கடந்த இரண்டு வாரங்களாகத் தங்கள் படங்களின் தணிக்கைக்காகத் தவமிருக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறார்கள் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள். ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் எடிட்டிங் பணிகள் தொடங்கும். அது முடிந்ததும் அடுத்து டப்பிங் பணிகள், டி.ஐ எனப்படும் கலர் கிரேடிங் உள்ளிட்ட டிஜிட்டல் வேலைகள், கிராபிக்ஸ் காட்சிகள் சேர்ப்புப் பணிகள், பின்னணி இசைக்கோர்ப்பு எல்லாம் முடித்து முழுமையாகத் தயாராகும். இது ஃபர்ஸ்ட் காப்பி என்கிறார்கள். இப்படி முதல் பிரதி தயாரானதும் ரிலீஸ் தேதியை முடிவு செய்வார்கள்.
எனவே, தணிக்கை அதிகாரிகளுக்குத் திரையிட்டுக் காட்டி தணிக்கைச் சான்றிதழ் பெறுவார்கள். தணிக்கை வாரியத்திடமிருந்து ‘யு' சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில்தான் வரிவிலக்குச் சலுகைக்காக விண்ணப்பிக்க முடியும். அதற்கென இருக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து வரிச்சலுகைக்கு வேண்டுகோள் வைத்த பிறகே வரிச்சலுகைக்கான காட்சியை அதிகாரிகள் பார்த்து, அதற்காக அரசு குறிப்பிடும் அளவுகோல்களில் படம் இருந்தால் வரிச்சலுகை கிடைக்கும். வரிச்சலுகை கிடைத்த பிறகுதான் படத்தை விளம்பரப்படுத்த முடியும்.
தேதியை முடிவு செய்ய முடியாத நிலை!
தற்போது தமிழ்த் திரையுலகில் உள்ள காட்சிகளைப் பார்க்கும்போது, தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதனை அதிகாரிகள் பார்த்து சான்றிதழ் தருவதற்கு சுமார் 20 நாட்கள் ஆகின்றன என்கிறார்கள். இதனால் பல படங்களுக்கு ‘விரைவில்' என்று போடப்பட்டே விளம்பரம் அளித்துவருகிறார்கள். காரணம், தணிக்கைப் பணிகள் முடிந்தால் மட்டுமே பட வெளியீடு எப்போது என்பதை வெளியிட முடியும். தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்களிடம் ஒரு தேதியைத் தெரிவித்துவிட்டு தணிக்கை முடியாததால் கடும் தத்தளிப்புக்கு உள்ளாகிவருகிறார்கள்.
விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து படம் சொன்ன தேதிக்கு வருமா, வராதா என்று தெரியாத நிலை நிலவுகிறது. சமீபத்தில் ஒரு படத்துக்கு நவம்பர் 8-ம் தேதி தணிக்கைக்கு விண்ணப்பித் திருக்கிறார்கள். ஆனால், தணிக்கை அதிகாரிகள் பார்த்து சான்றிதழ் அளித்தது நவம்பர் 23-ம் தேதி. ஒருவேளை, தணிக்கை அதிகாரிகள் முன்பே பார்த்து சான்றிதழ் அளித்திருந்தால், இன்னும் நன்றாக விளம்பரப்படுத்தியிருப்போம் என்று குமுறுகிறது படக் குழு.
இது குறித்து முன்னணி தயாரிப்பாளர் ஒருவரிடம் பேசியபோது, “எனது படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு 17 நாட்கள் கழித்துத்தான் படத்தைப் பார்த்து சான்றிதழ் அளித்தார்கள். நான் வெளியீட்டுத் தேதி முடிவு செய்து, விநியோகஸ்தர்களிடம் பேசிவிட்டேன். தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தவுடன்தான் என்னால் வெளிநாட்டுக்குப் படத்தை அனுப்பிவைக்க முடியும். இதனால் அதுவும் தாமதமானது. சீக்கிரம் படத்தைப் பார்த்திருந்தார்கள் என்றால் சரியாகத் திட்டமிட்டிருப்போம். இப்போது அவசர கதியில் எல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது” என்று தெரிவித்தார் காட்டமாக.
என்ன சொல்கிறார் எஸ்.வி. சேகர்?
தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு குறித்து தமிழகத் தணிக்கைக் குழுவின் மண்டலத் தலைவர் நடிகர் எஸ்.வி.சேகரிடம் கேட்டோம். “இந்தக் குற்றச்சாட்டை நான் முற்றிலும் மறுக்கிறேன். தணிக்கை என்பது ஒன்றும் திண்டிவனம் சுங்கச்சாவடி கிடையாது. முதலில் தமிழ்த் திரையுலகத் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் ஆகிய இரண்டு தரப்பினருக்கும் தணிக்கைப் பணிகள் குறித்த புரிதல் வேண்டும். முதலில் யார் பணம் கட்டித் தணிக்கைக்கு முன்பதிவு செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும்.
சமீபத்தில்கூட, ஒரு படத்துக்குத் தேதி முடிவு பண்ணிவிட்டோம், ஆகையால் நீங்கள் தணிக்கை செய்துதர வேண்டும் என்றார்கள். உடனே, முன்னால் இருக்கும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்கள் சரி என்றால் எங்களுக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்தோம். அவர்களும் ஒப்புக்கொண்டதால் உடனே தணிக்கை செய்தோம்.” என்றவர் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு இருக்கிறது என்பதையும் விவரித்தார்.
தயக்கம் வேண்டாம்!
“நாங்கள் ஒரு அரசு நிறுவனம் என்பதால் முதலில் தணிக்கைப் பணிகள் குறித்துத் தயாரிப்பாளர் சங்கம் ஒரு வரைமுறையை வகுக்க வேண்டும். தணிக்கைக் குழு என்பது தயாரிப்பாளர்கள் குற்றவாளிகள் கூண்டில் நிற்க வேண்டிய இடம் அல்ல. அவர்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்ய நூறு சதவீதம் உரிமை உண்டு. அதற்கு உண்டான நாட்களை வைத்துக்கொள்ள வேண்டும். தணிக்கை குழு மீது சந்தேகமோ, பிரச்சினையோ உங்களுக்கு இருந்தால் mylaporemla@gmail.com என்ற எனது இ-மெயில் முகவரிக்குப் புகார் அனுப்பலாம்.
முதலில் சினிமா தயாரிப்பாளர்கள், தணிக்கை அதிகாரிகளைப் பார்த்தவுடன் கையைக் கட்டிக்கொண்டு நிற்பது, சாப்பாடு வாங்கிக்கொடுப்பது போன்றவற்றை யெல்லாம் செய்யக் கூடாது. அதுவும் ஒரு வகையில் லஞ்சம்தான். தைரியமாகப் போய் இது என் படம், பார்த்துவிட்டு என்ன சான்றிதழ் கொடுக்கிறீர்கள் என்று கேட்பதில் தவறில்லை. தணிக்கைக் குழுவிடம் நிலைமையைக் கேட்டறிய தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை. படப்பிடிப்புக்கு முன்பு 6 மாதம், படப்பிடிப்புக்கு 6 மாதம், படப்பிடிப்புக்குப் பிறகு 3 மாதம் என மாதக்கணக்கில் திட்டமிடும் தயாரிப்பாளர்கள் ஏன் தணிக்கை செய்ய ஒரு மாதத்துக்கு முன்பாகவே பதிவு செய்யக் கூடாது? அதைச் செய்தால் இப்போது இருக்கும் பிரச்சினைகள் பாதி தீர்ந்துவிடும்” என்றார்.
எஸ்.வி. சேகர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago