இந்திய விடுதலைத் திருநாள், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, பாரதி விழா நேரங்களில் தமிழர்களின் மனங்களில் நினைவுப் பதியம் போட்டு மிக நெருக்கமாகிவிடுவார் குமாரி கமலா. 1934 ஜூன் 16-ல் மயிலாடுதுறையில் பிறந்தவர்.
‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’, ‘வெற்றி எட்டுத் திக்கு என்று கொட்டு முரசே!’, ‘ஆஹா காந்தி மகான்!’ போன்ற பாடல்கள் செவிகளைக் குளிர வைக்கும். அவ்வேளையில் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் நிறைவாக கமலாவின் நடனம் புதுப் பொலிவுடன் ’பொதிகை’யை ஆக்கிரமிக்கும்.
நிச்சயமாக அது ஒரு பாக்கியம் கமலாவுக்கு.
தமிழ் சினிமாவின் ஆரம்ப கால பொம்மலாட்டங்களில் கமலாவின் நாட்டியம் டூரிங் டாக்கீசுகளில் கல்லா கட்ட உதவியது.
இரு கரு நாகங்களைத் தன் தோள்களில் போட்டுக் கொண்ட மாதிரி 13 வயது கமலாவின் இரட்டை ஜடையும், பாவாடை சட்டையும் ‘அண்ணா... அண்ணா’ என்கிற பாசமிகு குரலும் ’நாம் இருவர்’ படத்துக்கு மெருகூட்டியது.
தொடக்கத்தில் மும்பைவாசி கமலா. ஐந்து வயதுக்கெல்லாம் கதக், அப்புறம் பரதம் என அவரது முழங்கால்கள் நர்த்தனமாடியே முழு வளர்ச்சி அடைந்தன. சந்துல்ஷா தயாரித்த ‘யூத் லீக்’ இந்திப் படம் கமலாவுக்கு ஆடுவதற்கு முதலில் சந்தர்ப்பம் அளித்தது. (தமிழில் ’வாலிபர் சங்கம்’) யதாஷ் சர்மாவின் இயக்கத்தில் பார்வை இழந்த பாலகியாக நடனமாடிய அனுபவம் கமலாவுக்கு உண்டு.
இரண்டாம் உலகப் போருக்குப் பயந்து தமிழகம் திரும்பியது கமலாவின் குடும்பம். மயிலாப்பூர் அப்பு முதலித் தெருவில் வாசம். வழூவூர் ராமையா பிள்ளையிடம் பரதப் பயிற்சி தொடர்ந்தது. கமலா முதலில் ஆடிய நேரடித் தமிழ்ப் படம் பி.யூ. சின்னப்பா நடித்த ‘ஜகதலப்பிரதாபன்.’ ‘பட்சிராஜா’ ஸ்ரீராமுலு நாயுடு கமலாவின் நடனம் ஒன்றைப் பார்த்துவிட்டு வழங்கிய வாய்ப்பு.
கமலாவின் பாதங்களை சினிமா காமிரா வெகுவாகப் படம் பிடித்தது. ஏ.வி. மெய்யப்பச் செட்டியாரின் தயாரிப்புகள் கமலாவின் நடனங்கள் இல்லாமல் வெளிவராது என்கிற நிலைமை உண்டானது. குறிப்பாக ’நாம் இருவர்’ முரசு நடனம். மெய்யப்பச் செட்டியார் அதை கமலாதான் ஆட வேண்டும் என்று கண்டித்துச் சொல்லிவிட்டார். திரையின் இரு புறமும் வெவ்வேறு கமலாக்கள் ஆடிக் காண்போரைக் கவர்ந்தனர். இந்தி, தமிழ்,மலையாளம், கன்னடம், சிங்களம் என்று எல்லை கடந்தும், கமலாவின் கால்கள் பேசின.
பராசக்தி சினிமாவில் ’ஓ! ரசிக்கும் சீமானே!’ பாட்டுக்கான ஆட்டம், கமலாவை இளைஞர்களிடத்தில் நிரந்தரமாகக் கொண்டுசேர்த்தது. 1958-ல் சிவாஜி- சாவித்ரி இணைந்து நடித்த காத்தவராயனில் கோபிகிருஷ்ணா - கமலா சேர்ந்து ஆடியிருக்கிறார்கள். அவர்களது சிவன்-பார்வதி நடனம் படத்துக்குக் கூடுதல் சிறப்பைக் கொடுத்தது.
அகிலனின் ‘பாவை விளக்கு’ 1960 தீபாவளிக்கு டாக்கியாக வெளியானது. அதில் நடிகர் திலகத்துடன் காதலி ‘செங்கமலமாக’நடிக்கும் அதிர்ஷ்டம் கமலாவுக்குக் கிடைத்தது. ‘பாவை விளக்கு’ படத்தில் கே.வி.மகாதேவனின் இசையில் ‘ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே, ‘வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி’, ‘நான் உன்னை நினைக்காத’, ‘சிதறிய சலங்கைகள் போல’ உள்ளிட்டப் பாடல் காட்சிகள் காலத்தால் கமலாவை மறக்கச் செய்யாது.
கவிஞர் கண்ணதாசனின் எழுச்சிப் படைப்பு ‘சிவகங்கைச் சீமை’. அதில் கதாநாயகி கமலா. படத்தின் க்ளைமாக்ஸில் மழையில் கமலா ஆடிடும் பரதம் மெய்சிலிர்க்க வைக்கும். ‘கனவு கண்டேன் நான், கன்னங்கருத்த கிளி’ ஆகிய பாடல்கள் கமலாவுக்குத் தனிப் புகழைத் தேடித் தந்தன. கல்கியின் ’பார்த்திபன் கனவு’ படமானது. சிவகாமியாக மாமல்லர் எஸ்.வி. ரெங்காராவுடன் நடித்தவர் கமலா.
‘கொஞ்சும் சலங்கை’ படத்தின் வெற்றியிலும் கமலாவுக்கு மிக முக்கியப் பங்குண்டு. ‘பிரம்மன் தாளம் போட’ என்று தொடங்கும் பாடலில் கமலா-குசலகுமாரி ஆடிய ‘சிம்ம நந்தனம் ஆடிடும் முன்னே மயூர பந்தனம் செய்யட்டுமா...’ போட்டி நடனம் விறுவிறுப்பூட்டியது. ஏறக்குறைய நாலு நறுக்கான இந்தப் படங்களோடு, நடிப்பில் கமலாவின் பங்களிப்பு நிறைவு பெற்றது.
இந்தி தெரிந்திருந்தும் வைஜெயந்திமாலா, பத்மினி போல் அகில இந்தியாவிலும் வெற்றிகரமான கதாநாயகியாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. ‘அது ஏன்?’ என்கிற கேள்விக்கு மிக நேர்மையாகப் பதில் அளித்துள்ளார் கமலா.
“உண்மையைச் சொல்லப்போனால் நடனம் வந்த அளவுக்கு எனக்கு நடிப்பு வரவில்லை. அதோடு நீள நீள டயலாக் வேறு.ஒரு தடவை பேசும்போது கொஞ்சம் தடுமாறிவிட்டாலும் போதும்; மறுபடியும் முதலில் இருந்து பேச வேண்டும். இப்போது மாதிரி டப்பிங் வசதியெல்லாம் கிடையாது. நமக்காக இன்னொருவர் குரல் கொடுப்பதை அனுமதிக்க மாட்டார்கள். திரையில் நடிக்கிறவரே முழு வசனமும் பேசியாக வேண்டும். நீண்ட நெடிய உரையாடலில் வார்த்தைகளோ முகபாவங்களோ விடுபட்டுப் போனால் மறுபடியும் பேசச் சொல்வார்கள். ‘அய்யோ கடவுளே!’ என்று மனசு அலறும். இப்படியொரு டென்ஷன் தேவையா என்கிற கேள்வி என்னுள் எழுந்தது. நமக்கு நன்கு தெரிந்த நடனத்தை மட்டும் தொடரலாம் என்று முடிவு செய்தேன்.”
1971-ல் ‘செண்டா’ என்கிற மலையாளப் படத்தில் கமலாவின் நாட்டியம் கடைசியாக இடம்பெற்றது. உலகப் புகழ் பெற்ற கேலிச் சித்திரக்காரர் ஆர். கே. லட்சுமணனுடன் ஏற்பட்ட திருமண பந்தம் 1960-ல் முடிவுக்கு வர, 1964-ல் மேஜர் லட்சுமி நாராயணனின் திருமதி ஆனார் கமலா. ஒரே ஒரு ஆண் வாரிசு. பயாஸ்கோப்பிலிருந்து விடுபட்ட பின்னர் முழு மூச்சுடன் தன்னை நாட்டியக் கலைக்காக கமலா அர்ப்பணித்துக்கொண்டார். இங்கிலாந்து அரசி எலிசெபத்தின் அவையில், லண்டனிலும் பின்னர் சென்னையிலுமாக இரு முறை கமலாவின் நாட்டியம் நடைபெற்றது.
‘சென்னை ராஜ்பவனில் ராணிக்கு முன்னால் நான் ஆடிய பாம்பு நடனம் அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. ஒண்டர்ஃபுல் என்று நீண்ட நேரம் என்னைப் பாராட்டியபடியே இருந்தார்.’- குமாரி கமலா.
1970-ல் இந்திய அரசின் பத்மபூஷன் விருது கமலாவின் ஆடற்கலைக்கு மகுடம் சூட்டியது. இரண்டு கணேசன்கள், எஸ்.எஸ். ஆர். படங்களில் பங்கேற்ற கமலா, எம்.ஜி.ஆருடன் நடித்தது கிடையாது. ‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர். ஆட அழைத்தும், கமலா அதில் இடம்பெறவில்லை. காரணம் அதிக வேலைப் பளு.
1981-ல் நியூயார்க்கில் குடியேறினார் கமலா. அங்கு ’ஸ்ரீ பரத கலாலயா’ என்கிற நாட்டியப் பாடசாலை ஒன்றையும் அமைத்தார். அதற்குப் பிறகு சுற்றமும் நட்பும் அழைத்தால் தாயகம் வந்து போவது நிகழ்ந்தது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago