சினிமா ரசனை 18: சண்டையிட்டு நடிப்பை வளர்த்த பெண்மணி!

By கருந்தேள் ராஜேஷ்

நாடக நடிகர்களைக் கூர்ந்து அவதானித்த ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, நடிப்புக்கான ஒரு சிஸ்டத்தை உருவாக்கினார் எனக் கண்டோம். ரஷ்யாவில் உதித்த இந்த நாடக மேதையிடமிருந்து அமெரிக்காவில் வாழ்ந்த ஸ்ட்ராபெர்க் எவ்வாறு கிரியா ஊக்கியைப் பெற்றுக்கொண்டார்?

சுற்றுப் பயணம்

ஸ்ட்ராஸ்பெர்க்கின் இளமைப் பருவத்தில் ஒருமுறை ரஷ்யாவிலிருந்து ஸ்டானிஸ் லாவ்ஸ்கி தனது அற்புதமான நாடகக் குழுவினருடன் இரண்டு ஆண்டுகள் அமெரிக்கச் சுற்றுப் பயணம் நிகழ்த்தினார். இவர்கள் ரஷ்யாவிலிருந்து வந்திருப்பதால் அவர்கள் கம்யூனிஸ்ட் அரசின் கொள்கைப் பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடும் என்று ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் சுற்றுப்பயணத்தை அமெரிக்க ராணுவம் எதிர்த்தது. ‘நாங்கள் கலையில் மட்டுமே ஆர்வம் உள்ளவர்கள். அரசியலில் அல்ல’ என்று சொல்லி இதனைக் கடுமையாக எதிர்த்தார் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி.

நடிப்பின் தரம்

ஸ்ட்ராஸ்பெர்க் இந்தக் குழுவினரின் நாடகங்களைப் பார்க்க நேர்ந்தது. அமெரிக்க நாடகங்களின் தரத்தையும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி யின் குழுவினரின் தரத்தையும் உடனடியாகக் கண்டுகொண்டார் ஸ்ட்ராஸ்பெர்க். அதுவரை ஸ்ட்ராஸ்பெர்க் பார்த்த அமெரிக்க நாடகங்கள் அவருக்குப் பிடித்தே இருந்தன. ஆனால், தனது வாழ்நாளில் பார்த்திராத அருமையான நடிப்பை ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் குழுவினரின் மூலம் உணர்ந்தார் ஸ்ட்ராஸ்பெர்க். எந்த நடிகரும் கதாபாத்திரத்தை விட்டு வெளியே வராமல், கதாபாத்திரமாகவே வாழ்ந்த அற்புதத்தைக் கண்டார். அவர் அப்போது ஒரு சிறிய நாடகக் குழுவில் இணைந்திருந்ததால், அவரால் இத்தகைய நடிப்பு சார்ந்த விஷயங்களை உடனடியாக உணர முடிந்தது. ஸ்டானிஸ்லாவ்ஸ்கி தனது சிஸ்டத்தை உருவாக்கி கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்ததால், அவரது நடிகர்கள் அவரது பயிற்சியின் கீழ் உடல் மற்றும் உணர்வு சார்ந்த நடிப்பினை நன்றாகக் கற்றுத் தேர்ந்து, அட்டகாசமான நடிகர்களாக மாறியிருந்தனர். இதுதான் ஸ்ட்ராஸ்பெர்க்கைத் தீவிரமான நடிப்பை நோக்கி ஈர்த்த விஷயம்.

தெளிவான பாதையில்...

இதன் பின் ஸ்ட்ராஸ்பெர்க் தான் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக உணர்ந்துகொண்டார். ஸ்ட்ராஸ்பெர்க்கின் முதல் நடிப்பு வெளிப்பாடு, ’Processional’ என்ற நாடகத்தில் அமைந்தது. வருடம் 1924. இதன் பிறகு மளமளவென்று அந்நாடகத்தைத் தயாரித்திருந்த ‘Theatre Guild’ என்ற அமைப்பில் நடிகராகவும் நாடகத் தயாரிப்பாளராகவும் வளர்ந்தார். ஏழு வருடங்கள் கழித்து, 1931ல் ‘Group Theatre’ என்ற அமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார் ஸ்ட்ராஸ்பெர்க். இவருடன் சேர்ந்து அந்த அமைப்பை உருவாக்கியவர்கள் ஹெரால்ட் க்ளர்மேன் (Herold Clurman) மற்றும் ஷெரில் க்ராஃபோர்ட் (Cheryl Crawford) ஆகியவர்கள். அந்த அமைப்பு உருவாகும் தருணத்தில் க்ளர்மேன் நடிப்பைப் பற்றிய லெக்சர்கள் கொடுக்க ஆரம்பித்திருந்தார். அவரது லெக்சர்களில் கலந்துகொண்ட 28 இளம் நடிகர்களை வைத்தே இந்த அமைப்பு துவங்கப்பட்டது. இந்த க்ரூப் தியேட்டர் அமைப்பில் ஸ்ட்ராஸ்பெர்க் உருவாக் கிய விஷயமே ‘மெதட் ஆக்டிங்’ எனப்படுகிறது.

ஒரே அமெரிக்கர்!

மெதட் ஆக்டிங்கைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர், ஸ்ட்ராஸ்பெர்க்குடன் க்ரூப் தியேட்டரில் இடம்பெற்று, நடிப்பில் சிறந்து விளங்கி, அதன் பின்னர் ஸ்ட்ராஸ்பெர்க்குடன் சண்டையிட்டுப் பிரிந்து, புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கி, ஸ்ட்ராஸ்பெர்க்கைப் போலவே புகழ்பெற்று விளங்கிய ஒரு பெண்ணைப் பற்றிப் பார்ப்போம். ‘ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் நேரில் பழகி அவரது முறைமைகளைப் படித்த ஒரே அமெரிக்கர் இவர்தான். ஸ்ட்ராஸ்பெர்க் கூட அதைச் செய்ததில்லை. இந்தப் பெண்ணின் பெயர் ஸ்டெல்லா அட்லர்.

ஸ்ட்ராஸ்பெர்க், க்ளர்மேன் மற்றும் க்ராஃபோர்ட் ஆகியவர்களால் துவங்கப்பட்ட க்ரூப் தியேட்டர் அமைப்பில் அதே வருடம் சேர்ந்த நடிகை இவர். அதற்கு முன்னரே மிகப் பிரபலமாக விளங்கியவர். க்ரூப் தியேட்டரில் சேர்வதற்கு முன்னர் அவர் இருந்த ‘அமெரிக்கன் லேபரட்டரி தியேட்டர்’ அமைப்பில்தான்

1925-ல் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் சிஸ்டத்தைப் பற்றி முதன்முதலில் அறிந்தார் ஸ்டெல்லா. அந்த அமைப்பில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் இரண்டு சீடர்கள் இருந்ததே காரணம் (Richard Boleslavsky மற்றும் Maria Ouspenskaya). இவர்களே அமெரிக்கன் லேபரட்டரி தியேட்டர் அமைப்பை உருவாக்கியவர்களும் கூட. இந்த அமைப்பில் தனது சிறுவயதில் பயின்றவர்தான் ஸ்ட்ராஸ்பெர்க். அவருடன் க்ளர்மேனும் பயின்றார். ஆகவே, ஸ்ட்ராஸ்பெர்க் மற்றும் ஸ்டெல்லா அட்லர் ஆகிய இருவருக்கும் பல வருடப் பழக்கம் இருந்திருக்கிறது.

நேரடிப் பயிற்சி

க்ரூப் தியேட்டரில் சேர்ந்த பின்னர், 1934ல் ஸ்டெல்லா அட்லர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியைச் சந்தித்தார். அவருடன் ஐந்து வாரங்கள் தங்கி, ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் சிஸ்டத்தை நன்கு கற்றார். அப்போதுதான் ஸ்ட்ராஸ்பெர்க் உருவாக்கியிருந்த மெதட் ஆக்டிங் முறைக்கும் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் சிஸ்டத்துக்கும் இருந்த அடிப்படை வேறுபாட்டை ஸ்டெல்லா உணர்ந்தார். ஸ்ட்ராஸ்பெர்க் உருவாக்கிய மெதட் ஆக்டிங் முறைக்கு மூல காரணம் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் சிஸ்டம்தான். ஆனால், ஸ்ட்ராஸ்பெர்க் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் பழகியவர் அல்ல என்பதால், ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் புத்தகங்களை வைத்துதான் அவரது மெதட் ஆக்டிங்கை உருவாக்கியிருந்தார். ஸ்டெல்லா ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் பழகியதால், அவர் சிஸ்டத்தை உருவாக்கியிருந்த ஆரம்ப வருடங்களில் இருந்த சிஸ்டத்தை இப்போது அவரே மாற்றியிருப்பதை உணர்ந்துகொண்டார்.

புதிய வேறுபாடு

ஸ்டானிஸ்லாவ்ஸ்கி 1900களில் உருவாக்கி யிருந்த சிஸ்டத்துக்கும் 1934-ல் அவரே பயிற்றுவித்துக்கொண்டிருந்த சிஸ்டத்துக்கும் என்ன வேறுபாடு?

முதன்முதலில் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவரது சிஸ்டத்தை உருவாக்கியபோது, நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் சில உணர்வுபூர்வமான காட்சிகளில் நடிக்கையில் அவர்களது அனுபவங்களிலிருந்து அவர்கள் அடைந்த உணர்வுகளை மனதில் நினைத்துப்பார்க்க வேண்டும் என்று எழுதியிருந்தார். ஏற்கெனவே ஒரு கட்டுரையில் நாம் பார்த்த உதாரணம்: ஒரு நடிகர், அந்தக் காட்சி முடிந்தபின்னும் அழுதுகொண்டிருந்தது – அப்போதுதான் நடந்தது. காரணம், நாடகத்தில் வருவதுபோன்ற அதே சம்பவம் அவரது வாழ்க்கையில் நிஜமாக நடந்திருந்தது (தாயின் மரணம்). அதனைப் பற்றிய எண்ணங்களை அவர் அந்தக் காட்சியில் உணர முயற்சித்தபோதுதான், அவரால் தாங்க முடியாமல் அந்த உணர்வுகள் அவரை முற்றிலுமாக மூடிக்கொண்டுவிட்டிருந்தன.

இந்த நேரத்தில்தான் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி யின் புத்தகம் ஒன்று வெளிவந்தது ‘அன் ஆக்டர்ஸ் ப்ரிப்பேர் (An actor prepares). இந்தப் புத்தகத்தில் இருந்த சிஸ்டத்தின் நடிப்பு முறைமைகளையே பெரும்பாலும் எடுத்துக்கொண்டு ஸ்ட்ராஸ்பெர்க் அவரது மெதட் ஆக்டிங்கை வடிவமைத்திருந்தார். இதன் பின்னர்தான் ஸ்டெல்லா அட்லர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கியை நேரில் சந்தித்தார். அப்போதுதான் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி, An actor prepares புத்தகத்தில் அவர் விளக்கியிருந்த உணர்வுபூர்வ நடிப்பை மாற்றியமைத்திருந்ததை உணர்ந்தார்.

மாற்றியமைக்கப்பட்ட உணர்வுபூர்வ நடிப்பு முறைமையில், நடிகர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்திருந்த உணர்வுபூர்வமான சம்பவங்களை அவர்கள் நினைவுகூர்வதற்குப் பதில், முற்றிலும் கற்பனையான சம்பவங்களை எண்ணிப் பார்த்து அந்த உணர்வுகளை நாடகத்தில் கொண்டுவந்து நடிப்பதற்கான பயிற்சிகளை ஸ்டானிஸ்லாவ்ஸ்கி எழுதியிருந்தார். இந்த முறைமைகள் அடங்கிய புத்தகம், அப்போதுதான் வெளிவந்திருந்தது ‘பில்டிங் எ கேரக்டர்’ (‘Building a Character’). ஆனால் இது ஸ்ட்ராஸ்பெர்க்குக்குத் தெரியவில்லை. ஆகையால், வாழ்க்கையில் இடம்பெற்ற உணர்வுபூர்வமான சம்பவங்களை நடிகர்கள் நினைத்துப் பார்ப்பது இன்றும் ஸ்ட்ராஸ்பெர்க்கின் மெதட் ஆக்டிங் பயிற்சிகளில் இடம்பெற்றிருக்கிறது. இதைப் பற்றி ஸ்டானிஸ்லாவ்ஸ்கியுடன் விவாதித்து விட்டு ஸ்ட்ராஸ்பெர்க்கிடம் வந்து அவரது மெதட் ஆக்டிங் முறையில் இருக்கும் தவறை எடுத்துச் சொன்ன ஸ்டெல்லா அட்லரை ஸ்ட்ராஸ்பெர்க் புறக்கணித்தார். இதன் விளைவாக ஸ்ட்ராஸ்பெர்க்கை விட்டுப் பிரிந்த ஸ்டெல்லா, சில ஹாலிவுட் படங்களில் நடித்துவிட்டு,

1949-ல் ‘ஸ்டெல்லா அட்லர் ஸ்டுடியோ ஆஃப் ஆக்டிங்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். இவரை குருவாக ஏற்று நடிப்புப் பயில வந்தவர்தான் உலகமே கொண்டாடிய மார்லன் பிராண்டோ.

இனி மெதட் ஆக்டிங் உத்திகளை அடுத்து வரும் அத்தியாயங்களில் பிரிந்து மேய்ந்துவிடுவோம் வாருங்கள்.

தொடர்புக்கு: rajesh.scorpi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்