அன்று வந்ததும் அதே நிலா: குமாரி ருக்மணி
எழுபது ஆண்டுகளுக்கு முன் இளமை பூகம்பமாக வெள்ளித்திரையை வசீகரித்தவர் குமாரி ருக்மணி. ’சினிமா ராணி’ டி.பி. ராஜலட்சுமியின் கண்டுபிடிப்பு. தமிழ் டாக்கியின் முதல் கனவுக்கன்னி டி.ஆர். ராஜகுமாரியைவிடக் கூடுதல் பிரகாசம் பரப்பும் எழில் தோற்றமும், மிகக் களையான முகமும், பேசும் கருவண்டுக் கண்களும் கொண்டவர் குமாரி ருக்மணி.
மும்பையில் ஹரிச்சந்திரா படப்பிடிப்பு. லோகிதாசன் வேடத்துக்குப் பொருத்தமான பாலகன் கிடைக்கவில்லை. பளிச்சென்று ஒரு சிறுமி டி.பி. ராஜலட்சுமியின் கண்களில் தெரிந்தாள். சினிமாக்காரர்கள் குடியேறிய லாட்ஜில், பக்கத்து அறையில் அரசு அதிகாரி ஒருவர் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தார். யார் எவர் என்ற விசாரணையில் ஏற்கெனவே தெரிந்தவர்தான் என்கிற விவரம் புரிந்தது. அதிகாரிக்கும் நடிகைக்கும் ஒரே ஊர், தஞ்சை - மெலட்டூர்.
‘குழந்தை அழகாக, சமர்த்தாக இருக்கிறாள். லோகிதாசனாக நடிக்க வைக்கலாமா?’
டைரக்டர் ப்ரபல்ல கோஷின் சற்றும் எதிர்பாராத கேள்வியால் மவுனம் சாதித்தார்கள் பெற்றோர். ருக்மணியின் அம்மா, நடிகை நுங்கம்பாக்கம் ஜானகிக்கு (சீதா வனவாசம், லலிதாங்கி, மாயாபஜார் படங்களில் நடித்தவர்) தன் ஆறு வயது மகள், எடுத்த எடுப்பில் காமிரா முன்பு லோகிதாசனாகப் பாம்பு கடித்து இறப்பதில் சென்டிமென்ட் சங்கடம். அப்பாவுக்கோ இயல்பான சந்தேகம்.
‘பாப்பாவுக்கு நடிப்பு வருமா ...?’ என்றார்.
‘அது எங்கள் பொறுப்பு!’
ருக்மணிக்கு நெற்றியில் அழகாகத் திலகமிட்டு ஆசி கூறி நடிக்க வைத்தார் டி.பி. ராஜலட்சுமி.
ஹரிச்சந்திரா தொடங்கி குழந்தை நட்சத்திரமாக ருக்மணி பிரபலமானார். டி.பி. ராஜலட்சுமியுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு. ‘ஜலஜா’ படம் மூலம் இந்தியிலும் தோன்றும் அதிர்ஷ்டம்! அம்மா ஜானகியும் ருக்மணியும் சேர்ந்து ‘பாக்யலீலா’ படத்தில் இடம் பெற்றார்கள்.
டி.ஆர். மகாலிங்கத்துடன் ’பூலோக ரம்பையில்’ நடித்தபோது ‘குமாரி ருக்மணி’ என்று டைட்டிலில் காட்டினார்கள். அதே இணையின் அடுத்த சூறாவளி ஏவிஎம்மின் ஸ்ரீ வள்ளி. திருச்சூரிலிருந்து வந்து சேர்ந்த நாலு வயது யானைக்குட்டி ருக்மணியுடன் நடித்தது. ஏ.வி.எம்-மின் பேபி ஆஸ்டின் காரிலிருந்து இறங்கியதும் ருக்மணி நேராக யானையிடம் செல்வார். வெல்லமும் தேங்காயும் போதும் போதுமென அதற்குத் தந்து தாஜா செய்வார்.
‘ஹாத்தி மேரா சாத்தி’ என்று உரக்கக் கூவலாம் போலிருந்தது ருக்மணிக்கு. குட்டியிடம் அத்தனை அன்யோன்யம்! யானை தன் துதிக்கையால் வள்ளியை இடுப்பைப் பிடித்து, அலேக்காகத் தலைக்கு மேல் தூக்கி, முருகனின் மடியில் போடும் மன்மதலீலை காட்சி. ருக்மணியுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் சூப்பராக நடித்தது குட்டி யானை.
சொந்தமாகப் பாடி நடிப்பது அக்காலத்திய மரபு. டி.ஆர். மகாலிங்கத்தின் கந்தர்வ கானத்துக்கு இடையூறாக ஒலித்தது ருக்மணியின் குரல். ஏ.வி.எம் ஏற்கெனவே ருக்மணி பாடியதைத் தயங்காமல் நீக்கி, பி.ஏ. பெரிய நாயகியைப் பின்னணி பாடச் செய்தார். விளைவு ருக்மணியின் விலகலில் முடிந்தது. ஏ.வி.எம்-முடன் மூன்று சினிமாக்களுக்கு ஒப்பந்தமான ருக்மணி விட்டு விடுதலையானார். ஹரிதாஸ் படத்துக்கு இணையாக ஸ்ரீ வள்ளி, எல்லா ஊர்களிலும் ஓடி வசூலில் பிரளயத்தை ஏற்படுத்தியது. காரணம் ருக்மணிக்குப் பருவம் 18. மகாலிங்கத்துக்கு வயது 21.
தமிழ் டாக்கியின் முதல் இளஞ்ஜோடி!
“ஏ.வி.எம். ஸ்ரீ வள்ளி படத்தை செட் போட்டு எடுத்தார். மொத்த யூனிட்டும் அதிகாலை நாலரை மணிக்கு லொகேஷனுக்கு வந்தால், அன்றைய படப்பிடிப்பு முடியும் வரை அங்கேதான் இருப்போம்.
சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. ஏ.வி. எம். பிரம்மாண்டமா எடுத்த ‘வாழ்க்கை’ படத்துல நான் ஹீரோயினா நடிச்சிருக்கணும். எனக்குத்தான் கான்ட்ராக்ட் இருந்துச்சு. ஆனா அதுக்குள்ள என் பதினெட்டாவது வயசுல டைரக்டர் ஒய். வி. ராவுக்கு திருமதி ஆகிட்டேன். அதனால அதுல வைஜெயந்திமாலா நடிச்சாங்க” என்றார் குமாரி ருக்மணி.
ஒய்.வி. ராவ்- கே. பாக்யராஜ்களுக்கு முன்னோடி!
தியாகராஜ பாகவதருடன் இணைந்து நடித்து, ஒய். வி. ராவ் இயக்கிய ‘சிந்தாமணி’, தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனைச் சரித்திரம்! அதைத் தயாரித்த ராயல் டாக்கீஸார் தங்களுக்குக் கிடைத்த அமோக வசூலில், ‘சிந்தாமணி’ என்ற பெயரிலேயே மதுரையில் சினிமா தியேட்டர் ஒன்றைக் கட்டினார்கள்.
1946 கோடையில் வெளியானது ‘லவங்கி’.
பெயர்க் காரணம் பெரிதாக ஏதுமில்லை. நாயகன் ஒய்.வி.ராவ். தாம்பூலத்தோடு லவங்கத்தையும் சுவைப்பார். அழகான யுவதி கண் எதிரே வருவாள். ‘ஏ லவங்கி!’ என அழைப்பார். குமாரி ருக்மணி - லவங்கி.
ஒய்.வி. ராவுக்கும் ருக்மணிக்கும் லவங்கியின்போது நிகழ்ந்தது காதல் கல்யாணம். அவர்களது ஒரே வாரிசு வேங்கட லட்சுமி. பின்னர் சினிமா வழக்கமாக ஒய்.வி. ராவும் - ருக்மணியும் பிரிந்துவிட்டார்கள்.
ஸ்ரீ ராம் ஜோடியாகக் குமாரி ருக்மணி ஹீரோயினாக நடித்த கடைசி படம் ‘முல்லை வனம்’.
ஒய்.வி. ராவின் பிரியசகா பி.ஆர். பந்தலு. அவரது வற்புறுத்தலால், ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக நடித்தார் ருக்மணி.
1961 தொடங்கி 1975 வரையில் ஏராளமான அம்மா வேடங்கள். ஜெயலலிதா உட்பட அநேக நாயகிகளுக்குத் தமிழில் அமைந்த முதல் நட்சத்திர தாய் - மாமியார் குமாரி ருக்மணி. மாலையில் ஒய்.ஜி.பி. நாடகக் குழுவிலும் பங்கேற்று, அரும்பாடு பட்டு மகள் லட்சுமியைக் காப்பாற்றினார். லட்சுமி பெற்றோரைப் போலவே நடிப்பிலும் புகழிலும் உச்சம் பெற்றவர். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்துக்காக நடுவண் அரசின் சிறந்த நடிகை பரிசு 1977-ல் ஒரே ஒரு முறை லட்சுமிக்குக் கிடைத்தது. அவ்வாறு தேசிய விருது வராமல் போனவற்றுக்குக் கணக்கேது?
லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. இயற்பெயர் சாந்த மீனா. ருக்மணி பாட்டியின் செல்லம். குழந்தையை அவளது முதல் பிறந்த நாள் அன்று மட்டுமே படம் பிடிக்க வேண்டும். அதற்கு முன்பு ஃபோட்டோ எடுக்கக் கூடாது என்று தடை விதித்ததவர் ருக்மணி. ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் ருக்மணியும் லட்சுமியும் சேர்ந்து நடித்த பக்திப் படம் ‘காரைக்கால் அம்மையார்’. சாந்த மீனாவைக் கவனித்துக்கொள்ள வேண்டி, காலையில் லட்சுமியும் மதியத்தில் ருக்மணியும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்கள்.
பின்னர் ஐஸ்வர்யாவும் 1990-ல் ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ படம் மூலம் திரைக்கு அறிமுகமானார்.
ஒரே குடும்பத்தில் பிறந்து ஸ்ரீ வள்ளி, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் போன்ற ஏ.வி.எம்-மின் வெற்றிச் சித்திரங்களில் பாட்டி, அம்மா, பேத்தி மூவரும், வெவ்வேறு தலைமுறைகளில் நடித்துள்ளது மிகவும் அபூர்வமான சுவாரஸ்யம்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago