சினிமா எடுத்துப் பார் 28 - ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்’

By எஸ்.பி.முத்துராமன்

நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் ‘பராசக்தி’ படம் பார்த்தப் பிறகுதான் சினிமா ஆசையே எனக்கு வந்தது. கலைஞர் அவர்களின் வசனமும், அண்ணன் சிவாஜிகணேசனின் நடிப்பும் அந்த வயதில் எனக்குள்ளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. அந்தத் தாக்கம்தான் என்னை மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான இளைஞர்களை சினிமாவில் பங்குபெற வைத்தது.

ஏவி.எம் நிறுவனமும், ஜே.ஆர் மூவிஸ் கம்பெனியும் இணைந்து ‘எங்க மாமா’ என்ற திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தார்கள். அந்தப் படத்தை என் குரு நாதர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். குருவுக்கு சிஷ்யன் நான். சிவாஜி அவர் கள்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று கேள்விப்பட்டதும், நான் மகிழ்ச்சி யின் உச்சத்துக்கே போய்விட்டேன். படத்தில் நாயகி செல்வி ஜெயலலிதா அவர்கள்.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது மாதிரி இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அன்றைக்கு அமைந்தது. ‘எங்க மாமா’ படத்தில் 12 குழந்தைகள் நடித்திருப்பார்கள். படப்பிடிப்பில் அவர்கள் செய்த குறும்புத்தனத்தை நாங்கள் சமாளித்த கதை ஒரு பெரிய சவால்!

அந்தப் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்கள். இசையும் பாடலும் இணைந்து இன்றும்கூட அந்தப் படத்தின் பாடல்கள் புகழ் பரப்பிக்கொண்டிருக்கின்றன. ஆஸ்டின் காரில் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சிவாஜி நகர்வலம் வருவதுபோல எடுக்கப்பட்ட

‘நான் தன்னந்தனிக் காட்டு ராஜா

என் தோட்டத்தில் எத்தனை ரோஜா’

என்ற பாட்டில் அந்த குழந்தை மலர்களை, தன்னைச் சுற்றி அமர வைத்துக்கொண்டு அப்படி ஒரு பாவனையோடு சிவாஜி அவர்கள் நடித்திருப்பார்கள். அதேபோல, பியானோ வாசித்துக்கொண்டே பாடும்

‘எல்லோரும் நலம் வாழ

நான் பாடுவேன்

நான் வாழ யார் பாடுவார்’

- என்ற பாட்டின் ஒவ்வொரு வரியிலும் ஜெயலலிதா அவர்களின் முகபாவனை மாறிக்கொண்டே இருக்கும். சிவாஜி பியானோ வாசிக்கிற நடிப்பும், அந்த ஸ்டைலும் அவரால் மட்டும்தான் அது முடியும்!

இன்றைக்கு மேலோட்டமாக யோசித் துப் பார்த்தால் கர்ணன், கட்டபொம்மன், பாரதி, வ.உ.சி போன்றவர்களை நினைக் கும்போது சிவாஜிதான் நமக்கு ஞாபகத்து வருவார். இவர்களைப் போல் சிவாஜி நடித்தார் என்று சொல்வதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘கி.மு., கி.பி’ என்று சொல்வதைப் போல் நடிப்பை பொறுத்தவரை ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்’ என்றுதான் சொல்ல வேண்டும்.

நாளை அக்டோபர் 1-ம் தேதி நடிப்புக்கு இலக்கணம் வகுத்த அண்ணன் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாள். அவருக்கு இதய பூர்வமான என்அஞ்சலி.

அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு மற்றும் ஹரி சண்முகம் ஆகியோர் சேர்ந்து அவரது பெயரில் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக விழா எடுத்து வருகிறார்கள். இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் சிவாஜி பெயரில் எனக்கும், என்னோடு சேர்ந்த 5 கலைஞர்களுக்கும் விருது கொடுக்கிறார்கள். இதை எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக நினைக்கிறோம். சிவாஜி அவர்களின் மகன்களுக்கும், குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் சிவாஜி அவர்களை நினைத்துக்கொண்டு எங்களின் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் நடிப்புத் திறமை மிக்கவர். வசனமாக இருந்தாலும், பாடலுக்கு நடனமாக இருந் தாலும் ஒரு தடவைதான் கேட்பார், பார்ப்பார். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக நடித்து முடிப்பார். அந்த சக்தி அவருக்கு இயல்யாக இருந்தது. நடிப்பில் அப்படி ஓர் ஈடுபாடு. படப்பிடிப்பில் பேசிக்கொண்டிருப்பது, அரட்டை அடிப்பது இதெல்லாம் அவரிடம் இருக்காது. ஷாட் முடிந்ததும் புத்தகம் படிப்பார். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று கடமை ஆற்றுவார்.

நான் இயக்குநராகி மூன்று, நான்கு படங்கள் இயக்கியிருந்த நேரம். விசி.குகநாதனும், கோவிந்தனும் இணைந்து ‘அன்புத் தங்கை’என்கிற படத்தை எடுக்க முடிவு செய்தார்கள். இந்தக் கதைக்கு செல்வி ஜெயலலிதா அவர்கள் சரியாக இருப்பார் என்று முடிவெடுத்து, நான் இயக்கலாம் என்று கூறினார்கள். அப்போது நான் புது இயக்குநர் பட்டியலில் இருந்தேன். ‘இந்தக் கதையை ஒரு சீனியர் இயக்குநர் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று செல்வி ஜெயலலிதா கூற வாய்ப்பு உள்ளது. அதனால் அவரிடமே கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள்’ என்று கூறியிருந்தேன்.

செல்வி ஜெயலலிதா அவர்களிடம் வி.சி.குகநாதன் கதையை சொல்ல ‘‘கதை எனக்குப் பிடித்திருக்கிறது. யார் டைரக்டர்?’’ என்று கேட்டிருக்கிறார். “எஸ்பி.முத்துராமனை இயக்க சொல்லலாம் என்றிருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்கள். உடனே செல்வி ஜெயலலிதா ‘‘அவரைத் தெரியுமே ஏ.சி.டி டைரக்‌ஷனில் நான் நடித்த ‘எங்க மாமா’படத்தில் வேலை பார்த்திருக்கிறார். அவரே இயக்கட்டும்’’ என்று உடனே ஒப்புக்கொண்டார். அது எனக்கு அவர் தந்த அங்கீகாரம்.

‘அன்புத் தங்கை’ படப்பிடிப்பை ஆரம்பித்தோம். அதில் ஒரு பாடல் காட்சி. செல்வி ஜெயலலிதாவோடு ஒரு புத்தத் துறவி நடிக்க வேண்டும். யாரை நடிக்க வைப்பது? குழந்தை நட்சத்திரமாகவும் நடிக்க முடியாது. நாயகனாகவும் நடிக்க முடியாது. அப்படி ஒரு ரெண்டுங்கெட்டான் வயசு கமல்ஹாசனுக்கு. அந்த நேரம் நடன இயக்குநர் தங்கப்பன் மாஸ்டரிடம் உதவியாளராக அவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். எங்களுக்கு கமல்ஹாசன் நினைவு வந்தது. கமலை புத்தத் துறவியாக்கி செல்வி ஜெயலலிதாவோடு நடிக்க வைத்தோம். என் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த முதல் படம் அது.

இயக்குநர் திருலோகசந்தர் அவர்களிடம் 13 படங்களில் உதவி இயக்குநராக ஏவி.எம்மில் வேலை பார்த்தேன். தொடர்ந்து ஏவி.எம் நிறுவனத்துக்கு படம் இயக்கி வந்த திருலோகசந்தர் ஒருமுறை, ‘‘வெளியில் போய் படம் பண்ணலாமா?’’ என்று மெய்யப்ப செட்டியாரிடம் கேட்டார். ‘‘விரும்பியதை செய்யுங்கள்’’ என்று செட்டியாரும் கூறினார். ‘‘தங்கக் கூட்டுக்குள் இருந்த என்னை வெளி வானத்தில் சுதந்திரமாக பறக்க அனுமதித்தது தாய் பறவை’’ என்று அவர் ஒரு புத்தகத்தில் நன்றியுடன் குறிப்பிட்டிருந்தார்.

அந்த நேரத்தில் திருலோகசந்தர் அவர்கள், ‘‘நீங்களும் என்கூட வாங்க’’ என்று என்னை அழைத்தார். செட்டியார் அவர்கள் ‘‘முத்துராமன் இங்கேயே இருக்கட்டும்’’ என்று கூறிவிட்டார். வெளியில் படப்பிடிப்பு நடக்கும்போதெல்லாம், ஏசி.திருலோகசந்தர் ‘முத்துராமன்… முத்துராமன்’ என்றே பலமுறை அழைத்திருக்கிறார். என் நினைவு அவரை விட்டு போகவில்லை என்பதற்கு இதெல்லாம் உதாரணம் மட்டுமல்ல; அது எனக்குக் கிடைத்த பாராட்டு. என்னைப் பற்றி ஏசி.திருலோகசந்தர் குறிப்பிடும்போதும், ‘‘சகல பிரிவுகளிலும் தெளிவு. எல்லா விஷயங்களையும் தன் நகநுனியில் வைத்திப்பார். அபார ஞாபக சக்தி, தலைக்கனம் இல்லாதவர். எளிமையாக பழகக்கூடியவர் எந்தவித கிசுகிசுவுக்கும் ஆளாகாதவர். ஏவி.எம்மின் தூண். எனக்கு எல்லா வகையிலும் பெருந்துணையாக இருந்தவர். இன்றும் இருப்பவர்’’ என்று எனக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கியிருக்கிறார்.

நான் இயக்கும் எல்லா படங்களின் ஸ்க்ரிப்டையும் எனது குருநாதரின் கைகளில் கொடுத்து காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்ற பிறகே, என் படங்களின் படப்பிடிப்பைத் தொடங்குவேன்.

அண்ணன் சிவாஜியை வைத்து நானே இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை தந்திருக்கும்..!

- இன்னும் படம் பார்ப்போம்…

படங்கள் உதவி: ஞானம்

முந்தைய அத்தியாயம்: >சினிமா எடுத்துப் பார் 27- எம்.ஜி.ஆர் வீட்டு சிக்கன் நெய் ரோஸ்ட்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்