சமரசம் சகஜமாகிப்போன தமிழ் சினிமாவில் கத்துக்குட்டி ஒரு அதிசயம்தான். கதாநாயகன் கருத்து சொன்னாலே போரடிக்குது என்று நெளியும் ரசிகர்கள், இரண்டரை மணி நேர கருத்து சொல்லும் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்கள், அழுகிறார்கள், சிரிக்கிறார்கள்.
படத்தின் மொத்த நீளத்துக்குள் அச்சு அசலான மூன்று ஆவணப்படங்களை உள்ளே சொருகியுள்ளார் இயக்குநர். செல்போன் டவர் ஊருக்குள் வந்தால் என்ன என்ன பாதிப்புகள் வரும் என்பதை பின்னணி குரல் ஒலிக்க வரும் காட்சிகளும், மீத்தேன் என்றால் என்ன என்பதை விளக்கும் ஆவணப்படமும், “நாங்க கடைசி வரை அரிசியை மட்டும் திங்கவே இல்லை” என்கிற தேர்தல் திருவிழா பாட்டும் கிட்டத்தட்ட வணிக அழகியல் இல்லாமல் படத்துக்குள் கோக்கப்பட்டுள்ளன.
வணிக அழகியலைத் தாண்டி
சிறந்த திரைப்படத்துக்கான கூறுகளை அலசுவதைவிட இந்தப் படம் பேசும் பொருள் குறித்த அலசல் அவசியமானதாக இருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தக் கதைக் களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பல படங்கள் அதிகமும் வணிக அழகியல் சார்ந்து நின்றவையே.
ஆனால் இந்தப் படம் தஞ்சை மண்டலத்தின் தற்போதைய அரசியலை பேசுகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள மீத்தேன் திட்டமும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகளையும் சாமானியனுக்கும் புரியும் வகையில் பேசுகிறது. விவசாய வாழ்க்கையை மட்டுமல்ல, விவசாயம் சார்ந்த ஒரு பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சினையை தமிழகம் முழுக்கக் கொண்டு சேர்க்கும் முனைப்புடன் கத்துக்குட்டி தன் வணிக அழகியலை முன்வைத்து ஈர்க்கிறது.
தஞ்சாவூர் பகுதி சார்ந்த விவசாய வாழ்க்கையைத் தமிழ் சினிமா இதுவரை சித்தரித்து வந்துள்ளதைப் போல மிக சொகுசானதாகவோ, சுகமானதாகவோ நடைமுறையில் அது இருந்ததில்லை. அங்கு ஒரு சம்சாரி நடத்துவது மண்ணுடனான போராட்டம். நீர் இல்லாது காய்ந்தும், பெருமழை பெய்து கெடுத்தும் வாழ்க்கையில் சோர்ந்து போகாமல் வெள்ளாமையைக் கரை சேர்க்க அவன் படும் பாட்டை தஞ்சை சினிமாக்கள் பேசவில்லை.
மண்ணுடனான பிணைப்பு
உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது வெறும் சொல் வழக்கு அல்ல; அதுதான் உண்மை. மிச்சம் என்று எதுவும் தேறாது எனத் தெரிந்தும் நிலத்துடனான பிணைப்பை அவன் விட்டதில்லை. அதுதான் அவனுக்கு ரத்தமும் சதையுமானது. சொந்த நிலம் கொண்ட விவசாயிக்கு மாத்திரமல்ல, நிலத்தை நம்பியிருக்கும் கூலி விவசாயத் தொழிலாளர்களுக்கும் அதுதான் வாழ்க்கை.
‘’விவசாயி, தான் சாப்பிட வழியில்லாம சாகுறதுக்கு பேரு பட்டினிச்சாவு இல்லடா... நாலு பேருக்குச் சாப்பாடு போட வழியில்லாம போச்சேனு அதை நினைச்சுச் சாகுறான் பாரு, அதுதான் பட்டினிச்சாவு’’என்பது போன்ற வசனங்கள் விவசாயிகளின் மனசாட்சியாக ஒலிக்கின்றன. மண்ணுடனான இந்தப் பிணைப்புதான் இன்று மீத்தேன் திட்டத்தை வலிமையுடன் எதிர்க்கும் வலிமையை தஞ்சையிலிருந்து வந்து சினிமா ஊடகத்தைப் பயன்படுத்த விழைந்திருக்கும் இயக்குநர் சரவணனின் பின்புலமாக இருக்கிறது.
மீத்தேன் திட்டத்தை எதிர்க்க கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொள்கிறார் ஒரு விவசாயி. அந்தக் கடிதம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளால் எப்படி மறைக்கப்படுகிறது. அந்தச் சாவை அதிகாரிகள் எப்படி அலட்சியப்படுத்துகிறார்கள் என்பதைப் பார்க்கிறபோது, இந்திய விவசாயிகளின் தற்கொலைகள் குடும்பப் பிரச்சினை, காதல் விவகாரம், கடன் பிரச்சினை என இதுநாள்வரை கொச்சைப்படுத்தப்பட்டு வருந்திருப்பதை பார்வையாளனுக்கு கடத்துவதில் பத்திரிகையாளனாக இருந்த அனுபவம் இயக்குநர் சரவணனுக்கு கைகொடுத்திருக்கிறது.
விவசாயிக்கு 50 ஆயிரம் கடன் கொடுக்க, சொத்து பத்திரம் கேட்கிறார் கூட்டுறவு வங்கி அதிகாரி. பயிர்க்கடனை வாங்கிய எந்த விவசாயியும் அதைக் கட்டாமல் இருந்ததில்லை. வட்டி கட்டவில்லை என்றால் கறவை மாட்டையும் ஓட்டிச்சென்று விடுவார்கள் வங்கி அதிகாரிகள். பெருநிறுவனங்களுக்குக் கேள்விமுறை இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் கொட்டிக்கொடுக்கும் அதிகார வர்க்கம், உலகுக்கே படியளக்கும் விவசாயி என்றால் இளக்காரமாகத்தான் பார்த்து வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கிறோம் என்கிற பெயரில் மானியத் தொகையை எடுத்துக்கொண்டு போலிக் கணக்கு எழுதும் வங்கி அதிகாரிகள்தான் விவசாயிகளிடம் சட்டம் பேசுகிறார்கள். இதையும் காட்டமாக கட்டம் கட்டுகிறது கத்துக்குட்டி.
போகிறபோக்கில் மண்ணுடனான பிணைப்பை ‘பெரிய்ய்ய... நம்மாழ்வார் பேத்தி’ என்று கதாநாயகியை அடையாளப்படுத்துகிறார் இயக்குநர். பாரம்பரிய விவசாயத்தில் மனிதனைத் தவிர அவனை அண்டி வாழும் அத்தனை ஜீவராசிகளுக்கும் கரிசனம் காட்டப்பட்டிருக்கிறது. அதுதான் மருந்து வைத்து எறும்பை விரட்டாமல் பார்த்துக் கொள்கிறது. லாப வேட்டையில் திரியும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நமது கிராமங்களின் நிகழ்த்தி வருகிற சூழலியல் வன்முறைக்கு எதிராக அவளைப் பேசவைக்கிறது.
அதுபோல பொதுவாக தமிழ் சினிமாவின் நகைச்சுவை கதாபாத்திரம் மையக் கதையோட்டத்தோடு இணைந்து அரசியல் பேசியதில்லை. இந்தப் படத்தில் சூரியின் பாத்திரம் கிட்டத்தட்ட கதாநாயகனோடு இணைந்து விவசாயிகளின் மீதான கரிசனக் குரலாக ஒலிக்கிறது. வற்றிக் குழி விழுந்து பஞ்சடைந்த முகங்களைப் பார்க்கிறபோது, தமிழ் சினிமாவில் இது சாத்தியமானது எப்படி என யோசிக்க வைக்கிறது.
கலகம் செய்யும் காட்சிகள்
மீத்தேன் ஆய்வுக் கூட்டத்துக்காக வரும் தாசில்தாருக்கு இளநீரில் குளிர்பானத்தை கலந்து கொடுக்கிறான் கதாநாயகன். அவருக்கு உடல் உபாதையாகிறது. “இளநீர்ல கொஞ்சம் குளிர்பானத்தைக் கலந்து கொடுத்ததுக்கே உடம்பு தாங்கலையே... மீத்தேன் டெஸ்டுங்கற பேர்ல இவ்வளவு கெமிக்கல்ஸைக் கொண்டுவந்து கொட்டினா என் மண்ணுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு வரும்” என்று கேட்கிறார் கதாநாயகன். அதிகாரிக்குச் சுள்ளென்று உறைக்கிறது.
கதாநாயகன் ஒரு பாடலுக்கு சண்டை போடும் அசைவுகளையே நடனமாக ஆடுவார். அந்தக் காட்சியின் பின்புலத்தில் மொத்த ஊருக்குமான மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் அரிக்கேன் விளக்குகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவை காட்சியின் பின்புல அழகியலுக்கானது என்று நினைக்கலாம். ஆனால் சமகால மின்வெட்டு பிரச்சினையை அந்தக் காட்சி மூலம் உணர்த்துவதாகவே இருக்கிறது. மின் கம்பம் இருக்கிறது. ஆனால் மின்சாரம் இல்லை.
இப்படிப் படம் நெடுக விவசாயிகளின் ஜீவாதார வலியை, அரசியல் ரீதியாக அவர்கள் வஞ்சிக்கப்படுவதை, அவர்கள் எதிர்கொண்டிருக்கிற சூழலியல் அபாயத்தை எந்த விதமான பகட்டும் இல்லாமல் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது என்பதுதான் கத்துக்குட்டி முன்வைக்கும் அர்த்தப்பூர்வமான வணிக அழகியலாகப்படுகிறது.
கற்றுத்தரும் முயற்சி
விவசாயிகளின் பிரச்சினையை பேச “விவசாயி சட்டமன்றம் செல்ல வேண்டும்” என்கிறது கத்துக்குட்டி. ஆனால் இதுவரை சட்டமன்றம் சென்ற விவசாயிகளின் தோழர்கள் எத்தனை தூரம் விவசாயப் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் பேசமுடிந்திருக்கிறது என்பது ஆய்வு செய்ய வேண்டிய விஷயம். கத்துக்குட்டி திரைப்படம் வழங்கும் தீர்வும் விவாதிக்கப்பட வேண்டியதுதான். இதுபோன்ற உணர்ச்சிகரமான சித்தரிப்புகளுக்கு அப்பால் அது சமகாலப் பிரச்சினையை சாமான்யப் பார்வையாளனுக்கும் தேர்ந்த பார்வையாளனுக்கும் சோர்வு தராத ஒரு வணிக அழகியல் திரைப்படத்தின் மூலம் முழுமையாகக் கொண்டுசேர்க்க முடியும் என்பதே கத்துக்குட்டி சொல்லித்தந்திருக்கும் பாடம்.
இரா. சரவணன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago