நினைவுகளின் சிறகுகள்: கே.ஏ. தங்கவேலு - அண்ணே என்னைச் சுடப்போறாங்க!

By ஆர்.பி.ராஜநாயஹம்

சந்திரபாபுவைப் போலவே 1950-களில் நல்ல மார்க்கெட்டில் இருந்த காலம் தொடங்கி, பின்னால் நாகேஷ் காலம், சோ, தேங்காய் சீனிவாசன்,சுருளி ராஜன் காலங்களையும் தாண்டிக் கொஞ்சமும் சலிப்பு ஏற்படுத்தாத, பொறி சற்றும் குறையாத நடிப்பு இவருடையது.

‘கல்யாண பரிசு’ பைரவன் மட்டுமல்ல. ‘அறிவாளி’ படத்தில் முத்துலட்சுமியுடன் பூரி சுடும் காட்சி, தெய்வப்பிறவியில் “அடியே, நீ என்ன சோப்பு போட்டாலும் வெள்ளையாக மாட்டே”, “பார்த்தியா, இதெல்லாம் எடுத்தா அதெல்லாம் வரும்னு சொன்னனேக் கேட்டியா” போன்ற பல வசனங்கள் பிரபலம். வீரக்கனல்’ படத்தில் “தப்பித்தவறி அடி ஒங்க மேல பட்டுருச்சின்னு வச்சிக்க்க்கிங்ங்ங்ங்...க..” என்று தங்கவேலு பேசும் வசனம்!

“தங்கவேலு சுவாமியாக வந்ததும் நாங்களே! வேலுத்தங்கமாக வந்ததும் நாங்களே! காதலர்ர்ர்ரா...க வந்ததும் நாங்களே!” என ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் பேசுவதும் மறக்க முடியாதது. ‘மிஸ்ஸியம்மா’வில் பாட்டு கற்றுக்கொள்ளும் தங்கவேலு. அப்போது ஜெமினி அந்த அறைக்குள் வந்தவுடன் வெட்கப்பட்டுத் தவிக்கிற காட்சி!

‘திருடாதே’ படத்தில் “ பிசாசு ஏன் புரோட்டா கடைக்கு வருது? ஒரு வேளை குஞ்சு பொரிச்சிரிக்குமோ?’’

‘நம் நாடு’ படத்தில் “ ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்” “கொல பண்ணது கூட லேட்டுங்க. நான் அமுக்குனதுலதான் செத்தான்!’’ என்ற வசனம். இவையெல்லாம் அந்தக் கால திரைப்பட நகைச்சுவையில் முத்திரை வசனங்கள்! வடிவேலுவின் வசனங்களையும் கவுண்டமணியின் கவுன்டர்களையும் வைத்து இன்று இணைய உலகின் ‘நையாண்டி’ பதிவுகளும் பின்னூட்டங்களும் பிழைப்பு நடத்துவதுபோல் அன்றைய திண்ணைப் பேச்சுப் பெரிசுகளுக்குத் தங்கவேலுவின் வசனங்கள்தான் வாய்ச்சரக்கு.

சந்தானம் தனக்குப் பிடித்த காமெடியன்களாக தங்கவேலுவையும் கவுண்டமணியையும் அடிக்கடி குறிப்பிடுகிறார். சந்தானத்தின் நடிப்பில் கவுண்டமணி தெரியும் அளவுக்கு தங்கவேலு தெரிவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் தங்கவேலுவின் நாசூக்கான நடிப்புதான். தங்கவேலு எந்தப் படத்திலும் கல்யாணப் பெண்- மாப்பிள்ளையைப் பார்த்து “இவ என்ன யாரோடயாவது ஓடிப் போயிட்டாளா? இல்ல இவன்தான் செத்துப் போயிட்டானா?” என்று கேட்கவே மாட்டார். தொந்தரவான வில்லனைக் கூட “அட நீ நல்லாருக்க” என்பார்.

‘பணம்’(1952) படத்தில் வயதானவராக நடித்த பின்தான் தங்கவேலு பிசியான நடிகரானார். ‘பணம்’ படத்தில் நடித்ததற்காகப் படத்தின் தயாரிப்பாளர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அந்தக் காலத்தில் தங்கவேலுவுக்கு 5,000 ரூபாய் கொடுத்தாராம். இவரும் அந்தப் பணத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் காட்ட, இவருடைய பெரியப்பா “அடப் பாவி . அன்னமிட்ட வீட்டுல கன்னமிடலாமாடா? கலைவாணர்கிட்ட திருடுனா நீ விளங்கவே மாட்ட”ன்னு திட்டி அடித்து இழுத்துக்கொண்டு என்.எஸ்.கேயிடம் அழைத்துக்கொண்டு போனார். என்.எஸ்.கே “அந்த பணம் தங்கவேலுவுக்கு நான் கொடுத்த சம்பளம்” என்று சொன்னபோதுதான் சமாதானம் ஆனாராம்.

எம்.ஜி.ஆர் அறிமுகமான ‘சதி லீலாவதி’ (1936) திரைப்படத்தில் தங்கவேலுவுக்கு ஒரு சின்ன பாத்திரம். அதே படத்தில் என்.எஸ்.கே, டி.எஸ் பாலையா போன்றோரும் நடித்தார்கள். “இன்னைக்கு உன்னை ஷூட் பண்ணப் போறோம்”னு இயக்குநர் தங்கவேலுவிடம் சொன்னதும் இவர் பதறிப் பயந்து என்.எஸ்.கே-விடம் போய் “அண்ணே, என்னை சுடப் போறாங்களா?” என்று அழுதாராம். “ பைத்தியக்காரா! ஒன்னைப் படம் பிடிக்கப் போறாங்கடா!” என்று என்.எஸ்.கே விளக்கம் சொன்னாராம்.

தங்கவேலுவுக்கு பின்னணிப் பாடல்கள் பலவற்றைப் பாடியவர் எஸ்.சி.கிருஷ்ணன்.

‘கண்ணே நல்வாக்கு நீ கூறடி, நான் நாலு நாளில் திரும்பிடுவேன். என் செல்வக் களஞ்சியமே! என் சின்னக்கண்ணு மோகனமே!’

சீர்காழி சில பாடல்கள் பாடினார். பிரபலமான ‘ரம்பையின் காதல்’(1956) படப் பாடல். ‘சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே’சுடுகாட்டில் தங்கவேலு பாடுவதாகக் காட்சி.

பி.பி.ஸ்ரீனிவாஸும் பாடியிருக்கிறார். ‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில் ‘கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!’ ரொம்பப் பிரபலம். கண்களை நன்கு உருட்டி நடிக்கத் தெரிந்த நடிகர்களில் தங்கவேலு டாப்கிளாஸ் நடிகர்.



தங்கவேலு 10/10

1.புதுச்சேரி மாநிலம் காரைக்கால்தான் தங்க வேலுவின் சொந்த ஊர்.

2.பத்து வயதுமுதல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய தங்கவேலு 20 வயதில் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி நாடகக் குழுவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார். அப்போது கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் புதிதாகத் தொடங்கிய தனது நாடகக் குழுவுக்குத் தன் நண்பரான தங்கவேலுவை இழுத்துக்கொண்டார்.

3. என்.எஸ்.கிருஷ்ணனும் தங்கவேலுவும் கந்தசாமி முதலியாரின் நாடகக் குழுவில் அண்ணன் தம்பியாகப் பழகியவர்கள். கந்தசாமி முதலியாரின் ‘பதிபக்தி’ நாடகம்தான் பின்னாளில் ‘சதி லீலாவதி(1936)’ என்ற படமாகத் தயாரிக்கப்பட்டது. அதில்தான் அறிமுகமானார் தங்கவேலு.

4. சொந்த நாடகக் குழுவைத் தொடங்கி, பல நாடகங்களை நடத்திய தங்கவேலு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனதும் 1994-வரை தொடர்ந்து நாடகங்களில் நடித்திருக்கிறார்.

5. தங்கவேலு 20 வயதில் மிகவும் ஒல்லியாக இருப்பார். அதனால் தனக்கு வசதியாக இருக்குமென்று கருதி வயதான வேடங்களையே ஏற்று நடித்தார். பணம், திரும்பிப்பார், இல்லற ஜோதி, சுகம் எங்கே உள்படப் பல படங்களில் 60 வயது வேடங்களில் நடித்தார்.

6. ‘சிங்காரி’ என்ற படத்தில் டணால்... டணால்... என்று அடிக்கடி வசனம் பேசியதால் தங்கவேலுவின் பெயர் முன்னால் டணால் என்ற வார்த்தை ஒட்டிக்கொண்டது.

7. கலைவாணர், எம்.கே.தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் வரை சுமார் 1,000 படங்களில் நடித்திருக்கிறார்.

8. நகைச்சுவை ஜோடிகளில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் ஜோடிக்குப் பிறகு தங்கவேலு - எம்.சரோஜா ஜோடி சுமார் 50 படங்களில் இணைந்து நடித்துப் புகழ்பெற்றபின் காதல் திருமணம் செய்துகொண்டனர்.

9. கடந்த 1994-ம் ஆண்டு தமது 77-வது வயதில் மறைந்த தங்கவேலு தி.மு.கவின் தீவிர உறுப்பினராக இருந்தார். அவர் மறைந்தபோது தி.மு.கவின் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.

10. தங்கவேலுவின் முதல் மனைவி ராஜாமணி அம்மாள். அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது மனைவி நடிகை எம்.சரோஜாவுக்கு ஒரே மகள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்