இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை பதிவுகளை 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘ஜெய் ஹோ’ எனும் ஆவணப்படமாக எடுத்திருக்கிறது பப்ளிக் சர்வீஸ் பிராட்கேஸ்டிங் டிரஸ்ட்(PSBT). இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை இயக்கியிருப்பவர் உமேஷ் அகர்வால். இவர் தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற இயக்குநர்.
ஏ.ஆர். ரஹ்மானின் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது இந்த ஆவணப்படம். முதன்முதலாகத் தமிழில் ’ரோஜா’ திரைப்படத்துக்கு இசையமைத்தது, ‘ரங்கீலா’ தொடங்கி, ‘தால்’, ‘லகான்’, ’ராஞ்சானா’ உட்பட பல இந்திப் படங்களுக்கு இசையமைத்து பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தது, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ஆங்கிலப் படத்துக்கு இசையமைத்ததற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்றது வரையிலான ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பயணத்தை விறுவிறுவென விவரித்துச் செல்கிறது இப்படம்.
ஒன்பதாவது வயதில் தந்தையின் இறப்பு ஏற்படுத்திய வலி, முதன்முதலாக இசைப்பணிக்காக சம்பளம் பெற்ற தருணம், திருமணம், பாராட்டு விழாக்களில் நெகிழ்ந்த கணங்கள் என ஏ.ஆர்.ரஹ்மான் எதிர்கொண்ட முக்கிய தருணங்களை ஈரச்சாரலாய் நம்முன்னே தூறிப் போகிறது இப்படம். லாஸ் ஏஞ்சல்ஸ், லண்டன், மும்பை, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இந்த ஆவணப்படம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானோடு பணியாற்றிய இசைக்கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்களின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.
பாலிவுட் நடிகர் ஆமிர் கான், பின்னணி பாடகர் அல்கா யானிக், இயக்குநர்கள் மணிரத்னம், அசுதோஷ் கோவரிக்கர், சுபாஷ் கய், ராம்கோபால் வர்மா, சேகர் கபூர், டேனி பாயல், இசையமைப்பாளர்கள் ஆண்ட்ரூ லாயிட் வெப்பர், பாடலாசிரியர் குல்சார் ஆகியோரின் நேர்காணல்கள் குறைந்த வார்த்தைகளில் ரகுமானின் இசைமுகத்தை வரைந்து காட்டுவதாய் உள்ளன.
“தென்னிந்திய தெம்மாங்கு இசையின் பின்புலத்தோடு வெளிப்படும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கேட்போரை தாளம் போட வைக்கும் வல்லமையுடையவை” என்கிறார் பாடலாசிரியர் குல்சார்.
இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கும் உமேஷ் அகர்வால் கூறும்போது, “மேற்கத்திய இசைக்கருவிகளின் ஊடே கீழைத்தேய, இந்திய உணர்வுகளைத் தனது இசையில் அவர் கொண்டுவந்த விதம் குறித்தும், அவரது இசையின் தனித்துவம் பரிணமித்த விதம் பற்றியும், இந்தியத்தன்மை கொண்ட ரஹ்மானின் இசை ,உலக மக்களைக் கவர்ந்தது குறித்தும் என இந்தப் படம் பதிவு செய்துள்ளது. உலக மக்களிடம் ஏ.ஆர்.ரஹ்மான் எனும் மகத்தான இசைக்கலைஞனை கொண்டுசேர்க்கும் இப்படத்துக்கு அவரது ‘ஜெய் ஹோ’ எனும் புகழ்பெற்ற பாடல் வரியையே தலைப்பாக்கியுள்ளோம்” என்றார்.
உலக இசையரங்கில் இந்தியாவிற்கு பெருமைத் தேடித்தந்த ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பயணத்தைக் காலத்தே பதிவுசெய்திருக்கும் இந்த ஆவணப்படம், தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. இதற்கிடையில் வரும் அக்டோபர் 26-ம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago