கே. பாலசந்தர் முதலாண்டு நினைவு: சிகரம் தீட்டிய சித்திரங்கள்

By ஜம்புலிங்கம்

டிசம்பர் 23 - கே. பாலசந்தர் முதலாண்டு நினைவு

கே.பி. முத்திரை என்பது என்ன? மரபுகளை மீறுவதுதான் கே.பி. முத்திரையா என்ற கேள்விக்கு பதிலளித்தார் இயக்குநர் சிகரம். “கே.பி. என்றால் மரபு மீறல்கள் வேண்டும் என்று மக்கள் எர்பார்க்கிறார்கள். யாருமே எடுத்துத் துணியாத பல கதைகளை எடுத்து இயக்கியிருக்கிறேன். ‘அபூர்வ ராகங்கள்’, ‘அவள் ஒரு தொடர்கதை’ போன்றவை அந்த ரகம்தான்” என்று கூறியிருந்தார்.

திருவள்ளுவரின் ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு’ என்ற திருக்குறள் திரையில் தோன்றுவது முதல் அந்தப் படத்தின் இறுதிக் காட்சி, இறுதி பிரேமில் காணப்படும் சில சொற்றொடர்கள் வரை விடாமல் பார்த்து ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

இவருக்கு முன்னும் பின்னும் பல இயக்குநர்கள் வந்துபோன போதிலும் இவரது வரவும் விட்டுச்சென்ற பதிவும் வித்தியாசமானவை. அனைத்துத் தரப்பினரையும், அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் பாணி இவரது இயக்கத்தில் காணப்படும். சமுதாயப் பிரச்சினைகளை முன்னுக்கு வைத்து அதனை அலசி ஆராய்ந்து, சில நிலைகளில் தீர்வுகளையும் தந்துள்ள இவரது சித்தரிப்புகளுக்குச் சில சலசலப்புகள் வந்தாலும், எதிர்த்தவர்களில் பலரே பின்னாளில் அவரது படங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இலக்கை அடைந்த பயணி

நாடகத் துறையில் நுழைந்து ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘நீர்க்குமிழி’ உள்ளிட்ட பல நாடகங்களை உருவாக்கி நடுத்தர மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தனது நாடகங்களிலேயே பேசத் தொடங்கிவிட்ட கே.பி., மேடையிலிருந்து இடம்பெயர்ந்து திரைக்கும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வை எடுத்துச்சென்றார். கதையின் கரு, திரைக்கதையின் தெளிவு, உரையாடலில் கூர்மை, நடிகர் தேர்வு, இயக்கம், காட்சிப் பின்னணி, தொழில்நுட்பம் என்று ஒவ்வொன்றுக்கும் கதையோடும் சம காலத்தோடும் ஐக்கியம் ஏற்படுத்தி, நெடுந்தூரப் பயணத்தில் தன் இலக்கை அடைந்த வெற்றிகரமான திரைப் பயணி இயக்குநர் சிகரம்.

தமிழ்த் திரைப்பட உலகில் உள்ள நட்சத்திரங்களில் பலர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களே. ஒரே படத்தில் அதிகமான எண்ணிக்கையில் புதுமுகங்கள் என்ற நிலையில் (அவள் ஒரு தொடர்கதை) அவர் அறிமுகப்படுத்திய அறிமுகங்களில் பலர் பின்னால் நன்கு பரிணமித்தவர்கள். சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் மிகத் துணிவோடு ஒரு நடிகையை (பிரமிளா- அரங்கேற்றம்) அறிமுகப்படுத்தி இன்றளவும் பேசப்படும் அளவு செய்தவர். நடிகை ஆலம் (மன்மத லீலை) கதாநாயகியாக முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கும்படி செய்தவர். இவருடைய படத்தில் நடிக்கும் எந்த ஒரு நடிகரும் நம்மை ஈர்த்துவிடுவார்கள். ‘தப்புத் தாளங்கள்’ படத்தில் தடம் மாறிய பாத்திரங்களாகக் கதாநாயகனும் கதாநாயகியும் நடித்ததை ஈடுசெய்யும் வகையில் அந்தக் கதாநாயகிக்கு முழுக்க முழுக்க புதிய பரிமாணம் கொடுத்தார் ‘நூல் வேலி’திரைப்படத்தில். இருமல் தாத்தா என்ற ஒரு கதாபாத்திரத்தை (எதிர்நீச்சல்) கடைசி வரை படத்தில் காண்பிக்காமலேயே இருப்பார். ஆனால், அந்தப் பாத்திரம் அத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும்.

நடிகர்களை மட்டுமே அவர் கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்தவில்லை. “என்னை பாலசந்தர் இந்த படத்துல அறிமுகப்படுத்தியிருக்கார்” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பேசும் பொம்மை (அவர்கள்), டைட்டில் போடும்போது அருவியைக் காண்பித்து, ‘இவர்களுடன் இந்த மலையருவி’ என்ற டைட்டிலுடன் காட்டப்படும் அருவியும் இந்தக் கதையில் ஒரு முக்கியக் கதாபாத்திரம் (அச்சமில்லை அச்சமில்லை) என்று டைட்டில் போட்டு உணர்த்துவார். கதையையொட்டி இயற்கையையும் வாழ்விடங்களையும் தெரிவு செய்து காட்சியில் கொண்டுவருவதில் அவரது கற்பனை வளம் வியக்கத் தக்கது. நாடகத்திலிருந்து வந்திருந்தாலும் காட்சிமொழியிலும் அதிக கவனத்தை அவர் காட்டியுள்ளார்.

பெண்மையின் வலியைப் பேசியவர்

நடிகைகளைக் காட்சிப்பொருள் போல வைத்துப் படங்கள் வெளியான நிலையை மாற்றி நடிகைகளுக்கு முக்கியமான பாத்திரங்களைக் கொடுத்துப் பெண்ணின் பெருமையைப் பேசவைத்த முதல் இயக்குநர். பெண்களை மையமாக வைத்து இவர் திரைப்படங்கள் எடுத்த அளவு வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை. பெண்ணினத்தையும் பெண்ணியத்தையும் நேசித்த இயக்குநர் என்ற வகையில் திரை வரலாற்றில் கே.பி. தனித்து நிற்கிறார்.

குடும்ப முன்னேற்றத்துக்காகத் தன்னையே மெழுகுவர்த்தியாக ஆக்கிக்கொண்டு முன்னணியில் நிற்கும் லலிதா (அரங்கேற்றம்) கதாபாத்திரத்துடன் வேறு எந்தக் கதாபாத்திரத்தையும் ஒப்பிட முடியாது. குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் கண்ட கனவுகளை நினைவாக்கித் தன்னையே தரும் ஒரு பெண்ணின் மனநிலையை வடிப்பது என்பது சாதாரணமானதல்ல. அம்பாளாகச் சிவராத்திரியன்று வேடமிட்டு வரும் கதையின் நாயகி கடைசிக் காட்சியில் கிட்டத்தட்ட பைத்தியமாக மாறுவதைப் பார்த்த ரசிகர்கள் ஏதோ தம் வீட்டுப் பெண்ணுக்கு ஏதோ நேர்ந்துவிட்டதைப் போன்ற உணர்வைப் பெற்றனர். அந்தக் காலகட்டத்தில் மிகவும் புரட்சிகரமாகப் பேசப்பட்ட அரங்கேற்றம் அவருடைய படைப்பில் ஒரு மைல்கல்.

கவிதா (அவள் ஒரு தொடர்கதை), லலிதாவிற்குச் சளைத்தவல்ல. ஓடிப்போன அப்பா, விதவைத் தங்கை, ஒன்றுக்கும் பயனில்லா அண்ணன், எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கும் அம்மா என்ற சூழலில் குடும்ப பாரத்தை முற்றிலுமாகச் சுமந்து கடைசி வரை அவ்வாறே தன் நிலையிலிருந்து மாறாமல் இருக்கும் கவிதாவைப் பார்க்கும்போது நாம் நம் அடுத்த வீட்டில் உள்ள, நம் குடும்பத்தில் உள்ள பெண்ணைப் பார்ப்பதுபோல இருக்கும்.

மரணத்தை முன்கூட்டி அறிந்த கதையின் நாயகன் வாழ்வினை நேசிக்கும், வாழத் துடிக்கும் தம் ஆவலை வெளிப்படுத்தும் ‘காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா, அதிலும் பாதி பஞ்சருடா’ (நீர்க்குமிழி) என்ற ஏக்கமான சொற்கள், நல்ல நிலையில் வாழ்ந்த கணவன் அரசியல்வாதியாக மாறிக் கெட்டுப்போன நிலையில் அவனைக் கொல்லும் மனைவியின் மனநிலை (அச்சமில்லை, அச்சமில்லை), சமுதாயச் சூழலில் தவறான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட கதாநாயகனும் நாயகியும் திருந்தி வாழ விரும்பும்போது அதே சமுதாயம் மறுபடியும் அவர்களை அந்தப் பழைய நிலைக்கு இழுத்துச் செல்லும் அவல நிலை (தப்புத் தாளங்கள்), அதிகமான கனவுகளுடன் வேலை தேடி அலைந்து கடைசியில் கிடைத்த வேலையைத் தெரிவு செய்துகொள்ளும் இளைஞனின் மனப்பாங்கு (வறுமையின் நிறம் சிகப்பு) என கே.பி. திரையில் தீட்டிச்சென்ற சித்திரங்கள் தனித்துவம் மிக்கவை.

திரைச் சிற்பி

மன உணர்வுகளைக் கற்பனை மூலமாகவும், கதாபாத்திரங்கள் மூலமாகவும் எடுத்துவைப்பதில் அவருக்கு நிகர் அவரே. பொய், ரெட்டச்சுழி, உத்தம வில்லன் உட்பட சில படங்களில் நடித்தபோதிலும் நடிப்பை விட இயக்கத்தை அதிகம் நேசித்த கே.பி. பச்சைக் களிமண்ணாகத் தன்னிடம் வந்த பலரை புகழ்பெற்ற கலைஞர்களாக மாற்றிக் காட்டிய திரைச் சிற்பி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE