ஹிட் ஆன படங்களின் பாடல்களைத் தவிர, பாடல்களுக்காகவென்றே நினைவுகூரப்படும் எண்ணற்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. 1983-ல் சிறுமுகை ரவியின் இயக்கத்தில் பிரபு, அம்பிகா நடித்த ‘ராகங்கள் மாறுவதில்லை’ படமும் அதில் ஒன்று.
சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. முன்னிலையில் ஸ்பூர்த்தி எனும் சிறுமி பாடிய ‘விழிகள் மீனோ’ பாடலைக் கேட்ட 80-களின் ரசிகர்கள் பூரித்து நின்றார்கள். இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்காமலேயே வளர்கிறோமே என்று இளைய தலைமுறையினர் வருத்தப்பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. கல்யாணி ராகத்தின் சாயலில் அமைந்த அந்தப் பாடல், காதலியை வர்ணித்துக் காதலன் பாடும் சாதாரண ‘சிச்சுவேஷ’னுக்காக இசைக்கப்பட்டதுதான். எனினும், அப்பாடல் தரும் இசைச் சுவை, சுகானுபவம், சஞ்சரிக்க வைக்கும் கற்பனை உலகம் விவரணைகளுக்கு அப்பாற்பட்டவை.
அழகை ரசிக்கும் மனதின் ஆலாபனையாக எஸ்.பி.பி.யின் ஹம்மிங்குடன் தொடங்கும் இப்பாடல் இசையமைப்பாளருக்கும் பாடகருக்கும் இடையிலான பரஸ்பரப் புரிதலுக்கு மிகச் சிறந்த உதாரணம். தபேலா, மிருதங்கம் தாள வாத்தியங்கள் அமைத்துத் தரும் நடைமேடையில் புல்லாங்குழல் நடைபயில, பாடல் தொடங்கும். முதல் நிரவல் இசையில் வீணையின் நடைபாதையில் குறுக்கிடும் இரண்டு வயலின்கள் நெகிழ்ந்துருகியபடி உரையாடிச் செல்ல, துள்ளும் மானின் குதூகலத்துடன் புல்லாங்குழலும், அதை வியக்கும் வீணையின் சிலிர்ப்பும் அவற்றைத் தொடர்ந்து ஒலிக்கும்.
இசைஞானமும் கற்பனையின் வீச்சும் எல்லையற்று விரிந்து கிடக்கும் இளையராஜாவின் படைப்பாற்றலின் சிறு துளி அது. இரண்டாவது நிரவல் இசையில் எஸ்.பி.பி.யின் ஜதிக்கும், மிருதங்கத்தின் தாளத்துக்கும் இடையில் சின்ன உரையாடல். உரையாடலுக்கு நடுவே மிருதங்கத்துடன் சேர்ந்து ஒலிக்கும் பேஸ் கிட்டார் தரும் பியூஷன் என்று அற்புதமான இசைத் தருணங்கள் நிறைந்த பாடல் இது.
எஸ்பிபி பாடிய ‘தென்றலோ தீயோ’ எனும் தனித்தன்மை மிக்க பாடலும் இப்படத்தில் உண்டு. இரவின் மவுனத்தைக் கலைத்தபடி மெலிதாக ஒலிக்கும் கிட்டாருடன் பாடல் தொடங்கும். நினைவுகள் தரும் வலியைத் தாளாமல் புலம்பும் மனதின் மெல்லிய விசும்பலாக ஒலிக்கும் ஹம்மிங்குடன் பாடத் தொடங்குவார் எஸ்.பி.பி. மென்மையான தபேலா தாளக்கட்டில் நகரும் பாடல் இது.
‘தீண்டியது நானோ’ எனும் வரியில் குற்றவுணர்வில் பரிதவிக்கும் மனதின் ஊடாட்டத்தைப் பிரதிபலித்திருப்பார் எஸ்.பி.பி. நிரவல் இசையில் கிட்டார், வயலின், புல்லாங்குழல் என்று டூயட் பாடல்களுப் பயன்படுத்தும் இசைக் கருவிகளை வைத்து மென்சோகத்தை இசைத்திருப்பார் இளையராஜா. இரண்டாவது சரணத்தில் ‘இளமைக் காலம்… உறவுக் கோலம்’ எனும் வரியில், அலைக்கழிக்கப்படும் மனதின் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருப்பார் எஸ்பிபி.
இப்படத்தின் மற்றொரு பாடலான ‘என் காதல் தேவி நீ என்னில் பாதி’ எனும் பாடலை உற்சாகத்தின் உச்சத்தில் நின்று எஸ்பிபி பாடியிருக்க வேண்டும். அத்தனை குதூகலமான பாடல் இது. உண்மையில் 80-களின் ‘ஈவ்டீஸிங் சிச்சுவேஷன்’ பாடல்களில் ஒன்றுதான் இது. எனினும், நிரவல் இசையின் இனிமை அந்த வகைப்பாட்டைத் தாண்டிப் பாடலைத் தூக்கி நிறுத்தும். எஸ்.பி.பி., ஷைலஜா பாடிய ‘நாளெல்லாம் நல்ல நாளே’ எனும் பாடலும் இப்படத்தில் உண்டு.
இப்படத்தின் மிக முக்கியமான பாடல் எஸ். ஜானகி பாடிய ‘வான் மீதிலே அதிகாலை ’. பல ஆண்டுகளுக்கு முன்னர், அதிகாலை நேரத்தில் வானொலியில் கேட்ட பாடல் இது. உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடையிலான மங்கலான உலகில் ஒலித்த அந்தப் பாடல் நினைவடுக்கின் ஏதோ ஒரு மூலையில் படிந்து கிடந்தது. 2000-களில் இணையத்தின் வழியாக இந்தப் பாடல் மீண்டும் கேட்கக் கிடைத்தது. இளையராஜாவின் இசையில் தனக்குப் பிடித்த பாடல்களாக, கிட்டார் இசைக் கலைஞர் பிரசன்னா எழுதியிருந்த பட்டியலில் இப்பாடலைக் கண்டதும் மனம் அடைந்த ஒளி வெள்ளத்தை இன்றும் உணர முடிகிறது.
பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் ஜானகியின் ஹம்மிங், விடிகாலை வேளையில் நாணல்கள் அடர்ந்த ஓடைக் கரையில் பாடியபடி செல்லும் பெண்ணை மனதுக்குள் உருவகப்படுத்தும். பெண் குரல்களின் கோரஸுடன் சேர்ந்து ஒலிக்கும் ஜானகியின் ‘பப்பப்பா…’ எனும் ஹம்மிங் தரும் உணர்வு மிக நுட்பமானது. சோகத்தை மறைத்துக்கொண்டு பிறருக்காகப் பாடும்போதும், தன்னையும் மீறி வெளிப்படும் துயரத்தை அதில் அத்தனை அழகாகப் பிரதிபலித்திருப்பார் ஜானகி.
பாடலின் தாளம் மிக வித்தியாசமானது. அடித்துக்கொள்ளும் மனதின் பிரதிபலிப்பாகப் பாடலின் டிரம்ஸ் தாளத்தை வடிவமைத்திருப்பார் இளையராஜா. முகப்பு இசையிலோ நிரவல் இசையிலோ இந்தத் தாளம் ஒலிக்காது. ஜானகி பாடும்போது மட்டும் இந்தச் சிறப்புத் தாளத்தை ஒலிக்க விட்டிருப்பார். வாழ்வில் எதிர்கொள்ளும் சங்கடங்கள், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள், ஏமாற்றங்கள் என்று பல்வேறு தருணங்களின் தொகுப்பாக இப்பாடலின் நிரவல் இசையை உருவாக்கியிருப்பார் இளையராஜா.
குறிப்பாக, இரண்டாவது நிரவல் இசையில் பெண் குரல்களின் கோரஸுடன் இணைந்து ஒலிக்கும் எலெக்ட்ரிக் கிட்டார் மூலம், பூடகமான எத்தனையோ விஷயங்களைச் சிதறவிட்டிருப்பார். பல்லவியில் ‘பாவை எந்தன் நெஞ்சம்தான் பாடும்’ எனும் வரியை ஜானகி சரியாக உச்சரிக்காததுபோல தோன்றும். ஆனால், புலம்பிக்கொண்டிருக்கும் மனதின் மொழி வார்த்தைகளுக்குள் அடங்கக்கூடியதா என்ன?
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago