எப்போதாவது ஒருமுறைதான் இப்படி அதிசயம் நடக்கிறது. ‘காக்காமுட்டை’, ‘குற்றம் கடிதல்’, ‘விசாரணை’என மூன்று தமிழ்ப் படங்கள் தற்போது ஒரே சமயத்தில் உலகம் முழுக்கச் சுற்றுகின்றன. புகழ்பெற்ற திரைப்பட விழாக்களை உலகின் பல நாடுகளிலிருந்து செல்லும் அற்புதமான பல படைப்புகள் முற்றுகையிடுகின்றன. விருதுகளும் வாங்குகின்றன. ஆனால், இந்தியாவிலிருந்து திரைவிழாக்களுக்குப் போகும் படங்கள் மிகக் குறைவு. தமிழிலிருந்து செல்லக்கூடிய படங்களோ மிக மிக அரிது.
மலையாளத்தில் பலப்பல வருடங்களாகவே கலைப் படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கன்னடத்திலும் அப்படியே. இவற்றுக்குப் பின்னர்தான் தமிழ் வருகிறது. இதை அப்படியே இந்தியாவுக்குப் பொருத்திப் பார்த்தால், வங்காளப் படங்களே தரமான கலைப் படங்களைப் பல்லாண்டு காலமாக அளித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றுக்குப் பின்னரே மராத்தி போன்ற இதர வட இந்திய மொழித் திரைப்படங்கள் வருகின்றன.
சத்யஜித் ராய்க்கு முன்னரே
இந்தியாவில் கலைப் படங்கள் வரிசையாக வெளியாக ஆரம்பித்தது வங்காள மொழியில்தான். சத்யஜித் ராய் அப்படிப்பட்ட வங்காளக் கலைப்படங்களின் பிதாமகராக உலகெங்கும் கருதப்படுகிறார். அவரது படங்களால் தாக்கம் பெற்றுத் தங்களின் திரை வாழ்க்கையைச் செப்பனிட்டுக்கொண்ட இயக்குநர்கள் உலகெங்கும் பலர் உண்டு. ஆனாலும், சத்யஜித் ராய்க்கு முன்னரே தனது முதல் படத்தை எடுத்தும், அந்தப் படம் வெளிவராமல் போய் அதன் பின் பல அருமையான, தரமான கலைப் படங்கள் எடுத்து, இப்போது உலகெங்கும் பெரும்புகழ் பெற்றிருக்கும் ரித்விக் கட்டக்கும் இந்தியாவின் கலைப் படங்கள் உலகெங்கும் சுற்ற ஒரு முக்கியமான காரணம்.
ஆனால், சத்யஜித் ராயைத் தெரிந்தவர்கள் பலருக்கு ரித்விக் கட்டக்கைத் தெரியாது. காரணம், ராயைப் போல் கட்டக் ஒரு கனவான் அல்ல. மிகுந்த பிடிவாதத்தோடு, தான் நினைத்ததைச் செய்துகொண்டு ஒரு போராளியைப் போல வாழ்ந்தவர் கட்டக். இதனாலேயே அவரது ஒவ்வொரு படத்துக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. அவரது முதல் படமான ‘நகோரிக்’, சத்யஜித் ராயின் ‘பதேர் பாஞ்சாலி’ வெளிவருவதற்கு மூன்று வருடங்கள் முன்னரே, 1952-லேயே முடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அப்படம் 1976-ல்தான் வெளிவர முடிந்தது. அதற்குள் ரித்விக் கட்டக் இறந்திருந்தார்.
கட்டக் இயக்கிய படங்கள் மொத்தமே எட்டுதான். சில படங்களுக்குக் கதை, திரைக்கதை ஆகியவையும் எழுதியுள்ளார். புனே திரைப்படக் கல்லூரியிலும் கட்டக் பணிபுரிந்திருக்கிறார். அங்கே இவரிடம் படித்தவர்தான் ஜான் ஆப்ரஹாம். ‘அக்ரஹாரத்தில் கழுதை’ என்ற படத்தை தமிழில் எடுத்தவர்.
கலைப் படங்களின் பொற்காலம்!
இந்தியாவின் திரைப்படங்களில் இப்படியாக ரித்விக் கட்டக், சத்யஜித் ராய் ஆகியோர் தொடங்கிய பயணம்தான் தரமான கலைப் படங்கள் உலகம் முழுக்க அனுப்பப்படக் காரணமாக இருந்தன. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் மிருணாள் சென்னும் கலைப் படங்கள் எடுக்கத் தொடங்கியிருந்தார். இந்த மூவருடனும் சேர்ந்து தபன் சின்ஹாவும் வங்காள மொழியில் கலைப் படங்கள் எடுக்கத் தொடங்கிய அறுபதுகளே கலைப் படங்களில் வங்காளம் மற்றும் இந்தியாவின் பொற்காலம்.
இக்காலத்துக்கும் முன்னரே, 1925-லேயே பாபுராவ் பெயிண்டர் எடுத்த சவ்காரி பாஷ் (Savkari Pash) என்ற மவுனப் படம், ஒரு நல்ல கலைமுயற்சியாக இப்போதும் கருதப்படுகிறது என்றாலும் அக்காலகட்டத்தில் வரிசையாக இப்படிப்பட்ட கலைப் படங்கள் வரத் தொடங்கியிருக்கவில்லை. இதில் நடித்திருந்தவர் சாந்தாராம். இதுபோலவே, கான் திரைப்பட விழா தொடங்கிய 1946-ல், சேத்தன் ஆனந்தின் ‘நீச்சா நகர்’ Neecha Nagar திரைப்படம், சிறந்த திரைப்பட விருது வாங்கியிருக்கிறது.
இவர்களுக்குப் பின்னர் ஷ்யாம் பெனகல், அடூர் கோபாலகிருஷ்ணன், கிரீஷ் காசரவள்ளி, மணி கௌல், கோவிந்த் நிஹலானி போன்றோர் மிகத் தரமான கலைப் படங்கள் எடுத்த இந்திய இயக்குநர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஓர் அழகான பிரிவு
இப்படிப்பட்ட கலைப் படங்கள் ஒருபுறம் எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே, ஆஃப்-பீட் (Off-beat cinema) படங்கள் என்ற குறிப்பிட்ட வகைப் படங்களும் பிரபலமாகிக்கொண்டிருந்தன. வணிகப் படங்களுக்கும் கலைப் படங்களுக்கும் இடையே வளர்ந்த ஒர் அழகான பிரிவு இது. வணிகப் படங்களின் கூறுகளான பாடல்கள், நகைச்சுவை ஆகியன இவற்றில் இருக்கும். அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கருவை எடுத்துக்கொண்டு, அந்தக் கதையை மிக இயல்பாக ஆடியன்ஸுக்கு அளித்த படங்களே ஆஃப்-பீட் படங்கள். இவற்றை இந்தியாவில் பிரபலப்படுத்தியவர்கள் ரிஷிகேஷ் முகர்ஜி, குரு தத், பாஸு சட்டர்ஜி, பாஸு பட்டாச்சார்யா ஆகியோர்.
இவர்களில் குரு தத் தவிர மீதி மூவரும் வங்காளிகள் என்பதைக் கவனித்துப் பாருங்கள். வங்காளத்தின் தன்மை அப்படிப்பட்டது. இவர்களைப் பற்றி விரிவாக இனி வரும் வாரங்களில் கவனிக்கப்போகிறோம். தற்காலத்திலும் இப்படிப்பட்ட ஆஃப்-பீட் படங்களும் கலைப்படங்களும் இந்தியாவில் வரத்தான் செய்கின்றன. அவை பெரும்பாலும் இந்தி, மராத்தி, வங்காளம், மலையாளம் ஆகிய மொழிகளிலேயே எடுக்கப்படுகின்றன. ‘ஷிப் ஆஃப் தீஸியஸ்’ (Ship of Theseus) ஒரு மிகச் சிறந்த உதாரணம். ஃபன்றி (Fandry) இன்னொரு அற்புதமான படம்.
வரும் வருடத்தின் ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ‘கோர்ட்’ (Court), உண்மையில் மிக முக்கியமான பிரச்சினையொன்றை, நகைச்சுவையாகச் சொல்லியிருக்கும் படம். ஒரு சமூகப் போராளி, புரட்சிப் பாடகர், அரசினால் கைதுசெய்யப்பட்டுவிடுவார். காரணம் என்னவென்றால், மலம் அள்ளுபவர்களைப் பற்றிய இவரது பாடல் ஒன்றைக் கேட்ட மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்றும், இதனால் அவரது தற்கொலைக்குக் காரணமாக இருந்த இந்தப் புரட்சிப் பாடகரைக் கைது செய்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தப் போராளியின் சார்பில் ஒரு வழக்கறிஞர் ஆஜராகிறார். ஒவ்வொரு முறையும் இவரை பெயிலில் அனுப்ப வேண்டும் என்று அவர் வாதாடும்போதும் வழக்கு ஒத்திவைக்கப் பட்டுக்கொண்டே வருகிறது.
அரசுத் தரப்பின் வழக்கறிஞர், இந்தப் புரட்சிப் பாடகர் மிக ஆபத்தானவர் என்றும், இவரை வெளியில் விட்டால் இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்து என்றும் வாதிடுகிறார். அந்தப் பாடகருக்கோ வயது அறுபதுக்கும் மேல். பல உடல் உபாதைகளால் அவதியுறுகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே படம். இந்தியாவின் நீதித் துறையை இத்தனை கடுமையாக விமர்சனம் செய்திருக்கும் ஒரு படம் இயல்பாக வெளிவந்து, ஆஸ்கருக்கும் அனுப்பப்படுகிறது என்பதே முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்னர்தான், இந்தப் படத்தில் பல விஷயங்களும் பகடியாகவே சொல்லப்பட்டிருப்பதால் ஆட்சியாளர்களுக்கு அது புரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. சமகாலத்தில் நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை ஒன்றை ஒரு வருடம் முன்பே இப்படத்தில் எடுத்துக் காட்டிவிட்டனர்.
தற்சமயத்தில் சமுதாய அக்கறை என்பது அருகிவருகிறது. இந்தக் காலகட்டத்தில், எங்கோ யாரோ இன்னமும் சமுதாய அக்கறையோடு சிந்திக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடே கோர்ட், ஃபன்றி போன்ற படங்கள். இதுபோலத் தமிழகத்திலும் சமூக அக்கறையுடைய படைப்பாளிகள், நேர்மையான, வெளிப்படையான, எந்த வித சமரசமும் இல்லாத உண்மையான படங்களைத் தர முன்வர வேண்டும். ஆனால் இது இன்னமும் கனவாகவே இருக்கிறது. அது மட்டும் நடந்துவிட்டால், உலகப் பட வரிசையில் தமிழ் சினிமாவுக்குத் தனியிடம் கிடைக்கும். அந்தக் காலம் விரைவில் வருமா?
தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago