பட்டன.
எந்தப் பிரச்சினையும் இல்லாத ஒரு கதையாக இருந்தாலும், அந்தக் கதையை யாருக்குச் சொல்லப்போகிறோம் என்ற கேள்வியும் முக்கியம். ஜாதிகள், மதங்கள், அரசியல் கட்சிகள் போன்ற சில விஷயங்களை இப்போதெல்லாம் நிஜமாக விமர்சித்துப் படங்கள் எடுக்கப்பட்டால் திரையரங்குகள் எரிக்கப்படும் சூழல் இது. இப்படி எதுவும் இல்லாமல், காதல், நட்பு போன்ற ‘பாதுகாப்பான’ கதைகளை உடைய படங்களே அதிகமாக எடுக்கப்படுகின்றன. இவை சி சென்டர் படங்களாக உருமாறுகின்றன.
சென்டர்கள் குறித்த இந்தப் பிரிவு எல்லாமே எண்பதுகள் வரை அதிகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதைய காலகட்டத்தில்தான் இந்த சென்டர்கள் கறாராகத் தரம் பிரிக்கப்பட்டு, இவற்றால் படம் பார்க்கும் ஆடியன்ஸின் தலையெழுத்து நிர்ணயிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அனைவருமே சி சென்டர் படங்கள் எடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதால், ஆடியன்ஸைச் சிந்திக்கத் தூண்டாமல், மசாலா படங்கள் எடுக்க முயல்கின்றன.
கூடவே, திடீர் திடீர் என்று சி சென்டர் படங்கள் அடையும் பெருவெற்றிகள், ஏ சென்டர் இயக்குநர்களையும் அசைத்துப் பார்க்கின்றன. இதனால் அவர்களுமே சி சென்டர் படங்கள் எடுக்கத் தூண்டப்பட்டுவிடுகின்றனர். இந்த நிலை மாறி, எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அது நன்றாக இருந்தால் அவற்றைத் தயாரிக்கப் பலரும் முன்வர வேண்டும். இப்போது அது நடக்க ஆரம்பித்திருக்கிறது என்றாலும், இன்னும் பரவலாக, பல கதைகளும் இங்கே எடுக்கப்படவேண்டும்.
வயது என்னும் பிரிவு
தமிழகத்தில் எல்லா வீடுகளிலும் நாற்பது வயதைக் கடந்த ஆடியன்ஸ் உண்டு. பொழுதுபோக்கு என்பதை எடுத்துக்கொன்ண்டால், தொலைக்காட்சிகளின் மெகா தொடர்களே இவர்களின் ஒரே வழி. இப்போது வரும் பல படங்கள், கல்லூரியில் படித்துவரும் இளைஞர்களையே இலக்காக எடுத்துக்கொண்டு எழுதப்படுகின்றன.
‘ஓ காதல் கண்மணி’ போன்ற ஒரு படம், இளைஞர்களைக் கவரும் அளவு இந்த நடுத்தர வயதினரைக் கவராது. அதுவே ‘மஞ்சப்பை’ போன்ற ஒரு படமாக இருந்தால், அது இவர்களையே அதிகம் கவரும். ‘தவமாய் தவமிருந்து’ படம் தமிழகமெங்கும் பிரமாதமாக ஓடியது இந்த நடுத்தர வயது ஆடியன்ஸால்தான்.
முன்னொரு காலத்தில் வெளிவந்த அத்தனை படங்களும் இந்த நடுத்தர வயதினரைக் கவர்ந்த படங்களே. பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ராமண்ணா, ஸ்ரீதர் (இவர் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தார்), திருலோகசந்தர் போன்ற இயக்குநர்களின் படங்கள் எல்லோராலும் விரும்பிப் பார்க்கப்பட்டன. எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ், விசு போன்ற இயக்குநர்களின் படங்கள் இந்த நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. தொண்ணூறுகளில் வி. சேகர் அந்த இடத்தைப் பிடித்தார்.
இன்று இந்த வர்க்கம் மெல்ல மெல்லத் திரையரங்குகளில் இருந்து துரத்தப்பட்டுவிட்டது. இளைஞர்களுக்கே திரையரங்குகளில் முக்கியத்துவம் என்ற நம்பிக்கை பரவிவருகிறது. இதனால் எப்போதோ ஒரு முறைதான் ‘மஞ்சப்பை’ போன்ற படங்கள் வெளிவருகின்றன. சமீபத்தில் ‘பாபநாசம்’ இப்படிப்பட்ட நடுத்தர வயது ரசிகர்களைத் திரையரங்குக்கு இழுத்தது.
அதன்பின் ‘பாஹுபலி’ அதைச் செய்தது. இவர்களுக்கான படங்களும் பரவலாக எடுக்கப்படவேண்டும் என்பது என் விருப்பம். அப்போது, பல வகையிலும் பல திரைக்கதைகள் புதிதாக எழுதப்படும். அதனால் பல திரைப்படங்கள் வெளியாகி நன்றாகவும் ஓடும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago