கோலிவுட் ஜங்ஷன்: நம்பி வரலாம்!

By செய்திப்பிரிவு

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய், ரெஜினா, ஸ்டெபி பட்டேல் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படம் பற்றி இயக்குநரிடம் பேசியபோது, “நான் இயக்கிய ‘குற்றம் 23' படத்துக்குப் பிறகு அருண் விஜயுடன் இணைந்து மீண்டும் பணிபுரிந்துள்ளேன். அது ஒரு மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் என்றால், இது ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர். அதேநேரம், எனது முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும். ஸ்பை த்ரில்லர் என்றவுடன் தேசப் பற்று, தீவிரவாதம் என்று எதிர்பார்ப்பார்கள். தேசப் பற்றை முற்றிலும் வேறொரு கோணத்தில் சொல்லியிருக்கிறேன். இன்றைய கரோனா காலகட்டத்தில் மக்கள் திரையரங்குகளுக்கு நம்பி வந்து பார்க்க ஏற்ற படமாக ‘பார்டர்’ இருக்கும்" என்று தெரிவிக்கிறார்.

வெற்றிமாறனின் புதிய நகர்வு!

திரைப்படக் கல்வி என்பது பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்குப் பெருங்கனவு. பணமிருந்தால் மட்டுமே பிரபலமான தனியார் திரைப்படப் பள்ளிகளில் பயில முடியும் என்கிற நிலை. இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் பாதையிலிருந்து விலகி முற்றிலும் புதிய வழியைத் தேர்ந்துகொண்டிருக்கிறார். திரை ஊடகத்தின் வழியே சமூகச் சமத்துவம் என்கிற கோட்பாட்டை முன்னெடுக்கும் விதமாகத் ‘திரைப் பண்பாடு ஆய்வகம்’ (IIFC -International Institute of Film and Culture) என்கிற பயிலகம் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி அதற்குத் தலைமையேற்றிருக்கிறார். ஊடகக் கல்வியில் அனுபவம் கொண்ட முனைவர் ராஜநாயகம், இயக்குநர் வெற்றி துரைசாமி ஆகியோரும் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதுமிருந்து மாவட்டத்துக்கு ஒரு மாணவர் வீதம், (வயது வரம்பு 21 முதல் 25 வரை) ஒவ்வொரு ஆண்டும் 35 முதல் 40 மாணவர்களை நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து முற்றிலும் இலவசமாக அவர்களுக்கு ஓராண்டு முதுகலைப் பட்டயத் திரைப்படக் கல்வியை வழங்குகிறார்கள். உணவு, உறைவிடம் அனைத்தும் இலவசம் என்பது இதன் சிறப்பு. சினிமா ஆய்வுகளும் முன்னெடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்கள். http://www.iifcinstitute.com என்கிற இணையதள முகவரிக்குச் சென்று முழுமையான விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

ஓடிடியில் நுழைந்தது முக்தா!

கடந்த 60 ஆண்டுகளாகப் படங்களைத் தயாரித்துவரும் பாரம்பரியம் மிக்க பட நிறுவனம் ‘முக்தா பிலிம்ஸ்’. தற்போது முக்தா ரவி, முக்தா சுந்தர் குடும்பத்தினரின் நிர்வாகத்தில் இயங்கிவருவதுடன் படங்களையும் தொடர்ந்து தயாரித்துவருகிறது. இந்நிலையில் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் ஓடிடி துறையில் (https://mukthafilms.in) காலடி பதிக்கிறது முக்தா பிலிம்ஸ். ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்தைப் பரப்புவதைத் தன்னுடைய அறம் சார்ந்த வாழ்வில் முதற்கடமையெனக் கொண்டு 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆன்மிக மகான் வேதாந்த தேசிகர்.

அவரது வாழ்க்கை வரலாற்றை அதே பெயரில் திரைப்படமாக, ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் முக்தா சுந்தர். இப்படத்துக்கு ஆய்வாளரும் உபன்யாசருமான துஷ்யந்த் ஸ்ரீதர் திரைக்கதை எழுதியிருப்பதுடன் வேதாந்த தேசிகராகவும் நடித்துள்ளார். ப்ராக்ருதம், பாலி ஆகிய பழம்பெரும் மொழி்களில் 2 பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆன்மிகக் காவியத்தை வரும் 25-ம் தேதி முதல் முக்தா பிலிம்ஸ் ஓடிடியில் காணலாம். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களையும் தனது ஓடிடியில் வெளியிட முன்வந்திருக்கும் முக்தா பிலிம்ஸ், “தங்களுடைய தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்களையும் ஓடிடி வழியே விரைவில் காணலாம்” என்கிறார்கள்.

கோடைக் கொண்டாட்டம்!

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ளது படம் 'எம்.ஜி.ஆர். மகன்'. வரும் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் கதைக்களம் தொடர்பாக இயக்குநரிடம் கேட்டபோது, "ஒரு சின்ன விஷயத்துக்காக தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதே கதைக்கரு. தந்தையாக சத்யராஜ், மகனாக சசிகுமார், தாயாக சரண்யா பொன்வண்ணன், தாய்மாமனாக சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆர். என்று ஊர் மக்களால் அழைக்கப்படும் கிராமத்து வைத்தியர் எம்.ஜி. ராமசாமியாக சத்யராஜும் ‘அன்பளிப்பு ரவி’ என்கிற கதாபாத்திரத்தில் சசிகுமாரும் வெளுத்துக் கட்டியிருக்கிறார்கள்.

தனது தந்தையின் சிகிச்சைக்காக வைத்தியர் எம்.ஜி.ஆரிடம் வரும் கதாநாயகி (மிருணாளினி ரவி), எம்.ஜி.ஆர். - ‘அன்பளிப்பு ரவி’ சண்டையில் எவ்வாறு நுழைகிறார் என்பது ரசிகர்களுக்கு சுவாரஸ்ய விருந்தாக இருக்கும். படம் முழுவதும் அரைக்கால் சட்டை அணிந்து அக்னி எனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருகிறார் சமுத்திரக்கனி. குடும்ப சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்‌ஷன் என அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்களும் கலந்த கோடைக் கொண்டாட்டத்துக்கான படமாக இது இருக்கும்” என்று தெரிவிக்கிறார் பொன்ராம்.

இந்தியில் ‘அந்நியன்’

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நின்றுபோயுள்ளது. இதனால், இயக்குநர் ஷங்கர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் பிஸியாகிவிட்டார். தில் ராஜு தயாரிப்பில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணை, ஷங்கர் இயக்கவிருக்கும் செய்தி ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டது. தற்போது ‘அந்நியன்’ படத்தின் இந்தி மறுஆக்கத்தையும் ஷங்கர் இயக்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

மேலும்