இயக்குநரின் குரல்: கார்த்திக் தீ போன்றவர்!

By ஆர்.சி.ஜெயந்தன்

‘அழகோவியம் உயிரானது.. புவி மீதிலே நடமாடுது’ என்கிற ‘ரோஜா மலரே’ படப் பாடலை 90'ஸ் கிட்ஸ் மறக்கவே மாட்டார்கள். முரளியின் நடிப்பில், ஆதித்தியன் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் உருவான அந்தப் பாடலை எழுதியவர் டி.எம். ஜெயமுருகன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். ‘ரோஜா மலரே’, ‘அடடா என்ன அழகு’, ‘சிந்துபாத்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘தீ இவன்’ என்கிற தனது 4-வது படத்தை எழுதி, இயக்கி, இசையமைக்கவும் செய்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்பின் ‘நவரச நாயகன்’ கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கும் படம். அவரிடம் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி..

நீங்கள் இதற்கு முன் இயக்கிய மூன்று படங்களும் இசை, நட்சத்திரப் பட்டாளம் ஆகியவற்றுக்காகப் பேசப்பட்டிருக்கின்றன. அதுதான் உங்கள் பாணியா?

‘படத்தில கடைசிவரைக்கும் கதை என்னன்னு டைரக்டர் சொல்லலையே’ என்று காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் ரசிகர்கள் சொல்லிவிடக் கூடாது. குழப்பம் இல்லாத அழுத்தமான கதை, அதற்கு தொய்வில்லாத திரைக்கதை, அந்தத் திரைக்கதையை அட்டகாசமாகத் தூக்கிப்பிடிக்கும் பாடல்கள், அந்தப் பாடல்களுக்கு ரசிகர்கள் நினைத்து நினைத்துப் பாடி ரசிக்கும்படியான வரிகள், சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் முடிந்தவரைப் பிரபலமான நடிகர்களை நடிக்க வைப்பது..

அதேபோல் திறமையான புதுமுகங்களை அறிமுகப்படுத்துவது போன்ற அம்சங்களால்தான் இதுவரை நான் தயாரித்து, இயக்கிய மூன்று படங்களுமே வியாபாரரீதியாக வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த எவர்கிரீன் பாணி, தமிழ் சினிமாவின் கிளாசிக் இயக்குநர்கள் பலரும் பின்பற்றிய ஒன்றுதான். ‘தீ இவன்’ படத்திலும் இதைப் பின்பற்றியிருக்கிறேன். இன்றைய இளைஞர்களுக்கு குடும்பத்தின் மதிப்பை உணர்த்தும் படமாக இதை எடுத்திருக்கிறேன்.

படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் என்று நடிகர் கார்த்திக் மீது குறைகூறியவர்கள் உண்டு. உங்களுக்கு அவர் எப்படி ஒத்துழைப்புக் கொடுத்தார்?

கார்த்திக் ஒரு ஜென்டில்மேன். அவரைச் சந்தித்துக் கதை சொல்வதற்காகச் சென்றபோது இதே கேள்வியை நானும் அவரிடம் கேட்டேன். அதற்கு. ‘நான் தப்பான ஆள் என்றால் என்னை வைத்து 135 படங்கள் எடுத்து எப்படி ரிலீஸ் செய்தார்கள். என்னைத் தவறாக நடத்தியவர்களுக்கு நான் முரட்டு ஆள்தான்’ என்றார். அவரது பேச்சு நியாயமாகப்பட்டது. சரியான நேரத்துக்குச் சற்று முன்னதாகவே படப்பிடிப்புக்கு வந்து சிறப்பாக நடித்துக்கொடுத்தார்.

வேலை என்று வந்துவிட்டால் அவர் தீதான். அதே இளமையான தோற்றம், நடிப்பில் வேகம், அதே துள்ளல், அதே குரல் என தனது ஆரோக்கியத்தை அப்படி பராமரிக்கிறார். கார்த்திக்கைத் தமிழ் சினிமா தவறவிட்டதா, அல்லது அவர் தமிழ் சினிமாவைத் தவறவிட்டாரா என்கிற கேள்வியையும் அவரிடம் கேட்டேன். ‘நான் இடையில் அரசியலுக்குச் சென்றதுதான் இடைவெளிக்குக் காரணம்.’ என்றார்.

‘தீ இவன்’ என்கிற தலைப்பு, படத்தின் கதை பற்றிக் கூறுங்கள்..

கோவை மாவட்டத்தில் ஒரு ‘மாடர்ன்’ கிராமத்தில் கதை நடக்கிறது. கிராமங்கள் பெரும்பாலும் நகரங்களைப் போல ஆகிவிட்டன. அதற்குக் காரணம் தகவல்தொடர்பு சாதனங்கள். நகரங்களில் நடக்கும் குற்றங்கள் கிராமத்திலும் அரங்கேறும்போது அமைதியான வாழ்க்கையை வாழ நினைக்கும் குடும்பங்களில் பூகம்பம் நிகழும். கார்த்திக்கின் குடும்பத்துக்கும் அதுதான் நடக்கிறது.

இரண்டு காதல் ஜோடிகளால் பாசமான குடும்பத்துக்குள் புகைச்சல். அண்ணன் - தங்கை பாசத்துக்குள் காதல் தீயாகக் குறுக்கிடுகிறது. குடும்பத் தலைவரான கார்த்திக் காதல், பாசம் இரண்டையும் எப்படிக் கையாண்டு பிரச்சினைகளை முடிக்கிறார் என்பதுதான் கதை.

அன்பு, பாசம், ஆக்‌ஷன் என்று கலக்கியிருக்கிறார். ‘சின்ன ஜமீன்’ படத்துக்குப் பிறகு இதில் கார்த்திக் ஜோடியாக சுகன்யா நடித்திருக்கிறார். இவர்களது மகளாக தீபீகா என்கிற மலையாளப் பெண்ணை அறிமுகப்படுத்துகிறேன். அவரது காதலராக எனது மகன் சுமன்.ஜே-வை அறிமுகப்படுத்துகிறேன்.

அவர் கூத்துப்பட்டறையில் முறையாக நடிப்பைப் பயின்று பல நாடகங்களில் நடித்த அனுபவத்துடன் சினிமாவுக்கு வந்திருக்கிறார். இவர்களுடன் ராதா ரவி, ‘சேது’ அபிதா, ஜான் விஜய், யுவராணி உட்படப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கிறது. நானே இசையமைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறேன். முதல் சிங்கிள் பாடலை விரைவில் வெளியிட இருக்கிறோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்