இயக்குநரின் குரல்: மோகன்.ஜி - உண்மையான வடசென்னை இதுதான்!

By ஆர்.சி.ஜெயந்தன்

வடசென்னையின் வாழ்வியலை யதார்த்தமும் மிகையுமாகக் காட்சிப்படுத்திய சமீபத்திய படங்கள் என்று ‘அட்டக்கத்தி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். “இந்தப் படங்களின் வரிசையில் எனது ‘பழைய வண்ணாரப் பேட்டை’க்கு மிக முக்கியமான இடம் கிடைக்கும். காரணம் நான் வடசென்னையில் பிறந்து வடசென்னையில் வளர்ந்து, அங்கேயே வாழ்ந்துகொண்டிருப்பவன்.

அதன் இதயத்துடிப்பைத் தாங்கிக்கொண்டிருப்பவன். என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்துடன் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக மட்டும் கற்பனையைக் கலந்திருக்கிறேன்” என்று தனது படம் பற்றி பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் மோகன்.ஜி.

வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்டு வெளியாகும் படங்கள் உங்கள் பார்வையில் எந்த வகையில் தவறியிருக்கின்றன என்று சொல்வீர்கள்?

குறிப்பிட்ட படத்தையோ இயக்குநரையோ நான் விமர்சிக்க விரும்பவில்லை. எனக்குத் தெரிந்து ‘புதுப்பேட்டை’ படத்தில் ஆரம்பித்து ‘மெட்ராஸ்’ வரை வடசென்னையின் முகத்தைப் பதிவு செய்த எல்லாப் படங்களின் மீதும் எனக்கு காதல் உண்டு. அவற்றில் முழுமையாக வடசென்னையின் வாழ்க்கை காட்டப்பட்டதா என்று ஆராய்வதைவிட வடசென்னை என்றாலே அது குற்றவாளிகளும் கொடூரமான ஆட்களும் ரவுடிகளும் மட்டுமே வசிக்கும் அழுக்கான பகுதி என்று காட்டப்பட்டுவருவதைக் கடுமையாக எதிர்க்கிறேன், கண்டிக்கிறேன். எல்லா ஊர்களிலும் கொலைகள் நடக்கின்றன; குற்றங்கள் நிகழ்கின்றன.

ஆனால், வடசென்னை மட்டும் ரவுடிகளின் கூடாரம் என்ற எண்ணத்தை மற்ற பகுதி மக்கள் மனதில் நம் சினிமா விதைத்துவிட்டது துரதிஷ்டவசமானது. முக்கியமாக மாஸ் ஹீரோ படங்களின் கதைகளில் வரும் வில்லன்கள் அனைவரும் வசிப்பது வடசென்னையில் என்ற மாயையைத் தமிழ் சினிமா உருவாக்கிவந்திருப்பது வடசென்னையில் வாழ்பவன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இந்த விஷயத்தில் என்னுடைய உணர்வுதான் வடசென்னையில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வும்.

வடசென்னை என்பதே ஒட்டுமொத்தமாக அழுக்கான, அருவருக்கத் தக்க பகுதி என்ற சித்தரிப்பில் உண்மை இல்லை. வடசென்னையில் அழகான, தூய்மையான பகுதிகள் நிறைய இருக்கின்றன. ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படத்தில் வடசென்னையை அழகாகக் காட்ட வேண்டும்; அதேநேரம் வடசென்னையின் உண்மையான லேண்ட் மார்க்குகள் கதையின் களமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இந்தப் படத்தில் அழகான, உண்மையான வடசென்னையை நீங்கள் பார்க்கலாம்.

எனது அடுத்த படத்திலும் வடசென்னையின் அழகைக் காட்சிப்படுத்துவது தொடரும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பாரூக் என் உயிர் நண்பன். ஒளிப்பதிவுக்காக தேசிய விருது பெற்ற ஏகாம்பரத்திடம் பல படங்களில் முதன்மை உதவியாளராகப் பணியாற்றியவன்.



என்ன கதை?

வடசென்னையில் பலதரப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். அது இந்தப் படத்தில் யதார்த்தமாகப் பதிவாகியிருக்கிறது. இங்கே முக்கியமான ஜீவாதாரத் தொழில்கள் என்ன? இங்கே இருக்கும் திராவிடக் கட்சிகளின் அரசியல் அரசியல் எப்படிப்பட்டது? உழைக்கும் மக்களின் அரசியல் எப்படிப்பட்டது? இங்கே இருக்கும் வாழ்க்கையில் காதலுக்கும் நட்புக்கும் இசைக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை நான்கு முக்கியமான கதாபாத்திரங்களில் நடக்கும் ஒரு முக்கியச் சம்பவம் வழியாகச் சொல்லியிருக்கிறேன்.

நான் மூன்று ஆண்டுகளுக்குப் பொறியியல் கல்லூரி மாணவன். எனது நண்பனுடன் மாலை 7 மணியளவில் ரோட்டோர இட்லிக் கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே நடுத்தர வயதில் சாப்பிட்டுக்கொண்டிருந்த இரண்டுபேர் வாய்த் தகராறு செய்துகொண்டிருந்தார்கள். பேச்சு முற்றியதில் ஒருவர் கத்தியை எடுத்துக் குத்திவிட்டார்.

குத்துவாங்கியவர் அதே இடத்தில் செத்துவிட்டார். குத்தியவர் அந்த இடத்திலிருந்து போய்விட உடனே போலீஸ் வந்துவிட்டது. சம்பவ இடத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் என்ற அடிப்படையில் எங்களையும் அழைத்துச்சென்று நொங்கெடுத்தது போலீஸ். கொலையில் கண்டிப்பாக உங்களுக்குத் தொடர்பு இருக்கும் என்றார் இன்ஸ்பெக்டர். சாப்பிட்ட இட்லி செரிக்கும்முன் எங்களிடம் எழுதி வாங்குகிற அளவுக்கு முன்னேற்றம். ஆனால் எதிர்பாராதவிதமாக அங்கே வந்த உதவி கமிஷனர் எங்களை விடுவித்து அனுப்புகிறார்.

இந்த நிகழ்வை வடசென்னை வாழ்க்கையில் தோய்த்துக்கொண்டு, ஒரு கொலை விசாரணை த்ரில்லராக மாற்றியிருக்கிறேன்.



இந்தக் கதைக்குப் பிரஜனைக் கதாநாயகனாக தேர்வு செய்தது ஏன்?

‘தீக்குளிக்கும் பச்சைமரம்’ படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து மிரண்டுபோயிருந்தேன். யதார்த்தமாக நடிக்கத் தெரிந்த வளரும் நடிகர்களில் மிகப் பெரிய உயரதுக்கு அவர் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனது நிஜ வாழ்க்கையின் கதாபாத்திரத்தை அவர் ஏற்றிருக்கிறார். அவரது நண்பராக ’ரேனிகுண்டா’ படத்தில் நடித்து கவர்ந்த நிஷாந்த் நடித்திருக்கிறார்.

உதவி போலீஸ் கமிஷனராக ரிச்சர்ட் நடித்திரிக்கிறார். மூன்று பேருக்குமே கதையில் சரிசமமான முக்கியத்துவம் இருக்கிறது. கருணாஸ் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். கதாநாயகியாக திருநெல்வேலி தமிழ்ப்பெண் அஸ்மிதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அனைவரும் சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்கள்.



படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது உங்கள் கதாநாயகன் பிரஜன் அழுதிருக்கிறாரே?

ஆமாம்! திரையுலகப் பிரபலங்களின் தேதியையும் நேரத்தையும் பெற்றே இசை வெளியீட்டு விழா அழைப்பிதழில் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், அழைத்திருந்தவர்களில் பலர் வரவில்லை. மிகவும் உழைத்து நம்பிக்கையுடன் தனது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாகக் கருதிக் காத்திருக்கும் நிலையில் வாக்குறுதி அளித்தவர்கள் வரவில்லை என்பது அவரை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. ஆனால் விழாவுக்கு தவறாமல் வந்துவிட்ட பாபிசிம்ஹா, ஆரி, ஹரீஸ் போன்றவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

- மோகன்.ஜி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்