ஆண்களின் நட்பை சிலாகிக்கும் படங்களுக்கு பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் பஞ்சமே கிடையாது. ஆனால், பெண்களின் நட்பை விவரிக்கும் படங்களைத் தேடிப்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஆங்கிரி இந்தியன் காட்டஸ்ஸஸ்’ என்னும் இந்தித் திரைப்படம், பெண்களின் நட்பைத் திரையில் பிரதிபலிக்க முயற்சித்திருக்கிறது. இயக்குநர் பான் நலின் இயக்கியிருக்கும் இந்தப் படம், மேல்தட்டுப் பெண்களுடைய நட்பின் பரிமாணங்களைச் சித்தரிக்கிறது.
ஃபிரிடா (சாரா - ஜேன் டயஸ்) ஒரு ஃபேஷன் போட்டோகிராபர். கோவாவில் இருக்கும் அவள் வீட்டில் நீண்ட நாட்களுக்குத் தோழிகள் சுரஞ்சனா (சந்தியா மிருதுள்), மதுரிடா (அனுஷ்கா மான்சந்தா), ஜோஹன்னா (அம்ரித் மகேரா), பமீலா (பவ்லீன் குஜ்ரால்), ஒன்றுகூடுகிறார்கள். இவர்களுடன் ஃபிரிடாவின் வீட்டில் வேலை பார்க்கும் லட்சுமி (ராஜ தேஷ்பாண்டே), சுரஞ்சனாவின் மகள் மாயாவும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாகத் தன் திருமணச் செய்தியை அறிவிக்கிறார் ஃபிரிடா. ஆனால், யாரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கிறார். இவர்களுடைய கொண்டாட்டத்தில் பாதியில் வந்து இணைகிறார் நர்கீஸ் (தன்னிஷ்டா சாட்டர்ஜி). ஃபிரிடா திருமணத்தில் இருக்கும் ரகசியம், அதற்குப் பிறகான திருப்பங்கள்தான் ‘ஆங்கிரி இந்தியன் காட்டஸ்ஸஸ்’.
கார்ப்ரெட் நிறுவனத்தின் ‘சிஇஓ’வாக இருந்தாலும், ஒற்றைத் தாயின் உணர்வுப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் சுரஞ்சனா; கனவுகளைத் தொலைத்துவிட்ட இல்லத்தரசியாக பமீலா; பாடகியாகவும் நடிகையாகவும் சாதிக்கப் போராடும் மதுவும், ஜோஹன்னாவும்; சமூக செயல்பாட்டாளராக நர்கீஸ்; தம்பியைக் கொன்றவனைப் பழிவாங்கத் துடிக்கும் லட்சுமி; இந்த ஏழு பெண்களும்தான் பான் நலினின் ‘ஆங்கிரி இந்தியன் காட்டஸ்ஸஸ்’.
படம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே இந்தப் பெண்கள் அனைவரும் வெவ்வேறு காரணங்களுக்காக ஆண்களிடம் கோபப்படுகிறார்கள். அந்தக் கோபத்தில் நியாயமும் இருக்கவே செய்கிறது. இந்தப் படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் எல்லாரும் தைரியமானவர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மது அருந்துகிறார்கள், புகைப்பிடிக்கிறார்கள், பாலியல் ஜோக் அடித்துச் சிரிக்கிறார்கள், தங்களைச் சீண்டும் ஆண்களை அடித்துத் துவைக்கிறார்கள், துப்பாக்கி வைத்திருக்கிறார்கள், ஒரு பெண்ணாகத் தாங்கள் சந்திக்கும் சவால்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள், சண்டையிட்டுக்கொள்கிறார்கள், தங்கள் சுயம் புறக்கணிக்கப்படுவதற்காக வருந்துகிறார்கள், அவர்கள் பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், அழுகிறார்கள், நட்பைக் கொண்டாடுகிறார்கள், இறுதியில் காளியாக மாறுகிறார்கள்.
பெண்களின் சுதந்திரத்தைப் பிரதிபலிப்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம் என்றால், அந்த நோக்கத்தை இயக்குநர் நிறைவேற்றியிருக்கிறார். ஆனால், படத்தில் பாலின சமத்துவமின்மை, பாலியல் வன்முறை, தன்பாலின உறவாளர்களின் உரிமைகள், முதலாளித்துவம் - நில உரிமை போன்ற பல பிரச்சினைகளை இணைத்திருக்கிறார் பான் நலின். இது திரைக்கதையின் தாக்கத்தைக் குறைத்துவிடுகிறது.
நடிகர்கள் அனைவரும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், கதைக்களம் வலுவாக இல்லை. இதனால், இடைவேளைக்குப் பிறகு படம் இன்னும் நீர்த்துப்போகிறது. இந்த ஏழு பெண்களும் சாப்பாட்டு மேசையில், பெண்களின் பிரச்சினைகளை விவாதிக்கும் காட்சி, மிகவும் மேலோட்டமாகவும் உணர்ச்சிகளற்றும் இருக்கிறது. பெண்கள் ஒன்றுசேர்ந்தால், அந்த இடம் எப்படியிருக்கும் என்பதை மட்டும் சரியாகத் திரையில் கொண்டுவந்திருக்கிறார் பான் நலின். கிளைமேக்ஸ், இதுவும் பாலிவுட்டின் வழக்கமான இன்னொரு படம் என்ற எண்ணத்தை உருவாக்கிவிடுகிறது.
இந்தப் படத்தில் பெண்ணியத்தைத் தேடத் தேவையில்லை. ஏனென்றால், ஆண்களை அடிப்பது பெண்ணியம் இல்லை. இந்தப் படத்தில் இயக்குநர் பான் நலின், பெண்களுக்கும் நட்பைக் கொண்டாடுவதற்கும், சுதந்திரமாகச் சுற்றித்திரிவதற்கும் உரிமை இருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறார். அதுவும் தேவைதான்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago