C/O கோடம்பாக்கம் 04: கார்த்திகா தேவியின் கனவுகள்!

By க.நாகப்பன்

‘‘100 வருஷ தமிழ் சினிமாவுல இயக்குநர்களின் பட்டியல் ரொம்பவே பெருசு. ஆனா, 100 பேரைக் கூடத் தாண்டாத அளவுக்குத்தான் பெண் இயக்குநர்களுக்கான இடம் இங்க இருக்கு. இந்தச் சூழல் இன்னும் நான்கே வருடங்கள்ல மாறிடும். தமிழ் சினிமாவில் அடுத்த அலை எங்களோடதுதான். பெருசா நாங்க வருவோம்’’ என்று உறுதியுடன் சொல்கிறார் கார்த்திகா தேவி.

அறிமுகப் படலத்திலேயே அசர வைக்கும் இவர், கார்த்திக் நரேன், கார்த்திக் ராஜு, சர்ஜுன் உள்ளிட்ட பலரிடம் பணிபுரிந்துள்ளார்.

சினிமாவில் உதவி இயக்குநர்களாக இருக்கும் ஆண்களே சமாளிக்க முடியாமல் திணறும் சூழலில், பெண்கள் உதவி இயக்குநர்கள் ஆவதிலும், நீடிப்பதிலும் உள்ள சிரமங்கள் குறித்து கார்த்திகா தேவி விவரித்தார்.

‘‘கார்த்திக் நரேன் என் கல்லூரி சீனியர். ‘நரகாசுரன்’ல வேலை செய்ய முயற்சி பண்ணேன். கிடைக்கலை. அப்புறம் நாலைஞ்சு சின்ன சின்ன படங்களின் இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டு நின்னேன். சின்ன பொண்ணா இருக்கீங்க, எங்கேயாவது ஒரு படத்துல வேலை செய்துட்டு வாங்கன்னு இயக்குநர்கள் பலர் சொன்னாங்க. நிறைய அலைக்கழிப்புகள்.

முதல்ல வாய்ப்பு தேடும் படலம் போராட்டமா தெரிஞ்சது. அப்புறம் பொறுமை, திறமை, வலிமைதான் நமக்குத் துணைன்னு விடாமுயற்சியுடன் களத்துல முழு மூச்சோட இறங்கினேன். பொண்ணுங்கிறதால எனக்கு சுலபமா வாய்ப்பு கிடைச்சிடும்னு நினைக்கலை. அதே சமயம் எந்தச் சலுகையையும் நான் எதிர்பார்க்கலை. விரும்பியே சவால்களை ஏத்துக்கிட்டேன். மொழிபெயர்ப்பு, ப்ராம்ப்டிங்னு எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். இன்டர்வியூ, டிஸ்கஷன், சீன் சொல்றதுன்னு எல்லா கட்டங்களையும் தாண்டித்தான் உதவி இயக்குநர் ஆனேன். நிறைய சின்ன சின்ன படங்கள், ரிலீஸ் ஆகுமான்னு கூட தெரியாத அளவுக்கு இருந்த படங்கள்லயும் முழு உழைப்பைக் கொட்டினேன். அந்த ஆர்வத்தாலும், காதலாலும்தான் ‘மாஃபியா’,கார்த்திக் ராஜுவின் ‘சூர்ப்பனகை’, ‘ஐரா’சர்ஜுன் இயக்கத்தில் ‘நவரசா’வுல ஒரு படம், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் படம்னு இப்போ இடைவெளி இல்லாம ஓடிக்கிட்டே இருக்கேன்’’எனப் படபடவெனப் பேசினார்.

சினிமா என்றாலே அலறும் குடும்பத்தினரிடம் ஒரு பெண் உதவி இயக்குநராகச் சேர உடனே சம்மதம் கிடைத்துவிடுவதில்லை. அதில் நிறைய சிக்கல்கள் உள்ளன என்பதையும், அதை லாவகமாகக் கையாள வேண்டும் என்பதையும் கார்த்திகா தேவி சொல்ல மறக்கவில்லை.

ஒரு படக் குழுவினருடன் கார்த்திகா தேவி

‘‘நான் திருவண்ணாமலை பொண்ணு. சினிமான்னே எந்த அப்பா, அம்மா உடனே வாழ்த்தி வழியனுப்புவாங்க. ஆனா, குடும்பத்தோட ஆதரவு இல்லாம சினிமாவுல தாக்குப் பிடிக்குறதோ, ஜெயிக்குறதோ சாத்தியமில்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். கொஞ்சம் கொஞ்சமா என் தேவை என்னன்னு வீட்ல புரியவெச்சேன். நான் கார்த்திக் நரேன் படங்கள் பத்திப் பேசினேன். இவ்ளோ சின்ன வயசுல என் சீனியர் படம் எடுத்திருக்கார்னு கொஞ்சம் கொஞ்சமா சினிமா மீதான என் காதலைப் புரியவைச்சேன். ஆனா, அம்மாவுக்குத் துளியும் விருப்பம் இல்லை. ‘உன்னால முடியும், சென்று வா வென்று வா’ன்னு அப்பாதான் ஊக்கம் கொடுத்தார். உதவி இயக்குநராகச் சேர்ந்த பிறகு அம்மா ஒரு வருஷம் என்கிட்ட பேசவே இல்லை. என்னைக்காவது ஒரு நாள் புரிஞ்சுப்பாங்கன்னு காத்துக்கிட்டு இருந்தேன். ‘மாஃபியா’படத்துல உதவி இயக்குநரா டைட்டில் கார்டுல என் பேரைப் பார்த்த பிறகுதான் ஒரு நம்பிக்கை வந்துச்சு. என் பாதை சரிதான்னு பேச ஆரம்பிச்சாங்க’’என்றபோது அவரிடம் குடும்பத்தை வென்ற திருப்தி தெரிந்தது.

பொதுவா பெண்கள் உதவி இயக்குநராக நீடிக்க முடிகிறதா, ஹீரோயினுக்கு உதவ, காஸ்ட்யூம் பார்க்க என்றே பழக்கப்படுத்தப்படுகிறார்களே என்று கேட்டதும், தன் அனுபவங்களைக் கொட்டத் தொடங்கினார் கார்த்திகா.

‘‘உதவி இயக்குநர் ஆகுறதுக்கு ஆண், பெண் என்பதெல்லாம் தகுதி இல்லை. முதல் தகுதி தனிப்பட்ட திறமை. அப்புறம் சம்பளப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினைன்னு கவலைப்பட்டா சாதிக்க முடியாது. இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்னு நினைச்சு எந்தச் சூழல்லயும் ஒதுங்கிப் போகாம, கொஞ்சம் பொறுமையா தாக்குப்பிடிச்சாதான் ஜெயிக்க முடியும்.

ஆண், பெண் பாலினப் பாகுபாடு, ஆண்தான் ஒசத்திங்குற மனநிலை இப்போ சினிமாவுக்குள்ள இல்லை. எவ்வளவோ மாறியாச்சு. அதனாலயே எடிட், காஸ்டியூம், கன்டினியூட்டி, ஹீரோயினுக்கு ப்ராம்ப்டிங் பண்றது, டப்பிங், நிர்வாகத் திறன், ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளைக் கையாள்வது, ஷாட் வைக்கும் முன் இயக்குநர் ஆலோசனையில் பங்கேற்பது, ஷாட் வைக்கும் முன் பெரிய ஆர்டிஸ்டுகளை அணுகி அழைத்து வருவதுன்னு சகல வேலைகளையும் என்னால செய்ய முடியுது. கொடுத்த வேலையை முடிக்குறதுக்காக இரவு, பகல்னு பார்க்காம விடிய விடிய வேலை பார்க்க முடியுது. வேலைன்னு வந்துட்டா இங்கே ஆண், பெண்ணுன்னு எந்த வித்தியாசமும் இல்லை. சரியா செய்றோமாங்கிறதுதான் முக்கியம்.

நான் சொன்ன ஐடியா நல்லா இருக்குன்னு சொல்லி அறிமுக இயக்குநர் ஒருவர் படத்துல சீன் வெச்சார். அந்தப் படம் சீக்கிரமே ரிலீஸாகப் போகுது. நம்ம எண்ணம், பார்வை ஒரு டைரக்டரால் அங்கீகரிக்கப்படுவதில் எனக்குப் பெரிய மகிழ்ச்சி’’ என்று பாசிட்டிவ் பக்கத்தைக் கூறினார்.

'மாஃபியா' படப்பிடிப்பில் கார்த்திக் நரேனுடன் கார்த்திகா தேவி.

முழுமையான இயக்குநராகத் தயாராகியிருக்கும் விதம் குறித்தும் கார்த்திகா தேவி பகிர்ந்துகொண்டார்.

‘‘கார்த்திக் நரேன் சார்கிட்ட முன் தயாரிப்புப் பணிகள், ஷூட்டிங்கை எப்படி சரியா முன்கூட்டியே முடிக்க, திட்டமிட்டு முடிக்க ஸ்டோரி போர்டு எவ்ளோ அவசியம்னு கத்துக்கிட்டேன்.

‘சூர்ப்பனகை’டபுள் ஆக்‌ஷன் படம்ங்கிறதால கார்த்திக் ராஜு சார் தள்ளிப் போகாம மானிட்டர் பக்கமே நிற்கவைச்சு கவனிக்கச் சொல்வார். கஷ்டமான ஷாட்ஸ் எல்லாம் எப்படி எடுக்கணும்னு சொல்லிக் கொடுப்பார். நிறைய என்கரேஜ் பண்ணுவார். அதுதான் இப்போ முழுமையா என்னைத் தயார்படுத்தியிருக்கு.

சர்ஜுன் சார் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார். தெரியலைன்னா கத்துக்கோங்கன்னு சொல்வார். ஆண்-பெண் பாகுபாட்டைப் பார்க்கவே முடியாது. பின் தயாரிப்புப் பணிகள்ல டப்பிங் பொறுப்பை நம்பி முழுசா கொடுத்தார். அதைத்தான் இப்போ பண்றேன்’’ என்றவரின் பேச்சில் ஆர்வம் கொப்பளித்தது.

தான் இரு படங்களை இயக்கத் தயாராகி வருவதையும் கார்த்திகா தேவி கவனப்படுத்தினார்.

‘‘சினிமா கமர்ஷியல் உலகம். ஆண்களையும், நாயகர்களையும் நம்பித்தான் பணம் போடுவாங்கன்னு ஒரு கற்பிதம் இருந்தது. அதை சுதா கொங்கரா சுக்கு நூறா உடைச்சு எறிஞ்சாங்க. மாதவன், சூர்யான்னு முன்னணி நடிகர்களை வெச்சு பயோகிராபி படங்கள் மூலம் ஹிட் கொடுத்தாங்க. இன்னொரு பக்கம் ஹலிதா ஷமீம் வாழ்வியல் முறைகளைப் படங்களா எடுத்து மனசைத் தொடறாங்க. இப்போ தமிழ் சினிமா மார்க்கெட்டும் பெருசா ஆகியிருக்கு. பெண் மையச் சினிமாக்கள் நிறைய வர ஆரம்பிச்சிருக்கு.

எனக்கு பயோகிராபி படங்களைப் பண்றது பிடிக்கும். ஒரு குக்கிராமத்துல இருந்து சாதிச்ச பெண்ணோட சக்சஸ் ஸ்டோரியைத்தான் என் முதல் படமா பண்ண விரும்புறேன். தமிழ்ல நிறைய பெண் மையச் சினிமாக்கள் வருது. ஆனா, என் படம் பெண்ணின் பார்வையில் ஒரு பெண்ணோட வாழ்வியலை, வலியை, முன்னேற்றத்தைப் பதிவு செய்யும் அழுத்தமான படமா இருக்கும். இந்தக் கதை ஐஸ்வர்யா ராஜேஷுக்குப் பொருத்தமா இருக்கும்.

அடுத்து அதர்வாவை வெச்சு ஒரு கேங்ஸ்டர் படத்தை இயக்கத் திட்டம். பயோகிராபி, பெண் மையச் சினிமா எடுக்கத்தான் நாங்க லாயக்குன்னு எங்களைப் பார்த்து யாரும் சொல்லிடக் கூடாது. ஒரே மாதிரி ஜானர்ல இல்லாம ஆக்‌ஷன், ரொமான்ஸ், த்ரில்லர்னு எங்களாலயும் விதவிதமா, கமர்ஷியலா படம் எடுக்க முடியும்னு காட்டணும். அது சீக்கிரமே நடக்கும். பார்க்கத்தானே போறீங்க எங்களோட என்ட்ரியை’’ என்று பன்ச் வைத்து முடிக்கிறார் கார்த்திகா.

நான் உதவி இயக்குநரா இருந்த காலகட்டத்துல விழிப்புணர்வு இல்லை. ஒரு பொண்ணு உதவி இயக்குநரா இருக்க முடியும்னு நம்புற ஆட்களே ரொம்பக் குறைவா இருந்தாங்க. மணிரத்னம், கௌதம் மேனன், செல்வராகவன் வட்டாரங்கள்ல மட்டும் பெண் உதவி இயக்குநர்கள் இருந்தாங்க. இப்போ சூழல் மொத்தமா மாறியிருப்பது நல்ல விஷயம். ஆனாலும், சில இடங்கள்ல ஃபேன்ஸிக்காகவும், காஸ்டியூம், ஹீரோயின் வசதிக்காகவும் சிலர் பெண் உதவி இயக்குநர்களைப் பயன்படுத்துறாங்க. இது வருத்தமா இருக்கு.

இன்னொரு பக்கம், பெண் உதவி இயக்குநர்கள்ல சிலர் பிக்னிக் போற மாதிரி ஷூட்டிங் ஸ்பாட் வர்றது, நடிகர்களோட செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராம்ல பதிவுபண்ணி சோஷியல் ஸ்டேட்டஸை உயர்த்திக்குறதுன்னு போலியா இருக்காங்க. அவங்க ரெண்டு வருஷம் இருந்துட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டு காணாமப் போயிடுறாங்க. உதவி இயக்குநர் வாய்ப்பை யாரும் மிஸ்யூஸ் பண்ணக் கூடாது.

திறமையும், ஆர்வமும் இருக்குறவங்களை மட்டும் உதவி இயக்குநராக, இயக்குநர்கள் சேர்த்துக்கணும். சரியா அவர்களை அடையாளம் கண்டு பட்டை தீட்டணும். பெண் உதவி இயக்குநர்களை ஃபேன்சியா மட்டுமே பார்க்குற இயக்குநர்கள் பெரிய பொறுப்புகளைக் கொடுக்க மாட்டாங்க. ஆண்-பெண் பாகுபாடு பார்ப்பாங்க. நான் ஒரு பெரிய இயக்குநர்கிட்ட வேலை செய்தேன். அவர் என்னை டீ போட மட்டுமே பயன்படுத்தினார். நான் பயங்கரமா சண்டை போட்டேன். சாதிக்கணும்னு வர்ற உதவி இயக்குநர்கள் போராடித்தான் எல்லா வேலைகளையும் கத்துக்கணும். பெண்கள் நினைச்சா பாகுபாடுகளைக் களைய முடியும்.

- இயக்குநர் ஹலிதா ஷமீம்

தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்