சினிமாவில் நடிகராக அடையாளம் பெறத் துடிப்பது ஓர் இடையறாத போர்!
வெற்றிபெற்றவர்களின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் பல உண்மைகள் புலப்படும். வெற்றிபெற்ற ஒவ்வொரு நடிகரும் நாயகன், நகைச்சுவைக் கலைஞர், குணச்சித்திர நடிகர், எதிர்நாயகன் என்று கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தடம்பதித்துள்ளனர். கதாநாயகர்களாக நடிக்கும் சிலர் கடைசிவரை அந்த அந்தஸ்துடன் தொடர்ந்து நீடிக்கிறார்கள். துணைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் பலர், நகைச்சுவை நடிகர்களாக பெயர் பெறும் சிலர், அடுத்தடுத்துப் பாய்ச்சலை நிகழ்த்திக் கதாநாயகனாகத் தங்களைத் தகுதிப்படுத்திக்கொண்டதையும் பார்த்திருக்கிறோம்.
நாயக பிம்பத்தைக் கைவிட முடியாத சிலர், திரையுலகப் போட்டியில் தங்களைத் தொலைத்திருக்கிறார்கள். அடுத்தடுத்த தலைமுறை நடிகர்களுடன் போட்டிபோட முடியாத சிலர் துணைக் கதாபாத்திரங்களுக்குள் தங்களைப் பொருத்திக்கொண்டார்கள். சிலர் எதிர்நாயகனாக தங்களது இடத்தைத் தக்கவைத்திருக்கிறார்கள்.
ஆனால், இதைத் தலைகீழாகச் செய்தவர்கள் சிவாஜியும் கமலும். அந்த ஆளுமைகளுக்குப் பின்?! ஒருவர் ஆச்சர்யப்படுத்திக்கொண்டிருக்கிறார். வணிகச் சந்தைக்கான மதிப்பை இழந்த ஒரு நடிகர், துணைக் கதாபாத்திரத்திலோ எதிர்நாயகனாகவோ நடிப்பது பெரிதல்ல. நாயகனாக மக்களின் மனங்களில் இடம்பிடித்துவிட்ட சமகாலத்திலேயே வணிக மதிப்பு குறித்துக் கவலைப்படாமல், அவருக்கு முந்தைய தலைமுறையின் உச்ச நடிகர்களின் படங்களில் அவர் பங்களித்திருக்கிறார்! யோசித்துப் பார்த்தால், அரிதினும் அரிதான அந்த அம்சத்தை, துணிந்து தனதாக்கிக்கொண்டிருக்கும் தற்கால நடிகர் விஜய் சேதுபதி.
‘பேட்ட’யும் ‘மாஸ்ட’ரும்
தனக்கு 35 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, நிலைத்து, உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் ரஜினிக்கு வில்லனாக ‘பேட்ட’ படத்திலும், தனக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் பயணத்தைத் தொடங்கிய விஜய்க்கு வில்லனாக ‘மாஸ்டர்’ படத்திலும் நடித்ததன் மூலம், ஹீரோ, வில்லன் என்கிற வழக்கமான வணிக சினிமா பிம்பத்தை தகர்த்தெறிந்த நடிகராக விஜய் சேதுபதி தன்னை முன்னகர்த்திக் காட்டியிருக்கிறார்.
‘நான் நடிகன் மட்டுமே. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்குத் தேவையான எல்லா நியாயங்களையும் செய்வேன்’ என்பதே திரை நடிப்பின் மீதான விஜய் சேதுபதியின் பார்வையாக உள்ளது. இந்த ஒரு அம்சமே மற்ற நடிகர்களிலிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.
‘ஒரே பாணியிலான நடிப்பைத்தானே விஜய் சேதுபதி கையாள்கிறார், எந்தக் கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டாலும் அவராகவே தெரிகிறாரே’ என்கிற ரசிகப் பார்வையும் அவர் மீது கவிந்திருக்கிறது. ஆனால் கூர்ந்து கவனித்தால், கதாபாத்திரங்களுக்குள் ஊடுருவிச் சென்றுவிடும் விஜய் சேதுபதியை அவர் ஏற்ற வணிக நாயகன் கதாபாத்திரங்களிலும் பார்க்க முடியும்.
இரட்டைத் தன்மை
தமிழ்த் திரை நடிகர்களின் தலைமுறை வரிசையாக எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்- அஜித், சூர்யா- விக்ரம், ஜெயம் ரவி- விஷால்- ஆர்யா- ஜீவா, தனுஷ்- சிம்பு, சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி என்று குறிப்பிட முடியும். இதில் என்டர்டெய்னர்- ஃபெர்பார்மர் என்கிற இரட்டைத் தன்மையின் அற்புதமான கலவையாக விஜய் சேதுபதி பார்வையாளர்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறார்.
சில தோல்விப் படங்களைத் தந்தால் தன் மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்ள, கணிசமான எண்ணிக்கையில் மறுஆக்கப் படங்களில் நடித்து, தங்கள் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பும் நடிகர்கள் அதிகமுண்டு. ஆனால், 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ‘காதலும் கடந்துபோகும்’ படத்தைத் தவிர எந்த மறுஆக்கத்திலும் நடிக்கவில்லை. அந்தப் படத்திலும்கூட நாயகனாக, அதேநேரம் நாயக பிம்பத்தை நொறுக்கும் கதாபாத்திரத்தை ஏற்றார். இதன்மூலம் புதிய சிந்தனைகள், மாறுபட்ட கற்பனைகளுக்குப் பாதை அமைக்கும் படைப்பாளிகளுக்கு தன்னை ஒப்புக்கொடுப்பவராக விஜய் சேதுபதி இருப்பதை கவனிக்க முடியும்.
இயலாமைகளின் நாயகன்!
கமர்ஷியல் சினிமா, பரிசோதனை சினிமா, கான்செப்ட் சினிமா என்கிற முயற்சிகளை இடைவிடாமல் மேற்கொள்பவராக விஜய் சேதுபதி இருக்கிறார். சிரிப்பு மூட்டும் ரவுடி, அடிக்கத் தெரியாத ரவுடி, போலி ரவுடி, மாஸ் ரவுடி, சொதப்பும் மொக்கையான ரவுடி என சேதுவின் படங்களை மிக எளிதாக வகை பிரிக்க முடியும். ஆனால், அதில்தான் அவரின் நுட்பமான நடிப்பு பளிச்சிடுகிறது. நாயகத்தன்மை என்பதில் தோல்விகளும் இயலாமைகளும் ஓர் அங்கம் என்பதைக் கூறும் சித்தரிப்புகளுக்கு விஜய் சேதுபதியின் பங்களிப்பு அபாரமானது.
இன்ஸ்டாகிராம் யுகத்தில் தன் நாயக பிம்பத்தைத் தூக்கிநிறுத்தவே அனைவரும் துடிப்பார்கள். ஆனால், விஜய் சேதுபதி தன் 25-வது படமான ‘சீதக்காதி’யில் வயதான நாடகக் கலைஞராக முக்கால் மணி நேரம் மட்டுமே வரும் கதாபாத்திரத்துக்கு உயிர்கொடுத்தார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நானும் ரவுடிதான்’, ‘சூது கவ்வும்’ஆகிய படங்கள் வடிவேலு மாதிரியான நகைச்சுவை நடிகர்களுக்கான களம்தான். கொஞ்சம் பிசகினாலும் ரசிக்க முடியாது. அதன் எல்லை அறிந்து, கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்த விதத்தில் அடுத்த பரிமாணத்தை விஜய் சேதுபதி கச்சிதமாக வெளிப்படுத்தினார்.
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை, ‘இமைக்கா நொடிகள்’, ‘க/பெ ரணசிங்கம்’ ஆகிய படங்களில் கௌரவக் கதாபாத்திம் என்றாலும் பெண் மையத் திரைப்படங்களுக்கான பங்களிப்பிலும் அவர் தனது ஈடுபாட்டைக் காட்டுகிறார். அதேபோல் நட்புக்காக சில படங்களில் நடிக்கிறார், கதைத் தேர்வில் கவனம் செலுத்துவதில்லை, வகைதொகை இல்லாமல் எல்லாப் படங்களிலும் நடிக்கிறார் என்று அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், ஒரு நடிகன் சில சறுக்கல்களைச் சந்தித்தாலும், சிறப்பான பங்களிப்பின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற முடியும் என்பதை ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார். தன் பாதை தெளிவானது, அது எந்த ஒளிவட்டத்துக்குள்ளும் சிக்காத நடிகனுக்குரியது என்பதையும் காட்டிவிட்டார்.
எப்படி இது சாத்தியம்?
நடித்தால் ஹீரோதான் என்று விஜய் சேதுபதி அடம்பிடிப்பதில்லை. ரசிகர்களின் மாஸ் ரசனை சார்ந்த அணுகுமுறையில் மாற்றத்தை உருவாக்கும் ஊக்கியாக வெவ்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார். இதன்மூலம் வில்லனாக நடித்தாலும், கௌரவத் தோற்றத்தில் நடித்தாலும் மீண்டும் தன்னை நாயகன் வாய்ப்புகள் தேடிவரும் என்பதற்கான நிகழ்கால சாட்சியாகி நிற்கிறார்.
தமிழ் சினிமாவுக்கு வெளியே.. நவாசுதீன் சித்திக், இர்ஃபான்கான், ஃபகத் பாசில் என்று பிற மொழி ஆளுமைகளை அண்ணாந்து பார்த்து சிலாகித்த சினிமா ஆர்வலர்கள், விஜய் சேதுபதியின் சத்தமில்லாத சாதனைகளைக் கண்டு அவரும் அப்படிப்பட்ட ஒரு ஆளுமைதான் என்று குறிப்பிடுகிறார்கள்.
‘மாநகரம்’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் முனீஸ்காந்த் கதாபாத்திரம், ‘அந்தாதூன்’ இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகன் என்று இங்கேயும் துணைக் கதாபாத்திரம் - நாயகன் கொள்கையில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ மவுனப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பதால், வேறு வகை நடிப்பை தன்னிடம் எதிர்பார்க்க ரசிகர்களைத் தூண்டியிருக்கிறார். அதேவேளை விஜய் சேதுபதியிடம் ஒரே பாணியிலான நடிப்பு தென்படுவாகக் கூறும் விமர்சனத்தையும் அவர் புறம்தள்ளக் கூடாது. நாசர், யூகிசேது உள்ளிட்டோரும் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நடிப்புப் புள்ளியின் தொடக்கத்தில், ‘பீட்சா’வில் ஒற்றை டார்ச் லைட்டுடன் ஆள் அரவமற்ற பங்களாவில் 20 நிமிடங்கள் பதறி, பயந்து, அலறி, ஓடி, ‘நான் நடிப்பின் நுணுக்கங்கள் கைவரப்பெற்றவன்’ என்பதைக் காட்டிய விஜய் சேதுபதி, இந்தச் சவாலையும் தாண்டி வரவேண்டும். அதற்கான தகுதியும் திறமையும் உழைப்பும் விஜய் சேதுபதியிடம் நிரம்பியிருப்பதாகவே பார்வையாளர்கள் நம்புகிறாகள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் தற்கால நம்பிக்கை நட்சத்திரம் ஆகியிருக்கிறார் விஜய் சேதுபதி.
தொடர்புக்கு: nagappan.k@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 mins ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago