தமிழகம் ஒரு பெரும் திருவிழாவை ஊடகங்கள் வழியே கண்டுகளித்தது. 3138 வாக்குகளுக்காக நடந்த தேர்தல் களேபரங்கள், குற்றச்சாட்டுகள் என எல்லாம் அடங்கி ஓய்ந்திருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு. இப்பிரச்சினை முடிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்கிறது கோடம்பாக்கம்.
கைப்பற்றியது பாண்டவர் அணி!
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை பொறுத்தவரையில் முதன் முறையாக ஒரு இளம் தலைமுறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பாக சரத்குமார் அணி மற்றும் பாண்டவர் அணி என இரு அணிகளுமே ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினார்கள். அதிலும் பெரும் காமெடி என்னவென்றால், சரத்குமார் அணி கூட்டிய கூட்டத்தில் “ரஜினி சார், ‘வெற்றியடைய வாழ்த்துகள்’ என்று ஒரு பூங்கொத்து அனுப்பியிருக்கிறார்” என்று காட்டினார்கள்.
அதே சமயத்தில் பாண்டவர் அணியின் கூட்டம் வேறு ஒரு இடத்தில் நடைபெற்றது. ஒரு பூங்கொத்தைக் காட்டி, “இது அமிதாப் பச்சன் சார் வாழ்த்து தெரிவித்து அனுப்பியது” என்றார்கள். இதுவரை மக்களை மகிழ்வித்து வந்த கலைஞர்கள் ஒட்டுக்காக இப்படி அடித்துக்கொண்ட விதம் பார்ப்பதற்கு சிரிப்பாகத்தான் இருந்தது.
பரபரப்பான வாக்குப்பதிவு
அட்லீ இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இருந்ததால், பெரிய நடிகர்களில் முதல் ஆளாக வந்து வாக்குப்பதிவு செய்துவிட்டுக் கிளம்பினார் நடிகர் விஜய். அதனைத் தொடர்ந்து ரஜினி, வாக்குப்பதிவு செய்தார். பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ரஜினி, “தமிழ்நாடு நடிகர் சங்கம்” என்று பெயர் மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் இருந்த இரு அணியினரும் மாறி மாறிப் பரிசீலிப்போம், பொதுக்குழுக் கூட்டி முடிவெடுப்போம் என்று பேட்டியளித்தார்கள். வாக்களித்துவிட்டுப் பேசிய கமல், “தென்னிந்திய நடிகர் சங்கம், இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும்” என்று கூறிவிட்டுச் சென்றார். இவ்வாறு பல்வேறு கருத்துகள் வாக்குப்பதிவு களத்தில் எதிரொலித்தன.
மதிய நேரத்தில் வாக்குவாதத்தால் 10 நிமிடங்கள் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. ஒருவழியாக தேர்தல் நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து சரத்குமார் அணியினர் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.
வராத அஜித்
பெரிய நடிகர்கள் பட்டியலில் அஜித் வாக்களிக்க வரவில்லை. அவருக்குக் காலில் அடிபட்டிருக்கிறது, அதுமட்டுமன்றி காலை வர டப்பிங் பேசிவிட்டுச் சென்றார் என்று கூறப்பட்டது. உண்மை நிலவரம் என்னவென்று விசாரித்தபோது, “நடிகர்களை விழாக்களுக்கு வரச்சொல்லி வற்புறுத்துகிறார்கள்” என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முன்பு ஒரு விழாவில் அஜித் பேசி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த விவகாரத்தின்போது யாராவது எனக்குக் கைகொடுத்தார்களா, என்னாச்சு என்று விசாரித்தார்களா.. அப்படியிருக்கும்போது நான் ஏன் வாக்களிக்க வேண்டும்” என்று அமைதியாக இருந்துவிட்டார் அஜித் என கூறப்படுகிறது.
முன்னணி நடிகைகளில் த்ரிஷா, நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால், ஹன்சிகா உள்ளிட்ட பலரும் வாக்களிக்க வரவில்லை. வாக்களிப்பதற்காக நடிகை பூஜா, இலங்கையிலிருந்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பழம்பெரும் நாடக நடிகர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் வீல் சேரில் வந்து வாக்களிக்களித்தது ஆச்சரியமாக இருந்தது.
முடிவுக்கு வருமா?
சத்யம் (SPIC) சினிமாஸ் நிறுவனத்துக்கு போடப்பட்ட ஒப்பந்தம்தான் இரு அணியினருக்கும் இடையே பெரும் பிரச்சினையாக வெடித்தது. இந்நிலையில் சரத்குமார், “செப்டம்பர் 29-ம் தேதியே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாகவும், தேர்தல் களத்தில் சொல்லவில்லை” என்று கூறி ரத்துசெய்த பதிவைக் காட்டினார். இதற்கு பாண்டவர் அணி தரப்பிலிருந்து, “செயற்குழு, பொதுக்குழு கூட்டி போடப்பட்ட ஒப்பந்தத்தை, அதே குழுக்களைக் கூட்டித்தான் ரத்துசெய்தார்களா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
தேர்தல் முடிந்துவிட்டாலும், இரு அணியினருக்கும் இடையேயான பிரச்சினை என்பது முடியவில்லை என்பதுதான் அனைவரது கருத்தும். ஏனென்றால், “சத்யம் சினிமாஸ் நிறுவனதுடன் போடப்பட்ட ஒப்பந்தம் ஒரு நல்ல ஒப்பந்தம், அதைப் பரிசீலிக்க வேண்டும் ” என்று கேட்டிருக்கிறார் சரத்குமார். அதனை பாண்டவர் அணி நிராகரித்துவிட்டது. பாண்டவர் அணி தரப்பில் வேறு ஒரு கட்டிடம் கட்ட திட்டம் வகுத்துள்ள நிலையில் அதற்கு, சரத்குமார் அணியினர் எதிர்ப்பு தெரிவிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று காதைக் கடிக்கிறார்கள் சரத் அணியின் வட்டாராத்தில்.
இந்தத் தேர்தல் மூலமாக தமிழக மக்கள் ஒன்றை மட்டும் தெரிந்துகொண்டார்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை விட தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் போர்க்களம்தான் சுவாரசியமானது என்று!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago