"மவுனம் காக்கிறார்கள் நம் பெண்கள்" - தீபிகா படுகோன் நேர்காணல்

By நம்ரதா ஜோஷி

இந்தியா முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்திப் படம் ‘பாஜிராவ் மஸ்தானி’. இந்தப் படத்தில் பேஷ்வா பாஜிராவின் இரண்டாவது மனைவியாகத் தோன்றி அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பாலிவுட்டின் முன்னணிக் கதாநாயகியான தீபிகா படுகோன். ஏற்கெனவே ‘பிக்கு’, ‘தமாஷா’ படங்களுக்காகப் பாராட்டப்பட்ட தீபிகாவுக்கு, இந்தப் படம் வணிகரீதியான வெற்றி, விமர்சன ரீதியான பாராட்டுகள் என இரண்டையும் பெற்றுத்தந்திருக்கிறது. இந்த சமயத்தில் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்தியேகப் பேட்டியிலிருந்து...

மீண்டும் ‘நம்பர். 1’ ஹீரோயின் ஆகியிருக்கிறீர்கள். சாதித்துவிட்டதாக உணர்கிறீர்களா?

ஆமாம். இந்த ஓராண்டில் என்னால் செய்ய முடிந்த வேலைகள், என்னால் பங்கெடுத்துக்கொள்ள முடிந்த படங்கள் இவைதான் அதற்குக் காரணம். எனக்குக் கிடைத்த நல்ல படங்கள், நான் பணியாற்றிய இயக்குநர்கள் எனக் கடந்த சில ஆண்டுகள் என் கண்களைத் திறந்துவிடுவது போல அமைந்திருந்தன.

2016 எப்படி இருக்கும்?

நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், என்னிடம் எந்தப் படமும் இல்லை. இதுவும் உற்சாகமாகத்தான் இருக்கிறது. ஒரு பக்கம் ஒரே ஆண்டில் மூன்று படங்கள் வெளியாகின்றன. இன்னொரு பக்கம், இன்னும் ஒரு படம்கூட முடிவாகவில்லை. நான் நிறைய திரைக்கதைகளைப் படிக்கிறேன். ஆனால், எதுவும் என்னை போதுமான அளவுக்குக் கவரவில்லை. என்னைக் கவராத படங்களைத் தேர்ந்தெடுக்க மாட்டேன். ஏனென்றால், கடைசியில் அந்தப் படங்களை நான் குலைத்துவிடுவதாய் அமைந்துவிடும்.

ஒரு திரைக்கதையில் என்ன எதிர்பார்ப்பீர்கள்?

ஒரு பெரிய கதையில் இணைத்துக்கொள்வதற்கான ஒட்டுமொத்த உணர்வு கிடைக்கிறதா என்று பார்ப்பேன். இது பார்வையாளர்களிடம் எந்த மாதிரியான உணர்வை ஏற்படுத்தும் என்று பார்ப்பேன். ஒரு திரைக்கதையின் விவரிப்பும் படத்தைப் பார்ப்பது போலத்தான். ஒரு பார்வையாளரைப் போல, அந்த விவரிப்புக்கு என் உள்ளுணர்வில் இருந்து கருத்துகளைச் சொல்வேன். அதற்குப் பிறகு, என் கதாபாத்திரத்தை அலசுவேன். அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் என்னால் எதை வெளிக்கொண்டுவர முடியும், அது எவ்வளவு சவாலானது என்று பார்ப்பேன்.

திரையுலகம் நிலையற்றது. ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. அது எப்போதாவது உங்களைப் பாதித்திருக்கிறதா?

இப்போது வரை இல்லை. நான் ஏற்ற இறக்கங்களைப் பற்றி யோசித்ததில்லை. என் பணியில், விரைவில் ஒரு தாழ்வு நிலை வரலாம். அதற்கு என்னைத் தயார்படுத்தி வைத்திருக்கிறேன். இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகள் சிறப்பாக இருந்தன. ஆனால், இந்த வெற்றிகரமான கட்டத்தை நிரந்தரமானதாக நினைக்கவில்லை. நான் இதுவரை தேர்ந்தெடுத்த படங்களைப் பற்றி பெருமைகொள்கிறேன்.

2007-லிருந்து இதுவரை நீங்கள் நடித்த எந்த கதாபாத்திரத்துடனாவது உங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா?

நைனா தல்வார். ‘யே ஜவானி ஹை திவானி’ படத்தில் அவளுடைய பயணமும், என் பயணத்தைப் போன்றதுதான். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நானும் என்னுள் வளர்ச்சியை உணர்ந்திருக்கிறேன்.

‘பிக்கு’வைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நகரங்களில் தனித்துவாழும் பெண்கள் அந்தக் கதாபாத்திரத்தோடு தங்களை இணைத்துக்கொண்டார்களே?

என் பெற்றோருக்கு இன்னும் அந்த அளவுக்கு வயதாகவில்லை. ஆனால், அந்தப் படம் என்னை அவர்களுடைய முதுமைக்குத் தயார்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். நாம் எல்லோரும், நம் பெற்றோருடனான உறவில் வெவ்வேறு காலகட்டத்தில் இருக்கிறோம். ஆனால், ஒரு குழந்தையாக அந்தப் படத்துடன் எல்லோரும் இணைத்துக்கொள்ள முடியும். அந்தப் படம் ஒவ்வொரு பெண்ணையும், ஒவ்வொரு குழந்தையையும் சென்று சேர்ந்திருக்கிறது.

இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் பார்க்கும் கதாபாத்திரங்களில் நடிப்பது கூடுதல் சவால் நிறைந்தது இல்லையா?

நிச்சயமாக. ‘பிக்கு’ நுணுக்கங்களால் இயங்கியது. பெரும்பாலான படங்கள் ஒலி, காட்சி, நாடகம் போன்ற தேவையில்லாத திணிப்புகளுடன்தான் வருகின்றன.

மஸ்தானி பற்றி? அதன் தாக்கம் இன்னும் இருக்கிறதா?

அமைதியான மனவலிமை, மனவுறுதி போன்ற வாழ்க்கையின் அணுகுமுறைகளை அடையாளம் கண்டு கொண்டேன். பெண்களிடம் இருக்கும் வலிமையால் இதை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. நாம் எல்லோரும் தினமும் சவால்களைச் சந்திக்கிறோம். இந்தப் பண்புகள் தேவைப்படும்போது வெளிப்படும். மஸ்தானியின் நம்பிக்கை, போராட்டம் இவற்றோடு என்னை இணைத்துக்கொள்ள முடிந்தது.

பாலிவுட்டில் பெண்களின் கதாபாத்திரங்கள் மாற்றமும் வளர்ச்சியும் அடைந்துவருகின்றன. சொல்லப்போனால், ஆண்களை விடச் சிறப்பான கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன? இது எப்படி?

(நீண்ட அமைதி) இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இது பற்றி யோசித்திருப்பேன். ஆனால், இப்போது என் மனதில் படுவதைச் சொல்கிறேன். பெண்கள் நீண்ட காலமாக மவுனம் காக்கிறார்கள் என்ற பொது உணர்வு இப்போது உருவாகியிருக்கிறது. படங்கள் சமூகத்தின் மீது தாக்கம் ஏற்படுத்துவதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். இப்போது தீவிரமான பிரச்சினைகளை நாம் வலிமையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்கிறோம்.

இவை இரண்டும்தான் காரணம் என்று நினைக்கிறேன். பார்வையாளர்களும் இப்போது வித்தியாசமான படங்களைப் பார்ப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் பிரம்மாண்டமான காட்சிகளை வைத்து மட்டும் ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்தப் படத்தில் இருக்கும் மனதையும் ஆன்மாவையும் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு படம் பெண்ணால் இயங்குகிறதா என்பதைத் தாண்டி இந்த மாதிரி படங்களுடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். ஒரு முழுமையான பொழுதுபோக்கைத் தாண்டி, ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் நூற்றுக்கணக்கான கோடிகளை வசூலிக்கின்றன. ஆனாலும், பாலிவுட்டில் ஆண்களுக்கு வழங்கப்படும் ஊதியம் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. இது உங்களுக்கு எரிச்சலூட்டவில்லையா?

எரிச்சலாகத்தான் இருக்கிறது. ஆனால், இப்போது நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்றும் நினைக்கிறேன். நாம் எடுக்கும் படங்களில் இப்போது பெரிய படியை முன்னெடுத்து வைத்திருக்கிறோம். பெண்களுக்கு வலிமையான பகுதிகள் எழுதப்படுவருகின்றன. திரைப்படத் துறை யின் எல்லா அம்சங்களிலும் சமத்துவம் வருவதற்கு முன்னதான காலகட்டம் இது. இது பாலிவுட்டின் பிரச்சினை மட்டுமல்ல. உலகளாவிய பிரச்சினை. ஹாலிவுட் நடிகை பாட்ரிசியா ஆர்க்கெட் இந்த ஊதிய ஏற்றத்தாழ்வைப் பற்றித் தன் ஆஸ்கார் உரையில் பேசியிருந்தார்.

படங்கள், கதாபாத்திரங்களுக்கான விருப்பப் பட்டியல் ஏதாவது?

அப்படி எதுவும் இல்லை. ஒவ்வொரு படத்தையும் போராடி, சிறப்பாக மாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம். ஆனால், ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி
©தி இந்து ஆங்கிலம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

மேலும்