அப்பா இல்லாத தனிமை எழுத வைத்தது! - பாடலாசிரியர் மணிஅமுதவன் பேட்டி

By மகராசன் மோகன்

‘நெடுஞ்சாலை’ படத்தில் ’இஞ்சாதே’, ‘கோலிசோடா’ படத்தில் ’ஆல் யுவர் பியூட்டி’, ‘சண்டிவீரன்’ படத்தில் ‘அலுங்குறேன் குலுங்குறேன்’ இப்படியான பாடல்களை எழுதி ரசிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் மத்தியில் பேசப்படும் பாடலாசிரியராக உயர்ந்து வருகிறார் மணிஅமுதவன்.

‘‘ரசிகனிடம் எதையும் திணிக்கக் கூடாது. பாடல்களும் அப்படித்தான் இயல்பாக உணரும் வகையில் எழுதப்பட வேண்டும். இணையம், வாட்ஸ் அப் என்று எல்லா இடங்களிலும் தமிழைக் கொண்டாடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பாடல் எழுதுவது சுகமாகவே இருக்கிறது’’ என்று பேசத் தொடங்கினார்...

எப்போது பாடலாசிரியராக அறிமுகமானீர்கள்?

என்னோட முதல் படம் பாக்கியராஜ் சார் இயக்கிய ‘சித்து பிளஸ் டூ’. கவிஞர்களின் வேடந்தாங்கல் அவர். அவரிடம் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. ‘சித்து பிளஸ் டூ’ படத்தில் இரண்டு பாடல்கள் எழுதும் வாய்ப்பை வழங்கினார். ஒருமுறை ஏ.டி.எம் மையம் ஒன்றில் இசையமைப்பாளர் சத்யாவைச் சந்தித்தேன்.

அந்த அறிமுகம் அவர் இசையமைத்த ‘நெடுஞ்சாலை’ படத்துக்குப் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தது. முதலில் ஒரு பாடலுக்கு வாய்ப்புக் கொடுக்க, ‘இஞ்சாதே’ பாடலை எழுதினேன். அது அவருக்கும் இயக்குநருக்கும் பிடித்துப்போனதால் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பைக் கொடுத்து என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். அந்தப் படம் எனக்கு முகவரியாகிவிட்டது.

விரைவில் வெளியாகவிருக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தில் பாடல் எழுதியிருக்கிறீர்கள் போலிருக்கிறதே?

ஆமாம்! விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான ‘கோலிசோடா’ படத்தில் ’ஆல் யுவர் பியூட்டி’, ‘ஜனனம்.. ஜனனம்..’ ஆகிய பாடல்களை எழுதினேன். ‘ஜனனம்’ பாடலைக் கேட்டுவிட்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் அழைத்துப் பாராட்டினார். என்னை மறுபடியும் கைதூக்கிவிடும்விதமாக ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பை விஜய்மில்டன் தந்தார். ‘சண்டிவீரன்’ படத்துக்கு டெமோ மாதிரி காட்டலாம் என்று இசையமைப்பாளர் அருணகிரியும் நானும் இயக்குநர் சற்குணத்தை சந்தித்தோம்.

நாங்கள் காட்டிய டெமோ அவருக்குப் பிடித்துப்போனதால் எங்களையே படத்தில் பணியாற்ற வைத்தார். ‘அலுங்குறேன்… குலுங்குறேன்’ பாடல் வாய்ப்பும் அப்படித்தான் அமைந்தது. விஜய்மில்டன், சற்குணம் மாதிரியான இயக்குநர்கள் என்னை மிகவும் சிந்திக்கவும் கற்பனை செய்யவும் தூண்டும் இயக்குநர்களாக இருக்கிறார்கள். இது என் அதிர்ஷ்டம்தான்.

சினிமாவுக்குப் பாடல்கள் தேவையா?

பாடல்கள் என்பவை நம் பண்பாட்டின் முக்கியப் பகுதி. நம் மொழிக்கு ஏணி. ஆனால் திரைப் பாடல்கள் கதையோடு பயணிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அது கதையில் ஒரு பகுதியாகிவிடும். கதையின் வேகத்தைத் தடுப்பதாகவோ, செயற்கையாக சேர்ப்பதாகவோ அமைந்துவிடக் கூடாது. அதேபோல ஒரு திரைப்படத்தின் திரைக்கதையில் எல்லா இடங்களிலும் வசனத்தாலும், காட்சியாலும் சுவை கூட்டிவிட முடியாது.

சில கதாபாத்திரங்கள் வசனத்தால் சொல்ல முடியாத உணர்வைப் பாடல் வரிகள் இலகுவாக வெளிப்படுத்திவிடும். அதேநேரம் பாடல்கள் தேவைப்படாத திரைக்கதைகள் அதிகரிக்கும்போது அங்கே பாடல்களின் இடத்தைப் பின்னணி இசை எடுத்துக் கொள்கிறது. அதுபோன்ற சினிமாக்களும் நம்மிடம் இருக்கிறதே!

சில பாடல்களில் ஆபாசமாக வார்த்தைகள் பயன்படுத்தும் சூழல் தொடர்கிறதே?

நம்மைச் சுற்றி நல்ல விஷயங்களும் இருக்கு. விஷமும் இருக்கு. இதுவும் கடவுள் படைத்ததுதானே என்று நாம் விஷத்தை எடுத்துக் குடித்துவிடுவதில்லை. அது மாதிரி இதையும் தவிர்த்துவிட்டு நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வது நமக்கு நல்லது. அதேநேரம் இதுபோன்ற பாடல்களைப் பேருந்துகள், தொலைக்காட்சிகளில் போடாமல் இருப்பது நாளைய சமூகத்துக்கு நாம் செய்கிற நன்மை.

நீங்கள் இசையமைக்கவும் செய்வீர்களாமே?

சிறுவயதிலிருந்தே இசையமைக்கும் ஆர்வம் உண்டு. ஏழாம் வகுப்பில் தொடங்கி பாட்டுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கியிருக்கிறேன். அப்போது கிடைத்த ஊக்கம் தொடர்ந்து என்னை அந்தப் பாதையிலேயே நகர்த்திச் சென்றது. சொந்த ஊர் திருச்சி அருகில் உள்ள திருத்தலையூர் கிராமம். எனக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அப்பா இறந்துவிட்டார்.

அப்பா இல்லாத தனிமையைப் போக்க நானே ஏதாவது வரிகளை போட்டு பாட்டாக மெட்டமைத்து பாடிக்கொண்டே இருப்பேன். வீட்டில் அம்மா, இரண்டு சகோதரிகள். நான் அவர்களுக்கு சுமையாகிவிடக் கூடாது என்பதற்காகப் பன்னிரெண்டாம் வகுப்புடன் முடித்துக்கொண்டேன். தற்போது முறையாக இசை படித்து வருகிறேன். தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிட வேண்டும் என்ற ஆவல் எனக்கும் உண்டு.

தற்போது பணியாற்றும் படங்கள்?

‘உறுமீன்’, ‘இறைவி’, ‘யானும் தீயவன்’, ‘மரகத நாணயம்’, ‘வீர தீர சூரன்’, உள்ளிட்ட பல படங்களுக்கு எழுதி வருகிறேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்