நம்மைவிட அவர்களே அறிவாளிகள்! - நடிகர் ரகுமான் நேர்காணல்

By ஆர்.சி.ஜெயந்தன்

என்றும் மார்க்கண்டேயர் என்று கொண்டாட தமிழ் சினிமாவுக்கு ஒரு சிவகுமார் என்றால் மலையாள சினிமாவுக்கு நடிகர் ரகுமான். முப்பது ஆண்டுகளைக் கடந்து நடித்துக்கொண்டிருக்கும் ரகுமான், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் 150 படங்களைத் தாண்டிவிட்டார். தற்போது 21 வயது அறிமுக இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் ‘துருவங்கள் பதினாறு’ என்ற தமிழ்ப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் அவருடன் உரையாடியதிலிருந்து….

வற்றாத உற்சாகம், குன்றாத இளமை இரண்டையும் தக்கவைத்திருக்கும் ரகசியம் என்ன?

மனம்தான் முக்கியக் காரணம். குடும்பமும் நடிப்பும் எனக்கு இரண்டு கண்கள். பதினெட்டு வயதில் நடிக்கத் தொடங்கி இன்றுவரை ஓய்வில்லாமல் கேமரா முன்பு நின்றுகொண்டிருக்கிறேன். நான்காவது தலைமுறை நடிகர்களுடன் தயக்கமில்லாமல் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறேன். யாரைப் பார்த்தும் பொறாமைப்படுவதில்லை. ஒப்பிட்டுப் பார்த்து ஏங்குவதுமில்லை. அடுத்தவர் பற்றிக் கேலி பேசுவதில்லை. அதேநேரம் கவலைப்படுவதும் இல்லை. ஒரு கதாபாத்திரத்தை நன்றாகச் செய்திருந்தால் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு கைகுலுக்கும்போது நம் உடலில் ஏறுமே ஒரு மின்சாரம். அதுதான் எனக்கு பேட்டரி சார்ஜ். அவ்வகையில் நான் இளமையாக இருக்க என் ரசிகர்களும் ஒரு காரணம்.

மலையாளத்தில் ஒரு கட்டத்தில் நடிக்காமல் ஒதுங்கியதற்குக் காரணம் உங்களுக்கு உரிய முக்கியத்துவம் அங்கே அளிக்கப்படவில்லை என்பதா?

என்றைக்கும் அப்படி நினைத்தது கிடையாது. என் இடம் எனக்குச் சந்தோஷம். என் உயரம் எவ்வளவு என்பது எனக்குத் தெரியும். மிக உயரத்தில் பறந்தால் கீழே விழும்போது ரொம்பவே அடிபடும். என் படகு எவ்வளவு தூரம் போகும் என்பதை அறிந்தவன் நான். எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிய ‘நிலவே மலரே’ படத்தின் மூலம்தான் தமிழில் அறிமுகமானேன். பிறகு கே.பி.சாரின் ‘புதுப்புது அர்த்தங்கள்’ படம் என்னைத் தமிழிலும் தெலுங்கிலும் பிஸியாக்கியது. அப்போது மலையாளத்திலும் ஒரு பிரேக் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மனம் சொன்னது. அப்படித்தான் இரண்டுமுறை மலையாளத்தில் சில ஆண்டுகள் நடிக்க முடியாமல் போனதும். ஆனால் நாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு 100% நியாயம் செய்திருந்தால் நாம் எத்தனை ஆண்டுகள் இடைவெளி எடுத்துக்கொண்டாலும் ரசிகர்கள் காத்திருப்பார்கள். அதுதான் அவர்களது பெருந்தன்மை.

மலையாளத்தில் பல மூத்த இயக்குநர்களின் படங்களில் நடித்து வளர்ந்தீர்கள். அந்த நாட்களை இப்போது நினைத்துப்பார்ப்பதுண்டா?

என்னையொரு முன்னணி நட்சத்திரமாக வளர்த்து எடுத்து மக்களின் முன்னால் வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்? 80-களின் சினிமா எனக்கு மட்டுமல்ல மலையாள சினிமாவுக்கும் பொற்காலம்தான். பத்மராஜன். சத்தியன் அந்திக்காடு, ஐ.வி. சசி, பரதன் உட்பட என்னை வளர்த்தெடுத்த ஜாம்பவான்கள் எழுதும் வார்த்தைகளில்தான் அன்று மலையாள சினிமா ஜொலித்தது. அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உலகம். எல்லாருமே என்னை அவரவர் வழியில் செதுக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவங்கள் என் பாக்கியம்.

இன்று மலையாள சினிமா கமர்ஷியல் வண்ணம் பூசிக்கொண்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. மலையாள சினிமா கமர்ஷியலாக மாறினாலும் இன்றும் தரமான படங்களை மக்கள் அங்கே ஆதரிக்கத் தயங்குவதில்லை. அதனால்தான் அங்கே முன்னணி நட்சத்திரங்கள் கமர்ஷியல் படங்களில் நடித்துக் கொண்டே தரமான படங்களிலும் நடிக்கிறார்கள். தமிழிலும் கமர்ஷியல் படங்களுக்கு இணையாக நல்ல படங்கள் இப்போது அதிகமாக வருகிறதே. கமர்ஷியலோ தரமான படமோ எதுவாக இருந்தாலும் மக்களுக்குப் பிடிக்கும்படி இருக்க வேண்டும். அதற்குத் திறமையான திரைக்கதை எழுத்துதான் முதல் ரா மெட்டிரியல்.

இன்று ரசிகர்களிடம் மாற்றத்தைப் பார்க்கிறீர்களா?

ரசிகர்கள் மட்டுமல்ல, இன்றைய புதிய தலைமுறை இயக்குநர்களும் நன்றாகப் படித்து முன்னேறிவிட்டார்கள். சினிமாவைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நம்மைவிட அவர்களே அறிவாளிகள்! நட்சத்திர அந்தஸ்தைத் தாண்டி ரசிகர்கள் நம்மை நினைவில் வைத்துக்கொள்வது நம் கதாபாத்திரங்களைத்தான். எத்தனை பெரிய நடிகருடன் இணைந்து நடித்தாலும் நமது கதாபாத்திரம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்று நான் நினைப்பதில்லை. கதையில் அத்தனை கதாபாத்திரங்களும் முழுமையாக இருந்தால்தான் எனது கதாபாத்திரமும் எடுபடும். அதனால் திரைக்கதையை முழுமையாக வாங்கிப் படித்துப் பார்க்காமல் நான் எந்தப் படத்திலும் நடித்ததில்லை.

அப்படித்தான் ‘துருவங்கள் பதினாறு’ என்ற திரைக்கதையைப் படித்ததும் வியந்துபோனேன். 21 வயதே நிரம்பிய கார்த்திக் நரேன் என்ற இளைஞர்தான் இயக்குநர். நிறைய குறும்படங்களை எடுத்த அனுபவத்துடன் படத்தை இயக்கியிருக்கிறார். அவ்வளவு தெளிவை அவரிடம் பார்த்தேன். அட்டவணை போட்டு படமெடுத்தார். ஒரு நாளும் அதில் தவறவில்லை. கால்ஷிட் வாங்கிய நாட்களைவிட ஒருநாள் முன்னதாக படப்பிடிப்பை முடித்தார்.

அப்படி என்ன அபூர்வமான கதை?

கதையை வெளிப்படுத்துவது முறையல்ல… இதுவொரு க்ரைம் த்ரில்லர். இந்தப் படத்தில் ஆபாச காமெடி இல்லை; அலப்பறை பன்ச் வசனங்கள் இல்லை; பாடல்கள் இல்லை ; கதாநாயகி இல்லை; காதல் இல்லை; இப்படி வழக்கமான எதுவும் இந்தப் படத்தில் இல்லை. ஆனால் பரபரப்பாக நகர்கிற கதை இருக்கிறது. அதை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிற காட்சிகள் இருக்கின்றன. இந்தப் படத்தில் பணியிலிருந்து விலகிய காவல் அதிகாரி கதாபாத்திரம் செய்திருக்கிறேன். பாதியில் நின்றுபோன ஒரு புலன் விசாரணையை மீண்டும் செய்யத் துண்டும் உள்ளுணர்வு என்னை வழிநடத்திச் செல்லும் கதை. எனது தென்னிந்திய ரசிகர்களுக்கு நான் தரும் பரிசாக இந்தப் படம் இருக்கும்.

தொடக்கம் முதலே மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் அனுபவம் எப்படிப்பட்டது?

மம்முட்டி, மோகன்லால் மட்டுமல்ல தமிழில் சிவாஜி, சிவகுமார், விஜயகாந்த் போன்ற மூத்த அனுபவசாலிகளுடன் மட்டுமல்ல அஜீத், சூர்யா போன்ற இளம் நாயகர்களுடனும் நடித்துவிட்டேன். மம்முட்டியுடன் மட்டும் சுமார் 20 படங்களில் இணைந்து நடித்திருக்கிறேன். பல படங்களில் நாங்கள் அண்ணன் தம்பிகளாகவே நடித்திருக்கிறோம். நிஜத்தில் எனக்கு உடன் பிறந்த அண்ணன் இல்லை. அவரை என் அண்ணனாகவே ஏற்றுக்கொண்டவன். அவரும் என்னை ஒரு தம்பியாகவே நினைக்கிறார். ஜாலி, கேலி, கிண்டல் என்று அரட்டை அடிக்கிற அளவுக்கு நெருக்கமான நட்பு மோகன்லாலுக்கும் எனக்கும் உண்டு.

கொஞ்சம் பர்சனல், தனிப்பட்ட வாழ்க்கையில் ரகுமான்?

நான் சீரியஸான ஆளில்லை. ஜாலி, பார்ட்டி, ஆண்டவன், குடும்பம் என எல்லாம் கலந்ததுதான் என் வாழ்க்கை. என் மனைவி மெஹ்ருன்னிசா எனக்குக் கடவுள் தந்த வரம். அவர் வரும்வரை “Marriages are made in Heaven” என்பதை நான் நம்பவில்லை. என் எல்லா ஏற்ற இறக்கம், நல்லது கெட்டதுகளில் கூடவே இருக்கும் அவர் பெரிய பலம். எங்களுக்கு இரண்டு மகள்கள். அமைதியான வாழ்க்கை. எனக்கு எப்போதும் பொய்யான விளம்பரங்கள் பகட்டு ஆரவாரங்கள் பிடிக்காது. ஒதுங்கிவிடுவேன். இதுதான் நான். இது போதும் எனக்கு. இதற்காகவே ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்