சினிமா எடுத்துப் பார் 39: அந்த மற்றொரு கண் யார்?

By எஸ்.பி.முத்துராமன்

மூத்த இசையமைப்பாளர் சுவாமி தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு வந்த சிக்கல், இதுதான். இசையமைப்பில் வித்தியாசமாக ஒரு படத்தை எடுக்கும் ஆசையோடு இயக்குநர் ஒருவர் அவரை சந்தித் தார். பாடல்களுக்கான சூழலை விளக்கிவிட்டு, படத்தில் ஒரு பாடல் மட்டும் மாடர்ன் எலெக்ட்ரானிக் இசைக் கருவிகளைக் கொண்டு இசையமைத் தால் நன்றாக இருக்கும் என்று சுவாமி யிடம் இயக்குநர் கூறினார். சுவாமி யும் ஒப்புக்கொண்டார். எலெக்ட்ரானிக் இசைக் கருவிகளை வைத்து தான் இசை யமைத்ததே இல்லையே என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது தான், சுவாமிக்கு இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் நினைவு வந்து, அவரிடம் விஷயத்தைக் கூறியிருக்கிறார். தனக்கு கர்னாடக இசையைப் பயிற்றுவித்த குருவே, இப்படி கேட்டதும் சம்மதிக்காமல் இருந்துவிடுவாரா ராஜா? உடனே சம்மதித்து, ‘‘என்ன மாதிரி பாடல் என்பதை மட்டும் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று இளையராஜா கூறினார்.

ஒலிப்பதிவு கூடத்தில் அந்தப் பாடலை கண்டக்ட் செய்கிற வேலையில் இளையராஜா இறங்கிவிட்டார். பாடல் பதிவு நடை பெற்றபோது நான் ராஜாவைப் பார்க்க அங்கு போயிருந்தேன். சுவாமி அவர்கள் என்னை பார்த்ததும் இந்த விஷயங்களை சொன்னார். பெரும்பாலும் ஒரே தொழிலில் இருப்பவர்களுக்குள் போட்டியும், பொறாமையும் இருக்கும். ஆனால், அங்கே கர்னாடக இசையைக் கற்றுக்கொடுத்த குருவுக்கு, எலெக்ட்ரானிக் இசைக் கருவிகளை வைத்து பாடல் பதிவு செய்துகொண்டிருந்தார் சிஷ்யர் இளையராஜா. சிஷ்யரிடம் குரு புதுமைகளை கற்றுக்கொண் டிருக்கிறார். குரு சிஷ்யன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பார்ப்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது. தெரிந்ததைக் கற்றுக்கொடுப்பதற்கும், தெரியாததைக் கற்றுக்கொள்வதற்கும் வயது என்ன தடை?

படப்பிடிப்பின்போது நினைத்துப் பார்க்க முடியாத சில சுவாரஸ்ய விஷயங்கள் நடக்கும். ‘ ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தில் கமல், சுஜாதா இருவரும் அறிமுகமாகும் காட்சி. சுஜாதா தன் வீட்டு வாசலில் பூத்திருக்கும் ஊதாப்பூக்களைப் பறித்துக்கொண்டிருப்பார். அப்போது ஆகாயத்தில் ஒரு விமானம் பறக்கும். விமானம் போகும் திசையில் சுஜாதாவின் கண்கள் செல்லும்போது, மாடியில் தேகப் பயிற்சி செய்துகொண்டிருக்கும் கமலை பார்ப்பார்.

இருவர் கண்களும் சந்திக்கும். புஷ்பா தங்கதுரையின் கற்பனை இதுதான். அந்த நேரத்தில் விமானத்துக்கு எங்கே போவது? இருவரது பார்வைகள் சந்திப்பதை எடுத்துவிட்டு, விமானம் பறப்பதை ஸ்டாக் ஷாட்டில் எடிட்டிங்கில் இணைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து படப்பிடிப்புக்குத் தயாரானோம்.

அந்த நேரத்தில் தூரத்தில் விமானம் வரும் சத்தம் கேட்டது. ஒரே ஆச்சர்யம். அந்த விமானம் நம் திசை நோக்கி வந்தால் மிஸ் பண்ணாமல் எடுத்துவிட வேண்டும் என்று ஒளிப்பதிவாளர் பாபு சாரிடம் சொன்னேன். சுஜாதாவையும் கமலையும் ஷாட்டுக்குத் தயாராக இருங்கள் என்றேன். கமலுக்கு ஒரே குஷி. மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். விமானம் வந்தது. எங்களுக்கு தேவையான மாதிரியே மேலே பறந்தது. கற்பனை செய்து பார்க்க முடியாத விஷயம். சிறப்பாக அதை படமாக்கினோம். ஒட்டுமொத்தப் படக் குழுவினரின் ஈடுபாட்டால்தான் அந்தக் காட்சியை சிறப்பாக எடுக்க முடிந்தது.

‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்துக்காக கவியரசு கண்ணதாசன் அவர்களிடம் ஒரு பாடலை எழுதி வாங்குவதற்காக இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி ஐயா அவர்களோடு போனேன். கவியரசர் கவிதா ஹோட்டலில் அறை எடுத்து பாடல் எழுதிவந்த நேரம் அது. அவரைப் பார்க்க அங்கு பலரும் வந்து காத்திருந்தார்கள். இந்தப் பரபரப்பான சூழலில் எப்படி பாடல் எழுதுவார் என்ற சந்தேகம் இருந்தது. அவரது நிர்வாகி மக்களன்பனிடம் கேட்டேன். ‘நிச்சயம் உங்களுக்கு இன்று பாடல் எழுதுவார்’ என்றார். அவர் சொன்னபடி கவியரசர் வந்தார்.

அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும் அமைதியாக, ‘ஆண்டவன் இல்லா உலகம் இது’ பாடலை எழுதி கொடுத்தார். ஆச்சர்யத்தோடு அந்த நிர்வாகியிடம், ‘‘நீங்க சொன்ன மாதிரி எழுதி கொடுத்துட்டாரே!’’ என்று கேட்டேன். ‘‘அங்கே ஒருத்தர் நிக்கிறார் பாருங்க. அவர் கவியரசருக்குக் கடன் கொடுத்தவர். அவருக்கு இன்னைக்கு பணம் கொடுக்கணும். உங்களுக்குப் பாட்டெழுதுறதில் வந்த பணத்தை கடன்காரருக்குக் கொடுத்துட்டார்’’ என்றார். கவியரசரைப் போல் சம்பாதித்தவர்களும் இல்லை. கடன்பட்டவர்களும் இல்லை.

அவசரத்தோடும், அர்த்தத்தோடும் உருவான ‘ஆண்டவன் இல்லா உலகம் இது’ பாடலை பேக் வாட்டர் சூழலில் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று நானும் ஒளிப்பதிவாளர் பாபுவும் யோசித்தோம். பாண்டிச்சேரியை தேர்வு செய்தோம். படத் தயாரிப்பாளர் சங்கர், ‘உடனே ஷூட்டிங் போகலாம்’ என்று ஆர்வமாக இருந்தார். பாண்டிச்சேரியில் தங்குவதற்கு நல்ல ஹோட்டல் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. யூனிட்டை எல்லாம் ஒரு திருமண மண்டபத்தில் தங்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.

நான், பாபு, தயாரிப்பாளர் மூவரிடமும் ‘‘நீங்கள் ஹோட்டலில் தங்கிக்கொள்ளலாமா?’’ என்று தயாரிப்பு நிர்வாகி கேட்டார். ‘‘பாத்ரூமும், டாய்லெட்டும் சுத்தமாக இருந்தால் பிரச்சினை இல்லை, ஏற்பாடு செய்யுங்கள்’’ என்று கூறி பாண்டிச்சேரியில் ஒரு ஹோட்டலில் தங்கினோம். மாலை வரையில் எந்த பரப்பரப்பும் இல்லாமல் இருந்த அந்த ஹோட்டல், இரவு 9 மணிக்கு மேல் பரபரப்பாகியது. பெண்கள் பலர் வர ஆரம்பித்தார்கள். அங்கே பாலியல் தொழில் நடப்பது அப்போதுதான் புரிந்தது.

ஹோட்டலுக்கு அப்படி வரும் பெண்களின் வாழ்க்கையைப் பற்றி விசாரித்தபோது பரிதாபமாக இருந்தது. குடும்ப வறுமையால், கணவன் விட்டுவிட்டுப் போனதால், கடன் தொல்லையால் தற்கொலை வரைக்கும் சென்ற பெண்கள் இதில் சிக்குகிறார்கள் என்கிற தகவல் மனதை கஷ்டபடுத்தியது.

ஹோட்டலுக்கு வந்த அந்தப் பெண்கள் எவருமே விரும்பி இந்தத் தொழிலை செய்யவில்லை என்பதும், சூழ்நிலையால் மனம் வெதும்பியே இந்தத் தொழிலை செய்கிறார்கள். இவர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல் அவர்களுக்குத் தொழில் கற்றுக்கொடுத்து மறுவாழ்வை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் அவர்களும் நல்லமுறையில் வாழ்வார்கள். வழுக்கி விழ மாட்டார்கள். இந்தக் காட்சிகளை இரவெல்லாம் கண்ட நாங்கள், பொழுது விடிந்ததும் கண்களைத் துடைத்துக்கொண்டு பாண்டிச்சேரியின் பேக் வாட்டரில் படப்பிடிப்பை தொடங்கினோம்.

இயற்கை காட்சிகள் சிறப்பாக இருந்தால் ஒளிப்பதிவாளர் பாபு அதை இன்னும் அழகாக்கிவிடுவார். படத்தில் பாடல் காட்சி மிகவும் அழகாக அமைந்தது. அப்போது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் கேரளப் பின்னணியில் படமாக்கப்பட்ட பாடல் காட்சி மிகவும் அழகு என்று எழுதியிருந்தார்கள். அது பாபுவின் ஒளிப்பதிவுக்குக் கிடைத்த பாராட்டு.

‘ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படம் ரிலீஸுக்குத் தயாரானது. கமர்ஷியல், சென்டிமெண்ட் என்று ஒரு பாதையில் போய்க்கொண்டிருந்த இயக்குநர் முத்துராமனை கமல்ஹாசன் இப்படி இழுத்து விட்டுவிட்டார் என்று சிலர் சொன்னார்கள். அந்தக் கமலை நாங்கள் கமர்ஷியலுக்கு இழுத்து வந்தப் படம் ஏவி.எம்மின் ‘சகல கலா வல்லவன்’.

அந்தப் படத்தில் இளையராஜா இசையமைத்த ‘ஹேப்பி நியூ இயர்… இளமை இதோ இதோ…’ என்கிற பாடல் உலகம் எங்கும் 33 ஆண்டுகளாக புத்தாண்டு அன்று ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதோ நாளை இரவு பிறக்கப்போகும் 2016-ம் ஆண்டும் ஒலிக்கப்போகிறது. அந்த நினைவுகளோடு உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு இரண்டு கண்கள். ஒரு கண் கமல். இன்னொரு கண் யார் என்று நீங்களே ஊகித்திருப்பீர்கள். அந்தக் கண்ணைப் பற்றி அடுத்த வாரம் பேசுகிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்