திரை வெளிச்சம்: பேரன்பின் பிரதிபலிப்பு!

By மகராசன் மோகன்

‘ஆபத்துன்னா ஒடி வந்து உதவுறது சினிமாவுல மட்டும்தாம்பா’ என்ற கிண்டலைப் பொய்யாக்கி இருக்கிறது இந்த மாமழை. சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஓடி வருவோம் என்று செயலில் காட்டி நெகிழ்ச்சியில் ஆழ்த்திவருகிறார்கள் நம் திரையுலகினர்.

கனமழையில் நகரே சிக்குண்டு கிடக்கையில் அடுத்த தெருவில் இருக்கும் வீட்டிற்குச் செல்ல ஆட்டோவுக்கு ரூ.300, குடிநீர் கேன் ரூ.100 என்று முறையற்று சிலரின் அடாவடித்தனம் தொடரவே செய்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் தங்கள் கார்களையும், நண்பர்களின் வாகனங்களையும் கொண்டு வந்து கொஞ்சமும் விளம்பரம் இல்லாமல் மழையில் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து நிஜ ஹீரோக்களாக வெளிப்பட்டார்கள் பல நடிகர்கள்.

தன் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, ‘ நான் நடிகன். வசதி படைத்தவன். எனக்கே இந்த நிலை என்றால், ஏழைகளின் நிலை என்னவாக இருக்கும்?’ என்று ட்விட்டரில் பதிவிட்டு நண்பன் ஆர்.ஜே.பாலாஜியை சேர்த்துக்கொண்டு களத்தில் இறங்கினார் நடிகர் சித்தார்த்.

“நடப்பதை வீட்டில் இருந்துகொண்டு பார்த்துக்கொண்டிருக்க முடியலை. அதனாலதான் தெருவில் இறங்கினோம். இரண்டு பேராக இருந்தோம். நான்கு நாட்களில் 500 பேராக மாறினோம். உடனடியாக என்ன தேவையோ அதைத்தான் செய்தோம். இனி, குழந்தைகள் பள்ளிக்குப் போக வேண்டும். மக்களை இயல்பு நிலைக்கு மாறச் செய்ய வேண்டும். இன்னும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அதற்கு நாம் எல்லோரும் சேர வேண்டும்” என்று 5 நாட்கள் நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு சித்தார்த்தும், ஆர்.ஜே. பாலாஜியும் சேர்ந்து சொன்னபோது ‘நடிகர்களை ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரிகிறதா?’ என்று முகநூலில் ரசிகர்கள் வாழ்த்து மழை தூவத் தொடங்கினார்கள்.

இசையமைப்பாளர் இளையராஜா, ஒரு படகு முழுக்கப் போர்வையோடும், உணவுப் பொட்டலங்களோடும் பள்ளிக்கூட விடுதிகளை நோக்கியும், மத்திய சென்னை, வட சென்னைப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடியும் பயணம் செய்தார். விஷால், கார்த்தி இருவரும் நடிகர் சங்க சகாக்களை அழைத்துக் கொண்டு ‘ரெஸ்க்யூ சென்னை’ என்ற பெயரில் குழுவை உருவாக்கித் தெருக்களில் இறங்கினார்கள்.

வாத்துகளை வாங்கி, தான் நடைப்பயிற்சி செய்யும் சாலிக்கிராமம் பூங்காவில் விட்டு அனுதினமும் அதற்கு உணவளித்துவரும் நடிகர் மயில்சாமி இப்படி ஒரு பேய் மழைக் காலத்தில் ஜன்னல்களைப் பார்த்துக்கொண்டு இருந்துவிடுவாரா என்ன? கலங்கிய கண்களோடு களத்தில் நின்று உதவிகள் தொடர்ந்தார். கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் விதார்த், பார்த்திபன், சேரன், மோகன், சூர்யா, தனுஷ், ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, ராகவா லாரன்ஸ், சசிகுமார், இமான் அண்ணாச்சி, பிரசன்னா, நடிகை குஷ்பு, ஆர்யா, கோவை சரளா, வரலட்சுமி, ஹன்சிகா, ஷாலினி அஜித், இயக்குநர் இரா. சரவணன் இப்படி அடுக்கடுக்காகத் திரைப் பட்டாளங்கள் சென்னை மழை வெள்ளத்தில் ராணுவம்போல் இறங்கி மனதைக் குளிரச் செய்தனர்.

‘அப்பாவுடைய ஆசீர்வாதத்தாலும், கடவுளின் ஆசீர்வாதத்தாலும் வீட்டைச் சூழ்ந்த வெள்ள நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிகிறது!’ என்றார் நடிகர் பிரபு. நடிகர் ராஜ்கிரண், நடிகை லட்சுமி உள்ளிட்ட திரையுலகினர் இந்த வெள்ளத்தில் சிக்கி சினிமாவில் மீட்கப்படுவதைப் போலத்தான் மீட்கப்பட்டனர்.

மின்சாரம் இல்லாமல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டபோது, பாதிப்புக்குள்ளான இடங்களை அடையாளம் காட்டியது சமூக வலைதளம்தான். ‘ஜாபர்கான் பேடடையை அடுத்த சூளைப்பள்ளம் பகுதிக்கு உடனடியாக 500 உணவுப் பொட்டலங்கள் வேண்டும்’, ‘அனகாபுத்தூர், பொழிச்சலூர் பக்கம் யாருமே உதவிக்குப் போகலையாம்... உடனே அங்கு ஒரு குழுவை அனுப்புங்க...’ இப்படி உடனடி நிவாரணத் தேவைகள் எங்கெங்கு, என்னென்ன வேண்டுமோ அதைச் சரியாகப் பட்டியலிட்டுத் துரிதப்படுத்தினார்கள் நம் திரைப் பட்டாளங்கள். அவர்களை ஒரு குடையின் கீழ் நின்று குழுக்களாக வேலை செய்ய வைத்தது முகநூல், டிவிட்டர் ஆகியவைதாம்.

வெளி மாநில நடிகர்களிடமிருந்தும் உதவிகள் குவிந்தன. சென்னையில் இருக்கும் தன் வீடுகளையும், நண்பர்கள் வீட்டு முகவரியையும் கூறி, ‘அங்கே சென்று தங்கிக்கொள்ளுங்கள்’ என்று மனமார ஆதரவுக் கரம் நீட்டினார், நடிகர் மம்முட்டி. ‘மன மெட்ராஸ் கோசம்’ என்ற பெயரில் நிவாரணப் பொருட்களைச் சேகரித்துவரும் தெலுங்குத் திரையுலகின் உதவி மெய்சிலிர்க்க வைக்கிறது. இங்கே சித்தார்த் இறங்கி வேலை பார்ப்பதைப்போல அங்கே ராணா, நானி உள்ளிட்ட தெலுங்குத் திரையுலகினருடன் சேர்ந்து நிதி திரட்டுவது, அத்தியாவசிய பொருட்களை சேகரிப்பது போன்ற வேலைகளை நடிகை சமந்தா கையில் எடுத்துக்கொண்டுள்ளார். ‘சென்னையில் இருக்கிற அப்பாகிட்ட பேசவே ஒரு வாரம் ஆச்சு. எப்படி எங்க மக்களை பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியும்?’ என்று படப்பிடிப்புக்கு விடுமுறை விட்டுக் களத்தில் இருக்கிறார் சமந்தா. தெலுங்குத் திரையுலகிலிருந்து முதலமைச்சர் நிவாரணநிதிக்கு நீண்ட முதல்கரம் அழகான நடிகர் என்று புகழப்படும் அல்லு அர்ஜுனுடையது.

பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக் கான் மழை பாதிப்புக்காக ஒரு கோடி நிவாரண நிதி கொடுத்திருக்கிறார். ‘இன்னைக்கு பால் வாங்கக்கூட முடியலை. பாலாபிஷேகம், வானுயர கட் அவுட் என்று நம்ம தலைவனை கொண்டாடித் தீர்த்தோம்’என்று எட்டிப் பார்க்காத முன்னணி நடிகர்கள் சிலர் மீது ரசிகர்களுக்கு ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது, இந்த கன மழை.

முதல்வர் நிவாரண நிதிக்குக் காசோலை ஒன்றைக் கொடுத்துவிட்டுப் புகைப்படம் எடுத்துக்கொண்டால் தானும் பங்கெடுத்திருக்கிறோம் என்பது பதிவாகிவிடும் என்று நினைக்காமல் களத்தில் இறங்கி வேலை பார்த்த நடிகர்களை மக்களுக்கு அடையாளம் காட்டிக்கொடுத்திருக்கிறது, இந்த மழை.

‘மனைவி, குழந்தைகளோடு 15 நிமிடங்கள் செலவிட்டதில்லை’, ‘அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் எதிர் வீட்டுக்காரர் என்ன பிசினஸ் செய்கிறார் என்பதுகூட தெரியாது’ என்று ஓடிக்கொண்டே இருந்த சென்னை வாசிகளை இந்த மழை ஒன்று சேர்த்து உலுக்கி உறைய வைத்திருக்கிறது. இந்தச் சூழலில், பெரிய அளவில் முதலீடு போட்டு, ஒவ்வொரு மணி நேரமும் வேலை வேலை என்று பம்பரமாய் சுழன்று கொண்டிருப்பவர்தான் திரை நட்சத்திரங்களும். அவர்களில் ஒரு சிலர் இந்த மழைப் பொழுதுகளை ஓய்வுக்கான நேரமாக எடுத்துக்கொள்ளாமல் பாதிக்கப்பட்டவர்களோடு நின்றது, தொடர்ந்து நிற்பது ரசிகனுக்கும், நடிகனுக்கும் இடையே உள்ள பேரன்பின் பிரதிபலிப்பே.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்