‘இன்ஷா அல்லாஹ்’ என்கிற இரு சொற்கள் இஸ்லாமியர்களின் வாழ்க்கையுடன் பின்னணிப் பிணைந்தவை. ‘இறைவன் விரும்பினால்’ என்று பொருள்படும் இச்சொற்களையே தலைப்பாகச் சூட்டி, ‘இஸ்லாமிய வாழ்க்கைமுறையை' பேசும் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன். இவரை, ‘உலக சினிமா’ பாஸ்கரன் என்று சொன்னால் வாசகர்களும் திரை ஆர்வலர்களும் நன்கு அறிவார்கள்.
உலகம் முழுவதும் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட ‘இன்ஷா அல்லாஹ்’, இதுவரை 7 விருதுகளைப் பெற்றிருப்பதுடன், 25 படவிழாக்களில் ‘அஃபீஷியல் செலக்ஷன்’ என்கிற கௌரவத்துடன் திரையிடப்பட்டுள்ளது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு மே 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
ஒரு இஸ்லாமியத் திரைப்படத்துக்கான தேவை எதிலிருந்து உருவானது?
தமிழ் இஸ்லாமியர்களைப் பற்றி, ஒரு முழுமையான திரைப்படம் தமிழ் சினிமாவில் வரவில்லை. இது, தமிழ் நாட்டில் வாழும் 42 லட்சம் இஸ்லாமிய மக்களின் மனக்குறை மட்டுமல்ல, சினிமாவை நேசிக்கும் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பும்தான். அதை நிறைவு செய்யவும் இஸ்லாமியர் வாழ்க்கைமுறையை அனைத்து சமூக மக்களும் அறிந்துகொள்ளும் வகையிலும் இந்தத் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். ‘சிறந்த இஸ்லாமியத் திரைப்படம்’ என்கிற விருதை இந்தோனேசியா, கலிபோர்னியா சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ‘இன்ஷா அல்லாஹ்’ வென்றுள்ளது எங்கள் படைப்பின் நோக்கத்துக்கான முதல் அங்கீகாரமாக அமைந்தது.
படத்தின் கதையைப் பற்றியும் படமாக்கிய விதம் பற்றியும் கூறுங்கள்..
‘மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை இறைவன் விருப்பத்தின் பேரில் கட்டமைக்கப்படுகிறது’ என இஸ்லாம் நெறிமுறைகள் வலியுறுத்துகின்றன. அதையே படத்தின் கதைக் கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கலாம் என்று நவீனத் தமிழ் இலக்கியத்தை வாசித்தேன். மறைந்த இலக்கிய மேதை தோப்பில் முகம்மது மீரான் எழுதிய ‘அன்பிற்கு முதுமையில்லை’ என்கிற சிறுகதையையும் எழுத்தாளர் பிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதிய ‘ரணம்’ என்கிற சிறுகதையும் அற்புதமாக இணையும் புள்ளியைக் கண்டேன். எனவே, அந்த இரு சிறுகதைகளையுமே வைத்து திரைக்கதையை எழுதி முடித்தேன். திரைக்கதையை எழுதும் முன்பு, கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்து, இஸ்லாமியர்களிடம் பழகி, அவர்களுடைய வாழ்க்கை முறைகளைத் தெரிந்துகொண்டேன்.
கோவைப் புறநகர் பகுதியைச் சேர்ந்த பிள்ளையார்புரத்துக்கு இரு சமுதாய மக்களின் சகோதரத்துவத்துக்குப் பெயர்பெற்றது. அங்கேயும், பழனிக்கு அருகிலுள்ள கீரனூர், கேரளத்தின் கொடுங்கலூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம். இந்தியாவில் முதன் முதலாகக் கட்டப்பட்ட சேரமான் பள்ளிவாசலில் படமாக்கப்பட்டிருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் என்கிற பெருமையும் ‘இன்ஷா அல்லாஹ்’வுக்கு உண்டு.
யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்?
‘பக்ரீத்’, ‘கிருமி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மோக்லி கே. மோகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இவர் நீண்ட காலமாக நடிப்புப் பயிற்சி அளித்துவரும் கலைஞர். படத்தில், அமரர் ஊர்தி ஓட்டுநராக வருகிறார். நாயகியாக மேக்னா அறிமுகமாகிறார். இந்தோனேஷியாவின் ‘உபுட்’ சர்வதேசத் திரைப்பட விழாவில், மேக்னா தனது கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியிருந்த விதத்துக்காக ‘சிறந்த நடிகை’ விருதை வென்றுள்ளார்.
அடுத்து, இயக்குநர் பாலா உள்பட, தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகளுடைய படங்களில் தவறாமல் இடம்பெற்றுவரும் கவிஞர் விக்கிரமாதித்யன், தனது துணைவியார் பகவதி அம்மாளுடன் எளிய இஸ்லாமியத் தம்பதியாக நடித்துள்ளனர். படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருவரும் கீரனூருக்கு வந்தபோது, நாங்கள் வாடகைக்கு எடுத்திருந்த சிறிய வீட்டில், பாய், தலையணை போதும் எனக் கூறி, தரையில் படுத்துறங்கி, வீட்டில் உண்ணும் எளிய உணவையே உண்டு, தோப்பில் முகம்மது மீரான் உருவாக்கிய கதை மாந்தர்களாகவே வாழ்ந்து காட்டினார்கள்.
உங்களுடைய தயாரிப்பாளர்கள் குறித்து?
2017-வரை கோவையில் வசித்தேன். அங்கே ‘கோவை திரைப்பட இயக்கம்’ தொடங்கி, குழந்தைகள், பெரியவர்களுக்கான உலக சினிமாக்களை வாரம் இருமுறை திரையிட்டு வந்தேன். அதேபோல், குழந்தைகள் திரைப்பட விழா, ஈரானியத் திரைபடவிழாக்களையும் நடத்தினேன். பின்னர் 2018-ல் சென்னைக்குக் குடிபெயர்ந்து, ‘முறைசாரா திரைப்பட இயக்கம்’ தொடங்கினேன். அதில் செழியன், பாலாஜி சக்திவேல் போன்ற சுயதீன திரைப் படைப்பாளிகளை அழைத்து, உதவி இயக்குநர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தேன்.
கோவையில் திரையிடல்கள், திரைப்பட விழாக்கள் நின்றுபோனதை அறிந்து, அவற்றுக்கு பார்வையாளராக தொடர்ந்து வந்துகொண்டிருந்த சாகுல் ஹமீது என்னைத் தேடி சென்னைக்கே வந்துவிட்டார். மோட்டார் தொழிலில் இருக்கும் உலக சினிமா ஆர்வலரான அவர்தான் ‘நேசம் என்டர்டெய்ன்மென்ட்’ என்கிற நிறுவனத்தை தொடங்கி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். அவருடன் கோவை இப்ராஹீம் இணைத் தயாரிப்பாளராகக் கரம் கோத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago