தரமான பொழுதுபோக்குப் படங்களைத் தொடர்ந்து தயாரித்துவரும் முன்னணித் தயாரிப்பாளர் ‘ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ்’ ஆர்.ரவீந்திரன். அவரது தயாரிப்பில், சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது ‘ஹாஸ்டல்’ . அசோக் செல்வன் - ப்ரியா பவானி சங்கர் ஜோடி சேர்ந்திருக்கும் இப்படம் குறித்து பிரத்யேகமாக நம்முடன் உரையாடினார் இயக்குநர். அதிலிருந்து ஒரு பகுதி..
‘ஹாஸ்டல்’ என்கிற தலைப்பு ஹாரர் படம் போன்ற தோற்றத்தைத் தருகிறதே...
இல்லவே இல்லை. இது முழுக்க முழுக்க நகைச்சுவை ஆட்டம். அசோக் செல்வனுடன் ஏற்படும் சின்ன தகராறில், அவர் பயிலும் கல்லூரி மாணவர் விடுதிக்குள் நுழைந்து, அவரை மிரட்டுகிறார் ப்ரியா பவானி சங்கர். இதை அவர் விளையாட்டாகச் செய்யப்போய் எதிர்பாராதவிதமாக அங்கே மாட்டிக்கொள்கிறார். ஆண்கள் ஹாஸ்டலில் ஒரு பெண் இருப்பதைப் பார்த்தால், அந்த ஹாஸ்டலின் வார்டன் நாசர், சம்பந்தப்பட்ட மாணவனை கல்லூரியைவிட்டே அனுப்பிவிடுவார். அவரது கண்ணிலும் அவருடைய உதவியாளராக வரும் முனீஸ்காந்த் பார்வையிலும் படமால், ப்ரியா பவானி சங்கரை, வெளியே அனுப்ப அசோக் செல்வன் என்ன பாடு படுகிறார் என்பதுதான் கதை. இந்தக் கதையில் காதல் என்கிறப் பேச்சுக்கே இடமில்லை.
ஒரே இடத்தில் நடக்கும் கதையை எப்படி நகர்த்தியிருக்கிறீர்கள்?
மூன்று நாட்கள் நடக்கும் கதை. இதில், கட்டுப்பாடுகள் மிக்க ஹாஸ்டலில் தங்கி படிக்கும் மாணவர்கள் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதைப் பார்க்கலாம். ஹாஸ்டல் வாழ்க்கையைக் கடந்து வந்தவர்களுக்கு ரகளையான நினைவூட்டலாகப் படம் இருக்கும். ஹாஸ்டல் வாழ்க்கையை அனுபவிக் காதவர்களை ஏங்க வைக்கும். அவ்வளவு கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டுவந்திருக்கிறோம். நாசருக்குக் கீழே வேலை செய்யும் முனீஸ்காந்துக்கும் மாணவர்களுக்கும் ஆகவே ஆகாது.
எப்போது வாய்ப்புக் கிடைக்கும் வார்டனிடம் மாணவர்களை மாட்டிவிடலாம் என்று காத்துக்கொண்டிருப்பார். ஹாஸ்டல் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்துவிடும். இதனால் மாணவர்களைத் தற்காலிகமாக வேறொரு பழைய கட்டிடத்துக்கு மாற்றியிருக்கும்போதுதான் இந்தக் கதை நடக்கிறது. அந்தக் கட்டிடத்தில் அறந்தாங்கி நிஷா ஒரு எதிர்பாராத கேரக்டரில் வருகிறார். இன்னொரு பக்கம் மகளைக் காணவில்லையே என்று ப்ரியா பவானி சங்கரின் அப்பா தேடிக்கொண்டிருப்பார். இப்படிச் செல்கிறது திரைக்கதை.
நாசர் இதில் வில்லனா?
இல்லை. ஒரு சீரியஸான பாதிரியார். கல்லூரி வார்டன் என்பவர் எப்படி நடந்துகொள்வார் என்பதை நடிப்பில் அற்புதமாகக் கொண்டுவந்திருக்கிறார். நாசர் சாரின் மூக்கு இதில் கூடுதலாக நடித்திருக்கிறது. நாசர் சார் கதையைக் கேட்டுவிட்டு “15 வருடங்களுக்குப் பிறகு ஒரு முழுமையான நகைச்சுவை வேடம் எனக்குக் கிடைத்திருக்கிறது” என்றார்.
உங்களது படக்குழு பற்றி கூறுங்கள்?
முதலில் தயாரிப்பாளர் பற்றி சொல்லியே ஆகவேண்டும். இந்தக் கதைக்கு ஹாஸ்டல் செட் எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்து கொண்டு, அதைச் செய்துகொடுத்தார் ரவீந்திரன் சார். மிகச்சிறந்த முறையில் ‘ப்ரி புரொடக்ஷன்’ செய்து திட்டமிட நிர்வாகத் தயாரிப்பாளர் முரளி கிருஷ்ணனின் பங்கு முக்கியமானது. பிரவீண்குமார் ஒளிப்பதிவு செய்ய, போபோ சசி இசையமைத்திருக்கிறார். ரவி மரியா, சதீஷ், பாவா லட்சுமணன், கலைராணி, யோகி, கிரிஷ் என பல பிரபலமான நடிகர்கள் துணைக் கதாபாத்திரங்களில் வருகிறார்கள். கோடை கால வெளியீடாக வருகிறது ‘ஹாஸ்டல்’.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago