நினைவுகளின் சிறகுகள்: என்.எஸ்.கிருஷ்ணன் - கலைவாணரைத் துரத்திய கொலை வழக்கு!

By சோழ.நாகராஜன்

நவம்பர் 29 : கலைவாணர் பிறந்த தினம்

அது 1925-ம் ஆண்டு. அப்போது கிருஷ்ணனுக்கு 17 வயது. அவரது தந்தை சுடலைமுத்து ஒரு நாள் கிருஷ்ணனை அழைத்துக்கொண்டு நாடக கம்பெனியிலேயே சேர்த்துவிட்டுவிட்டார். புதிதாகச் சேர்ந்த பையன்களுக்குப் பாட்டு சொல்லிக்கொடுப்பார் டி.கே. சண்முகம். சங்கரதாஸ் சுவாமிகளின் ‘மூல மந்திர மோன நற் பொருளே’ எனத் தொடங்கும் பாடலை அவர் சொல்லிக்கொடுத்தார். சிறிது நேரம் ஓடியது. தண்ணீர் அருந்த சண்முகம் எழுந்து போனார். பிறகு வந்து பார்த்தபோது கனத்த சாரீரம் அமைந்த பையன் ஒருவன் புதிதாக வந்து சேர்ந்திருந்தவர்களுக்கு அந்தப் பாடலைத் தொடர்ந்து சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தான். டி.கே.சண்முகம் திகைத்து நின்றார்.

“இந்தப் பாட்டு உனக்கு எப்படித் தெரியும்?”

“நாகர்கோவிலில் உங்கள் நாடகம் நடந்தபோது அங்கே நான் சோடா விற்கிற வேலை செய்துகொண்டே கவனித்துவந்தேன். பாடல்கள் அத்துப்படி ஆகிவிட்டன!”

“சபாஷ், மகிழ்ச்சி. நீயே இவர்களுக்குக் கற்றுக்கொடு!” என்று சொல்லிவிட்டு சண்முகம் நகர்ந்தார். நாடகக் குழுவில் மாணவனாகச் சேர்ந்த முதல் நாளே கிருஷ்ணன் நாடக வாத்தியார் ஆகிவிட்டார்.

டங்கனை அசத்திய இளைஞர்

அமெரிக்கரான எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழ் அறியாதவர். அவர் இயக்கவிருந்த ‘சதி லீலாவதி’ படத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. படத்தில் நடிக்கிற அனைவரும் ஆஜர். நகைச்சுவை நடிகராக எம்.எஸ். முருகேசன். நகைச்சுவைக் காட்சியில் நடிக்கும் பலருள் ஒருவராக என்.எஸ். கிருஷ்ணன்.

நகைச்சுவைக் காட்சி குறித்தும் விவாதம் வந்தது. கிருஷ்ணனுக்கும் இதுதான் முதல் பட வாய்ப்பு. புதிதாக வந்த அதிர்ஷ்டம் என்று எல்லோரும் அடக்க ஒடுக்கமாக நடந்துகொண்டிருந்த வேளையில் என்.எஸ். கிருஷ்ணனால் அப்படிச் சும்மாயிருக்க முடியவில்லை. அப்படி இருக்கக்கூடியவரா அவர்? எனவே, ஏதோ சொல்ல எழுந்தார். மற்ற நாடக நடிகர்கள் குறுக்கிட்டார்கள். அவர்கள் சொன்னார்கள்: “கிருஷ்ணா, நீ பேசாமல் இரு. காமெடி பற்றிப் பேசத்தான் முருகேசன் இருக்கிறாரே! நீ எதற்கு முந்திரிக் கொட்டைபோல?”

கிருஷ்ணன் மறுத்தார்: “நகைச்சுவைக் காட்சி பற்றி எனக்குப் பட்டதை நான் சொல்லுவேன்!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

எல்லிஸ் ஆர். டங்கன் இதனைக் கவனித்தார். கிருஷ்ணனைக் காட்டி, “அவர் என்ன சொல்கிறார்?” என்று கேட்டார். “அவரைப் பேச விடுங்கள்!” என்றார்.

கிருஷ்ணன் கம்பீரமாக எழுந்து தன் கருத்தை வெளியிட்டார்.

“நகைச்சுவைக் காட்சியென்றால் அதை நான்தான் வடிவமைப்பேன்!” டங்கனுக்கு முகம் மலர்ந்தது. கிருஷ்ணனின் துணிவைக் கண்ட டங்கனுக்கு அவர் மீது நம்பிக்கை பிறந்தது. மகிழ்ச்சியோடு டங்கன் இப்படிச் சொன்னார்:

“கிருஷ்ணன் நடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளை அவர் விருப்பம்போல, அவர் சொல்கிறபடியே எடுப்போம்!”

ஆமாம்! கலைவாணர், தனது முதல் படத்திலேயே வாதாடி, போராடி, ஒரு தனித்த உரிமையையே பெற்றார். அதுதான் இன்றைக்கு ‘தனி டிராக்’என்று அழைக்கப்படும் நகைச்சுவைப் பகுதியின் தொடக்கம். இந்தத் தனித்த உரிமைதான் என்.எஸ்.கிருஷ்ணன் என்ற அந்த அற்புதக் கலைஞன் ‘கலைவாணர்’ என்றாவதற்கு ஆதார சுருதியாக அமைந்துபோனது.

எதிரிக்கும் உதவும் மனம்

தனது கலைக்குக் காணிக்கையாகக் கிடைத்த பொருளையெல்லாம் இல்லாதவர்க்கு ஈவதையே வாழ்நாள் பழக்கமாக்கிக்கொண்ட இந்தச் சாதனைக் கலைஞனின் வாழ்விலும் பெரும் சோதனை வந்தது.

சி.என். லட்சுமிகாந்தன் என்பவர் நடத்திவந்த ‘இந்துநேசன்’ எனும் பத்திரிகையில் சினிமா பிரபலங்களையும், பணக்காரத் தொழிலதிபர்களையும் பற்றிக் கடுமையாக எழுதிவந்தார். இதனால் லட்சுமிகாந்தனுக்கு நிறைய பகைமை வளர்ந்தது. அதேநேரம் பிரபலங்கள் பலரும் தங்களைப் பற்றி அவர் எழுதிவிடுவாரோ என்று பயந்து நடுங்கினார்கள். கலைவாணர் மட்டும் இந்த விஷயத்திலும் மாறுபட்டவராகவே இருந்தார்.

லட்சுமிகாந்தன் குறித்து அவருக்குக் கலக்கமில்லை. “ஏதோ நம்மைப் பற்றியெல்லாம் எழுதி ஒருவன் பிழைப்பு நடத்துகிறான். பாவம், பிழைத்துப்போகட்டுமே” என்று தனது காதல் மனைவி மதுரத்திடம் சொல்லுவார். அதுமட்டுமல்ல “அவன் திருந்துவதாக இருந்தால் வேறு தொழில் செய்ய நாமெல்லாரும் அவனுக்குப் பண உதவிகூடச் செய்யலாம்” என்றார். அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளம் கொண்ட கலைவாணர்மீது, அந்த லட்சுமிகாந்தன் திடீரெனக் கொலை செய்யப்பட்டபோது பெரும் பழி விழுந்தது.

அன்றைக்குப் புகழின் உச்சத்தில் இருந்த கலைவாணர்மீதும், எம்.கே. தியாகராஜ பாகவதர் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் கைதானார்கள். நீண்டதொரு அத்தியாயம்போல நடந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே கொடுத்துச் சிவந்த கரங்களுக்கு சொந்தமான கிருஷ்ணன் - மதுரம் தம்பதி கடனாளியானார்கள். கலைவாணரின் நாடக சபா இரண்டாக உடைந்தது. மதுரத்தின் தலைமையில் இயங்கிய சபாவுக்கு கலைவாணரின் தோழர் எஸ்.வி. சகஸ்ரநாமம் தோள்கொடுத்தார்.

அப்பீல் செய்யப்பட்டது. மதுரம் கடன் கேட்டு அலைய நேர்ந்தது. தந்தை பெரியார் இவர்கள் விடுதலைக்காகக் குரல்கொடுத்தார். கிருஷ்ணன், பாகவதர் விடுதலை முயற்சி கமிட்டி ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது. இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில் லண்டன் பிரிவி கவுன்சிலில் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. பாகவதர் உற்சாகமிழந்த நிலையில் இருந்தார். கலைவாணரோ சிறை அனுபவத்தை மேடைகளில் பெருமையோடு சொல்லத் தொடங்கினார்.

பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட அவர் காந்தியையும் நேசித்தவர். பொதுவுடைமைத் தலைவர் ஜீவானந்தம் அவருக்குத் தோழர். உடுமலையார் பாடல்களின் வழியேயும், தனது தனித்த நகைச்சுவைக் காட்சிகளின் வழியேயும் இன்றுவரையில் அன்றைய முன்னணி இயக்கங்களின் நல்ல கூறுகளையெல்லாம் கலையாக்கி மக்களை மகிழச் செய்த அவர் ஒருநாள் மதுரத்திடம் இப்படிச் சொன்னார்: “ஐம்பது வயதில் நான் இறந்துவிட ஆசைப்படுகிறேன் மதுரம்...” மதுரம் பதறிப்போனார்.

“தன் கலையில் வறட்சி ஏற்பட்ட பின் அந்தக் கலைஞன் வாழ்வதைப் போன்ற அவலம் இந்த உலகில் வேறில்லை மதுரம்” என்றார் கலைவாணர். ஆனால் அப்படிப் பட்ட வறட்சியை சந்திக்கும் முன்பே மறைந்துவிட்டார்.

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்