தமிழ் சினிமாவின் முதல் படத்தில் இருந்து இன்றுவரை கவனித்தால், ஒரு விஷயம் பளிச்சென்று தெரிகிறது. அது பொழுதுபோக்கு. அன்றைய கீசக வதமாக இருந்தாலும் சரி, இப்போதைய வேதாளமாக இருந்தாலும் சரி, வணிகப் படங்களே பெரும்பாலும் வசூலில் வெற்றி அடைந்திருக்கின்றன. இவற்றில் பாடல்கள், நகைச்சுவை, செண்டிமெண்ட், சண்டைக்காட்சிகள் முதலியவற்றோடு, கதாநாயகனைக் கடவுள் போல சித்தரிக்கும் காட்சிகளும் உண்டு. அண்டை மாநிலங்களில் தரமான திரைப்படங்கள் வரும் அளவுகூடத் தமிழில் படங்கள் இல்லை என்பதையும் சென்ற சில வாரங்களில் மேலோட்டமாகப் பார்த்தோம். அப்படியென்றால், ஒரு கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட முற்றிலும் ‘கமர்ஷியல்’ அம்சங்கள் கொண்ட படங்கள் வரவே கூடாதா? வந்தால் என்ன தவறு?
கமர்ஷியல் படங்களின் முகம்
கமர்ஷியல் படங்கள் அவசியம் வர வேண்டும் என்பதே என் கருத்தும். ஆனால், நடிகர்களைக் கடவுள் போல சித்தரித்து, அவர்களுக்காகவே காட்சிகள் எழுதி, ஒவ்வொரு காட்சியிலும் பஞ்ச் வசனங்கள், ரசிகர்களை நோக்கிய நாயகனின் வசனங்கள் முதலியவைகளை விட்டுவிட்டு, தரமான, சுவாரஸ்யமான திரைக்கதைகளை மனதில் வைத்துக்கொண்டு எடுக்கப்படும் ‘கமர்ஷியல்’ படங்களே என் விருப்பம். அப்படிப்பட்ட படங்கள்தான் திரைப்படம் பார்க்க வரும் ஆடியன்ஸை முழுமையாகத் திருப்திப்படுத்தும்.
மாறாக அந்த நட்சத்திரத்தை மட்டுமே மையமாக வைத்து, அவருக்கென்றே காட்சிகள் எழுதி ஒரு படம் எடுத்தால், முதலில் சில நாட்கள் ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கங்கள் அதிர்ந்தாலும், சரக்கு இல்லாததால் படம் எளிதில் மறக்கப்பட்டுவிடும். யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட படங்கள் ஆண்டுதோறும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் எத்தனை படங்கள் நம் நினைவில் இருக்கின்றன?
இப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்படுவதற்கான மையநோக்கமாக, ‘ரசிகர்களின் விருப்பம்’ என்ற விஷயம் இயக்குநர்களாலும் தயாரிப்பாளர்களாலும் முன்நிறுத்தப்படுகிறது. அது போலவே பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமும், ‘திரைப்படம் பார்த்தால் பொழுது போக வேண்டும்’ என்பதாகவே இருப்பதும் தெரிகிறது. அதில் தவறும் இல்லைதான். என்றாலும், இந்தியாவிலேயே நாம் ஏற்கெனவே முந்தைய அத்தியாயங்களில் பார்த்திருக்கும் சில மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து தரமான படங்கள் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? அங்கே மட்டும் ரசிகர்கள் பொழுதுபோக்குக்காகத் திரையரங்கு வருவதில்லையா?
எப்படிச் சாத்தியமானது?
யோசித்துப் பார்த்தால், மேற்கு வங்கம், கேரளம், கர்நாடகம் முதலிய மாநிலங்களில் ஆரம்ப காலம் தொட்டே மக்களின் மத்தியில் நல்ல ரசனை இருந்துவருகிறது என்பது புரிகிறது. இது எப்படிச் சாத்தியமென்றால், வணிகம் மற்றும் கலைக்கான வேறுபாட்டை நன்றாக அறிந்துகொண்டதன் மூலம் சாத்தியமாகியிருக்கிறது. அரசியல்வாதிகளும் நடிகர்களும் கடவுளர்க்கு நிகராகக் கருதப்படும் இடமாகத் தமிழகம் தொடர்கிறது. கேரளத்திலோ மேற்கு வங்கத்திலோ அரசியல்வாதிகள் இப்படிக் கருதப்படுவதில்லை.
நடிகர்களுக்கும் கடவுளுக்கு இருப்பதுபோன்ற ரசிகர் பட்டாளம் இல்லை. அங்கே மக்களுக்குத் தெளிவான புரிதல் உண்டு. இந்தப் புரிதல் அவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது என்பதை யோசித்தால், அந்த மாநிலங்களில் தரமான ரசனை சிறுவயதிலிருந்தே அறிமுகப்படுத்தப்பட்டுவருகிறது என்பது புரியும். இலக்கியத்துக்கே அங்கே முதலிடம். இதனாலேயே நல்ல திரைப்படங்கள் அங்கே இயல்பாகவே வரவேற்கப்பட்டுவருகின்றன. இதனால்தான் மேற்கு வங்கம் இன்று தரமான திரைப்படங்களுக்காக இந்தியாவில் முதலிடம் பெறுகிறது.
அப்படியே தமிழகத்தைக் கவனித்தால், இங்கே இலக்கியத்துக்கு என்ன இடம்? இலக்கியப் புத்தகங்கள் சில நூறு பிரதிகள் விற்றாலே அதிகம். ஜனரஞ்சகப் புத்தகங்களே இங்கே அதிகம் விற்கின்றன. சிறுவயது முதலே இங்கே ஜனரஞ்சகத்துக்கே முதலிடம். இதனால்தான் நடிகர்களையும் அரசியல்வாதிகளையும் இங்கே கடவுளைக் கண்டதுபோலக் காண வருகின்றனர்.
பொழுதுபோக்கு மட்டுமே அல்ல
திரைப்படங்கள் மூலம் நிகழ்த்தக்கூடிய சமூக மாற்றங்களைப் பற்றி இங்கே மிகச் சிலருக்கே தெரிகிறது. திரைப்படங்களைக் காணும் பலரும் இன்னும் அவை பொழுதுபோக்குக்காகவே எடுக்கப்படுகின்றன என்றே கருதி வளர்கிறோம்.
இந்த மனநிலை சமுதாயத்தில் அடித்தட்டு முதல் மேல்தட்டு வரை அனைவருக்குமே இருக்கிறது என்பதும் தெரிகிறது. மிகச் சமீபத்தில்தான் உலகப்படங்களைப் பற்றிய ஆர்வம் நமக்கு வந்துள்ளது. இதற்கு இணையம் ஒரு காரணம்.
கர்நாடகத்தைப் பற்றி மேலே பார்த்தோம். இங்கு இலக்கியத்துக்கான வரவேற்பு கண்கூடாகத் தெரிந்த விஷயம். நான் பல வருடங்களாக இங்கே இருப்பதால் இது நன்றாகவே புரிகிறது. இங்கும் ஜனரஞ்சகக் கமர்ஷியல் படங்களூக்கான வரவேற்பு அதிகம் என்றாலும், அதே சமயம் நல்ல படங்களும் அவசியம் ஓடவே செய்கின்றன. இலக்கியப் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் விற்கின்றன. மக்களுக்கும் தெளிவான புரிதல் இருக்கிறது. இது என் அனுபவம்.
தமிழ் மக்களாகிய நாம், தமிழில் இதுவரை வந்திருக்கும் தரமான இலக்கியங்கள் எவை என்று தேடித்தேடிப் படிக்க வேண்டும். இலக்கியம் ஒருபுறம், ஜனரஞ்சக எழுத்து மறுபுறம் என்று இரண்டுக்குமே சம அளவு இங்கே வரவேற்பு வேண்டும். வாழ்ந்து மறைந்த எத்தனையோ இலக்கியவாதிகள் இங்கே அங்கீகாரமே இதுவரை இன்றியே இருந்திருக்கின்றனர்; இன்னும் இருந்துகொண்டிருக்கின்றனர். இவர்களது புத்தகங்களை நாம் அனைவரும் தேடிச்சென்று படிக்க வேண்டும் என்பது என் ஆசை. ஏனெனில், தரமான எழுத்துகள் நமது வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவை. இலக்கியத்தை உள்ளபடி புரிந்துகொண்டால் வாழ்க்கையில் பக்குவம் கூடும். அந்தப் பக்குவத்தால் எளிதில் நம்முன் இருக்கும் விஷயங்களைத் தரம் பிரித்து அறிந்துகொள்ள முடியும். அப்படி அறிந்துகொண்டால், எவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று புரிந்துகொள்வோம். யார் பின்னாலும் ஓட மாட்டோம். நல்லவற்றை வரவேற்போம்.
இலக்கியம் எழ வேண்டும்
இப்படி எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது இலக்கியம். இது மட்டும் நடந்துவிட்டால், பின்னர் தாமாகவே உலக அளவில் பேசப்படும் பல படங்கள் இங்கும் அவசியம் எடுக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. முதலில் நமது தாய்மொழியில் இருந்து மறைந்த/எழுதிக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகள் யார் என்பது நமக்குத் தெரிய வேண்டும். அவர்களின் எழுத்துகளை நாம் அனைவரும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு இதுதான் சிறந்த காலகட்டம். இப்போது இலவசமாகவே பல இலக்கியக் கூட்டங்களும் உலக சினிமாத் திரையிடல்களும் பரவலாகத் தமிழகமெங்கும் நடைபெற ஆரம்பித்துள்ளன. இதனை நாம் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனால் நமது ரசனை மாறும். ரசனை மாறினால் வாழ்க்கை மாறும். வாழ்க்கை மாறினால், தமிழகத்திலிருந்து அவசியம் பிரமாதமான உலகப்படங்கள் வெளியாகி, தமிழுக்கு நீங்காத பெருமையை அளிக்கும்.
நன்றாக யோசித்துப் பார்த்தால், யாருக்காக அழுதான், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், பதினாறு வயதினிலே, அவள் அப்படித்தான், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஏழாவது மனிதன், அக்ரஹாரத்தில் கழுதை, வீடு, சந்தியா ராகம், காக்கா முட்டை, குற்றம் கடிதல், விசாரணை போன்ற பல படங்கள் இங்கே நம்மால் கொண்டாடப்படுகின்றன என்பதில் சந்தேகம் இல்லைதான். ஆனால், இவற்றைத் தமிழே தெரியாத ஒரு உலகப்பட ரசிகர் வேறொரு நாட்டில் இருந்துகொண்டு பார்க்கிறார் என்றால், ஒரு ‘பதேர் பாஞ்சாலி’யை அவர் ரசிப்பது போலவோ, ஒரு ‘மேகே தக்க தாரா’வை அவர் உணர்ந்து புரிந்துகொள்ளுவதைப் போலவோ இவற்றை அவரால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கவனித்தால், அது கொஞ்சம் கடினமே என்று புரியும்.
இப்படங்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் விருதுகள் வாங்கியிருப்பது போதாது. மாறாக, ஒரு சத்யஜித் ராய் படம் போல உலகெங்கும் பாராட்டுகளைக் குவிக்க வேண்டும். காக்காமுட்டை, குற்றம் கடிதல், விசாரணை ஆகியவை உலகில் சில திரைவிழாக்களில் வலம்வருகின்றன. அது அவசியம் பாராட்டத் தக்கதே. ஆனால், அதுவும் போதாது. வெனிஸ் பட விழாவிலோ, கான் பட விழாவிலோ அல்லது இவற்றைப் போன்ற மதிப்புக்குரிய உலகப் படவிழாக்களிலோ ஒரு தமிழ்ப் படம் அனைவராலும் பாராட்டப்பட்டு தங்கச்சிங்கம் போன்றதொரு விருதை வாங்கினால் நமக்கு எவ்வளவு பெருமை? இன்றுவரை தமிழில் உலகத் திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு படம்கூட இல்லை என்பது வருத்தம்தானே?
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago