சினிமா ரசனை 17- மர்லின் மன்றோவின் உயில் அளித்த அதிர்ச்சி!

By கருந்தேள் ராஜேஷ்

சென்ற கட்டுரையில் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ரஷ்ய நாடகக் கலைஞரான ஸ்டானிஸ்லாவ்ஸ்கி பற்றியும், அவர் வடிவமைத்த மெதட் ஆக்டிங் என்ற நடிப்பு உருவாகக் காரணமாக அமைந்த சூழல் பற்றியும் பார்த்தோம். ஆனால், குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவெனில், தான் ஆராய்ந்து உருவாக்கிய இந்த நடிப்பு முறைமைக்கு ‘system’ என்றே முதலில் பெயரிட்டார் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. அவர் இந்த முறையை உருவாக்கிப் பல ஆண்டுகள் கழித்துதான் ‘மெதட் ஆக்டிங்’ என்ற பதம் உருவாக்கப்பட்டது.

பல்வேறு பரிசோதனைகளுக்குப் பிறகு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி உருவாக்கிய இந்த முறைமையில் மூன்று செயல்முறைகள் முக்கியமானவை. அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம். இவைதான் தற்போதைய ‘மெதட் ஆக்டிங்’குக்குக் காரணிகளாக விளங்குகின்றன.

1. ஒரு நடிகன், ஒரு பாத்திரத்தை ஏற்றுக்கொள்ளும்போது, அந்தப் பாத்திரத்தைப் பற்றிய பல கேள்விகளை மனதில் எழுப்பிக்கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சிச்சுவேஷனில் அந்தக் கதாபாத்திரம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி வரும்போது, ‘அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்?’ என்ற கேள்வி உதவும். இதுபோல், ‘எனக்கு இந்தச் சம்பவம் நிஜ வாழ்க்கையில் நடந்திருந்தால் எனது ரியாக்‌ஷன் என்னவாக இருந்திருக்கும்?’ என்பது இதன் இன்னொரு வடிவம். இதுபோன்ற பல கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு உண்மையான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் கதாபாத்திரத்தை ஒரு நடிகன் சிறப்பாக நடிக்க முடியும்.

2. குறிப்பிட்ட கதாபாத்திரம் அந்த நாடகத்தில் செய்யக்கூடிய செயல்களை அலசி, ஏன் அப்படிப்பட்ட செயல்களை அது செய்கிறது என்று யோசித்தல். இப்படி யோசித்தால், அந்த நாடகத்தில் இருக்கும் சம்பவங்களுக்கு மிகவும் முன்னர், அந்தக் கதாபாத்திரத்தின் ஆரம்ப வருடங்களிலிருந்து அது நடந்துகொண்ட முறைகளைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும். உதாரணத்துக்கு, ஒரு போலீஸ்காரனைக் குத்திக் கொன்றுவிடுகிறாள் கதாநாயகி. ஏன் என்று யோசித்தால், அவளது வாழ்வில் ஒரு கட்டத்தில் போலீஸ்காரர்களால் இன்னல்களை அனுபவித்திருக்கிறாள் என்பது புரியும்.

அதாவது, அந்தக் குறிப்பிட்ட நாடகத்தில் இருக்கும் விஷயங்களை வைத்துக்கொண்டு கதாபாத்திரத்தின் குணங்களை விளக்குதல் (இதற்குப் பெயர்தான் தற்போது ‘கேரக்டர் ஸ்கெட்ச்’ என்று திரைக்கதைகளில் சொல்லப்படுகிறது. இதனை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே ஸ்டானிஸ்லாவ்ஸ்கி விளக்கிவிட்டார்). இப்படி ஒரு கதாபாத்திரத்தைப் பற்றிய முடிவுக்கு வருதல், அந்தக் கதாபாத்திரம் எடுக்கும் முடிவுகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உதவும்.

3. நாடகத்தின் ஒவ்வொரு காட்சியிலும், குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன என்பதை அந்த நடிகர் உணர வேண்டும். நாடகத்தை முழுவதும் பார்த்தால், கடைசியில் அந்தக் கதாபாத்திரத்தின் லட்சியத்தில் அது வெல்கிறதா, தோற்கிறதா என்பது புரிந்துவிடும் (கதாநாயகியை மணந்துகொள்ளுதல், கதாநாயகியோடு தற்கொலை செய்துகொள்ளுதல், கதாநாயகியின் தந்தையைக் கொல்லுதல், கதாநாயகியோடு ஊரை விட்டே ஓடுதல், இத்யாதி…).

ஆனால், அப்படித் தனது இறுதி லட்சியத்தை நிறைவேற்றும் பாதையில் ஒவ்வொரு காட்சியாக அந்தக் கதாபாத்திரம் நடிக்கும்போது, அந்த ஒவ்வொரு காட்சியிலும் அதன் நோக்கம் என்ன என்பதை நடிகர்கள் உணர வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட காட்சியின் நோக்கம், பல் தேய்க்க வேண்டும் என்றுகூட இருக்கலாம். ஸ்க்ரிப்டில் அது வெளிப்படையாக இருக்காது. ஆனால், அதனை அந்த நடிகர் உணர வேண்டும். அப்போதுதான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும்.

இப்படி உணர்வதற்கு, அந்தக் காட்சியை அந்த நடிகர் உடைத்து, சிறிய பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். எப்படியென்றால், பல் தேய்க்க ப்ரஷ்ஷைத் தேடுவதாக, ப்ரஷ் கிடைத்தும் பேஸ்ட்டைத் தேடுவதாக, பேஸ்ட்டைத் தேடும்போது யாராவது வந்து கழுத்தறுப்பதாக, இப்படிப் பல காட்சிகள் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட காட்சிகளில் ஒவ்வொரு காட்சிக்கும் என்ன நோக்கம் என்பதை அந்த நடிகர் தெரிந்துகொள்ள வேண்டும். ப்ரஷ் கிடைத்தவுடன் சந்தோஷத்தை வெளிப்படுத்தலாம்.

பேஸ்ட் கிடைத்ததும் உற்சாகம். கழுத்தறுப்பு கேஸ் வந்ததும் கோபம் - ஆனால் அதை வெளிப்படுத்த இயலாத இயலாமை - இப்படி. அதேபோல் வசனங்களைப் பேசுவதிலும், ஒவ்வொரு வரியிலும் ஒளிந்திருக்கும் குணங்களை வெளிப்படுத்தவும் அந்த நடிகர் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணம்: கழுத்தறுப்புடன் பேசும்போது நைச்சியமாக அவரை வெளியேற வைத்தல் - அதற்கேற்ற முகபாவம் - இப்படி.

இப்படியாக, நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் என்றால் அது கான்ஸ்டண்டின் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியே. உண்மையாகவே இலக்கணம் எழுதி அதைத் தொகுத்து வைத்தவர் இவர். ஆனால், இவர் இப்படி இலக்கணம் எழுதிய 1900-களில் மெதட் ஆக்டிங் என்ற விஷயமே இல்லை. இவரது குறிப்புகளிலிருந்து வளர்ந்து, பின்னாட்களில் பலராலும் பின்பற்றப்பட்டு, மெருகூட்டிச் செய்யப்பட்ட விஷயமே இந்த மெதட் ஆக்டிங். எனவே, அதற்கு முழுமுதல் காரணம் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி என்றுதான் சொல்லியாக வேண்டும்.

மெதட் ஆக்டிங் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கு முன்னர், இன்னும் சில சுவையான தகவல்களையும் கவனிப்போம்.

‘காட்ஃபாதர்- 2’ திரைப்படத்தில் நடித்ததற்காக, ‘சிறந்த துணை நடிகர்’ பிரிவில் இருவர் பரிந்துரைக்கப்பட்டனர். அந்த இருவரில் ஒருவர் குரு. இன்னொருவர் அந்த குருவின் சிஷ்யர். ஒரே சமயத்தில் ஒரே படத்துக்காக நாமினேட் செய்யப்பட்ட இந்த குரு-சிஷ்ய ஜோடியில் பரிசை இறுதியில் வென்றது குருவல்ல. சிஷ்யரே குருவையும் விஞ்சி நடித்தமைக்காக சிறந்த துணை நடிகர் பரிசை வென்றார்.

அந்த சிஷ்யரின் பெயர் - ராபர்ட் டி நீரோ. அவரது குருநாதர், டி நீரோவுக்கு மட்டுமல்லாமல் அல் பசீனோ, மர்லின் மன்ரோ, ஜேம்ஸ் டீன், டஸ்டின் ஹாஃப்மேன், பால் ந்யூமேன் போன்ற ஒரு டஜன் நடிகர்களுக்கு குருவாக விளங்கினார். ‘ஹாலிவுட்டில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்’ என்ற புகழுக்குச் சொந்தக்காரர். மர்லின் மன்றோ இறந்த சமயத்தில், அவரது உயிலின்படி அவரது சொத்துக்களில் 75 சதவீதத்தை இந்த நபருக்கு எழுதி வைத்தார். காரணம் - ‘அவர் எனக்கு ஒரு தந்தையைப் போல. அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் புகழின் உச்சியை அடைய முழுமுதல் காரணம் இவர்தான்’ என்று சொல்லியிருக்கிறார் மன்றோ.

அவர்தான் லீ ஸ்ட்ராஸ்பெர்க். எப்படி ரஷ்யாவில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிகர்களை அவதானித்து அவரது சிஸ்டத்தை உருவாக்கினாரோ, அப்படி ஸ்ட்ராஸ்பெர்க்குக்கு ஸ்டானிஸ்லாவ்ஸ்கி ஒரு கிரியா ஊக்கியாக இருந்தார் என்று அறிகிறோம். ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, அமெரிக்காவைச் சேர்ந்த லீ ஸ்ட்ராஸ்பெர்கை பாதித்த பின்னணிக் கதை பரபரப்பான ஒரு திரைக்கதை போன்றது. அதை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடர்புக்கு rajesh.scorpi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்