1924 செப்டம்பர் 23-ல் பிறந்தவர். நாயர் சமூகம். தமிழிலும் மலையாளத்திலும் பேச, எழுதப் படிக்கத் தெரியும். இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் உரையாடுவார்.
பெரும் புகழ் தேடித் தந்த படங்கள்: ஆயிரம் தலை வாங்கிய அபூர்வசிந்தாமணி, வேலைக்காரி.
1945-ல் தாயார் மறைவுக்குப் பின் ஜானகியின் கலைப்பயணம் தாய்மாமன் எம். நாராயணனின் மேற்பார்வைக்கு வந்தது. ஜானகிக்கு ஒரு தம்பியும் உண்டு. அவர் பெயரும் நாராயணன்.
ஜானகிக்கு மேக்அப் போட்டுக்கொள்ளத் தெரியும். தனி மேக்அப் மேன் கிடையாது.
எலந்தப்பயம்... எலந்தப்பயம்... சாலையில் இலந்தைப்பழம் விற்கும் சத்தம். வீதிக்கு ஓடி வந்தாள் சிறுமி. இலந்தைப் பழம் என்றால் உயிர் அவளுக்கு. நிரம்பிய கூடையில் குதூகலமூட்டின இலந்தைப் பழங்கள். மூச்சை நன்றாக இழுத்து வாசம் பிடித்தாள். நாக்கில் எச்சில் ஊறி வழிந்தது.
இலந்தைப் பழத்துக்கென்று வித்தியாசமாக ஒரு மணம், தனி ருசி, அடர்ந்த மஞ்சளும் சிவப்புமாகப் புது நிறம்.
கிழவியிடம் தாரளமாக இரண்டு கைப்பிடி அரிசியைக் கொடுத்து, ‘உம் சீக்கிரம்... இன்னும் கொஞ்சம் தந்தால் என்னவாம்...!’ என்று அங்கலாய்த்தவாறே, இலந்தைப்பழத்தை மடிநிறைய வாங்கி, திண்ணையில் உட்கார்ந்த சிறுமியின் பெயர் ‘வைக்கம் நாராயணி ஜானகி’ என்கிற வி.என். ஜானகி!
காசு தர இயலாமல் தினந்தோறும் அரிசிக்குப் பண்ட மாற்றாக இலந்தைப் பழம் வாங்கித் தின்னும் ஜானகியின் இயல்பான சுறுசுறுப்புக்கும் ஆர்வத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் வறுமை வருந்தியது.
அப்பா ராஜகோபாலனுக்கு கும்பகோணம் லிட்டில்ஃபிளவர் ஹை ஸ்கூலில் தமிழ் ஆசிரியர் பணி. வி.என். ஜானகி கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் இரண்டாவது ஃபாரம் வரை படித்தார். வகுப்பில் முதல்வி. நடையோ நாட்டியம். கண்கள் ரங்க ராட்டினம். அறிவின் அடையாளமாகப் பிரகாசிக்கும் எழில் முகம். தரித்திரம் தின்றது போக மிச்சமிருந்த பேரழகு, பாபநாசம் ராஜாப்பாவிடம் பரதம் கற்க உதவியது.
‘பட்டணத்துக்குப் போய் சினிமாவில் பாட்டு எழுதினால் ஏராளமாக சம்பாத்யம் வருமாமே...!’ மனைவி நாராயணியின் குரல் காதுகளை நிறைத்தது.
கரும்பலகைக்கு குட்பை சொல்லிவிட்டு, ராஜகோபாலன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். தற்செயலாக வாய்ப்பு தேடி வந்தது.
’மதராஸ் மெயில்’ படத்துக்குப் பாடல்கள் எழுதும் வேலை தொடங்கியது.
ஆடிப் பழகிய ஜானகியின் பாதங்கள் டான்ஸ் மாஸ்டர் ஜெய்சங்கரிடம் மேலும் கற்றன. பதிமூன்று வயதிலேயே வி.என். ஜானகிக்கு அப்பாவைப் போல அதிர்ஷ்டம்! டாக்கியில் நடனமாட அழைத்தார்கள்.
அம்மாவுக்குச் சம்மதமில்லை. அப்பா காட்டிய பச்சைக் கொடியில் ஜானகியின் பயாஸ்கோப் அரங்கேற்றம் ஆரம்பமானது.
கிருஷ்ணன் தூது, மன்மதவிஜயம், கச்சதேவயானி, சூர்யபுத்ரி, சாவித்ரி, சந்திரலேகா, கல்பனா தெலுங்கில் சந்திரஹாஸா, காளிதாஸ் எனத் தொடர்ந்து திரையில் தெரிந்தார் ஜானகி. சொந்தக் குரலில் பாடி ஆடவும் ‘மும்மணிகள்’ படத்தில் சந்தர்ப்பம் கிடைத்தது. தொடர்ந்து இரு சினிமாக்களில் பாடியுள்ளார்.
கே. சுப்ரமணியம் இயக்கிய இன்பசாகரன், வி.என்.ஜானகியின் அறிமுக நடிப்பில் வெளிவரத் தயாராக இருந்தது.
1940 டிசம்பர் 21. கே.சுப்ரமணியத்துக்குச் சொந்தமான மோஷன் பிக்சர்ஸ் புரொடியூசர் கம்பைன்ஸ் ஸ்டூடியோவில் பயங்கரத் தீ விபத்து.
இன்பசாகரன் படப்பிரதிகள் நெகடிவோடு சேர்ந்து சாம்பலாயின. 1942-ல் கே.சுப்ரமணியம் ’அனந்தசயனம்’ படத்தில் நாயகனாகவும் நடித்து இயக்கவும் செய்தார்.
அனந்தசயனம் மூலம் ஜானகியின் நடிப்புத் திறமை வெளிப்பட்டது. ஜானகியின் காட் ஃபாதர் என்றானார் கே.சுப்ரமணியம்! அடுத்து ‘தேவகன்யா’விலும் ஜானகி பேசப்பட்டார்.
கே.சுப்ரமணியத்தின் ‘நடன கலா சேவா மன்றம்’ உதயமானது. அதில் நாயகனாக ஜானகியும், நாயகியாக கே.சுப்ரமணியத்தின் மனைவி எஸ்.டி.சுப்புலட்சுமியும் பங்கேற்றனர். நான்கு ஆண்டுகள் பாரதம் முழுக்க வெற்றி பவனி வந்தார்கள். பெற்ற பெண் போல ஜானகியை நடத்தினார் கே. சுப்ரமணியம்.
மீண்டும் திரையில் அரிதாரம் தரித்தபோது, டைரக்டர் பத்மநாபன் இயக்கிய ‘சகடயோகம்’ ஜானகிக்குக் கைகொடுத்தது. தொடர்ந்து பங்கஜவல்லியில் நடித்தும், வாய்ப்புகள் வராத நிலையில் நடனத்தில் கவனம் சென்றது. மணிபுரி, கதக் போன்ற நாட்டியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
1948-ல் ‘சித்ரபகாவல்லி’ படத்தில் நடிக்கும் போது வி.என். ஜானகி தன் பெயரை ‘சித்ரலேகா’என மாற்றிக்கொண்டார்.
மயக்கிய ‘மோகினி’
‘மோகினியில் நடிக்கும்போது எனது சொந்த வாழ்க்கையில் மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டது. முதன் முதலாக ஓரளவுக்கு உலகம் தெரிந்த நிலையில் நான் ஒரு பெண்ணை மணந்துகொள்ளும் ஆசை ஏற்படக் காராணமாய் இருந்த படம் மோகினி.
ஆமாம். அப்போது அந்தப் படத்தில் என்னோடு நடித்த ஜானகிதான் அந்தப் பெண்! அதற்குப் பிறகுதான் நாங்கள் மணந்துகொள்ள முடிவு செய்யும் சூழ்நிலை உருவாகியது. எனது வாழ்க்கைத் துணைவியான திருமதி ஜானகி ராமச்சந்திரனை எனக்குத் தந்தது அந்த ‘மோகினி’தான்.’
இப்படிச் சொன்னவர் யார் தெடியுமா? எம்.ஜி.ஆர். ராஜமுக்தி, மோகினி, மருதநாட்டு இளவரசி, நாம் ஆகிய படங்களில் எம்.ஜி.ஆரும் வி.என்.ஜானகியும் நடித்துள்ளனர். எம்.ஜி.ஆர். மீது காதல் வசப்பட்டபோது ஜானகி முன்னணி நட்சத்திரம்! ‘மோகினி’ பட விளம்பரங்களிலும் டைட்டிலிலும் அவருக்கே முக்கியத்துவம் கிடைத்தது .
கலைஞர் எழுதிய ‘தேவகி’, ‘நாம்’ உள்ளிட்ட படங்களிலும் ஜானகி நடித்திருக்கிறார்.
‘மிருக ஜாதியில் புலி மானைக் கொல்கிறது. மனித ஜாதியில் மான் புலியைக் கொல்கிறது’ என்று ‘மருத நாட்டு இளவரசி’ படத்தில் எம்.ஜி.ஆர்.- வி.என். ஜானகி பேசிய மு.கருணாநிதியின் வசனம் இன்றைக்கும் பிரபலம்.
வி.என். ஜானகி நடித்து வெளிவந்த கடைசிப் படம் ‘நாம்’. 1953-ல் எம்.ஜி.ஆர்.- கலைஞர் கூட்டுத் தயாரிப்பில் உருவாகித் தோல்வி அடைந்தது.
எம்.ஜி.ஆர்.-வி.என். ஜானகி பதிவுத் திருமணம் செய்துகொள்ள இயக்குநர் கே.சுப்ரமணியமே காரணம். அவரே சாட்சிக் கையெழுத்தும் போட்டார்.
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். 1987-ல் மறைந்தபோது அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவர் வி.என். ஜானகி. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்கிற வரலாற்றுப் பெருமை ஜானகிக்கு உண்டு.1996 கோடையில் ஜானகி இயற்கை எய்தினார்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago