சினிமா ரசனை 24: வாழ்க்கையைப் படமாக்கிய இயக்குநர்கள்!

By கருந்தேள் ராஜேஷ்

இந்தியப் படங்களில் ‘ஆஃப் பீட்’ (off-beat) என்ற குறிப்பிட்ட வகையைப் பற்றிச் சென்ற வாரம் சுருக்கமாகப் பார்த்தோம். முடிந்தவரை இயல்பான திரைப்படங்களாக இருந்து, அதில் ஜனரஞ்சகப் படங்களைப் பார்க்கும் மக்களையும் உள்ளே இழுக்கும்படியான அம்சங்களை வைத்திருப்பது இவ்வகைப் படங்களின் நோக்கம்.

முற்றிலும் கலைப் படங்களாகவும் இருக்காமல், பாடல்கள் முதலிய ஜனரஞ்சக சினிமாவின் அம்சங்களையும் இவை கொண்டிருக்கும். இப்படிப்பட்ட படங்களின் மூலம், ஒரேயடியாக ஜனரஞ்சக சினிமாவாக இல்லாமல், நல்ல படங்களை நோக்கி மக்களைத் திருப்பும் வேலையை இப்படங்களை எடுத்த இயக்குநர்கள் செய்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்க இயக்குநர்கள் ரிஷிகேஷ் முகர்ஜி, பாஸு சட்டர்ஜீ, பாஸு பட்டாச்சார்யா, குருதத் முதலானவர்கள். இவர்கள் படம் எடுத்த அறுபதுகளும் எழுபதுகளும் பல இனிமையான, இயல்பான படங்களைக் கொண்டிருந்தன.

நடுத்தர வர்க்கத்தின் கதைகள்

இவர்களில் ரிஷிகேஷ் முகர்ஜியின் படங்களே மிகப் பிரபலமானவை. இவரது ‘பவர்ச்சி’ படம், ‘சமையல்காரன்’ என்ற பெயரில் மு.க.முத்துவை வைத்துத் தமிழில் எடுக்கப்பட்டிருக்கிறது. இவரது ‘கோல்மால்’தான் தமிழில் ‘தில்லுமுல்லு’. இவர் எடுத்த ‘நமக் ஹராம்’தான் தமிழில் ‘உனக்காக நான்’ (சிவாஜி). இவரது பெரும்பாலான படங்கள் இன்றுவரை இந்தி ரசிகர்களால் பாராட்டப்படுபவை.

முஸாஃபிர், ஆனந்த், குட்டி (குட்டி அல்ல. Guddi), அபிமான், சுப்கே சுப்கே, கோல்மால் ஆகியவை இவரது மறக்க முடியாத படங்கள். இவற்றைத் தவிரவும் ஏராளமான படங்கள் எடுத்திருக்கிறார். இவரது பெரும்பாலான படங்களில் கதைக்கே முக்கியத்துவம் இருக்கும்.

நடுத்தரவர்க்க மக்களைப் பல காலம் திரையரங்கை நோக்கி இழுத்தவர். இவரது படங்களிலும் அவர்களின் கதையே பெரும்பாலும் நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டிருக்கும். இவரது மாஸ்டர் பீஸாக ‘ஆனந்த்’ படத்தைச் சொல்லலாம். ஆனந்த் என்ற, புற்றுநோயால் இறந்துகொண்டிருக்கும் நபரைப் பற்றிய படம். தனக்குப் புற்றுநோய் இருப்பது தெரிந்தும், சுற்றிலும் இருக்கும் அனைவரையும் அன்போடும் சந்தோஷத்தோடும் பார்த்துக்கொள்ளும் நபரான ஆனந்தாக ராஜேஷ் கன்னா நடித்தார்.

அவருடைய நண்பராக அமிதாப் பச்சன். ராஜேஷ் கன்னாவின் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது. இப்படம் பல விருதுகளைப் பெற்றது. சலீல் சௌத்ரியின் இசையில் மறக்க முடியாத பாடல்கள் இப்படத்தில் உண்டு. வசனங்கள் குல்ஸார்.

வறிய கிராமங்களின் முகம்

புகழ்பெற்ற இயக்குநர் பிமல் ராயின் உதவி இயக்குநராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் பாஸு பட்டாச்சார்யா. ராஜ்கபூரை வைத்து இவர் 1966-ல் எடுத்த தீஸ்ரி கஸம் படம் தேசிய விருது பெற்றது. ஆவிஷ்கார் என்ற சூப்பர் ஹிட் படத்தை ராஜேஷ் கன்னாவை வைத்து எடுத்தார். திருமணம், அதனால் ஏற்படும் பிரச்சினைகள் முதலிய விஷயங்களை வைத்து இவர் இயக்கிய மூன்று படங்கள் பிரபலமானவை. அனுபவ், ஆவிஷ்கார், க்ருஹப்ரவேஷ் ஆகியவையே அவை.

பாஸு பட்டாச்சார்யாவுக்குத் தீஸ்ரி கஸம் படத்தில் உதவி இயக்குநராக இருந்தவர் பாஸு சட்டர்ஜீ. அதற்கும் முன்பாக, ப்ளிட்ஸ் சினிமா பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட்டாக 18 வருடங்கள் இருந்தவர். தீஸ்ரி கஸம் தேசிய விருது வாங்கிய பின்னர், சாரா ஆகாஷ் என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். அது, சிறந்த திரைக்கதைக்காகத் தேசிய விருது வாங்கியது. வட இந்தியாவின் வறுமை சூழ்ந்த கிராமங்களிலேயேதான் பாஸு பட்டாச்சார்யாவின் பல படங்கள் நடைபெறும்.

அங்கே காதல், திருமணம் முதலிய உறவுகளும் அவற்றின் சிக்கல்களும் பேசப்படும். கூடவே, நகரங்களில் இருக்கும் இடம்பெயர்ந்த மனிதர்களின் பிரச்சினைகள். இதுதான் பாஸு பட்டாச்சார்யாவின் பாணி. அவர் படமெடுத்த காலத்தில் மிருணாள் சென், மணி கௌல் முதலியவர்கள் நல்ல படங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

அவர்களுடன் சேர்ந்து, பாஸு பட்டாச்சார்யாவின் படங்கள் ஆஃப் பீட் படங்களாக அமைந்து திரை ரசிகர்களை மகிழ்வித்தன. இவரது பியா கா கர், ரஜ்னிகந்தா, சித்சோர், சோட்டிஸி பாத், கட்டா மீட்டா, ஸ்வாமி, பாதோன் பாதோன் மே(ய்)ன், மன்ஸில் முதலிய படங்கள் இன்றும் இந்தியா முழுவதும் புகழ்பெற்றவை. எழுபதுகளில் நீங்கள் இளைஞராக இருந்திருந்தால், இப்படங்கள் சென்னையில் நன்றாக ஓடியது நினைவிருக்கும். இவரது பெரும்பாலான படங்களில் அமோல் பாலேகர் நடித்திருப்பார்.

இந்தியில் ஜேசுதாஸ்

ஜேஸுதாஸ் முதன்முதலில் இந்தியில் அறிமுகமானது பாஸு பட்டாச்சார்யாவின் படமான சோட்டிஸி கதாபாத்தில்தான். சலீல் சௌத்ரியின் இசையில் ‘ஜானேமன் ஜானேமன் தேரே தோ நயன்’ என்ற பாடல் அது. மிகவும் இனிமையான, குறும்பான பாடல். இத்தோடு சேர்த்து, ‘கோரி தேரா காவோ(ன்) படா ப்யாரா’ என்ற பாடல், சித்சோர் படத்தில் வரும் (இசை: ரவீந்த்ர ஜெய்ன்). இந்த இரு பாடல்களும் அந்தந்த ஆண்டுகளின் மிகப் பிரமாதமான ஹிட்கள். இந்தியா முழுதும் ஜேசுதாஸின் பெயரைக் கொண்டுசேர்த்தன.

இங்கே நான் சொல்லியிருக்கும் பாஸு பட்டாச்சார்யாவின் படங்களை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அவற்றில் இடம்பெறும் காதல், இனிமையான காட்சிகள், உணர்வுபூர்வமான சம்பவங்கள், கதாபாத்திரங்களின் மனதில் இடம்பெறும் தவிப்பு ஆகியவை மிகவும் இயல்பாக இருப்பதை உணர்வீர்கள். இந்தப் படங்களும் இன்றுவரை இந்தி ரசிகர்களால் அவ்வப்போது நினைவுகூரப்படுகின்றன.

முப்பத்தொன்பதே வருடங்கள் வாழ்ந்து மறைந்த குருதத், இவர்களை விடவும் சற்றே வித்தியாசமானவர். பிறப்பால் தென்னிந்தியராக இருந்தாலும் (பெங்களூர்), சிறு வயதில் கல்கத்தாவில் வாழ்ந்த காரணத்தால், அப்பகுதியின் தாக்கம் அவருக்கு அதிகமாக உண்டு. வசந்த் குமார் சிவ்ஷங்கர் படுகோனே என்ற இயற்பெயருக்குப் பதில், குருதத் என்ற பெயரை கல்கத்தாவில்தான் வைத்துக்கொண்டார். இதனாலேயே, இவர் ஒரு பெங்காலி என்ற பரவலான எண்ணம் பலருக்கும் உண்டு. குருதத்தின் பங்களிப்பை அடுத்த வாரம் காண்போம்

தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com

ரிஷிகேஷ் முகர்ஜி - பாஸு சட்டர்ஜி

பாஸு பட்டாச்சார்யாவின் ‘தீஸ்ரி கசம்’









VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்