கோலிவுட் கிச்சடி: மாறும் நிலைபாடு?

By ஆர்.சி.ஜெயந்தன்

‘காக்கா முட்டை’, ‘குற்றம் கடிதல்’, ‘விசாரணை’ ஆகிய படங்கள் உலகப்பட விழாக்களில் பாராட்டுகளை அள்ளிவருகின்றன. இந்தப் படங்களுக்குக் கிடைத்திருக்கும் புகழ், இதுபோன்ற தரமான சின்னப் படங்களின் மீது கார்ப்பரேட் நிறுவனங்களின் கவனத்தைத் திருப்பியிருப்பது கோலிவுட்டுக்குப் புதிய அனுபவம் என்றே சொல்ல வேண்டும்.

வெறும் 80 லட்சம் ரூபாயில் எடுக்கப்பட்ட ‘காக்கா முட்டை’ தமிழகத்தில் 15 கோடி வரை வசூலித்தது. அறுபது கோடி செலவில் ஒரு படத்தை எடுத்து நஷ்டப்படுவதைவிட இது ஆரோக்கியமானது என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் வணிகக் கணக்கு போட ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான அறிகுறியாகவே தெரிகிறது.

‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டனின் உதவியாளர் சுரேஷ் இயக்கும் ‘ஒரு கிடாவின் கருணை மனு’ என்ற படத்தைத் தயாரிக்க மிகப் பெரிய கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் முன்வந்திருக்கிறது. பழங்குடி மக்களின் கிராமப்புற வாழ்வியலையும் சடங்குகளையும் மையப்படுத்தித் தயாராகும் இந்தப் படத்தின் பட்ஜெட் மிகச் சிறியது என்கிறார்கள். அதேபோல் வெற்றி மாறனின் ‘விசாரணை’ படத்தின் விநியோக உரிமையைப் பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்து நிற்கும் லைக்கா வாங்கியிருக்கிறது. இந்த மாற்றம் தொடர இயக்குநர்கள் தரமான படங்களை அனைவரும் ரசிக்கும் விதத்தில் எடுக்க முன்வந்தாலே போதும் என்கிறார் கார்ப்பரேட் தயாரிப்புப் நிறுவனதில் பணியாற்றும் நிர்வாகத் தயாரிப்பு பிரதிநிதி.

எதிர்பாராமல் இணைந்தவர்கள்

கோலிவுட்டைப் பரபரக்க வைத்திருக்கிறது இரண்டு ஜோடிகளின் எதிர்பாராத இணைப்பு. 2005-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான ‘ஐயா’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நயன்தாரா. சரத்குமாரில் தொடங்கி ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உட்பட முன்னணிக் கதாநாயகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா இதுவரை விக்ரம், கமல் ஆகியோருடன் மட்டும் ஜோடி சேராமல் இருந்தார். தற்போது ‘அரிமா நம்பி’ பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். அடுத்து, கமலுடனும் ஜோடி சேர்ந்துவிடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையில் கடந்த 2002 -ம் ஆண்டில் அறிமுகமான தனுஷும் த்ரிஷாவும் கடந்த 13 ஆண்டுகளில் நிலையான இடங்களைப் பிடித்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. தற்போது இந்த ஜோடியும் இணைந்துவிட்டது. ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கவிருக்கும் படத்தில்தான் இந்த ஜோடி இணைவது உறுதியாகியிருக்கிறது.

சீறிய சித்தார்த்

கடந்த இரண்டு வாரங்களைத் தாண்டி தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் தவித்துவருகின்றனர். இதுபற்றி வட இந்திய ஊடகங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை. இதைக் கண்ட நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் சீற்றத்துடன் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

“சென்னையும் இந்தியாவின் ஒரு பகுதிதான். சென்னை வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஆமிர் கானுக்கும், ஷீனா போரா கொலை வழக்குக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம், உங்களது கவனத்தை சென்னை பக்கமும் திரும்புங்கள்” என்று ட்விட் செய்திருந்தார்.

தனது படங்களை, விளம்பரம் செய்வதற்கு மட்டுமே சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் நடிகர்களுக்கு மத்தியில் சித்தார்த்தின் அக்கறை கவனிக்க வைக்கிறது.

மதுஷாலினி மறுபடியும்

பாலாவின் ‘அவன் இவன்’ படத்தோடு அவ்வளவுதான் என்று அனுப்பி வைக்கப்பட்டவர் மதுஷாலினி. ‘தூங்காவனம்’ படத்தில் எண்ணி நான்கே காட்சிகள் என்றாலும் கமல் படம் என்பதால் மறுக்காமல் நடித்த அவரது துணிச்சலுக்குக் கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. தற்போது இரண்டு நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அவர்.

மிரட்டவரும் மாதவன்

‘இறுதிச் சுற்று’ படத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கக் கிளம்பிவிட்டார் மாதவன். இந்தப் படத்தில் மாதவனுக்குக் குத்துச்சண்டைப் பயிற்சியாளர் வேடம்.கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடலமைப்பைப் பெறுவதற்காகக் கடும் பயிற்சி மேற்கொண்ட மாதவனின் இந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அவரது வட இந்திய ரசிகர்களுக்கும் ஆக்‌ஷன் விருந்து படைக்கப்போகிறதாம். 2016 ஜனவரி 29-ம் தேதி தமிழ், இந்தி இரு பதிப்புகளும் வெளியாகும் என்று அறிவித்திருக் கிறார்கள். இதற்கிடையில் ‘தனியொருவன்’ படத்தின் தெலுங்கு மறுஆக்கத்தில் வில்லனாக நடிக்க மாதவன் ஒப்புக்கொண்டிருப்பதாக நம்பகமான தகவல் கிடைக்கிறது.

கமல் படத்தில் ரஹ்மான்

கமல் நடித்து இயக்க பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாக இருப்பதாகக் கூறப்படும் ‘தலைவன் இருக்கிறான்’ படத்துக்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக ரஹ்மான் வட்டாரத்திலிருந்து தகவல் கிடைக்கிறது. தனது கடந்த சில படங்களுக்கு ஜிப்ரான் உள்ளிட்ட புதிய இசையமைப்பாளர்களைப் பயன்படுத்திய கமல், ‘தலைவன் இருக்கிறான்’ படத்துக்கு ரஹ்மானை நாடியிருப்பது அதன் பிரமாண்ட பட்ஜெட்டுக்கு உதாரணம் என்கிறார்கள். ஆனால், இந்தப் படத்துக்கு முன்பே தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைக் குறுகிய காலத் தயாரிப்பாக இயக்கித் தயாரிக்கவிருக்கிறார் கமல். தமிழில் ‘அப்பா அம்மா விளையாட்டு’ என்றும் தெலுங்கில் ‘அம்மா நானா ஆட்டா’ என்றும் தலைப்புகள் சூட்ட இருப்பதாக கமல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்துக்கு ஜிப்ரானே இசையமைக்கவிருக்கிறார் என்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்