சுதந்திரத்துக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபின், 60-களின் இந்தியாவில் கிட்டதட்ட எல்லா மாநிலங்களும் தங்களைக் கட்டியெழுப்பப் படாத பாடுபட்டன. மொழி, இனம், தனித்தக் கலாச்சார அடையாளம் ஆகியவற்றைக் காத்துக்கொள்ளும் அரசியல் வேட்கை ஒருபக்கம், வர்க்க முரண்பாடுகளால் வீங்கி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாமல் சமூக மனநிலையில் கொதித்த வெக்கை மறுபக்கம். இத்தகையச் சமூக, அரசியல் சூழ்நிலை, கலை, இலக்கியத்தில் மட்டுமல்ல; திரையிலும் எதிரொலித்தது.
குறிப்பாக, வங்க வணிக சினிமாவுக்கு மாற்றாகப் பிறந்த ‘கலைப் படங்கள்’ சமூக அவலங்களைக் கண்ணாடிபோல் பிரதிபலித்தன. சொற்பத் திரையரங்கத் திரையிடல், திரைப்பட விழாக்கள், திரைப்படக் கல்லூரிகள் ஆகிய தளங்களைத் தாண்டி, இக்கலைப் படங்கள், உலக சினிமா அரங்கில் இந்தியப் படைப்பாளிகளைத் திரும்பிப் பார்க்க வைத்தன. இன்றைக்கும் பிரம்மிப்புடன் பார்க்கப்படும் சத்யஜித் ராய், ரித்விக் கட்டக் ஆகிய இருவரையும் தாண்டி, இந்தியாவுக்கு வெளியே அதிகமாக அங்கீகரிக்கப்பட்டவர் வங்கப் படைப்பாளி மிருணாள் சென். ‘வங்கக் கலைப்பட இயக்கத்தின் மூன்று பிரம்மாக்கள்’ என்று புகழப்படும் இம்மூவரில், மிருணாள் சென், மிகக் குறைந்த செலவில், மிகச்சிறந்த பரிசோதனை முயற்சிகளைச் செய்தவர்.
அதன்மூலம் இந்தியாவின் பல மாநிலங்களில் சுயாதீனப் படைப்புகள் உருவாகக் காரணமாக இருந்த முன்னோடி. வணிகப் படங்களுக்கும் கலைப் படங்களுக்கும் நடுவே இடைநிலைத் திரைப்படங்கள் (Offbeat Movies) என்கிற வகை, இந்திய சினிமாவில் துளிர்த்து வளர்ந்ததில் மிருணாள் சென்னின் திரை மொழிக்கு பெரும்பங்கு இருக்கிறது. இந்த வகைமையில் நின்று, தமிழ் சினிமாவில் பாலு மகேந்திராவும் பாலசந்தரும் தாக்கம் பெற்றுக்கொண்ட படைப்பாளிகளில் மிருணாள் சென் முக்கியமானவர் என்பதை, அவர்களே பதிவுசெய்திருக்கிறார்கள். விடுதலை உணர்வும் தற்சார்பும் மிகுந்த பெண் கதாபாத்திரங்களை கே.பாலசந்தர் தன்னுடைய படங்களில் கூடுதலாக ஒளிரச்செய்தது மிருணாள் சென் பாணியைப் பின்பற்றித்தான்.
பாலிவுட் பாடம் கற்றது!
அதேபோல் பாலிவுட்டில், 70-களில் வேகமாய் வளர்ந்து நின்ற ஹீரோயிச சினிமாவைப் பின்தள்ளிய இயக்குநர்களில் பாஸு சட்டர்ஜீ, ரிஷிகேஷ் முகர்ஜி, பாஸு பட்டாச்சார்யா, குருதத் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்கள், மென்மையான இடைநிலைப் படங்களைத் தொடர்ந்து தர, மிருணாள் சென் இயக்கிய வங்கமொழிப் படங்கள் மட்டுமல்ல, இந்திப் படங்களும் கற்றுத் தந்தன. அவற்றில், மிருணாள் சென்-ஐ இந்தியாவின் முக்கியமான திரை ஆளுமையாகவும் சர்வதேச அரங்கில் இந்திய மாற்று சினிமாவின் முகமாகவும் முதன் முதலில் அடையாளம் காட்டியது ‘புவன் ஷோம்’ (1969) என்கிற இந்திப் படம்.
மனைவியை இழந்த நடுத்தர வயதுக்காரரான புவன் ஷோம், ஒரு கண்டிப்பான ரயில்வே அதிகாரி. பழமைவாதி. பணிச் சுமையிலிருந்து விடுபட, அடிப்படை வசதிகள் ஏதுமற்ற குஜராத் கிராமம் ஒன்றுக்கு விடுமுறையில் செல்கிறார். கிராமத்தை நோக்கிய அவருடைய பார வண்டிப் பயணம், வழியில் குறுக்கிடும் எருமை மாடு ஒன்றுக்கு பயந்து எடுக்கும் ஓட்டத்தால் தடைபடுகிறது. ஆனால், அவர் பார்த்து, பயந்து ஓடிய எருமை மாட்டினை ‘ஷீத்தல்’ என்றழைத்து அதன் மீதேறி வீட்டுக்குச் செல்கிறாள் வெள்ளந்தியான கிராமத்துப் பெண்ணான கௌரி. அழுத்தங்களால் நிறைந்த புவனின் வாழ்க்கையில் கௌரியின் பிரவசேமும் அவளுடைய பிரியமும் அற்புதமான தருணங்களை அவருக்கு வரமளிக்கின்றன.
புவனின் கிராமத்து நாள்கள் மெல்ல மேல்ல அவரை உருமாற்றுகின்றன. மேட்டிமைத்தனமும் அதிகாரத் திமிரும் கரைந்துபோய், முற்றிலும் புதிய மனிதராக கிராமத்திலிருந்து நகரத்துக்குக் கிளம்புகிறார் புவன். அலுவலகத்துக்கு வந்ததும் பணியழுத்தம் மிகுந்த வாழ்விலிருந்து தன்னால் வெளியேறி ஓடிவிட முடியாது என்பதை உணர்கிறார். கிராமிய தேவதை கௌரியின் முத்துப்பற்கள் ஒளிரும் புன்னகை அவரது நினைவுகளில் வந்து போகிறது (புவன் ஷோம் படத்தைக் காண: https://bit.ly/3hs7wmR). ஆனால், இம்முறை புவன், தனது ஊழியர்களை மதிக்கும் அதிகாரி! இந்த மாற்றத்தைக் புவனுக்குக் கொடுத்தது கிராமத்து மனிதர்களின் அன்பும் அவர்களுடைய எளிய வாழ்க்கையும்தான்.
ஆவணத் தன்மையும் உணர்வுகளும்
சிறந்த இலக்கிய வாசகரான மிருணாள் சென் எழுத்தாளர் பாணபூலின் (பாலைசந்த் முகோபாத்யாய) சிறுகதையைத் தழுவியே ‘புவன் ஷோம்’ படத்துக்கு திரைக்கதை அமைத்திருந்தார். படத்தைப் பார்த்த பாணபூல், “இது முற்றிலும் மிருணாள் சென்னின் படைப்பு.. எனது கதையை ஊறுகாய்போல் தொட்டுக்கொண்டிருக்கிறார்.. ஆனால், ஒரு காவியத்தைப் படைத்திருக்கிறார். இலக்கியத்தைவிட, சினிமா சிறந்த கலையோ என எண்ணவைத்துவிட்டார்” என்று பாராட்டினார். பாணபூல் மட்டுமல்ல, தன்னுடைய பெரும்பாலான படங்களின் கதைகளை வங்க இலக்கியப் பரப்பிலிருந்தே தேர்ந்துகொண்டார் சென்.
மிருணாள் சென்னின் திரைமொழி என்பது, ஆவணத்தன்மை மிகுந்திருக்கும் சித்தரிப்பை முன்னிறுத்துவது. கதாபாத்திரங்களை அதனதன் இயல்பில் அப்படியே பாதுகாத்து, அவற்றின் நியாயமான உணர்ச்சிகளை மிகைப்படுத்தாமல், திரைக்கதையிலும் காட்சியின் சட்டகங்களிலும் புதிய சாத்தியங்களை பரிசோதிப்பதில் தனித்த ஆளுமையுடன் துலங்குகிறது. உதாரணத்துக்கு அவருடைய ‘கல்கத்தா 71’ (1972) என்கிற படத்தை எடுத்துக்கொள்ளலாம் (கல்கத்தா 71 படத்தைக் காண: https://bit.ly/3oaUlb7). காலந்தோறும் மேட்டுக்குடிகளும் அதிகார வர்க்கமும் எளிய, விளிம்புநிலை மக்களின் வறுமையைப் புறந்தள்ளி, அவர்களை ஏறி நசுக்கிக் கடந்துசெல்லும் சமூகத்தைத் தோலுரிக்கிறது.
70-களில் வங்கத்தின் வறுமையை, அதன் வழியான எளியவர்களின் கொந்தளிப்பை, ஒரு ஆந்தாலஜி தன்மையுடன் பல கதைகளின் வழியாக உறையவைக்கும் யதார்த்தத்துடன் சித்தரித்திருக்கிறார் சென். எல்லா கதைகளிலும் வரலாற்றின் சாட்சிபோல் கடந்து வருகிறான் 20 வயது இளைஞன். மனமும் மனப்பான்மையும் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், எளியவர்கள் நசுக்கப்படுவது மட்டும் மாறவே இல்லை. வறுமை தீரவே இல்லை. அந்த இளைஞனும் எல்லா கதைகளிலும் சாகடிக்கப்படுகிறான். இன்னும் மிருணாள் சென்னின் கவனம் பெறாத படங்களை கூட முதல் முறைக் காணும் பார்வையாளர், பெரும் தொந்தரவுக்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது.
சென்னின் படங்கள் ஒருபோதும் நட்சத்திரங்களை சார்த்திருக்கவே இல்லை, மாறாக, கதைகளே அவருடைய நட்சத்திரங்களாக இருந்தன. மிருணாள் சென்னின் முதல் படம் ‘ராத் போர்’ (1955) விடியல் என்கிற பொருளைத் தரும் இப்படத்தை யாரும் சீண்டவில்லை. ஆனால், இந்தப் படத்தில் நாயகனாக நடித்த உத்தம் குமார், பின்னாளில் வங்க வணிக சினிமாவின் சூப்பர் ஸ்டாராக பிரகாசித்தார். வங்க, பாலிவுட் வணிகப் படங்களுடன் மிருணாள் சென்னின் படங்கள் போட்டிப் போடவில்லை. என்றாலும் சரிக்கு சமமாக வெற்றியையும் தோல்வியையும் எதிர்கொண்டிருக்கிறார் சென். ‘உலகம் முழுவதும் உள்ள கலைப்பட ஆர்வலர்கள் ஒரே தளத்தில் இணையும் ஒரு காலம் வரும்’ எனக் கனவு கண்டார். அது இன்று இணையத்தால் நனவாகிவிட்டது. உலகப் படங்களைத் திரையிடும் இணையவழி படவிழாக்கள் சாத்தியமாகிவிட்டன.
வங்கத்தின் இதயமாக இருக்கும் கிராமங்களையும் தலைநகர் கொல்கத் தாவையும் அதிகமும் நேசித்தவர் மிருணாள் சென், வங்கத்தின் கட்டிடங்களையும் தெருக்களையும் மிகுந்த காதலுடன் தனது காட்சிச் சட்டகங்களில் உயிர்பெற வைத்தார். அதில் வங்கத்தின் அசலான கிராமங்களும் கொல்கத்தாவின் அரசியலும் நிர்வாணப்பட்டன. இந்த மகா கலைஞனை நினைவில்கொள்ள, அவருடைய படங்களை, கால வரிசைப்படி (Retrospectives) தமிழகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட வேண்டும்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago