சினிமா எடுத்துப் பார் 30: சிவாஜி ரசிகர்கள் என்ன செய்தார்கள்?

By எஸ்.பி.முத்துராமன்

நானும் நடிகை பிர மிளாவும் அண் ணன் சிவாஜி வீட் டுக்குச் சென்றோம். எங் களைப் பார்த்ததும் ‘‘என்ன முத்து நாளைக்கு பெங்களூர்ல படப்பிடிப்பு இருக்கு. இந்த நேரத்துல பிரமிளாவை அழைச்சுட்டு வந்திருக்கியே, என்ன விஷ யம்?’’ என்று கேட்டார் சிவாஜி. வேறொரு படப்பிடிப்பின் கிளைமாக்ஸ் காட்சியில் பிரமிளா நடிக்க வேண்டியிருப்பதையும், அவரால் பெங்களூர் வர முடியாத நிலைமையையும் எடுத்துச் சொன்னேன்.

‘‘எப்படிப்பா... நானும், பிரமிளாவும், குழந்தையும் நடிக்க வேண்டிய பாடல் காட்சியாச்சே. பிரமிளா இல்லாம எப்படி எடுப்பது?’’ என்றார். அப்போது நான், ‘‘ஒரு யோசனை சொன்னால் திட்ட மாட்டீங்களே…’’ என்று தயக்கத் தோடு கேட்டேன்.

‘‘என்ன சொல்லு!’’ என்றார்.

‘‘உங்களையும் குழந்தையையும் மட்டும் வைத்து ஐம்பது சதவீத படப் பிடிப்பை பெங்களூர்ல எடுத்துப்போம். மீதமுள்ள காட்சியை சென்னையில் அதுக்கு மேட்ச் ஆகிற இடமாப் பார்த்து தனியாக பிரமிளாவையும், குழந்தை யையும் வைத்து ஷூட் பண்ணிக்கிறேன். பெங்களூர்ல எடுக்கிற காட்சிகள்ல சில இடங்களுக்கு மட்டும் பிரமிளாவுக்கு டூப் போட்டுக்கிறேன். இதுக்கு நீங்க சம்மதிக்கணும்’’ என்றேன்.

அண்ணன் சிவாஜி அவர் கள் பெருந்தன்மையோடு ‘‘உன்னை நம்பி வர்றேண்டா... ஆக வேண்டிய வேலையைப் பாரு’’ என்றார்.

அசோஸியேட் இயக்குநர் ஜி.என்.ரங்கராஜனிடம் சொல்லி ஒரு டூப் நடி கையை மட்டும் ஏற்பாடு செய் யச் சொல்லிவிட்டுப் படப் பிடிப்புக்கு பெங்களூர் கிளம்பினோம். படப்பிடிப்புக்கு வந்த சிவாஜி, பிரமிளாவுக்காக போட்டிருந்த டூப் நடிகையைப் பார்த்துவிட்டு ‘‘யாருப்பா இந்த டூப்பைத் தேர்ந்தெடுத்தது. இந்த உருவமும், பிரமிளா உருவமும் சரியா இருக்குமா?’’ என்று கேட்டார். அதனால் டூப்பைத் தவிர்த்துவிட்டு அப்பா(சிவாஜி)விடமிருந்து குழந்தை அம்மா(பிரமிளா)விடம் ஓடி வருவதைப் போலவும் அம்மாவிடமிருந்து அப்பா விடம் ஓடிவருவதைப் போலவும், அம்மா தூரத்தில் நிற்பதுபோல வைத்துக்கொண்டு நடன இயக்குநர் ஏ.கே.சோப்ராவை வைத்து மேனேஜ் செய்து அந்தப் பாட்டை படமாக்கி முடித்தோம். சினிமா எடுக்கும்போது இப்படியெல்லாம் பல பிரச்சினைகள் வரும். சமாளிக்க வேண்டும்.

சென்னை வந்ததும் பிரமிளாவையும், குழந்தையும் வைத்து தோட்டக்கலை பூங்காவில் பெங்களூருக்கு மேட்ச் செய்து படப்பிடிப்பை எடுத்தோம்.

எடிட்டர் விட்டல் சார் பெங்களூரில் சிவாஜியையும் குழந்தையையும் வைத்து எடுத்த காட்சியையும், சென்னையில் பிரமிளாவையும் குழந்தையையும் வைத்து எடுத்த காட்சியையும் சிறந்த முறையில் எடிட் செய்து பாட்டை முழுமையாக்கினார்.

ஒருநாள் அண்ணன் சிவாஜிகணேசன் அவர்கள் ஷூட்டிங் வந்திருந்தபோது, ‘ ‘‘முத்து… பெங்களூர்ல போய் ஒரு பாட்டு எடுத்தோமே. அதை பிரமிளாவோடு மேட்ச் செய்து ஷூட்டிங் பண்ணிட்டியா? அதை நான் பார்க்கணும்’’ என்றார். அவரை அழைத்துக்கொண்டு போய் அந்தப் பாட்டை போட்டுக் காட்டினேன். அதைப் பார்த்த சிவாஜி, ‘‘அடப்பாவி! என்னமா மேட்ச் செய்திருக்கே. ஹீரோ, ஹீரோயின் பாடுற டூயட் பாட்டைக் கூட தனித்தனியா எடுத்து நீ மேட்ச் பண்ணிடுவே’’ என்று பாராட்டினார்.

‘கவரி மான்’ படத்தில் ஒரு திருப்பமான காட்சி. சிவாஜி தன் மனைவி பிரமிளாவிடம் சொல்லிக்கொண்டு வெளிநாடு புறப்பட்டுச் செல்வார். விமான நிலையத்தில் அவர் செல்ல வேண்டிய அந்த விமானம் பழுது காரணமாக கேன்சல் செய்யப்படுவதாக அறிவிக்கப்படும். உடனே, சிவாஜி அங்கிருந்து வீட்டுக்குத் திரும்புவார். கதவை தட்டினால் வேலைக்காரப் பெண் கதவைத் திறப்பார். மனைவி (பிரமிளா) எங்கே என்று கேட்க, வேலைக்காரப் பெண் பதில் சொல்லாமல் பதற்றத்துடன் ஓடிவிடுவார்.

அப்போது மாடியில் பெட் ரூமிலிருந்து பிரமிளாவும், ஓர் ஆணும் சேர்ந்து சிரிக்கும் சத்தம் கேட்கும். சந்தேகத்துடன் மாடிப் படிகளில் ஏறுவார் சிவாஜி. பிரமிளாவின் சிரிப்புச் சத்தமும் ஆணின் சிரிப்புச் சத்தமும் அதிகமாகிக் கொண்டேபோகும். ஒவ்வொரு படி ஏறும்போதும் சிவாஜியின் கோபம் மேலும் மேலும் அதிகரிக்கும். பெட்ரூம் கதவருகே வந்து கதவை திறந்தால் பிரமிளாவுடன், ரவிச்சந்திரன் விளையாடிக்கொண்டிருப்பார். அதை பார்த்ததும் சிவாஜியின் கோபம் உச்சத்தைத் தொடும். ரவிச்சந்திரன் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிடுவார். பிரமிளா திகைத்துப் போய் நிற்பார்.

இந்தக் காட்சிகளை எடுத்ததும் சிவாஜி அவர்களிடம் ‘‘உங்கள் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி காட்டுங்கள். கேமரா உங்கள் முகத்தை நோக்கி வரும். உங்கள் முகபாவங்களில் கொலை வெறி தெரிய வேண்டும்’’ என்று விவரித்தேன்.

சிவாஜி ‘‘மனைவி இப்படி ஒரு தவறு செய்யும்போது கணவனுக்கு ஆத்திரம் வரும்தான். நான் ரெடி’’ என்றார். ஷாட் ஆரம்பித்தோம். சிவாஜியின் முகத்தை நோக்கி கேமரா சென்றது. அவருடைய கன்னம், நெற்றி, புருவம் எல்லாம் துடித் தன. வெள்ளையாக இருந்த அவருடைய கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிவப் பாக மாறி… விழி பிதுங்கும் அளவுக்கு நடித்தார். அதைப் பார்த்து நாங்கள் அசந்துபோய்விட்டோம். அதுதான் நடிகர் திலகத்தின் நடிப்பு!

அந்தக் கோப வெறியோடு அருகில் இருந்த ஃப்ளவர் வாஸை எடுத்து பிரமிளாவின் தலையில் அடிப்பார் சிவாஜி. பிரமிளா மயங்கி கீழே விழுந்து உயிரைவிடுவார். அவர்களுடைய ஏழு வயது மகள் (சின்ன தேவி) இதனைப் பார்த்துவிடுவார். அம்மாவை அப்பா கொலை செய்துவிட்டார் என்று அதிர்ச்சி அடையும் அந்தக் குழந்தை. அன்று முதல் அப்பா மீது மகளுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும்.

கூட்டுக் குடும்பமாக வாழும் அந்த வீட்டில் ஒரு பெரிய விரிசல் விழுகிறது. மனைவி தவறான நடத்தை காரணமாகத்தான் இவ்வளவும் நடந்தது என்பது தெரிந்தால், குடும்ப கவுரவம் கெட்டுப்போகுமே என்று யாரிடமும் சொல்லாமல் சிவாஜிகணேசன் அதை மறைத்துவிடுவார். சிவாஜியின் அண் ணன் (மேஜர் சுந்தர்ராஜன்), தந்தை (கொல்கத்தா விஸ்வநாதன்) எல்லோரும் கூடி மகிழ்ச்சியாக வாழ்ந்த வீட்டில் அந்த சம்பவத்துக்குப் பிறகு கலகலப்பு போய் சலசலப்பு ஏற்படுகிறது. சிவாஜியின் அப்பா கொல்கத்தா விஸ்வநாதன் ‘தன் மகன் காரணம் இல்லாமல் இப்படி செய்திருக்க மாட்டான்’ என்கிற தனது நினைப்பை டைரியில் எழுதி வைப்பார்.

மகள் வளர்ந்த பிறகும் சிவாஜியைக் ‘கொலைகார அப்பா’வாகத்தான் பார்ப்பார். வளர்ந்த மகளாக தேவி நடித்திருப்பார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தேவி இந்தியாவின் சிறந்த நட்சத்திரமாக வளர்ந்து தனது நடிப்பின் மூலம் பெயர் வாங்கியிருந்தார்.

இந்தச் சூழலில் மகள் தேவிக்குப் பிறந்த நாள் வரும். மகளின் பிறந்த நாளுக்காக ஆசை ஆசையாக பட்டுப் புடவையும், பரிசுகளும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வருவார் அப்பா சிவாஜி. தான் கொடுத்தால் வாங்க மாட் டார் என்பதற்காக, மாடியில் இருக் கும் மகளிடம் அந்தப் பொருட்களைக் கொடுக்குமாறு கொடுத்தனுப்புவார்.

தேவி அந்தப் பரிசுப் பொருளை வாங்கி கோபத்தோடு குப்பைத் தொட்டியில் எறிவார். அதைக் கண்டு சிவாஜி அதிர்ச்சி அடைவார். அந்தக் காட்சியைப் பார்த்த சிவாஜி ரசிகர்கள் என்ன செய்தார்கள்?

- இன்னும் படம் பார்ப்போம்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்