இயக்குநரின் குரல்: பாண்டிராஜ் - சூர்யாவின் மூன்றாவது அழகு!

By கா.இசக்கி முத்து

‘நான் இயக்கிய சில கதைகள் ‘என்னை எழுது, படமாக்கு!’ என நச்சரித்தவை. அப்படி என்னைத் தூண்டிய கதைதான் ‘பசங்க-2’ என்று குழந்தைகள் உலகத்துக்குள் புகுந்து விளையாடிய சந்தோஷத்தில் பேச்சைத் தொடங்கினார் இயக்குநர் பாண்டிராஜ்.

'பசங்க 2' படம் உருவான விதத்தைப் பற்றி சொல்லுங்க..

இன்றைக்கு இருக்கும் குழந்தைகள் என்ன மனநிலையில் இருக்கிறது, ஏக்கங்கள் என்ன, பெற்றோர்களிடம் இருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள், பள்ளியில் அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், நம்ம குழந்தைகளிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறோம், நாம எப்படி அவர்களை தப்பாக வழிநடத்துகிறோம், குழந்தைகளை ஆசிரியர்கள் எப்படி பார்க்கிறார்கள், இன்றைய பள்ளிக்கூடம் எப்படி வியாபாரமாகி விட்டது.. இப்படி அனைத்து விஷயங்களையும் பேசுகிற படமாக இருக்கும். ஏதோ பள்ளியைப் பற்றிய ஆவணப் படம் என்று நினைத்து விடாதீர்கள். எனக்கு ஒரு விஷயத்தை மக்களைச் சிரிக்க வைத்துக் கொண்டே சொல்வது ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் சார்லி சாப்ளின் படங்கள் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், அவர் கஷ்டப்படுவார். ஆனால் நாம் சிரித்துக் கொண்டே இருப்போம். அது தான் என்னுடைய பலம் என நினைக்கிறேன்.

குழந்தைகளோட உலகத்துக்குள் இப்படத்துக்காக நிறைய பயணம் செய்திருக்கிறோம். இப்படத்தின் மூலம் ADHD (Attention Deficit Hyperactivity Disorder) பற்றி சொல்லி இருக்கிறேன். இந்த நோய் பாதித்த குழந்தைகளிடமே ஒரு கமர்ஷியல் விஷயம் இருக்கிறது. ஒன்றரை நிமிடங்களுக்கு மேலே அக்குழந்தைகளால் ஒரு இடத்தில் இருக்க முடியாது. எப்போது துறுதுறுவென்றும், பரபரப்பாகவும் இருப்பார்கள். இப்போது இக்குழந்தைகளை ஒரு பள்ளியில் வைத்து அடைத்து எப்படி பாடம் நடத்த முடியும் என்கிற ஒரு கமர்ஷியல் பார்வை இருக்கிறது. இந்த ஒரு புள்ளியை வைத்துக் கொண்டு 'பசங்க 2'வில் பயணம் செய்திருக்கிறேன்.

'பசங்க' படத்துக்கும் 'பசங்க 2' படத்துக்கும் சம்பந்தமே கிடையாது. 'பசங்க' முழுக்க நமது பள்ளியோட வாழ்க்கை. 'பசங்க 2' முழுக்க நமது குழந்தைகளின் பள்ளியோட வாழ்க்கை.

எப்படி தயாரிப்பு மற்றும் நடிப்பு என இரண்டிலும் சூர்யாவை உள்ளே கொண்டு வந்தீர்கள்?

1 வருடத்துக்கு முன்பாகவே இப்படத்தின் பணிகளை எனது நிறுவனத்திலேயே ஆரம்பித்து, குழந்தைகள் தேர்வு எல்லாம் நடந்து கொண்டிருந்தது. நல்ல விஷயம் சொல்லும் போது, யாரோடாவது கை கோர்த்துக் கொண்டு சொல்லலாமே என்று சூர்யா சாரை இப்படத்துக்குள் அழைத்து வந்தேன். கெளரவ வேடம் பண்ணாவிட்டாலும், இணைந்து தயாரிக்க வைக்கலாம் என்று வாட்ஸ்-அப்பில் ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். முதலில் கதையைச் சொன்னேன், நான் கண்டிப்பாக தயாரிக்கிறேன் என்றார். பிறகு கெளரவப் பாத்திரத்தைப் பற்றி சொன்னேன், அதையும் கண்டிப்பாக பண்ணுகிறேன் சார் என்று தெரிவித்தார். ஒரு நல்ல விஷயத்தை சேர்ந்து சொல்லலாம் சார் என்று உற்சாகமாக சொன்னார் சூர்யா சார். அவர் இப்படத்துக்கு வந்ததற்குப் பிறகு, இப்படத்தின் கலரே மாறிவிட்டது, அதற்கு கண்டிப்பாக நான் சூர்யா சாருக்கு நன்றி சொல்லியே ஆகணும்.

ட்ரெய்லரைப் பார்க்கும் போது 'Taare Zameen Par' மாதிரி இருக்கிறது என சொல்கிறார்களே..

'பசங்க' படத்தின் ட்ரெய்லரில் கொஞ்சம் சண்டைக் காட்சிகள் எல்லாம் இருக்கும். அதைப் பார்த்து விட்டு அனைவரும் 'CITY OF GOD' படத்தை எடுத்துவிட்டார் என்றார்கள். ஆனால் படம் பார்த்துவிட்டு, சம்பந்தமே இல்லை என்று கருத்து தெரிவித்தார்கள். அதே போலத் தான் 'பசங்க 2' ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு 'Taare Zameen Par' என்கிறார்கள். அப்படத்துக்கும் என் படத்துக்கும் சம்பந்தமே இல்லை. அப்படத்தில் அமீர்கான், இதில் சூர்யா சார் என்பதால் தான் இப்படி சொல்கிறார்கள். 'பசங்க 2' பார்த்துவிட்டு, "அய்யோ.. இது வேற படம்" என்று கண்டிப்பாக சொல்வார்கள்.

குழந்தைகளுக்கான உலகத்தில் இன்னும் எத்தனைப் படங்கள் பண்ண திட்டம் இருக்கிறது?

இன்னும் நிறைய படங்கள் பண்ணுவேன். எனக்கு குழந்தைகளின் உலகம் மிகவும் பிடித்திருக்கிறது. எனக்காக ஒரு படம், என் குடும்பத்துக்காக ஒரு படம் இப்படித் தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். குடும்பத்துக்காக என்பது கமர்ஷியல் படம். ஒரே மாதிரியான படங்கள் பண்ணினால் நான் காணாமல் போய்விடுவேன். அதனால் தான் இடையே ஒரு கமர்ஷியல் படம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். 'பசங்க' படம் பண்ணிவிட்டு, எனக்கு அடுத்த படம் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. பசங்களைப் பற்றி மட்டுமே தான் படம் பண்ணுவான் பாண்டிராஜ் என்று யாருமே சொல்லிவிடக் கூடாது. 'இது நம்ம ஆளு' முழுக்க காதல், 'பசங்க 2' முழுக்க குழந்தைகள், 'கதகளி' முழுக்க ஆக்‌ஷன் -த்ரில்லர் இப்படி ஒரே நேரத்தில் மூன்று களங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் குழந்தைகளைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லவிருக்கிறது. இரண்டு படங்களுக்கு ஒரு படம் அல்லது ஒரு படம் விட்டு ஒரு படம் என குழந்தைகள் படம் பண்ணிக் கொண்டே தான் இருப்பேன்.

படங்களை வாங்கி விநியோகம் பண்ணுவது, சொந்தமாக படங்களை தயாரிப்பது உள்ளிட்டவற்றை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?

பசங்க புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்தது எனக்காக கிடையாது. இதுவரைக்கும் 4 படங்கள் வெளியாகி இருக்கிறது, 7 படங்கள் பண்ணிவிட்டேன். கிட்டதட்ட 50 முதல் 60 நடிகர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். எனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக நிறையப் பேரை அறிமுகப்படுத்த வேண்டும் என ஆசை. சரியான குழு எனக்கு அமையவில்லை, அது தான் பிரச்சினை. 'மூடர் கூடம்' படத்துக்காக நான் 3 மாதங்கள் உட்கார்ந்திருந்தேன். அப்படி உட்காரும் போது எனது படைப்பாற்றல் பாதித்துவிடமோ என்ற பயம் எனக்கு இருக்கிறது. எனக்கு நல்ல குழு அமைந்தால், 'மூடர் கூடம்' போல நிறைய படங்கள் கண்டிப்பாக பண்ணுவேன்.

ஒரே நேரத்தில் 3 படங்கள் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருவது கடினமாக இல்லையா?

வெளியே இருந்து பார்ப்பவர்கள் நான் 3 படம் பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நான் எவ்வளவு மன உளைச்சலில் இருக்கிறேன், எத்தனை முறை மருத்துவமனை போய் வருகிறேன் என்பது எனக்குத்தான் தெரியும். 'இது நம்ம ஆளு' என்னை மிகவும் மன உளைச்சலில் கொண்டு போய்விட்டது. அதில் இருந்து மீண்டுவந்து படங்கள் பண்ணிக் கொண்டிருக்கிறேன். இப்போதும் அடுத்த படத்துக்குக் கேட்டு வருகிறார்கள். இந்த 3 படங்கள் வெளியானால் தான் அடுத்த படம் என சொல்லி வருகிறேன். 'இது நம்ம ஆளு' படத்துக்குப் பிறகு எனக்கு முதல் பிரதியில் படம் பண்ணும் எண்ணமே இல்லை. ஆனால் சூர்யா சார், விஷால் சார் கேட்டுக் கொண்டதற்காக 2 படங்கள் ஒப்புக் கொண்டேன். அடுத்ததாக நான் பண்ணவிருக்கும் படங்கள் கண்டிப்பாக முதல் பிரதி பண்ண மாட்டேன் என நினைக்கிறேன்.

முதல் படத்தின் தயாரிப்பாளர் சசிகுமாருடன் இன்னும் பேச்சுவார்த்தையில் இருக்கிறீர்களா?

'பசங்க 2' தலைப்பே அவர் கொடுத்த தலைப்பு தானே. 'பசங்க' படத்தில் பசங்க 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். அதே மாணவர்கள் +2 படிக்கும் போது எப்படியிருக்கும் என சசி சாரிடம் கதை சொல்லி பண்ணவும் தயாராகி விட்டோம். அதுக்கு 'பசங்க 2' என்று தலைப்பு வைக்கலாம் என தீர்மானித்தோம். 'ஹைக்கூ' தலைப்பு 'பசங்க 2' என மாற்றத்துக்கு அவரிடம் கேட்டேன். தாராளமாக பண்ணுங்கள், 'பசங்க 3' நம்ம பண்ணலாம் என்று உற்சாகம் அளித்தார். அவரும் நானும் இணைந்து கண்டிப்பாக படம் பண்ணுவோம். எந்த ஒரு படம் பண்ணிக் கொண்டிருந்தாலும், "பாண்டிராஜ் இங்கு வா.. கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணு" என்று சசி சார் சொன்னார் என்றால் எல்லா படத்தையும் விட்டுவிட்டு போய்விடுவேன். சசிகுமார் சாருக்கான இடம் என் மனதில் இருக்கிறது.

கமர்ஷியல் நடிகர்களோடு பயணம் பண்ணத் தொடங்கி விட்டீர்கள். புதுமுக நடிகர்களை இயக்கும் எண்ணம் இருக்கிறதா?

புதுமுக நடிகர்களை கண்டிப்பாக இயக்குவேன். சூர்யா சார், சிம்பு சார், விஷால் சார் எல்லாம் நானே முடிவு பண்ணவில்லை. அதுவாக அமைந்தது. பெரிய நாயகர்களோடு பாண்டிராஜ் பயணம் பண்ணிவிட்டார், இனிமேல் புதுமுகம் பண்ண மாட்டார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. பாண்டிராஜ் இப்படித்தான் என யாருமே என்னை கணிக்கவே கூடாது. குழந்தைகள் படம் மட்டும் தான் பண்ணுவான் என யாருமே சொல்லவும் கூடாது. அப்படித் தான் என் பயணம் இருக்கும். அடுத்ததாக ஒரு சரித்திரப் படம் பண்ற திட்டமும் இருக்கிறது. 75 லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு மணி நேரம் படம், விருதுகளுக்கு மட்டுமே அனுப்புகிற மாதிரி படம், குறும்படம் இப்படி நிறைய விஷயங்கள் பண்ணப் போகிறேன். 'இது நம்ம ஆளு', 'கதகளி' போன்ற படங்கள் மூலமாக என்னை இன்னும் பலமாக்கிக் கொண்டு, அடுத்ததாக நான் நினைத்ததை எல்லாம் படமாக பண்ணப் போகிறேன். அதுக்கு தான் தயாராகி வருகிறேன்.

'இது நம்ம ஆளு' படம் எப்போது வெளியாகும்..

என்னுடைய ட்விட்டர் தளத்தில் இன்னமும் 'இது நம்ம ஆளு' எப்போது வரும், எப்போது இசை வெளியீடு என்று கேட்டு வருகிறார்கள். 'இது நம்ம ஆளு' ஆரம்பிக்கும் போது எனக்கு இரண்டாவது பையன் பிறந்தான். கடந்த விஜயதசமிக்கு அவனை பள்ளியில் சேர்த்துவிட்டேன். அவனே இப்போது நன்றாக பேசுகிறான். ஒரு கலைஞனின் வலி இப்போது புரியும் என நம்புகிறேன். எனது பணிகள் அனைத்துமே முடித்துவிட்டேன். நான் ஞாயிற்றுக்கிழமை கூட வேலை செய்யக் கூடிய ஆள். காலை 9 மணிக்கு இந்த அலுவலகத்திற்குள் வந்தேன் என்றால், இரவு 10 மணிக்கு தான் வெளியே போவேன். 'இது நம்ம ஆளு' முடிந்து சூப்பராக வந்திருக்கிறது படம். எனது திரையுலக வாழ்வில் எனக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையப் போவது 'இது நம்ம ஆளு' தான். தயாரிப்பாளர் தரப்பில் பணம் பிரச்சினையா, மனப் பிரச்சினையா எதனால் தாமதமாகிறது என்று எனக்கு தெரியவில்லை. இதே கேள்வியை என்னிடமோ, சிம்புவிடமோ கேட்டால் பதில் இல்லை. டி.ஆர் சாரிடம் கேளுங்கள். அவருக்கு மட்டுமே தெரியும். டிசம்பருக்குள் வெளியாகும் என உறுதியாக நம்புகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்