‘‘‘வடசென்னை' படத்தில் ரொம்பவும் தொந்தரவு பண்ற காட்சின்னா, உணவு விடுதியில் ராஜனைக் கொலை செய்ற சம்பவத்தைச் சொல்லலாம். சர்வரா நடிக்கிற பையனுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்லிக் கொடுத்தேன். ஆனா, அந்தப் பையனுக்குச் சரியா வரலை. இதை கவனிச்சுக்கிட்டே இருந்த வெற்றி மாறன்,‘நீயே நடி’ன்னு சொல்லிட்டார். நான் மறுபேச்சு பேசாம பக்கெட், துடைப்பத்தோடு சர்வர் ஆகிட்டேன். ஏன்னா, எனக்கு அது புதுசில்லை” - பீடிகையுடன் பேசத் தொடங்குகிறார் இன்பவாணன். வெற்றிமாறனிடம் ‘வடசென்னை’, 'அசுரன்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருப்பவர்.
நீலகிரி மாவட்டத்தின் குன்னூரைச் சேர்ந்தவர். முதல் தலைமுறைப் பட்டதாரிக்கே உரிய அத்தனை கசப்புகளை, பிரச்சினைகளைத் தாண்டி முன்னுக்கு வரத் துடிக்கும் நம்பிக்கை விதை. முதுநிலைத் தமிழ் இலக்கியம் படித்த இன்பா, சென்னைப் பல்கலைக்கழகத்தில் திரைப்பட மொழியும் படைப்பாளுமைகளும் என்ற தலைப்பில் எம்.பில். முடித்துள்ளார். இவர், வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்த கதையே அலாதியானது.
”சினிமாதான் என் கனவுங்கிறதால எந்த முழுநேர வேலையும் பண்ணலை. ரெயின்போ பண்பலை வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பகுதிநேர வேலைக்குச் சேர்ந்தேன். நான் முதல்முறை வாய்ப்புக்கேட்டுச் சென்றபோது, வெற்றிமாறன் சார் ’ஆடுகளம்’ படத்தோட டிஸ்கஷன்ல இருந்தார். அப்போ நிறைய முயற்சிகள் பண்ணியும் உதவி இயக்குநர் ஆக முடியலை. ஒரு மாதம் கழித்து எனது வானொலிக்குப் பேட்டி கேட்டேன். சின்ன தயக்கத்துக்குப் பிறகே வந்தார்.
‘பொல்லாதவன்’ல யாரும் கவனிக்காத நிறைய விஷயங்களைக் கேட்டு பேட்டி எடுத்தேன். ‘பெர்சனலா எனக்குப் பிடிச்ச பேட்டி. திருப்தியா இருந்தது’ன்னு பாராட்டினார். அப்புறமும் வாய்ப்பு கிடைக்கலை. அவர் ‘விசாரணை’ படம் முடிச்சதும் மறுபடியும் பேட்டி எடுத்தேன். அப்போ, சிறுகதைகள், பாடல், திரைக்கதை, வாசிப்புன்னு என்னோட எல்லா ஆர்வங்களையும் அவர்கிட்ட கொட்டிட்டேன். இந்த முறை வாய்ப்பு கொடுத்தா சினிமாவுல நிரூபிக்க முடியும்னு சொன்னேன். சின்னதா சிரிச்சுக்கிட்டே சரின்னு சேர்த்துக்கிட்டார். அப்படித்தான் ‘வடசென்னை’ படத்துல வெற்றி சார் டீம்ல நான் ஐக்கியமானேன்” என்று பேட்டி எடுத்தே உதவி இயக்குநர் ஆன ரகசியம் பகிர்ந்தார்.
முதல் நாளே ஜெயில் சீக்வன்ஸ். தனுஷ் சாருக்குப் பதிலா என்னைக் கைதியா நிற்க வெச்சு சஜஷன் ஷாட் எடுத்தாங்க. தனுஷ் சாருக்கு டூப்பா அவ்ளோ பொருத்தமா மாறினேன்’’ என்ற இன்பாவின் வார்த்தைகளில் உற்சாகம் தெறிக்கிறது. எந்த ஒரு இயக்குநரும் 100 விழுக்காடு அர்ப்பணிப்பைத் தன் உதவி இயக்குநர்களிடம் எதிர்பார்ப்பார்கள். வெற்றிமாறன் 200% எதிர்பார்ப்பார். கச்சிதம், துல்லியம், நம்பகம் இதெல்லாம் அவர்கிட்ட கத்துக்கிட்ட முக்கியமான விஷயங்கள்” என்கிறார் இன்பா.
“அப்படித்தான் ஒரு நர்ஸ் கேரக்டருக்கு ஸ்டெல்லான்னு பேர் வெச்சோம். உடனே அதை மறுத்தார். ‘நர்ஸ்னா அவங்க மலையாளம், கிறிஸ்டியன்னு பொதுப்புத்தியில பதிஞ்சுபோய் கிடக்கு. நாமும் அதேமாதிரி டைப் கேஸ்டிங் பண்ணக் கூடாது’ன்னு சொன்னார்.
அந்த ராஜன் கொலைச் சம்பவம்தான் ‘வடசென்னை’யின் மிகப்பெரிய தொந்தரவுப் படலம். அதுல திடீர்னு சர்வர் பாய் ஆனது, அதுவும் அந்தத் துடைப்பத்தோட சவுண்ட் வேற ஒரு மூடுக்குக் கொண்டு போன அனுபவம் குறித்து இன்பா பகிர்ந்தது மிரள வைத்தது.
‘‘ அந்தக் கொலைக் காட்சியை 6 நாள் இரவு முழுக்க ஷூட் பண்ணோம். சீன் பேப்பரில் ‘க்ளீனிங் த ஃப்ளோர்’ என்கிற ஒரு வரிதான் இருந்தது. ஆனா, அது சீனா மாறுனது செம்ம அனுபவம். பக்கெட், துடைப்பத்தோடு என்னை சர்வரா நடிக்கும்படி சொல்லிட்டார். கொலையாகுற ராஜனா அமீர் சார், சமுத்திரக்கனி சார், பவன் சார், கிஷோர் சார், தீனா சார் நடிச்சுக்கிட்டு இருக்காங்க. துளி சத்தம் இல்லை. டைரக்டர் என்னை மைக்ல மெதுவா கூப்பிடுறார்.
நான் தரையில துடைப்பத்தை எடுத்துக் கூட்டிக்கிட்டு இருக்கேன். அவரோட மைக் வாய்ஸ் எனக்குக் கேட்கலை. அப்புறம் கூப்பிட்டதும் மானிட்டர் பக்கத்துல போய் என்ன சார்னு கேட்குறேன். எப்படிக் கூட்டணும், ‘துடைப்பத்துல கரக் கரக்னு சத்தம் வரணும்’னு சொல்றார். அப்படியே செஞ்சேன். டப்பிங்ல பார்த்து மிரண்டுட்டோம். இசை, ஒலி எதுவும் இல்லாம அந்தக் கரக் கரக் சத்தமே பின்னாடி நடக்கப்போற கொடூர சம்பவத்துக்குத் தேவையான மூடைக் கொடுத்தது. ஸ்பாட்லயே சவுண்ட் எஃபெக்ட்ஸை வரவழைச்ச அவரோட கிரியேட்டிவிட்டி மிரள வைச்சது.
பொதுவா எல்லா உதவி இயக்குநர்களுக்கும் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் கொஞ்சம் இடைவெளி கிடைக்கும். அப்போ மூளைச் சோர்வு, பொருளாதாரப் பிரச்சினைன்னு நிறைய சிக்கல்கள் வரும். அப்போ மது அருந்திட்டு சலம்புறது, வாழ்க்கையை இழந்த மாதிரி புலம்புறதுன்னு இல்லாம உடலையும் மனசையும் ஆரோக்கியமா வெச்சுக்கணும். அதான் நம்ம முதலீடு, பலம் எல்லாமே. அந்த நேரத்துல நம்ம திரைக்கதையை எழுதுவதில் கவனம் செலுத்தலாம். அல்லது நாவல்களை வாசிக்கலாம். அப்படிதான் நான் இயங்குறேன்.” என தன்னுடைய நாட்களைத் திறந்துகாட்டும் இன்பா, சினிமாவில் தனது முதல் இலக்கு பற்றியும் கூற மறக்கவில்லை.
“ஊட்டியை ஒரு லொக்கேஷனா நிறைய படங்கள்ல வருது. அழகான மலை, சுற்றுலாத்தலம் என்று சுருங்கிக் கிடக்கு. ஆனா, அந்த மக்களோட வாழ்க்கைமுறை, கலாசாரம், மொழி பத்தி எதுவும் பதிவாகலை. ஆங்கிலேயர்கள் விட்டுட்டுப்போன கலாசாரத் தடயங்கள், இந்திய மக்களின் அனைத்து வாழ்க்கை முறைகள்னு அங்கே சொல்லப்படாத, முரணான நிறைய விஷயங்கள் இருக்கு. அதை நான் முதல் படமா பண்ணனும்னு ஆசைப்படறேன். அது நிச்சயமா சோக காவியமா இருக்காது. எல்லா விதத்துலயும் எல்லா ரசிகர்களுக்கும் ஏத்த படமா இருக்கும்’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் இன்பா.
சினிமாவில் இயக்குநர் ஆக ஐந்து ஆண்டுகள் போதும்னு நினைச்சுதான் சென்னை வந்தேன். ஆனா, உதவி இயக்குநர் ஆகவே ஐந்து ஆண்டுகள் ஆயிடுச்சு. சிறு பத்திரிகைகள்ல எழுதிய கதைகள் மூலமா தங்கர் பச்சான், லோகிததாஸ், பாலுமகேந்திரான்னு முப்பெரும் இயக்குநர்களுடன் பணியாற்ற முடிஞ்சது. இப்போ ஃபேஸ்புக் மூலம் வாய்ப்பு கேட்குறது, குறும்படம் ரிலீஸ் பண்ணுங்கன்னும், என்னைப் பயன்படுத்திக்கோங்க சார்னு கேட்டும் உதவி இயக்குநர் ஆவது சுலபமாயிடுச்சு.
உதவி இயக்குநர்கள் தீவிர வாசிப்புல கவனம் செலுத்தணும். வாசிப்புதான் கற்பனை செய்யும் விசால மனப்பான்மையை வளர்க்கும். அரசியல் பார்வை, வரலாற்றுப் புரிதல், சமூகப் பொறுப்புன்னு இலக்கை நோக்கிப் பயணிக்க வைக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியால் எப்படிப் படம் பண்றதுன்னு தெரிஞ்சுக்கலாம். எதை எடுக்கணும்னு உதவி இயக்குநர்கள் தெரிஞ்சுக்கணும். ஒவ்வொரு மனிதரிடமும் ஒரு கதை இருக்கு. செல்போனைத் தூர எறிஞ்சிட்டு அவர்களைக் கவனிக்கணும். நிலப்பரப்பு, கலாசாரம் சார்ந்த, மண்ணின் பதிவுகளை உதவி இயக்குநர்கள் தவறவிடக் கூடாது.
- இயக்குநர் மீரா கதிரவன்
தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago